ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்/கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்
கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்
பழனிச்சாமி, சாப்பிடும் போதும் பேச மாட்டார். சாப்பிடுகிறவர்களிடமும் பேச மாட்டார். அப்படிப்பட்டவர், காலங் காலமாய் கடைப்பிடிக்கும் இப்படிப்பட்ட பழக்கத்தையும் மீறி பேசி விட்டதில், ஆனந்தவல்லியம்மா, பெயருக்கேற்ப பரவசமானாள்.
எவர்சில்வர் தட்டில் நிழல் காட்டிய இட்லிகளில் ஒன்றை, ஒரு கிள்ளுக் கிள்ளி, அதை எள்ளுத் துவையலில் ஒரு தள்ளுத் தள்ளி, கத்தரிக்காய் சாம்பாரில் ஒரு முக்கு முக்கி, வாய்க்குள் திணித்து விட்டு, அதற்கு உடன் போக்காக, ஒரு டம்ளர் தண்ணீரையும் உள்ளே அனுப்பி விட்டு, இப்படி விமர்சித்தார்.
‘சும்மா சொல்லப்படாது… ஆனந்தம்மா… முக்கனிச் சாறு பிழிந்துன்னோ… தேனோடு பால் கலந்தாப் போலன்னோ… பாடுவார்களே… அப்படிப்பட்ட டேஸ்டுப்பா…’
ஆனந்தவல்லி, ஒரு படைப்பாளி. எப்போதாவது, தனது படைப்பில் தானே பூரித்துப் போவது போல், புளகாங்கிதமாகி, புன்சிரிப்போடு கேட்டாள்.
‘எள்ளுத் துவையல… இன்னும் கொஞ்சம் வைக்கட் டுமா… ஒங்களுக்காகவே அரைச்சது’
'நீ ஒருத்தி. நான் எள்ளையும் சொல்லல... எண்ணெயயும் சொல்லல... குடித்த தண்ணீரச் சொன்னேன். காவிரிய குடிச்சிருக்கேன். யமுனாவ விழுங்கி இருக்கேன். ஆனால் இந்த மெட்ராஸ் மெட்ரோ வாட்டர் டேஸ்டு வராதுப்பா... அடேயப்பா.. இன்னும் ஒரு செம்பு நிறைய கொண்டு வாப்பா...' ஆனந்தவல்லி, அந்தப் பெயருக்கு எதிர்மாறான உணர்வோடு, சமையல் அறைக்குப் போய், ஒரு பால் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து, அவரை அடிக்காத குறையாக வைத்தாள். அதற்குள் ஒரு டெலிபோன்சத்தம். ஒரு துஷ்டக் குழந்தையின் குவா குவா சத்தம் மாதிரி. ‘பெட்ரூமுக்குள் இருந்த டெலிபோனை எடுத்த ஆனந்தவல்லி, இடையிடையே 'அய்யய்யோ... அட கடவுளே... என்று சொல்லிவிட்டு, ஓ மை காட் என்று அதற்கு ஆங்கில அர்த்தமும் சொன்னாள். பிறகு அவசர அவசரமாக, கணவர் பக்கம் ஓடிவந்து, அவர் வாய்க்குமேல் கவிழ்ந்த செம்பை பலவந்தமாகப் பறித்து ஜன்னலுக்கு வெளியே நீரை வீசிக் கடாசினாள். அந்த வேகத்தில், பால் செம்பு, ஜன்னல் கம்பியில் மோதி, ஒரு டப்பாங்கூத்து சத்தத்தை எழுப்பியது. பழனிச்சாமி, காரணம் கேட்குமுன்பே, ஆனந்தவல்லி, வாந்தி எடுக்கப் போவதுபோல் வாயை கோணல் மாணலாய் வைத்துக் கொண்டு கணவரையும் அறுவெறுப்பாய் பார்த்தபடியே விவரித்தாள். 