ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/ஐம்பெரும் விழா
ஐம்பெரும் விழா
ஊர்க் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அனைவரும் ஐயனார் கோவில் மைதானத்தில் குவிந்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர், கர்ணம், முன்ஸிப், கல்விக்கூட மேனேஜர் உட்பட பல 'பெரிய தலைவர்கள்' கூட்டத்தை எதிர்த்தாற்போல் ஒரு 'கோரம்பாயில்' உட்கார்ந்திருந்தார்கள். காட்டாம்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் ஒரு வழக்கம். ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவரும், மாதாமாதம் பத்து ரூபாய் கட்டி, அப்படிச் சேருகிற மொத்த தொகையை ஏலத்தில் விடுவார்கள். ஏலக் 'கழிவு' பொதுப்பணமாகும். இப்படி மாதாமாதம் சேருகிற பொதுப் பணத்தை வருடக் கடைசியில் ஏதாவது ஒரு பொதுக்காரியத்திற்குச் செலவழிப்பார்கள். இந்த ஆண்டு அவனவன் கிட்டத்தட்ட அசல் அளவுக்கே ஏலம் கேட்டிருந்ததால், மூவாயிரம் ரூபாய் தேறியிருந்தது. அந்த மூவாயிரத்தையும் என்னபாடு படுத்தலாம் என்பதை விவாதித்து, முடிவெடுக்கவே 'கூட்டம்' போடப் பட்டிருந்தது.
"இந்த மூவாயிரத்தையும், பழையபடி ஏலம் போடணும்" என்று ஏலத்திலேயே பிழைப்பு நடத்தும் ஒருவர் சத்தம் போட்டார்.
"சீச்சி! அந்த பேச்சை மாத்திட்டு அடுத்தபேச்சைப் பேசுங்க... நம்ம ஐயனாருக்கு ஜாம்ஜாமுன்னு கொடை குடுக்கணும்" என்றார் கோவில் பூசாரி.
இந்த பூர்வாங்க ஆலோசனையைப் பற்றி அக்கரைப் படாதது போல், மாடசாமி, காடசாமி, என்ற இரண்டு 'மஸ்தான்கள்'. ஒருவர் காதை இன்னொருவர் கடித்தார். ரகசியமாய்ப் பேசிக்கொண்டே, சிரித்தும் தொலைத்தார்கள். சமீபத்தில் பாரிஸில் உலக ஜோதிட ஆசாமிகள் கூடி, 1985 வாக்கில் உலகில் பேரழிவு ஏற்படலாம் என்று கூறியதை நம்பாதவர்கள் இருப்பதுபோல், காடசாமியும், மாடசாமியும் கூட்டு சேர்ந்தால், ஊரே நாசம் என்பதை நம்பாதவர்கள் உண்டு. அப்படி நம்பாதவர்கள் அந்த இரண்டு ஆசாமிகள் மட்டுந்தான். இருந்தாலும், இந்த மனிதர்களின் விநாசகக் கூட்டால் ஏற்படும் விபரீத விளைவுகளை, ஊர்மக்கள் வேடிக்கை மனப்பான்மையோடுதான் ரசிப்பார்கள். சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.
“மூவாயிரத்தையும் என்ன செய்யலாம்? சொல்லுங்க நேரமாவுது...” என்றார் பஞ்சாயத்துப் பரமசிவம்.
மாடசாமி முன் மொழிந்தார்.
“நம்ம ஜனங்களுக்கு... நம்ம பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தைப் பத்தித் தெரியும்..அவரு இந்த கிராமத்தில் இருந்து ... சென்னைக்குப் போய் வெற்றியோட திரும்பி இருக்காரு... அதுக்கு இந்த ஊர்ப்பணத்தில... ஒரு பாராட்டு விழா வைக்கணும்...”
கூட்டத்தில் ஒருவர் எழுந்தார். கூடவே அவர் நாவும் எழுந்தது.
“மெட்ராஸுக்குப் போயிட்டு வர்ரது பெரியகாரியமா...? நம்ம ஆளுங்க எத்தனையோ பேரு மெட்ராஸுக்குப் போயி... அங்கேயே தங்கி... மளிகைக்கடை வச்சிக்கிட்டு இருக்காங்க....இந்த அற்ப விஷயத்துக்கு ஒரு பாராட்டா....”
