ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/அன்னை இட்ட தீ



அன்னை இட்ட தீ



முன்னால் பூனைக்கார தடாலடிகளும், பின்னால் யூனிபார தடியடிகளும், அக்கம் பக்கத்தில், உப்பு, புளி, மிளகாய், வெங்காய வாரியக்காரர்களும் புடை சூழ அந்த தலைமை சமையலாளிப் பெண், அந்த சமையல் வளாகத்தின் வாசல்படியில் வலது கால் வைத்தார்… மறு காலான இடது காலை வைப்பதற்கு தலை கிடைக்காமல், அங்குமிங்குமாய் சினம் பொங்கப் பார்த்தார்… அவ்வளவுதான்…

முட்டைகளைப் பச்சையாகக் குடிக்கலாமா, அல்லது வேக வைத்து தின்னலாமா என்று யோசித்துக் கொண்டும், முட்டைகளுக்கும் சீல் போட்டு விடக் கூடாதே என்று பயந்து கொண்டும் கிடந்த உதவி சமையலாளிப் பெண், அம்மாவைப் பார்த்ததும் ஆடிப் போனார்… இந்தச் சமையல் கூடத்திலிருக்கும், ஒரே ஒரு உதவிச் சமையலாளிப் பெண் இவர்தான்… அம்மா என்று சும்மா, சும்மா அழைக்கப்படும் தலைமைச் சமையலாளியைப் பார்த்ததுதான் தாமதம், முன்னால் அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளுக்கு மேல் உடம்பைப் போட்டு, அம்மாவின் கால்களில் தலையைப் போட்டார்… அதே சமயம், வயிற்றுக்கு வெளியே, சேலை மறைப்பில் ஒளித்து வைத்த பதுக்கல் முட்டைகள் நசுங்காமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக வயிற்றை மட்டும் தரையில் படாமல் எக்கி வைத்துக் கொண்டார்... எல்லாத் தலைமைச் சமையல்காரர்களிடமும், சரக்கு மாஸ்டராக இருப்பதற்கென்றே பிறப்பெடுத்த, "கல் தோன்றி, மண்தோன்றாக்காலத்தே முன்தோன்றி மூத்த அந்த கம்பீரமான சரக்கு மாஸ்டர், இப்போது எரியும் விறகின் சாம்பல் போல, நேராய் நிற்காமலும், கீழே விழாமலும் வளைந்து நின்றார்... மீன்குமார், மீன் குவியலில் இருந்து விடுபட்டு, அம்மாவை நோக்கி சாமியாடினார்... பல்வேறு சின்னச் சின்ன சமையல் கூடங்களையும், பால் கொடுக்கும் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் முதல் பயிர் வளரும் நஞ்சை நிலங்களையும், மடக்கிப் போட துணை போகும் ஒரு ஒல்லிச் சமையலாளி, இதர சமையல்காரர்கள் முண்டியடித்ததில் கீழே விழாமலிருக்க ஒரு ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார்... இன்னொரு சமையல்காரர் கழுத்தில் கடந்த சிலுவையை எடுத்து அம்மாவைப் பார்த்தபடியே கண்களில் ஒற்றிக் கொண்டார். குல்லாய் போட்ட இன்னொரு சமையல்காரர், அம்மா இருக்கும் திசைதான் மெக்கா இருக்கும் திசை என்று அனுமானித்து அங்கேயே மண்டியிட்டார்... தாயே, தாயே, என்ற குரல்களைக் கேட்டு பிச்சைக்காரன்கூட தன் லெவல் பெரிது என்று பெருமிதப்படலாம்... ஆனாலும், இந்த குரல்கள் வெளியே போய்க் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக நிற்க வைத்தது. இந்த வேடிக்கையாளர்கள் அந்த தலைமைச் சமையல்காரரையும், அவரது உதவியாளர்களையும், அதிசயமாய்ப் பார்த்தபோது-

காட்டா மோட்டா உடையோடு, கம்பீரமாக நின்ற, அந்த அம்மா சமையலாளி, காலடியில் தலை போட்டுக் கிடந்த பெண் உதவிச் சமையல்காரியை ஒரு அங்குலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கீழே குனிந்து பார்க்காமல், முகத்தை ஆறு அங்குல உயரத்தில் தூக்கி கொண்டு சுற்று முற்றும், பார்த்தார்........ அவரது பார்வையில்-

