ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/அணிந்துரை

கோவை ஞானி
(கி. பழனிச்சாமி)

30.4.96

அணிந்துரை

“ஒரு கோட்டுக்கு வெளியே”, “ஊருக்குள் ஒரு புரட்சி”, ஆகிய நாவல்கள் மூலம் தமிழ் நாவல் இலக்கியத்தில் அடித்தள மக்களின் சமூக நீதிக்கான ஆவேசக் குரலாய், தமிழ் வாசகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் சு.சமுத்திரம் அவர்கள். இவரது படைப்புக்களில் கலைத்தன்மை குறைவாக இருக்கிறது என்ற முறையில், நான், இவரது படைப்புகளை விமர்சனம் செய்திருக்கிறேன். இறுதியாக வந்த “வாடாமல்லி” நாவல் இக்குறையை பெருமளவில் போக்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து, இந்தியாவில் எழுந்த கலவரங்களை மையப்படுத்தி அவர் எழுதிய “மூட்டம்” நாவல் காலத்தினால் செய்த நன்றி என்ற முறையில் நம் போற்றுதலுக்கு உரியது என்பதில் ஐயமில்லை.

முற்போக்கு வட்டாரத்தின் முன் வரிசையில் உரிமையோடும், தகுதியோடும் இடம் பெற்றிருக்கும் சமுத்திரம் அவர்கள், தமிழில் தலித் இலக்கிய வரிசையிலும் தகுதியோடு இடம் பெறத் தக்கவர்.

ஏகலைவன் பதிப்பகத்தின் வெளியீடாக வரும், “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் மக்கள் ஏன் இப்படி வரலாற்றில் தாழ்வுற்று, அடிமைப்பட்டு, அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பிரச்சினையை முன் நிறுத்துகிறது. தமிழ் மக்களின் அண்மைக் கால அவலம் பற்றி, வேதனையோடு, நெஞ்சப் பொருமலோடு, சமுத்திரம் இந்தக் கதைகளின் மூலம், தமிழ் மக்களின் நெஞ்சோடு உரையாடுகிறார். இத்தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளில், ஐந்து கதைகள், மேற்கூறியவாறு தமிழ் மக்களின் அவலம் பற்றிப், பேசுகின்றன. அசலான “தமிழ்த் தாய்” விரட்டப்பட்டு, போலித் தமிழ்த் தாய் அரியணையில் ஏறி அமர்ந்திருக்கிறாள். தமிழ் மக்கள், அவள் காலடியில் தலை வைத்தப் புரள்வதைச் சித்தரிக்கிறார். தமிழ்நாடு என்ற மாமரத்தின் கிளைகளிலும், அடிவாரத்திலும், மரங்கொத்திகள் ஏறி அமர்ந்து, கொத்திக் கொத்தி கிளைகளுக்குள்ளும், அடிமரத்திலும், சுரங்கம் போட்டிருக்கின்றன… மாமரம் கையறு நிலையில் கதியற்று புலம்பித் தவிக்கிறது.

தமிழ் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள்…?

தெய்வத் தாயின் திருவுருவ ஓவியத்தில் கையில் இருந்து குங்குமம் கொட்டுகிறது… தலைவர்கள் போற்றித் திருவகவல் பாடுகிறார்கள்… இப்படி தமிழ் மக்கள் அவலம் பற்றி உருவகமாக சித்தரிக்கும் இக்கதைகள் தமிழன் இப்படி ஏன் தாழ்ந்தான், என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. வீரம், வெற்றிக் களிப்பாகத் தொடங்கி, பிறகு ஆணவமாக, ஆர்பாட்டமாக மாறி, இதன் மூலம், வெற்று ஆரவாரமாகி, இறுதியில் மனிதாபிமானம் அற்று, தன் பலவீனத்தைத் தானே காண இயலாமல் போய், தமிழர்கள் ஆழ்ந்து போயிருக்கிறார்கள் என்று சமுத்திரம் சித்தரிக்கிறார்…

தமிழ் மக்களின் அவலம் என்ற உணர்வை, நமக்குள் பதிக்கும், ஐந்து கதைகளை மையப்படுத்தி, இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது, இந்த தொகுப்பில் உள்ள பிற ஏழு கதைகளும், இதே தளத்தில் வந்து விடுகின்றன என்பதைக் கவனத்தோடும், தமிழ் மக்களின் அவலம் பற்றிய கரிசனத்தோடும், வாசிக்கும் நண்பர்கள் உணர முடியும். இத்தொகுப்பின் தனித் தன்மை என இப்பண்பை நாம் வெகுவாகப் பாராட்ட முடியும்.