காடசாமி எழுந்தார். சென்னைக்குச் சென்று மீளல் அற்ப விஷயமா? கொடுமை! கொடுமை!!
“அந்த பயலுக மெட்ராஸிலே தங்கிட்டு நம்ம.. பாட்டியை மறந்துட்டாங்க... (பிரைன் டிரைன்) ஆனால் நம்ம பரமசிவம் சென்னைக்குப்போயி பல பொதுக்கூட்டங்களில் பேசிட்டு வெற்றியோட திரும்பியிருக்கார்...இதுக்கு பாராட்டு விழா வச்சே ஆகணும்.”
“பரமசிவம் பொதுக்கூட்டத்திலே பேசல கேட்டுட்டுத் தான் வந்திருக்கார், அவ்வளவுதான்” என்றார் ஒருவர்.
மாடசாமி, சமாளித்தார்.
“பட்டணத்துல நடக்கிற பொதுக்கூட்டங்களில் பேசுறதை விட அதை கேக்குறத்துக்குத் தான் திறமை வேணும், பொறுமை வேணும், இத நம்ம பரமசிவம் செய்திருக்கார். அதுக்கு நாம பாராட்டுவிழா செய்யணும்.”
காடசாமிக்கு, ஒரு நல்லமுத்து கேள்வி கேட்டான்.
“மெட்ராஸுக்குப் போயிட்டு வர்ரது ஒரு பெரிய விஷயமா? நம்ம மாட்டு வியாபாரி மவன்,ரயில்ல அதுவும் வித்தவுட்ல போயிட்டு எத்தனையோ தடவை பிடிபடாம வந்திருக்கான் இதுக்கு பாராட்டுன்னா அதுக்கும் பாராட்டு வேணும்.”
பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் கோபத்தை அடக்கிக்கொண்டார். பாராட்டுவிழா இல்லாமல் போயிடுமோ? கூட்டத்தில் ஒருவர் “பரமசிவம் ஊரைவிட்டு ஒரேயடியா.... மெட்ராஸுக்குப் போயிருந்தா பாராட்டு விழா வைக்கலாம்” என்று அரைகுறையாக முனங்கினார். உடனே மாடசாமி. “என்னவே சொல்றீரு, சபையில சத்தம் போட்டுசொல்லும்” என்று சொன்னார்.
“ஒண்ணுமில்ல....,நம்ம பரமசிவம்.... பட்டணத்தில சிறப்பா என்னத்தப் பார்த்தாருன்னு சொல்லட்டுமே” என்றார்.
பஞ்சாயத்து பரமசிவம். அதிகப் பிரசங்கம் செய்தார்.
“மெட்ராஸ்ல நல்ல முன்னேற்றம் உதாரணமா அங்க,செத்தவன தேர்ல வச்சி ஜோடிக்கிறாக. பிறகு சிலம்பு மேளம் வச்சி சுடுகாட்டுக்குத் தூக்கிக்கிட்டு போறாங்க.நாம என்னடான்னா பிணத்தைக் கட்டிலுல வச்சே சுமந்துக்கிட்டுப் போறோம். அதனால, நாமும் செத்தவன தேர்ல வச்சுத் தூக்கி சீர்திருத்தம் செய்யனும்... அப்புறம்...”
அப்புறம், அவரை மாடசாமி விடவில்லை. அவரே பஞ்சாயத்தை இடைமறித்துப் பேசினார். நரிக்கு வாயிருந்தால், அதுவும் அப்படித்தான் பேசியிருக்கும்.
“நம்ம பரமசிவம்...பத்தரைமாத்துத் தங்கம்... ஊரையே உயிரா நினைக்கிறவரு..உசிரதுச்சமா எண்ணுறவரு..ஊர்ச் சொத்தைத் தன்னோட சொத்தா பாவிக்கிறவரு.. சென்னைக்குப் போயி... இந்த காட்டாம்பட்டி பண்பாட.. நாகரீகத்த.. நகரத்துல காட்டிவிட்டு வந்திருக்காரு.. முதல் தடவையா ரயில் ஏறி.. நம்ம.. மானத்தையும்.. மெட்ராஸ்ல ஏத்திட்டு வந்திருக்காரு..இவருக்கு இந்த மூவாயிரம் செலவுல.. பாராட்டு விழா வைக்காட்டா.. என் பங்கை பிரிச்சிக் குடுங்கப்பா...என்ன சொல்றீங்க...?” இன்னொரு குரல் சத்தம் போட்டது.