முன்பு ஒரே சமையல் கூடமாக இருந்து, இப்போது இரண்டாக தடுக்கப்பட்ட சமையல் கூடங்கள் பட்டன... முதலாவது சன் மைக்கா போட்ட தளம். இதில் வெள்ளி அடுப்பு... சந்தனக்கட்டை விறகுகள்... தங்கப் பானை... ஆங்காங்கே அமுல் பேபிக் காய்கறிகள்... கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான பளபளப்பு அரிசி ரகங்கள்... முந்திரிக் கொட்டைகள்... ஆறுபோல் பெருக்கெடுத்த பால்... பனி மலையாள நெய்க்குவியல்... முக்கனிகள்... அறுபத்தி நாலு வகையான ஆகார வகையறாக்கள்...

அந்த தலைமைச் சமையலாளியின் கண்கள் பிரகாசித்தன... அதே சமயம் ஒவ்வொரு உதவிச் சமையலாளியின் முதுகுக்குப் பின்னால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்த வகையறாக்களை அதே கண்கள் பங்காளித்தனமாகவும் பார்த்தன. பிறகு அந்தக் கண்கள் கள்ளிச் செடிகூட முளைக்காத கட்டாந்தரையில் உள்ள சாமானிய சமையல் கூடத்தில் வைக்கப்பட்ட அழுகிப் போன காய்களையும், பால் கலந்த தண்ணணீரையும், மோட்டாரக தானியங்களையும் புகைமுட்டும் அடுப்பையும் பார்த்தன... பிறகு கம்பீரம் குலையாமலே வெள்ளைக்காரன் கட்டிப் போட்ட அந்த சமையல் கூடத்தை மேலும் கீழுமாகப் பார்த்தன. இது உருவாக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் காண்ட்ராக்ட், கமிஷன் பூகம்பங்களால் சுண்ணாம்புத் தடயம்கூட இல்லாமல் போய்விட்டன... ஆனால் இந்தக் கட்டிடம் மட்டும், இன்னும் மார்க்கண்டேயத்தனமாகவே உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட பௌதிக ரசாயன சேர்க்கையால், இதன் தேக்குக் கம்புகளே, இரும்புப் பட்டைகளானது போன்ற பரிணாம மாற்றம் ... புதுவைக்கு அருகே காவக்கரையில், காலச்சிற்பியால் கணக்கெடுக்க முடியாத வயதுள்ள மரங்கள், கற்களாய் உருமாற்றம் செய்யப் பட்டுள்ளனவே- அது மாதிரி.

கால் மணி நேரமாக அம்மாவின் கால்களில், முகம் போட்டுக் கிடந்த உதவிச் சமையல்காரிக்கு, முதுகு வலித்தது.ஆகையால் அங்குமிங்குமாக நெளிந்தார்... இதனால் வயிற்றுக்குள் பதுக்கி வைத்த முட்டைகள் உடைந்து, கூழாகி அம்மாவின் கால்களை நனைத்தன... உடனே, அம்மாவும் தனது செருப்புக் காலால் உதவிச் சமையல்காரியின் நெற்றியை பிராண்டிவிட்டு, அருவெறுப் போடு இரண்டடி நகர்ந்தார். ஆனாலும் அந்தப் பெண் இரண்டே கால் அடி வரை பாம்புபோல் நகர்ந்து பிறகு அம்மாவின் காலடியில் தலையைப் போட்டுவிட்டு, அப்புறம், போட்டதலையை பாம்புத்தலைபோல் நிமிர்த்திக் கொண்டு, அந்த அறையே குலுங்க இப்படி முழங்கினார்.

"அம்மா... என் அம்மா... தங்கம்மா... தமிழம்மா... பிரபஞ்சத்தின் பேரண்ட முட்டையே இதோ பாரம்மா... இந்த முட்டைகள் உன் தரிசனத்தால் எப்படி நெகிழ்ந்து விட்டன என்று... உங்கள் வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சியை எப்படி பீறிட்டுக் காட்டுகின்றன என்பதைப் பாருங்கள் தாயே... பாருங்கள்... இந்த முட்டைகளின் வெள்ளைப் பிர வாகம், நீ களங்கமற்றவள் என்பதை கட்டியம் கூறுகிறது. இந்த மஞ்சள் பெருக்கோ. நீஉயிரின் உள்ளொளி என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. என் சொல்வேன்... என் செய்வேன்... இந்த மாதிரி அதிசயம் எப்போதுமே நடந்ததில்லை... இதனால்தானே ஆன்றோரும், சான்றோரும் உன்னை அதிசயத்தாய் என்கிறார்கள் தாயே!”