'மெட்ரோ தண்ணியும் சாக்கடைத் தண்ணியும் ஒண்ணாக் கலந்துட்டாம், ஜானகி மாமி. போன்ல சொல்றாள். தண்ணீர் ஒரு மாதிரி பிசுபிசுன்னு இருக்குதேன்னு. மாமியே... இங்குள்ள மெட்ரோ பிராஞ்சுக்கு போன் செய்து கேட்டாளாம். அங்குள்ள அரிச்சந்திரங்க... மூணு நாளைக்கு முன்னே கலந்துட்டுதே... இப்போதான்... ஒங்களுக்கு தெரிஞ்சுதாக்குமுன்னு திருப்பி கேக்குறாங்களாம்...' பழனிச்சாமி, இப்படிப்பட்ட தண்ணீரிலாக் குளித்தோம்-குடித்தோம் என்கிற மாதிரி தனது உடம்பை தடவி விட்டார். வாயை அகலமாக்கினார். பிறகு ஆத்திர ஆத்திரமாய் எழுந்து, அவசர அவசரமாய் பேண்டைப் போட்டுவிட்டு, சட்டையை மாட்டப் போனபோது, ஆனந்தம்மா இடைமறித்தாள். அவரது சட்டையைப் பிடுங்கி, தனது கைக்குள் வைத்துக் கொண்டு கேட்டாள். “எங்கே புறப்படுறிங்க' 'மெட்ரோ வாட்டர் ஹெட்குவார்ட்டர்ஸ்-க்கு... அவங்கள உண்டு இல்லைன்னு பார்க்கணும்'. 'ஒங்களத்தான்.அப்படி ஆக்குவாங்க... எதுக்குங்க வம்பு... நம்ம செர்வண்ட் மெயிட் கிட்ட அஞ்சு ரூபாய நீட்டினால்... அந்த அடுக்கு மாளிகையில் போய் போர் வாட்டர் கொண்டு வந்துட்டுப் போறாள்' 'இவ்வளவு கால தாம்பத்தியத்துலயும்... நீ என்னை புரிஞ்சிக்கலே ஆனந்தம்மா... எனக்கு நல்ல தண்ணீர் கிடைக்கலன்னு நான் ஆத்திரப் படுறதா நீ நினைச்சால்... அது தப்பு... சாக்கடை தண்ணீர் கலந்து மூணு நாள் ஆகியிருக்கு... அப்படியும் நம்ம கவர்மென்ட்டோ... அல்லது மெட்ரோ காரங்களோமக்களுக்குத் தெரியப்படுத்தல... இந்த ஏரியாவுல இருக்கிற ஐயாயிரம் பேர்ல... குறைஞ்சது நாலாயிரத்து தொளாயிரம் பேரு... இந்த நாற்றம் பிடிச்ச தண்ணீரைக் குடிச்சிட்டு ஜான்டிஸ்ல அவஸ்தப்படப் போறாங்க... காலராவுல சாகப் போறாங்க... இதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணும் என்கிறியா... சாக்கடை தண்ணி கலக்குறது... மனித முயற்சிக்கு மீறினதுன்னே வச்சுக்குவோம்... இந்த அதிகாரிங்க, டேங்கர்ல, தெருத்தெருவா தண்ணீர் கூட தரவேண்டாம். குறைந்தபட்சம் தண்ணீரை குடிக்க வேண்டாமுன்னாவது தெரியப்படுத்தணும் இல்லையா...' "அப்படிச் சொல்லாதவங்க கிட்ட பேசறது... பாறையில் மோதினது மாதிரி. பேசாமல்... நம்ம வெல்பர் அசோஸியேஸன் கிட்ட சொல்லலாம்.' 