“மெட்ராஸ் போயிட்டு வர்றதுக்குத்தான் பாராட்டா? என் கொழுந்தியா மவன்.. கண்ணன்.. 'ஓடிப்போங்க' என்கிற சினிமாவுல நடிச்சிருக்கான்..இதுக்குப் பாராட்டு கிடையாதா...?”
“பயமவன்.. என்ன வேஷத்தில வாரான்லே?”
“வேஷத்தை விடும்.. வாரான் அது போதாதா?”
“ஓ. அவனா, கூட்டத்துல.. ஒரு.. மூலையில.. நின்னு... ஈரோவுக்கு 'ஜே' போடுறான்”.
ஒருவர் அலுத்துக்கொண்டார்.. “நம்ம.. பயலுக.. மற்றவர்களுக்கு 'ஜே' போடத்தான் லாயக்கு.. மத்தவங்களே.. தனக்கு 'ஜே' போடவைக்க மாட்டாங்க.”
முன்மொழிந்தவர் 'பாயின்டுக்கு' வந்தார்.
“அது கிடக்கட்டும்... என் கொழுந்தியா மகனுக்கு பாராட்டு இல்லன்னா... ஒரு இழவும் வேண்டாம்.”
மாடசாமி, காடசாமியைப் பார்க்க, காடசாமி கைநீட்டிப் பேசினார்.
“மச்சான் சொல்றதும் நியாயம்தான்... நம்ம கண்ணன் பய.. அதில சினிமாவுல.. ஒருநொடிதான் வாரான்னாலும்... வந்திட்டானே...அவன் அதுல வந்தனாலதான்.. நம்ம ஊரு டுரிங் தியேட்டர்ல.. அந்தப்படம் ஒரவாரம் ஓடிச்சுது..நம்ம ஊர் சரித்திரத்ல எந்த படமும் ஒருவாரம் ஓடுறது கிடையாது. அதனால..கண்ணனுக்கு ..பாராட்டு வச்சி.. பஞ்சாயத்துத் தலைவரை பொன்னாடை போர்த்தச் சொல்லணும்.” "அவன் அண்ணன் எல்லா டிக்கெட்டையும் வாங்கி ஆட்களை விட்டான் அப்படியும் நிறைய பேரு மறந்துட்டாங்க', என்று முன்பு முணுமுணுத்த அதே குரல் இப்போது அதைவிட சன்னமாக ஒலித்தது. அது ஊர் காதில் ஒலிக்கவில்லை.
மாடசாமி விஷயத்துக்கு வந்தார்.
"சரி....பரமசிவத்துக்கு...வெற்றி விழா... கண்ணனுக்குப் பாராட்டு விழா... என்ன சொல்றீங்க?"
இதுவரை பேசாத மனிதர் ஒருவர் பேசினார்.
"என் மகன் ஒரு பேப்பர்ல ஆசிரியருக்கு கடிதமுன்னு எழுத அது வந்திருக்கு. காட்டாம்பட்டிக்காசி என்கிற பேர்ல வந்திருக்கு. நம்ம ஊரு பேரு பேப்பர்ல வர அளவுக்கு எழுதியிருக்கான். இதுக்கு பாராட்டு வைக்க நாதியில்லையா?”
நாதியில்லை என்பதுபோல், ஒரு குரல் இடித்தது.
"வே! உம்ம பையன் ரெண்டு பக்கம் எழுதின சங்கதி எனக்குத் தெரியும்...அதை.... அந்தப் பேப்பர்காரன் ரெண்டு வரியா குறைச்சதும் எனக்குத் தெரியும். இதுக்கு ஏன் பாராட்டுங்கறதுதான் எனக்குத் தெரில..."