அந்தம்மா, இப்போது கூழாகிப் போன முட்டைகளை, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்... அதன் பின் தன் மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் மீண்டும் காலில் தலை போட்ட உதவிச் சமையல்காரியின் நெற்றிக்கு கால் நகத்தால் குங்குமம் போட்டார்... உடனே கீழே கிடந்த அந்தப் பிராட்டியாரும் பக்திச்சுவை சொட்டச் சொட்ட எழுந்தார்... அம்மாவை கைகூப்பி பார்த்தபடியே மீண்டும் விழப் போனார். இதற்குள் கால்கள் கிடைக்காமல் முண்டியடித்த சமைய லாளிக் கூட்டத்தில் சாமியாடிக் கொண்டிருந்த மீன்குமார், அம்மாவின் காலில் குனிந்துதான் விழப் போனார்... பிறகு அது மரியாதைக் குறைவு என்று நினைத்ததுபோல் தடாலென்று விழுந்தார்... ஆனாலும் நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... மீன்களை அரிவாள் மனையில் நறுக்கிக் கொண்டிருந்த அவர், அவசரத்தில் அந்த அரிவாள் மனையைக் கையில் எடுத்தபடியே கீழே விழுந்து விட்டார்... இதனால் அவர் தலையில் பலத்த வேட்டு... அம்மாவின் பாதங்களில் லேசான இரத்தக் கீறல்கள்... அன்னையாரும் ஒரு காலை லேசாய் தூக்கி படபடப்பாய், கோபம், கோபமாய் பார்த்தார்...

அம்மாவின் காலில் விழப் போன எஞ்சிய சமை யலாளிகள், துடிதுடித்துப் போனார்கள்... தலையில் நீருற்று போல் ரத்தம் பொங்கும் மீன் குமாரை, ஒரு தள்ளு, தள்ளிவிட்டு, அம்மாவின் பாதக்கீறல்களை படபடப்பாய் பார்த்தார்கள். பெண் உதவிச் சமையலாளி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, வயிற்று மறைப்பிற்குள் உடைபடாமலிருக்கும் முட்டைகள் எவ்வளவு தேறும் என்று கணக்குப் பார்த்தார்... என்றாலும் அம்மா கஷ்டப்பட்ட காலத்திலேயே அவருக்கு பக்கத் துணையாக இருந்த ஒரு முக்கிய சமையலாளி, இப்படிச் சூளுரைத்தார். "தமிழைப் பெற்ற தாயே... என் தாயை சின்னவளாக்கிய பெரியவளே!" உன் திருப்பாதங்களில் ரத்தத்தைக் கண்ட பிறகும், நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா தாயே... அய்யகோ இது என்ன கொடுமை... காலில்பட்டகாயத் தையும், வலி பொறுக்காமல் நீ பல்லைக் கடிப்பதையும் பார்த்துக் கொண்டு இன்னும் நாங்கள் உயிரோடு இருக்கிறோமே தாயே... இதுதானம்மா கொடுமை... ஆனாலும் இனி இருப்பதில்லை... உயிர் தரிப்பதில்லை. உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா பிறவி எடுத்தோம்? இப்போதே தீக்குளிப்புச் செய்யப் போகிறோம் தாயே!”

அந்த முக்கிய சமையலாளி, உடனடியாய் ஓடிப்போய் சாமன்ய சமையல் கட்டுக்கு கீழே வைக்கப்பட்ட ஒரு மண்ணெண்ணை பாட்டிலை, எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். சக சமையலாளிகள் அனைவர் மீதும், பாட்டிலைத் திறந்து குபுக் குபுக் என்று ஊற்றினார்... பிறகு, 'ஆளுக்கு ஒரு தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு தீக்குளிப்பு செய்யுங்கள்' என்றார். தான் மட்டும் அந்த தீக்குளிப்பை பார்த்துவிட்டு அப்புறம் யோசிக்கப் போவதுபோல்; வேறு வழியில் லாமலோ என்னவோ, அத்தனை சமையலாளிகளும் வத்திப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு விட்டு, அவை இல்லாத இடத்தைத் தேடினார்கள்... 'எங்கே தீப் பெட்டி... எங்களின் இனிய தியாகத்திற்குத் துணை போகும் தீப்பெட்டி எங்கே... எங்கே...” என்று குரலிட்டார்கள்...