'இவங்களா... பெட்டிஷன் போடுறதுபற்றி ஆலோசிக்க நிர்வாகக் கமிட்டியை கூட்டலாமுன்னு சொல்லுவாங்க. அந்த கமிட்டி கூடுறதுக்கும்... ஒரு வாரம் நோட்டீஸ் கொடுக்கணுமுன்னு பைலா விதிகளை பேசுற பன்னாடைங்க... பேசாமல் சட்டையைக் கொடு” 'ஏன் இப்படி எக்ஸைட் ஆகிறிங்க? இங்க உள்ள பிராஞ்ச் ஆபீசுக்கே போன் போட்டு கேட்கலாம். திருப்தியான பதில் இல்லாவிட்டால்... போர் வாட்டர் இருக்கவே இருக்குது..." 'ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா... போன பிறவியில கிளியா பிறந்திருப்பே... சரி... சரி... அந்த பிராஞ்ச் ஆபீஸ் டெலிபோன் நம்பரையாவது கொடுப்பா...' பழனிச்சாமி, மனைவி கோடு கிழித்துக் காட்டிய டெலிபோன் எண்களைச் சுழற்றப்போனார். ஆனாலும் விரல்கள், டயலிலேயே நின்றன. ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்... பொறுமை இழந்து வலியப் பேசினார். “ஹலோ... நான் கொஞ்சம் அவசரமாய் பேசணும்... தயவு செய்து டிஸ் கனேக்ட் செய்துட்டு... அப்புறம் டயல் செய்யுங்க... ரொம்ப அவசரம் தம்பி... இந்தாம்மா... நீயாவது தம்பிக்கு சொல்லும்மா... அடி செருப்பால... நானும் வேணுமுன்னா.. ஒங்க, ஸ்வீட் நத்திங்கை ரசித்து கேட்கலாமா... ஏம்மா... நீயும் ஒரு பெண்ணா. அவனோட சேர்ந்து நீயுமா சிரிக்கே... என்ன... நான் ரசனை இல்லாத முண்டமா... அடேய்...' ஆனந்தவல்லி, அந்த டெலிபோனை கணவனிடம் இருந்து பறித்து, தனது காதில் வைத்தாள். பிறகு டக்கென்று கீழே வைத்தாள். இப்படி எடுப்பதும், வைப்பதுமாக, கஜினி முகமதுவைவிட ஒரு தடவை அதிகமாக வைத்துவிட்டு, கடைசியில் 'அப்பாடா... பேசி முடிச்சுட்டாங்க... லைன் கிடைச்சுட்டு' என்றபடியே டயலைச் சுழற்றினாள். 'ஹலோ கேட்டபோது, பழனிச்சாமி, அந்த டெலிபோன் குமிழை தன் வசமாக்கிப் பேசினார். “ஹலோ... என் பேரு பழனிச்சாமி. மூணாவது கிராஸ்ல நாலாம் நம்பர். டெல்லி செக்கரட்டேரியட்டுல... ரிட்டயர்ட் டெப்டி செக்கரட்டரி... வாறேன்... விஷயத்துக்கு வாறேன்... மூணு நாளாய் ஏழை ஜனங்க... சாக்கடைத் தண்ணியக் குடிக்கிறாங்க... எஸ்... எஸ்... ஒங்களுக்கு தெரியுமுன்னு எனக்கும் தெரியும்... நீங்க... ஏன் மக்களுக்கு தெரியப் படுத்தலை என்கிறதுதான் என் கேள்வி... அது ஒங்க டூட்டியில்லையா... அப்போ எதுக்காக இருக்கீங்க...? தம்பி... கொஞ்சம் மரியாதையா பேசப்பா... ஹலோ... ஹலோ...' பழனிச்சாமி, டெலிபோன் குமிழை, ஒரு நிமிடம் வரை காதோடு காதாய் வைத்துவிட்டு, மனைவியைப் பாராமலே, காலிப் பயல்க... கட் பண்ணிட்டாங்க... சரி... சரி... சட்டையைக் கொடு... ஸ்கூட்டர் சாவியை எடு...' என்றார். 'கடைசியில், காமாட்சி மாமி. டில்லியில சொன்னது சரியாப் போச்சு...' 