"வே... மாப்பிள்ளை அந்த ரெண்டு தாளும் வேற பையன் எழதிக்கொடுத்தான்.... வராதுன்னு நினைச்சி எழுதிக்குடுத்தான்...வந்துட்டு. சங்கதி எனக்குத்தான் தெரியும்"
“என்னதான் எழுதியிருக்கான்? "நடிகை நந்திகுமாரி புருஷன துரத்துனதால் நாடே கொதிச்சிநின்னு ஐந்தாண்டு திட்டமே ஸ்தம்பிச்சிப்போச்சுனு எழுதியிருக்கான்"
பேசிய மனிதர் மீண்டும் பேசினார்.
"பாருங்க எவ்வளவு நல்லா எழுதியிருக்கான் என் மவன் அதைவிடுங்க காட்டாம்பட்டி காசின்னு பேரு பதிவாகி நம்ம பட்டிப்பேரு முதல் தடவையா பேப்பர்ல வந்திருக்கு.இதுக்கு பாராட்டு இல்லன்னா ஒரு இழவும் வேண்டாம். எங்க குடும்பத்துப் பங்கை பிரிச்சிடுங்கப்பா"
காடசாமி, மாடசாமியைப் பார்க்க அவர்,கூட்டத்தை நோக்கி குரலை ஏவினார்.
"பெரியய்யா சொல்றது சரிதான். நம்ம ஊருப்பேரு பேப்பர்ல வரும் படியா காசி பண்ணிட்டான். அவனுக்கும் கண்டிப்பா பாராட்டு வைக்கணும்,என்ன சொல்றீங்க? ரெண்டுல ஒண்ணு தெரியணும்"
ரெண்டுல ஒண்ணு தெரிந்தது.
"என்னய்யா இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரமா இருக்கு.என் தம்பிமவன் சாமிக்கண்ணு காவுடையா ஊர்ல போயி கள்ளத் தேங்காய் பிடுங்கும்போது.. ஊர்க்காரங்க மறிச்சிட்டாங்க. எங்க பய அவங்கள நல்லா உதைச்சிட்டு தேங்காயோட திரும்பியிருக்கான். ஊரு விட்டு ஊருபோயி அடிக்கிறது லேசுப்பட்ட காரியமா? அவன் அடிச்சிட்டான்,அதுவும் கள்ளத் தேங்காயோட திரும்பியிருக்கான். காட்டாம் பட்டிக்காரன்னா கை நீட்றவன்னு பேரு வாங்கித் தந்திருக்கான்.இதுக்கு ஒரு இழவும் கிடையாதா? என்னய்யா நியாயம்?" தாத்தா சொல்றது சரிதான்.கள்ளத்தேங்காயோட வந்ததுக்கும் ஒரு விழா வைக்கலாம்,வைக்கணும்' என்றார் காடசாமி.கூட்டம் கைதட்டி ஆதரவு தெரிவித்தது.
பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், முதல் முறையாக வாயைத் திறந்தார். இதுவரை, மற்றவர்கள் மூலமாகப் பேசியவர், இப்போது சொந்தக் குரலில் பேசினார்.
"இன்னொன்ன ஜனங்க கேக்கணும். நாம இவ்வளவு சிறப்பா விழா வைக்கிறதுக்கு நம்ம ஊர் தெய்வம் காலஞ்சென்ற காளமேகம்தான் காரணம்.நம் ஊர இவ்வளவுதூரம் முன்னுக்குக்கொண்டு வந்தவரு அவருதான். அவருக்கும் பிறந்தநாள் வருது, அந்த சங்கத் தலைவருக்கு ஒரு நினைவு மேடைவைக்கனும்!"
இது வரை எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் காதிலேகேட்டு, வயிற்றிலே எரிந்து கொண்டிருந்த ஒரு "எழுபது வயது முதியவர் தள்ளாமையைத் தள்ளிவிட்டுப் பொறிந்து தள்ளினார்.
"ஏ..மடப்பய மக்கா...அல்ப பயவுள்ளியா...இந்த நாலு விழாவ நடத்தி எப்படியும் நாசமாபோங்கல,ஆனாஅந்த பெரிய மனுஷன் பேரச் சேத்து அவர அவமானப் படுத்தாதீங்கடா".
காடசாமி காட்ட சாமியானார்.