இதற்குள் வெளியே வேடிக்கை பார்த்த கூட்டத்தில் இருந்த தலைமறைவு புகழ் சாமி” ஒரு தீப்பெட்டியை எடுத்து உள்ளே போட்டுவிட்டு, மீண்டும் தலைமறை வானார். வேறு வழியில்லாமல் அந்த முக்கிய சமையலாளி தீப்பெட்டியை எடுத்து குச்சியையும் உருவி, இன்னொரு 'வாய் செத்த சமையலாளி,மேல் குறி வைத்தார். ஆனாலும்அத்தனை சமையலாளிகளும் இப்படிச் சொன்னார்கள்.

"அம்மா... அம்மா... தானைத் தாயே... ஞானத் தாயே!... இந்தக் கால் காயத்தோடு நாங்கள் இல்லாமல் நீ எப்படியெல்லாம் அவஸ்தைப் படப் போகிறாயோ... அதை நினைத்தால்தான் அம்மா, இந்த அற்ப உயிர் போக மறுக்கிறது... வேண்டுமானால் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மீன் குமாரை இப்போதே தீக்குளிக்கச் செய்யலாம் தாயே..."

தலையில் பெருக்கோடிய இரத்தப் பொந்தை கைக் குட்டையால் பொத்தியபடியே வலி பொறுக்காமல் துடித்த மீன் குமார், அந்த வலியையும் மீறி உஷாரானார். அம்மாவின் கால்களில் விழுந்தபடியே, 'குய்யோ, முறையோ' என்று கூப்பாடு போட்டார்.

"தாயே, தமிழே... உன் காலில் காயத்தை ஏற்படுத்திய இந்த அற்பன் தீக்குளிக்க சளைக்க மாட்டான். ஆனாலும் என்னை சொந்த மகனைப் போல் நேசித்த தாங்கள், நான் தீக்குளித்தால் அதைப் பொறுக்க மாட்டாது தீக்குளித் துவிடுவீர்கள் என்று தான் தயங்குகிறேன். தமிழ் தாயே..."

அம்மாவுக்கு அப்போதுதான் உறைத்தது. சமையலாளிகளைப் பார்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்பதுபோல் கையசைத்துவிட்டு வாயசைத்தார்...

"எவனும், எவளும் தீக்குளிக்க வேண்டாம்... நாம், வாழப் பிறந்தவர்கள்... ஆளப் பிறந்தவர்கள்... எல்லாம் நல்லபடியாய்த் தானே நடக்குது?"

அந்த உதவிப் பெண் சமையலாளி அனைத்து சமையல்காரர்கள் சார்பிலும் சமர்ப்பித்தார்.

‘'நீ இருக்கும் போது எங்களுக்கு ஏதம்மா குறை?... சாப்பிடுகிறவர்களுக்காகத்தான் சமையல் என்பதை மாற்றி, சமையலாளிகளுக்கே சாப்பாடு என்று புதுமை செய்த புரட்சியே... இந்தப் புரட்சி நீடிக்கும் வரைக்கும் எங்களுக்கு ஏதம்மா குறை...?"