'அந்த கிராக்கு என்ன சொல்லிச்சு...' ஆனந்தவல்லி, கணவருக்கும் பதிலளிக்கவில்லை... அவர், சட்டைப் பித்தான்களை போட்டுவிட்டு, செருப்பை தேடிக் கொண்டிருந்தபோது, இவள் டில்லியில் காமாட்சி மாமி சொன்னதை, மனதில் அசை போட்டாள். இந்த பழனிச்சாமி, அண்டர் செகரட்டரியாக இருக்கும்போது, பலரோடு சேர்ந்து சார்ட்டட் பஸ்ஸில் போவார். அப்புறம் டெப்டி செக்கரட்டரியானதும் ஆபீஸ் காரில் காலையில் ஒன்பது மணிக்குப் போய், இரவு எட்டு மணிக்குத்தான் திரும்புவார். வீடு, அவருக்கு விருந்தினர் மாளிகை... ஆபீஸும் அங்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுமே, அவர் உலகம்... பால் வாங்குவதில் இருந்து, அமெரிக்க மகனுக்கும், பம்பாய் மகளுக்கும் சோடி சேர்ப்பது வரைக்கும், இவள் பொறுப்பானது... இதை, விரல்விட்டு, சுட்டிக்காட்டிய காமாட்சி மாமி, 'ஆனந்தி... ஒன் ஆத்துக்காரர் அசல் கிராக்... மெட்ராஸ்ல இப்போ... அக்கிரமம் அதிகமாயிட்டாம்... ஒன்னுடையவரால.... தாக்குபிடிக்க முடியாது... அவரோட அடாவடிய இங்குள்ளவங்க ஒன் முகத்துக்காக விட்டுக் கொடுக்காங்க... அங்கே அப்படி இல்ல... பேசாமல், இங்கேயே செட்டிலாயிடு' என்று சொன்னதின் தாத்பரியம், இப்போதுதான் ஆனந்தவல்லிக்கும் புரிந்தது. இந்த பழனிச்சாமி கேட்டால்தானே... பழனிச்சாமி, மனைவி அழாக்குறையாய் நீட்டிய சாவியை வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது, ஆனந்தவல்லியால் பொறுக்க முடியவில்லை. நான் சொல்வதைக் கேளுங்க... போர் வாட்டர் இருக்கவே இருக்குது' "நம்ம நாட்டை நோயாளியாக்க... பாகிஸ்தான்... எய்ட்ஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு அனுப்புறதுக்கு திட்ட மிட்டிருப்பதாய் பேப்பர்ல வந்த நியூஸ் படித்தியா... அந்த பாகிஸ்தானுக்கும்... இவனுகளுக்கும் என்ன வித்தியாசம்... சொல்லுடி..."
அப்பாவுக்கு பதிலாய் 'அடி' போட்டுவிட்டால், கணவர் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தம்மா, சலனமற்ற குரலில் முறையிட்டாள்.
"உடம்புல.. ஆயிரத்தெட்டு நோய் வச்சிருக்கிங்களே... பிளட் பிரஷ்ஷர், டயா பெடிக்ஸ்... இஸ்- கிமியான்னு மொதல்ல மருந்து மாத்திரைகளை விழுங்கிட்டுப் போங்க!"
"இதோ... ஒரு நொடில வந்துடுறேன்... இரண்டுல ஒன்றைப் பார்க்கும் முன்னால... எனக்குள்ளே எந்த மாத்திரையும் வேலை செய்யாதுப்பா..."
பழனிச்சாமி, ஸ்கூட்டரை விட்டார். அறுபது கிலோ மீட்டர் பாய்ச்சல்... அந்த ஏரியாவைத் தாண்டுவது வரைக்கும், கண்ணில் பட்ட அத்தனை பேரையும், அனுதாபத்தோடு பார்த்தார். இடையிடையே கும்பல் உள்ள இடமெங்கும் வண்டியை நிறுத்தி, சாக்கடைக் கலப்பு பற்றி விவரம் சொன்னார்.