"மாமாவுக்குப் பொறாமை...,நம்மல்ல சின்னவருக்கு நினைவு மேடையா என்கிற வயித்தெறிச்சலு... இந்த பதினெட்டு பட்டிகள்ல நம்ம... காட்டாம்பட்டியை முதல் பட்டியா ஆக்கினவரு காளமேகம் அவருக்கு நினைவு மேடை இல்லன்னா... ஊர் எதுக்கு?”முதியவர் வேகத்தோடு, பதிலடி கொடுத்தார்.
"காளமேகம்... என்னைவிட வயசுல சின்னவர்தான்.ஆனால் அறிவுல அவரு ஒளி.என்பேரன....,தண்ணிப் பாய்க்கச் சொல்லிகையல மம்பட்டியை குடுத்தபோது அந்த புண்ணியவான் வந்து மம்பட்டியை தூக்கி எறியச் சொல்லி பள்ளிக்கூடத்துக்கு பயல அனுப்புனாரு. அவரு தெய்வமா நிக்கராரு,எனக்கு பொறாமை கிடையாது டா பரமசிவம் வீட்டில கூட அவரு போட்டோ இல்ல ஆனால், என் வீட்ல இருக்கு. பெரிய மனுஷன் பேரை கேவலப்படுத்திட்டான்னு நினைச்சிச் சொன்னேன். கெட்டுப் போறதுக்கு பந்தயம் வைக்கிறியா வைங்கடா வைங்க. எல்லாமே அல்பங்களா மாறிட்டியே ஒழிஞ்சி போங்க..."
முதியவர் போய்விட்டார்.கூட்டத்தினர், ஐம்பெரும் விழாவிற்கு இசைவு கொடுத்தார்கள். ஒரே ஒருநபர் மட்டும் அதிருப்தி தெரிவித்தார்.
“என்மவன்சிப்பாய்னு ஜனங்களுக்குத் தெரியும்.அவன் பாகிஸ்தான் போர்ல ஒரு காலை இழந்துட்டான்.இதுக்கு ஒரு பாராட்டு கிடையாதா?”
காடசாமி, இந்தக் கேள்வியைப் பாராட்டவில்லை!
"கால் போறது....பெரிய காரியமா? அவன்...,தலைவிதி.... எங்க இருந்தாலும் போக வேண்டிய காலு போயிருக்கும்.இதுக்குப் போயி விழாவா விழான்னா ஒரு விஷயம் இருக்க வேண்டாமோ?"
கூட்டம், மாடசாமி பேசியதை ஏற்றுக் கொண்டதுபோல் அமைதியாக இருந்தது. அல்லது, அது அமைதியாக இருந்ததை மாடசாமி தம் பாயின்டுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டார். உண்மையைச் சொல்லப் போனால் எந்த விழாவுமே ஊர்க்காரர்களுக்கு பிடிக்கவில்லை. என்றாலும், அதை வெளியே சொல்ல பயம்.அவனவன் பஞ்சாயத்துத் தலைவரிடம் வீட்டு வரியிலும், கூட்டுறவுத் தலைவரிடம் கடன் வகையிலும், கர்ணத்திடம் நிலம் வகையிலும் அகப்பட்டுக் கொண்டவர்கள். ஆகையால், கும்பலிலே இருந்த எல்லா கோவிந்தா சாமிகளும், அமைதியாக இருந்ததில் ஆச்சரியமில்லையாம். கூட்டம், இப்போது 'பட்ஜெட்டை' விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது.
"இந்த மூவாயிரம் ரூபாய்ல ஐம்பெரும் விழாவையும் சமாளிக் முடியுமா?"
"ஏன் முடியாது? போஸ்டர்கள் நம்ம பரமசிவம் டவுன்ல வச்சிருக்காரு சொந்த பிரஸ்ஸு. அதில அவரே அடிச்சித் தந்திடுவாரு...."
"அப்படியும் பணம் உதைக்குமே?”
“எப்படி உதைக்கும்? நம்ம ஊரு வாரச் சந்தைக்கு வந்த வெளியூர் வியாபாரிங்கக் கிட்ட அன்பளிப்ப வாங்கணும் தராதவன ஊருக்குள்ள நுழைய விடக்கூடாது."
"அப்படி வச்சாலும்,கையை கடிக்கும்".