சிறப்பாக விழாக் கொண்டாடுவதன் மூலம், ஊர்ப் பணத்தை நாசப்படுத்துகிறார்கள் காடசாமி, மாடசாமி என்பவர்கள். நீதிக்காக போராடும் பழனிச்சாமி, கடல்மணி போன்றவர்கள் நடுத் தெருவில் தவிக்கிறார்கள், சாகிறார்கள். வாச்சாத்தியின் அவலக் கதையை காமக் கதையாக, திரைப்படக் கலைஞன் மாற்றுகிறான். தமிழ் மக்களின் மேன்மையை நெஞ்சில் நிறுத்திய தமிழ் எழுத்தாளன் மனம் வேகிறான். ரேசன் கடையின் ஊழலைத் தட்டிக் கேட்க, போர்க் குணத்தோடு கிளம்பும் பெண்கள், திரைப்பட நாயகர்கள் பற்றிய கிசுகிசுப்பில் மானம் இழந்து, போர்க் குணம் மறந்து, எளிமைப்பட்டு மயங்கிக் கிடக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கதைகளின் மத்தியில், வித்தியாசமான கதை, “ஏகலைவனைத் தேடி”, ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியதன் மூலம், துரோணர் உழைக்கும் மக்களின் மாண்பை அழித்தார். தலித் மக்களைத் தந்திரமாக ஒடுக்கினார் என்று படிக்கிறோம். ஆனால், அர்ச்சுனன், துரோணரின் உதவியோடு, இந்த சதியை செய்து முடிக்கிறான் என்பது இந்தக் கதை… இதே கதையில், இன்னொரு கோணத்தையும் சிறப்பாக முன் வைக்கிறார் சமுத்திரம். துரோணரையும், ஏகலைவனையும், எதிர் நிலைகளில் நிறுத்தியபடி கதையின் கோணம் மாறுகிறது. இந்தக் கதையில், அர்ச்சுனனும், ஏகலைவனும் எதிர் நிலையில் காண்பிக்கப் படுகிறார்கள்… காவடி ஆட்டத்தில் தேர்ந்த கலைஞன் முருகன் திறமைசாலிதான், சந்தேகத்திற்கு இடமில்லை. திறமையோடு, திமிர்த்தனமும் சேர்ந்து விடுவதால், விழாவின் நிர்வாகிகளை எதிர்த்தும் நிற்கிறான், நாமும் ரசிக்கிறோம். அதே சமயம், தன் வெற்றிக்குத் துணை வரும் சக கலைஞர்களை இவன் கலைஞர்களாக மதிக்கவில்லை. தன் வெற்றிக்காக அவர்களை உரமாக்குகிறான். ஏகலைவர்களாக ஆக்குகிறான். இப்படி உரமாக்கி, உறுதி அழித்து அர்ச்சுனனாய் முன்னுக்கு நிற்கிறான்… இக்கதையின் கோணம், பிரச்சனைக்கு உரியது மட்டுமல்ல, ஆழ்ந்த புரிதலுக்கும் உரியது.

திரட்சியான கதைகள்… செறிவும், அழகும் சேர்ந்த தமிழ் நடை… வகை வகையான உத்திகள்… எல்லாவற்றிற்காகவும் பாராட்டுக்குரியவர் சு.சமுத்திரம்…

போலித் தமிழ்த் தாயின் அக்கிரமங்களை துணிவோடு, தமிழ் இலக்கியத்தில் பதித்தவர் என்ற முறையிலும், சு.சமுத்திரம் பாராட்டுக்குரியவர். இம்முறையில், நமது கால வரலாற்றை, அக்கறையோடு, அழுத்தமாக, தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் பதித்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. பல மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சமுத்திரத்தின் துணிவு, வீரம் பாராட்டுக்குரியது. தமிழ் வாசகர்கள், இதனையும் கண்டு கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும்,தமிழர்களில் அர்ச்சுனர்களாகிய சிலர், பெரும்பான்மையான தமிழ் மக்களை ஏகலைவர்களாக மாற்றி, அவர்களை ஏணிப்படிகளாக்கி உயரத்தில் நிற்கிறார்கள் என்ற முறையிலும் இக்கதைகளை வாசிக்கலாம்…