பழனிச்சாமி, ஒரு மஞ்சள் லைட்டின் உதவியோடு, ஒரு சின்னத் தப்பை செய்துவிட்டார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வந்தபிறகு, சிக்னலில், பச்சை விளக்கு மஞ்சளானபோது, 'கிராஸ்' செய்தார்; ஆனால், அடுத்த சாலைக்கு போகுமுன்பே, சிவப்பு விளக்கு வந்துவிட்டது. இதற்கென்றே, எதிர்பார்ப்போடு, மோட்டார் பைக்கில் சாய்ந்து நின்ற வெள்ளை யூனிபாரக்காரர்கள், இவரையும், இவரை நம்பி பின்னால் வந்தவர்களையும் வாகனங்களோடு சேர்த்து ஓரம் கட்டினார்கள். அப்புறம் பழனிச்சாமியை, பக்குவமாய் பார்த்தார்கள். அவரும் பேசினார்.
"எதுக்காக...இப்படி?"
"ரெட் லைட்...கண்ணு தெரியல..."
இதற்குள் எங்கிருந்தோ ஒரு வேன்...அது அங்கே நிற்க, இந்த 'வெள்ளைக்காரர்கள்' அங்கே ஓட, அப்புறம் காதோடு வாயுரசல்...சட்டைப் பையோடு நோட்டுரசல்...பழனிச்சாமி கொதித்துப் போனார். ஒரு தடவை, செகரட்டேரியட்டில், ஏதோ ஒரு சலுகைக்கு, ஒரு 'மதராஸி' இருப்பத்தையாயிரம் ரூபாய் கொடுக்க வந்தார். இவர், அவரை போலீசில் ஒப்படைக்கப் போவதாக எச்சரித்தார்...இப்போது அந்த போலீஸே...
அந்த போக்குவரத்து வியாபாரிகள் மீண்டும் வந்ததும், பழனிச்சாமி, கொதித்துப் பேசினார்.
"நான் தப்பு செய்திருந்தால்... ஸ்பாட் பைன் போடுங்க... இல்லாவிட்டால் கேஸ் எழுதிட்டு... என்னை போக விடுங்க... நான் காசு கொடுக்கிற ஜென்மமில்ல...நாடு உருப்பட்ட மாதிரிதான்..."
பழனிச்சாமி, இப்படிச் சொல்லிவிட்டு, தன்னோடு பிணைகளான, இதர வாகனக்காரர்களை, ஆதரவாகவும், ஆதரவு கேட்பது போலவும் பார்த்தார். ஆனால், அவர்களோ, அவசர அவசரமாய், சற்று விலகிப் போய் நிற்க, அங்கே வந்த ஒரு 'போக்குவரத்திடம்' தள்ள வேண்டியதையும் தள்ளி விட்டு, வாகனங்களையும் தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள். போலீஸார், இப்போது தனித்து விடப்பட்ட பழனிச்சாமியை, ஏற இறங்க பார்த்தார்கள்...ஆசாமி கிராக்கு...அதோட ஊருக்கு புதுசு...ஆகவே பழசாக்கணும்...
"ஸார்...கேஸ் எழுதிட்டு என்னை விடுங்க ஸார்"...
"அது எங்களுக்கும் தெரியும் ஸார்...இப்போ போக்குவரத்து நெருக்கடில நாங்க பிஸ்ஸி ஸார்...அப்புறம் ஒங்க வெஹிக்கிளையும் செக்கப் பண்ணணும்... ஒர்க்ஷாப்புக்கு கொண்டு போகணும்...வெயிட் பண்ணுங்க ஸார்...”
பழனிச்சாமியால், எதுவும் செய்ய முடியவில்லை... அந்த வெள்ளையூனிபாரம்கள், ஒரு மணல் லாரியை கோபத்தோடு மடக்கி, சிரித்தபடியே விடுவதையும், கோணிக்கட்டை கேரியரில் வைத்திருந்த ஒரு அன்னக்காவடி சைக்கிள்காரரை, தலையில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு, சைக்கிள் டயர்களின் மூச்சைப் பிரிப்பதையும் பார்ப்பதைத் தவிர, வேற வழியில்லை...ஆனாலும், அவரால் பொறுக்க முடிய வில்லை. நேராக, 'பஞ்சராக்கியவர்களிடம்' போய், உபதேசித்தார்.