அம்மா மெல்லச் சிரித்தார். பிறகு தயாராகப் போடப் பட்டிருந்த, ஒரு ராஜாராணி நாற்காலியில் உட்கார்ந்தார்... அனைவரையும் வினயமாகவும், வினாவோடும் பார்த்தார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் முதுகுக்குப் பின்னால் பதுக்கி வைத்தவற்றில் முக்கால் வாசியை அம்மாவின் காலடியில் போட்ட போது, அது அம்மாவின் கழுத்தளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் அம்மா வேறுபக்கமாக உட்கார்ந்தபடியே நாற்காலியை இழுத்துப் போட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தத்தம் வேலைகளில் ஈடுபடத் துவங்கினார்கள். மீன் குமார், மீன் செதில்களை நறுக்கினார். ஒருத்தர் முந்திரிப் பருப்பை உடைத்தார். இன்னொருத்தர் வெங்காயத்தை உரித்தார். ஒருத்தர் மாவு பிசைந்தார். இந்த மாதிரியான வேலைகளை தனது தகுதிக்கு கீழாகக் கருதும் உயரமான ஒல்லி சமையல்காரர் தங்கமுலாமிட்ட சரிகை காகிதத்தால் மூடப்பட்ட தங்கத் தட்டை அம்மாவின் முன்னால் நீட்டினார். அம்மாவும், அந்த சரிகை காகிதத்தை கை நகத்தால் கிழித்தபடியே உள்ளே இருந்த ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார். நன்றாக இருக்கிறது என்பதுபோல் கண்களைச் சிமிட்டினார். இந்தச் சமயத்தை எதிர்பார்த்திருந்த ஒரு அடாவடிச் சமையலாளி அம்மாவின் காலடியில் முகம் போட்டுவிட்டு, மரியாதைத் தனமாக எழுந்து கை கூப்பியபடியே எல்லோருக்கும் தெரிந்த தகவலை ஒரு ரகசியம் போலச் சொன்னார்.

"குடிசை வாழ் மக்களின் மங்காத்தாவே.. சேரிவாழ் மக்களின் இசக்கியம்மனே!!... பிராமணர்களின் காமாட் சியே...!!! சூத்திரர்களின் இருளாயியே!... பிறக்கும்போதே தங்கத்தால் அரிசி செய்து, வைரத் துவையலும், வைடூரியப் பொரியலுமாய் உண்டு திளைத்த நீயே... இந்த உணவை உண்டு விட்டு புளகாங்கிதப் படுகிறாய்... ஆனால் நாம் சமைக்கும் சாப்பாட்டை உண்கிறவர்களுக்கு வாந்திபேதி வருவதாக எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் தாயே... இப்படிப் பகை பார்வையாய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை தாயே... உன் குறிப்பறிந்து அந்த வாந்திபேதிக் காரர்களை குணப்படுத்த, அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டேன் தாயே... அவர்கள் குணமாக குறைந்தது மூன்று மாதமாகும் குணக் குன்றே..."

குணக் குன்றான தலைமைச் சமையலாளி, அப்படியும் உதடுகளையும் கண்களையும் ஒரு சேர துடிக்கவிட்டபோது, விவரம் புரியாத சரக்குமாஸ்டர் புல்லரித்துப் போனார்... சக சமையலாளிகளைப் பார்த்து ஒரு சொற்பொழிவே நிகழ்த்தினார்...

"உள்ளபடியே நான் சொல்வதைக் கேளுங்கள்... ரத்தங்களில் ரத்தங்களே... குறை கூறுவோரையும் குணமாக் கும் கருணை உள்ளம்... நம் கண்கண்ட தெய்வத்திற்குத் தவிர வேறு எவருக்கு வரும்?... சாப்பாடு ஒத்துவராமல் வயிற்று வலியால் துடிப்பவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பண்பாடு வேறு எவருக்கு வரும்... இதுவன்றோ தமிழ் பண்பாடு!"

அம்மாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அந்த சரக்கு மாஸ்டரை ஒரு வாத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு 'எல்லோரும் அவரவர் வேலையைப் பாருங்கள்'என்று ஆணையிட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தம் பணி இருக்கைகளில் உட்கார்ந்து தத்தம் வேலைகளைச் செய்ய தொடங்கினார்கள். அம்மாவும் அந்த வேலைகளை பட்டும் படாமலும் பார்வையிட்டார். சிறிது தொலைவில் அம்மாவின் கால்காயம் குணமாக, தொழுகை செய்து முடித்த ஒரு சமையலாளி, அம்மா அதைக் கண்டுக்காததால், மீண்டும் வெங்காயத்தை நறுக்குகிறார். பிறகு அம்மாவின் காலில்பட்டதை, தன் கண்ணில் பட்டதாகக் காட்டிக் கொள்ள, தன் கண்களை கைகளால் துடைத்தார். இதை தற்செயலாக பார்த்துவிட்ட தெய்வத்தாய் அவருக்கு உபதேசித்தார். 'ஏய் உன்னத்தாண்டா... வெங்காயம் வெட்டின கையாலே கண்ணைத் துடைக்காதே... கண் எரியும்...”