"நம்ம மாட்டு வியாபாரிங்க கிட்ட நூறு,காண்டிராக்டர் கிட்ட முன்னூறு,நெல்லு வியாபாரிங்கிட்ட ஐநூறு....நன்கொடையா வாங்கிட்டாப் போச்சு".
"நாங்க தரத் தயார்.ஆனால், வீட்டு வரியை பிரசிடென்ட் குறைக்கணும்' என்றார் வியாபாரிகள் தலைவர் மாட்டு வியாபாரி."நான் பொய் சொல்ல விரும்பல. வரியைக் குறைக்க எனக்கு அதிகாரம் இல்ல.இதுக்குத்தான் பஞ்சாயத்துக்கு அதிக அதிகாரம் வேணுமுன்னு கேட்டு யூனியன்ல கரடியாய் கத்தறேன். ஒருவனும் கண்டுக்கமாட்டாங்கறான்' என்றார் பரமசிவம்.
"சரி வீட்டு வரியை குறைக்க முடியாட்டி... தொழில் வரியை குறைச்சுக்கலாம்' என்று காடசாமி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளியும், நன்கொடைக்கு ஆரம்பப் புள்ளியும் வைத்தார்.
ஒரு காய்ந்த வயிறுக்காரர், ஜீவமரணப் பிரச்சினை ஒன்றை சபையில் வைத்தார்.
"ஐம்பெரும் விழா, அஞ்சுநாளு நடக்கும்.வெளியூர்ல இருந்துல்லாம் ஆளுங்க வர்ரதுக்கு நம்ம ஊரு வண்டிகள அனுப்பணும்.வண்டிக்காரனுக்கு வாடகை வேண்டாமா? அது தொலையட்டும். அஞ்சு நாளும் ஜனங்க எங்கேயும் போகாம விழாவிலே கலந்துக்கணும்.நம்ம ஊர்ல முக்கால்வாசி அன்றாடங்காய்ச்சி வேலைக்குப் போகாட்டா அரிசி வேகாது. அவங்க சாப்பாட்டுக்கு என்ன பன்றது?"
பரமசிவம், பெருந்தன்மையோடு பாரியானார்.
"அதுக்கும் நம் கூட்டுறவுத் தலைவர்கிட்ட பேசிட்டேன்,சங்கத்துல கடன் வாங்கினவன் திருப்பித் தரவேண்டாம். வீட்டுவரியை இப்போதைக்கு கட்ட வேண்டாம். ஏலத்துல பணம் எடுத்தவன் இந்த அஞ்சு நாளைக்கு கூலியை எடுத்துக்கலாம். வெளியூர்ல இருந்து விழாவுக்கு வர்ரவங்களுக்கு, பள்ளிக்கூடத்துல மூணு மாசத்துக்குப் போடுற மதிய உணவை, அஞ்சு நாளைக்கும் போட்டுடலாம்"."கஜானா காலியாகிடுமே,"
'ஆகட்டுமே....விழாவைவிட கஜானா முக்கியமா?"
"அது தான் சரி."
ஊர் மக்கள் பயத்தாலும், நயத்தாலும், வேடிக்கை மனோபாவத்தாலும் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டார்கள். அந்த ஊர் குளம் பத்து வருடத்துக்கு ஒரு தடடைவதான் பெருகும். இந்த ஆண்டு குளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால், நஞ்செய் நிலமும், புஞ்செய் நிலமும் பயிர்களால் பச்சையாயின. குளத்தில் தண்ணிர் குறைவாக இருப்பதால், பயிர்கள் பட்டுப்போகுமோ என்ற ஒரு அச்சம், ஊர்மக்களுக்கு உண்டு. என்றாலும், தண்ணீரை அரிசி மாதிரி நினைத்து சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள்.
இந்த சூழநிலையில்தான் ஐம்பெரும் விழா துவங்கியது.