"சைக்கிள்காரர் கையுல காசு இல்ல என்கிறதுக்காக இப்படி அடாவடி செய்யுறது நியாயமா ஸார்... இதனாலதான்...ஏழை எளியவங்ககிட்ட ரவுடி மாதிரி நடக்கிற ...ஒங்களை அடக்குறதுக்கு மக்கள் சூப்பர் ரவுடிகளை தேர்ந்தெடுக்காங்க...அப்புறம்-கேஸ் எழுதிட்டு... என்னை போக விடுங்க"...
"நீங்க...நினைக்கிற மாதிரி...இது மாமியார் வீடுல்ல... நில்லுன்னா...நின்னுதான் ஆகணும்... இந்தாப்பா...அந்த டூரிஸ்ட் பஸ்ஸை நிறுத்து... கொஞ்சம் தள்ளி... ஒதுக்குப் புறமாய் நிற்கச் சொல்லு...'
பழனிச்சாமி, தலையைப் பிடித்துக் கொண்டார். அதற்கு பிரதிபலனாக, உடனடியாய் ஒரு திட்டம் உதித்தது... இவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த நவரத்தினம், போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பெரிய போலீஸ்... அவருக்கு, டெலிபோனில் சொன்னால், பறக்கும் படை வரும்... ஸ்கூட்டரை நிறுத்தியதைவிட, இந்த பகல் வேட்டையையே முக்கியப்படுத்திப் பேசணும்... டேய்... பசங்களா... இருங்கடா இருங்க...'
பழனிச்சாமி, ஓடாக்குறையாய் நடந்தார்... ஒரு செவ்வகக் கண்ணாடி அறைக்குள் நடந்தார்... அதன் மேல் "எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி, பி.ஸி.ஓ என்ற ஆங்கில எழுத்துக்கள் மஞ்சளாய் ஜொலித்தன. எதிர் பக்கம் நாற்காலியில் ஒரு அழகான இளம்பெண்... அவள் முன்னால், தப்புத் தப்பாய் அழைக்கப்படும் "கம்ப்யூட்டர்"... அவளின் இடது பக்கம் 'ஷிப்டுக்கு' வந்த ஒருத்தன். அவளுக்காக வந்த இன்னொருத்தன்...மறு பக்கம் டெலிபோன்...
அந்த இளம்பெண், பழனிச்சாமியை, டயல் செய்ய விட்டாள். அவரும் பேசினார்.
'ஹலோ. . . ஹலோ. . . மிஸ் டர். . . நவரத்தினம் இருக்காரா... நானா நான் அவரோட கிளாஸ்மேட்... பழனிச்சாமின்னு சொல்லுங்க... தெரியும்... ஓ.கே... வெயிட் செய்யுறேன்... என்ன... மீட்டிங்ல இருக்காரா... ஒங்க கிட்டயே சொல்லணுமா... சொல்றேன்... சொல்றேன். என்ன ஸார் அக்கிரமம்... உங்க டிராபிக் போலீஸ் அசல் பணவேட்டை நடத்துறாங்க ஸார். இதோ இப்ப கூட நடக்குது... ஹலோ... ஹலோ... லைன் கட்டாயிட்டே..."
மீண்டும் டெலிபோன் செய்யப்போன பழனிச்சாமி, யோசித்தார். இந்த 'பி.ஏ.க்களே' இப்படித்தான்... பரமசிவன் கழுத்தில் கிடக்குற பாம்பு மாதிரி... அந்த பரமசிவத்தையே, நேர்ல பாத்துடலாம்... இந்த லஞ்சத்தை எரிச்சுட மாட்டாரா..."
பழனிச்சாமி, அந்த டெலிபோன் பெண்ணிடம், ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவள் ஐந்து ரூபாயை நீட்டி விட்டு, எழுந்தாள். பழனிச்சாமி படபடப்பாய் கேட்டார்.