உடனே அத்தனை சமையலாளிகளும் ஒரு சேர முழங்கினார்கள்.

"வெங்காயக் கை... கண்ணில்பட்டால்... கண்எரியும் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்ன எங்களின் விஞ்ஞான யுகமே!... உன் யுகத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். அன்னையே... பெருமைப் படுகிறோம்..."

அன்னை, முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. ஆனாலும் அவரது கண்கள் பாகற்காய்களை நறுக்கிக் கொண்டிருந்த ஒரு 'ஜென்டில்மேன் சமையல்காரர் மீது பட்டு விட்டது. அன்னை, உடனே அருள் உபதேசம் செய்தார்.

"டேய்... பாகற்காய் பொரிக்கும் போது கொஞ்சம் தேங்காய் சீவலையும் போடு... அப்போதுதான் கசப்பு தெரியாது..." உடனே முழக்கங்கள்....

"பாகற்காய் கசப்பை போக்க வழிகாட்டிய பைங்கிளியே..! கண்கண்ட தெய்வமே!!... உன்கண்டுபிடிப்பு:ஐசக் நியூட்டனின் புவிஈர்ப்பு தத்துவத்தைவிட, ரைட் சகோதரர்களின் விமான கண்டுபிடிப்பை விட மேலான கண்டுபிடிப்பம்மா... இதற்காகவே வரலாறு உன்னை இனம் காட்டும் தாயே... இனம் காட்டும்..."

ஆசாமிகள், கிண்டல் செய்கிறார்களோ என்பது போல் அம்மா பார்த்தார்... இல்லவே இல்லை... அத்தனைக் கண்களிலும் பக்தி பரவசம்... அத்தனை மேனிகளிலும் நெளிவு சுழிவு... இதனால் உற்சாகப்பட்ட அன்னை சப்பாத்திக்கு மாவு பிசையும் சமையலாளியைப் பார்த்தார். அவரோ அம்மாவைப் பார்த்த பரவசத்தில் சப்பாத்தி மாவில் உப்பைப் போடுவதற்குப் பதிலாக இரண்டு கிலோ உப்புக் குவியலில் ஒரு பிடி சப்பாத்தி மாவைப் போட்டு பிசைந்தார். உடனே அன்னைக்கு ஆத்திரம் வந்தது...


"அடே... என்ன காரியம் செய்கிறாய்... உப்பில்லா பண்டம் மட்டும் அல்ல... உப்பான பண்டமும் குப்பை யிலே... இது தெரியாதா..."

"தெரியும் தாயே தெரியும்... ஆனாலும் உன் திருப்பார்வையில் உப்பே மாவாகும்... மாவே உப்பாகும்... என்பதும் தெரியும்... ஏனென்றால் நீ சர்வ சித்துக்கும் ஈஸ்வரி... இந்த உப்பை மாவாக்க சர்வேஸ்வரியான உனக்கு எளிது தானே... உப்பின் மகத்துவத்தை உணர்த்திய உத்தமியே... உப்புள்ள காலம் வரை நீ வாழ வேண்டும் தாயே... நீ வாழ்வதைக் கண்டு நெஞ்சாற மகிழ நாங்களும் வாழ வேண்டுமென்று அருள் பாலிப்பாய் தாயே..." அன்னை அருள் பாலித்த போது, செக்கச் சிவந்த உடம்போடும், கன்னங் கரேல் உடையோடும் ஒருத்தர் அந்த சமையல் கட்டிற்குள் நுழைந்தார். இவர் முறைப்படியான சமையலாளி அல்ல. ஆனாலும் இந்த சமையல் கூடத்தில் ஒட்டிக் கொள்ளும் நிரந்தரர். இப்போது ஒட்டுதல் அதிகம்... அம்மாவின் பாதங்களை நோக்கி, கைகளை குவித்து ஒரு கும்பிடு போட்டார். அம்மா அதைக்கண்டு கொள்ளாததால், கீரை ஆய்ந்து கொண்டிருந்த ஒரு சமையலாளியிடம் போனார். அந்தக் கீரைகளில் காம்புகள் எத்தனை சதவீதம்... இலைகள் எத்தனை சதவீதம் என்று 'குத்து'மதிப்பாக பார்த்துக் கொண்டு நின்றார். உடனே அன்னையானவர், தொழிலாகுபெயரால் அவரைமரியாதையுடன் அழைத்தார்...