காட்டில் இருந்த தேக்குகளை வெட்டி பந்தல் போட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் குலை விடப் போகும் வாழைகளை வெட்டி பந்தலில் கட்டினார்கள். கரும்புகளை வெட்டி முக்கியமான வீதிகளில், வளைவுகளில் போட்டார்கள். ஆக பயிர்களில் பெரும்பான்மை சர்வநாசம். சில வாழைகளும், கரும்புகளும் சந்தடியில்லாமல் சில ஆசாமிகள் வீட்டுக்கும் போய்விட்டனவாம். ஊரில் பெண்களுடைய சேலைகளையும், ஆண்களுடைய வேட்டிகளையும் எடுத்து பானர்கள் உருவாயின. பரமசிவத்தின் பிரஸ்ஸில் உருவான போஸ்டர்கள் வெளியூர்க்காரர்கள், வண்டி வண்டியாகக் குவிந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், எங்கும் விழா எதிலும் விழா. ஐம்பெரும் விழா!
முதல் நாள் வெற்றிவிழா; சென்னைக்குப் போய் மீண்ட பரமசிவத்துக்கு "சென்னை மீண்டு வந்த செம்மல்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இரண்டாவதுநாள், கலை விழாவில், பத்துநாள் வெற்றிகரமாக படம் ஓடக்காரணமான கண்ணனுக்கு பொன்னாடை, மூன்றாவது நாள் இலக்கிய விழா, காட்டாம்பட்டியைக் காட்டிய காசிக்கு ஒரு பேனா பரிசாக அளிக்கப்பட்டது. நாலாவது நாள் வீரவிழா. புறநானூற்றில் கூறப்படும் வீரத்தின் விளைநிலம்போல், கள்ளத்தேங்காய் கையோடு கொண்டுவந்த சாமிக்கண்ணுக்கு தேங்காய் நாரால் செய்யப்பட்ட கேடயம்; இறுதியாக, காலமான காளமேகத்திற்கு நினைவு விழா. ஊர்க்கார்கள் கிணறுகளில் பம்ப் செட் கட்டுவதற்காக வைத்திருந்த சிமிண்ட்களை எடுத்து, நினைவு மேடை அமைக்கப்பட்டது. நினைவு விழாவில் பேசியவர்கள், காளமேகத்தை மறந்து, பரமசிவத்தையே பேசியதாக ஒரு புகாரும் லேசாகத் துவங்கியதாம்.
இந்தச் சயமத்தில் காடசாமியும், மாடசாமியும் ஒரு யோசனை சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஊரை, அந்தகக் கவி ஒருவன் "கலங்கா நீர்சூழ்" காடாம்பட்டி' என்று பாடி இருக்கானாம். பண்டைப் பெருமையை படம் பிடித்துக் காட்ட வேண்டாமா? ஆகையால், கால்வாசி தண்ணீர் கொண்ட குளத்தை வெட்டி, நீரை ஊரின் நாலு பக்கமும் விட்டார்கள். சிலர் இதை எதிர்த்தார்கள். நிலம் இல்லாத காடசாமி குதித்தார்.
"அட மடப்பயங்களா... பயிர் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்,பயிரை விடலாம். நம்ம பழைய பெருமையை விட முடியுமா...?இந்த ஊர்ல ஒரிஜனல் குடும்பத்தைச் சேர்ந்த எவனும் இதை எதிர்க்க மாட்டான்"
அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் தாங்கள் ஒவ்வொரு வரும் ஒரிஜனல் என்று நினைப்பு. ஆகையால் "கலங்கா நீர் சூழ்" காட்டாம்பட்டியைச் சுற்றி தண்ணிர் பெருகியது.
பொதுமக்கள் விழாக்களில் லயித்து வயல்களுக்கு போக மாட்டார்கள் என்பதை அறிந்த காடசாமியும், மாடசாமியும் இரவோடு இரவாக கையாட்களுடன் வயல்களுக்குப் போய் சவலைப்பிள்ளைகள் போல் நின்ற நெல்லையும, கரும்பையும் அறுவடை செய்து அகற்றினார்கள். குளத்துத் தண்ணீர் திறந்து போனதால், எப்படியும் வாடப்போகிற பயிர்களை சுருட்டுவதில் தவறில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். இன்னும் ஒருவன் கூட வயல் பக்கம் போகாமல் விழாவிலேயே இருக்கிறார்கள்.
எப்படியோ இந்த விழாவினால் "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த காட்டாம்பட்டி" பதினெட்டுப் பட்டிகளிலும் தலைசிறந்த பட்டியாக விளங்குகிறதாம்.
—தாமரை—டிசம்பர் 1974.