"மிஸ்டர். கீரைமணி... வாருங்கள்... இதோ இங்கேயுள்ள முட்டைத் திரவத்தை ஒரு சட்டியில் வாரிப் போடுங்கள்... அதோ அங்கேயுள்ள ஜனரஞ்சக அடுப்பில் கிண்டப்படும் ரவையில் ஊற்றுங்கள்... பாவம் மக்கள்... அவர்களையும் முட்டையாக்க வேண்டாமா...?"

கீரை மணிக்கு, உச்சி முதல் பாதம் வரை பக்தி பரவசம் ஏற்பட்டது... முட்டைக் கூழை சட்டியில் ஊற்றிக் கொண்டே, குரல் தழுதழுக்க அன்னைக்கு புகழாரம் சூட்டினார்.


"நீ சாதாரண மனுஷி அல்ல... சமூக நீதி காத்த மகா மனுஷி... ஏழைகள் முட்டைகளை உடைக்க கஷ்டப்படுவார்கள் என்று, அவற்றை உடைத்துக் கொடுக்கும் உன்னதமே!... உனது இந்த தீரச் செயலுக்காக, இனமானம் காக்கும் தளபதியான நான் உனக்கு கேடயமாக இருப்பேன்... உனக்கு வாழ்நாள்வரை விசுவாசமாக இருப்பேன்... உன் எதிரிகளைச் சிதைத்து சின்னா பின்ன மாக்குவான் இந்த பகுத்தறிவு செம்மல்...!"

அந்தம்மாவுக்கு, இந்த மாதிரி புகழ் பாடுவதில் தன்னிகரற்ற ஒரு சமையலாளி, மிஸ்டர் கீரை மணியைப் பொறாமையோடு பார்த்துவிட்டு, அன்னையின் அருகில் சென்று வாய் பொத்தி வர்ணித்தார்...

"எங்கள் இனத்தின் இனமே... குலத்தின் குலமே... மலைகளின் அரசர் இமயம்... நதிகளின் அரசி காவேரி.. மொழிகளின் அரசி தமிழ்... அரிசி ரகங்களின் அரசி ஜெ.ஜெ.92... இவை அத்தனைக்கும் சக்ரவர்த்தினி நீ...இந்த அணையாபெரு அடுப்பை ஏற்றிவைக்க வேண்டும் அம்மா... ஒன் கைபட்டு புனிதம் பெறுவதற்கு விறகு சுள்ளிகளுக்கு ஏது தகுதி... இதனால்தான், சந்தன மரங்களையே விறகாக வெட்டி வந்திருக்கேன் தாயே... அதோ வெள்ளி அடுப்பு... அதன் மேல் பொன் பானை... உன் தங்க கைகளால், பானையில் அரிசி போட்டு, அடுப்பில் நெருப்பூட்ட வேண்டும் ஆனந்த வல்லியே... அற்புத நாயகியே..."

அன்னை, அந்த அடைமொழிகளுக்கு ஏற்ப எழுந்தார். சமையல் திட்டைப் பார்த்து முகம் சுழித்தார்... அதட்டலாக கேட்டார்.

"ஆஸிட் இருக்குதா..."

"தாயே... தரணியே... தப்பேதும் செய்திருந்தால் காலால் இடறம்மா... கையால் உதையம்மா... ஆனால் ...ஆனால்...”

அன்னை திருவாய் மலர்ந்தருளினார்...

'சமையல் கட்டு ஒரே அழுக்கு...ஒரே முடை நாத்தம்..முதலில் இதைக் கழுவ வேண்டும்..."

அத்தனை பேருக்கும், போன உயிர் திரும்ப வந்தது.. இப்போது அந்த உயரமான ஒல்லி சமையலாளி திக்கித் திக்கியும் திடப்பட்டும் ஆனந்தமாய் அரற்றினார்.

"ஆஸிடின் அருமையை கண்டு பிடித்த, அற்புதமே.. ஆஸிட்டுக்கு அந்தஸ்து கொடுத்த அமிலமே.. உன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் இந்த ஆஸிடின் பெயரும் உச்சரிக்கப்படும் தாயே..! உச்சரிக்கப்படும்"

அந்த தலைமைச் சமையலாளி, மக்களின் வேலைக்காரி என்பதை மறந்து, எஜமானியப் பார்வையோடு அடுப்பேற்ற எழுந்தார். உடனடியாய் முகம் சுழித்தார்... சரக்கு மாஸ்டரையும், ஒல்லிச் சமையலாளியையும் அருவெறுப் பாய் பார்த்தார். அவர்களும் புரிந்து கொண்டு கழுத்தைக் குறுக்கி, தலைகளை கீழே தொங்க வைத்தார்கள்.சிதம்பரம் கோவிலுக்கு மேல் ஒரு கட்டிடமா..அம்மாவின் தலைக்கு மேல் ஒரு தலையா...

அம்மாவும், இந்த இரு முதுபெரும் சமையாளிகளின் தலைக்குனிவை ரசித்தபடியே, சமையல் திட்டின் மேலுள்ள வெள்ளி அடுப்பில் சொருகப்பட்ட சந்தன கட்டைகளை கேஸ் லைட்டரால் பற்ற வைக்கப் போனார்... அப்போது பார்த்து ஆஜானுபாகு உடம்பை குறுக்க முடியாமல் கஷ்டப்பட்ட சரக்கு மாஸ்டர், தற்செயலாக எரிவாயு சிலிண்டர் திருகில் கை ஊன்றி, தன் வெயிட் முழுவதையும் அதில் போட்டு ஒருச் சாய்த்துக் கிடந்தார்.

அன்னை, இதைகவனிக்காமல் விறகிற்குதீயிட்டார். அவ்வளவுதான் ..அந்த அறை முழுதும் தீப்பிடித்தது. அன்னையின் காட்டா மோட்டா உடையிலும் நெருப்பு பற்றியது. அவரிடமிருந்து, மரியாதையான தூரத்தில் நின்ற அத்தனை சமையலாளிகளும், அன்னையை விட்டு விட்டு அவசர அவசரமாய் வெளியே ஓடினார்கள். தீயின் கொடூரத்தில் அங்குமிங்குமாய் அல்லாடிய அன்னை, அவர்களின் முன்னால் ஓடிப்போய் நின்று, தன்னை காப்பாற்றும்படி ஆணையிட்டார். அப்புறம் கையெடுத்து கும்பிட்டார். ஆனால், எந்தக் கரங்கள் அவரை ஒரேயடியாய் வணங்கினவோ,அதற்குரிய வர்கள் ஓடினார்கள். அன்னையின் ஆடையைப் பற்றிய தீ, இப்பொழுது அவரது உடம்பை பற்றப் போனது. அவர், வலி பொறுக்க முடியாமல் தவியாய் தவித்தார். துடியாய்த் துடித்தார். அங்கும்மிங்கும் சுற்றினார். அப்பொழுது அந்த உதவிப் பெண் சமையலாளி, ஜாக்கெட்டில் பற்றிய தீயை ஜாக்கெட்டோடு கிழித்து போட்டு விட்டு, ஓலமிட்டபடியே ஓடிக் கொண்டிருந்தாள். அன்னையோ, பெண்ணுக்கு பெண் என்ற முறையில், அந்த சமையலாளியின் முன்னால் தீ மயமான தனது வலது கரத்தை நீட்டி, "என்னைக் காப்பாற்று காப்பாற்று' என்று அழுதழுது கெஞ்சினார். ஆனால், அந்தப் பெண்ணோ " அடிப்போடி உனக்காக நான் எதற்கு சாகனும்' என்று அடாவடியாய் சொன்னதோடு, அன்னையையும் கீழே தள்ளிப்போட்டு விட்டு, தாவித்தாவி ஓடினார். அன்னை நெருப்பில் விறகாக போகின்ற நேரம்... அங்கும் இங்குமாய் தரையில் புரண்டார்

கீரைமணியும், அன்னையைக் கண்டுக்காமலே தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினார். பாவம்... அவர் கவலை அவருக்கு. அடுத்த தலைமை சமையலாளியிடம் எப்படி ஒட்டிக் கொள்வது என்ற சிந்தனை அவருக்கு.

—தாமரை—ஆகஸ்ட்-1995.