"என்னம்மா இது... லோகல் கால் ஒரு ரூபாய்தானே... இப்படி வசூலிக்கணுமுன்னு தானே... கவர்மெண்ட் ஒங்களுக்கு டெலிபோன் கொடுத்திருக்கு..."
"இந்த சட்டமெல்லாம் வேண்டாம்... எங்க பூத்தில... ஒரு கால்... இரண்டு நிமிஷம் வரை இரண்டரை ரூபாய்... நீங்க அஞ்சு நிமிஷம் பேசி இருக்கீங்க... போனால் போகுதுன்னு ஒரு நிமிஷம் ஒங்களுக்கு போனஸ்... என்ன மணி... கொஞ்சம் சீக்கிரம் வரப் படாது?..."
"இந்தாம்மா... மரியாதையா நாலு ரூபாயக் கொடு. நாட்டுக்காக ராஜீவ் காந்தி கண்ட நல்ல கனவுல இது முக்கியமானது... அதுல கொள்ளை அடிக்காதே... சரி... நாலு ரூபாய எடு... நான் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசல... பணம் தராட்டால்... டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல கம்ளெயின்ட் செய்வேன்..."
அந்த இளம்பெண், தூக்கக் கலக்கத்தில், 'கொண்டவனையும்', டூட்டி மாற்ற வந்தவனையும் பார்த்தாள். அதையே காதலின் போதைப் பார்வையாக எடுத்துக் கொண்ட காதலன் எகிறினான்.
"வேணுமுன்னா... கம்ளெயிண்ட் செய்யேய்யா... ஒன்னை மாதிரி எத்தன கம்ளெயின்ட்ட இவங்க முதலாளி பார்த்திருப்பாரு... போ... இப்பவே... போ...அதை விட்டுவிட்டு வயசுப் பொண்ணுகிட்டே ஏய்யா கலாட்டா செய்யுறே... கேட்பதற்கு ஆள் இல்லன்னு நெனச்சியா... சர்த்தான்... போய்யா..."
விவகாரம், விகாரமாவதைப் புரிந்து கொண்ட பழனிச்சாமி, வாயடைத்துப் போய் வெளியே வந்தார். வாயடைத்ததே தவிர, மனம் அடையவில்லை. இதை விடப்படாது... போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே டெலிபோன் டிபார்ட்மெண்டுக்கும் போகணும்..."
பழனிச்சாமி, எதிரே வந்த ஆட்டோவில் ஏறினார். தடைக்கள ஓட்டம்போல் ஓடிய அந்த ஆட்டோ, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னால் போய் நின்றது. மீட்டரை பார்த்துவிட்டு, பழனிச்சாமி பதறிப் பதறிக் கேட்டார்.
"என்னப்பா அநியாயம்... இருபது ரூபாய் கூட வராது... ஒன் மீட்டர் முப்பத்தஞ்சு ரூபாய் காட்டுது..."
"ஒன்ன மாதிரி ஆசாமிங்கள ஏத்துறதே தப்புய்யா... ஊருக்கு புட்சா..."
"அப்போ... நீயும் மீட்டர்ல சூடு வச்சிருக்கேன்னு சொல்லு"
"வச்சால் என்ன தப்பு... ஒன்ன மாதிரி ஆசாமிங்களுக்கு சூட்கேஸ் கண்ணுல படாது. சூடுதான் படும்"
"போலீஸ்ல புகார் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?"
"மவராசனா அதை செய்யா... இந்த ஆட்டோவே... ஒரு போலீஸ்காரருக்கு சொந்தம். பெரிய மனுஷனாச்சேன்னு பாக்கேன்... இல்லாக்காட்டி... நடக்கிறதே வேற... ஜேப்பில கை போடும்மா... நானு பிஸ்ஸி..."
பழனிச்சாமிக்கு, அந்த ஆட்டோக்கார இளைஞனிடம் சண்டை போட விருப்பமில்லை... இது குறித்தும், கிளாஸ்மேட்டான நவரத்தினத்திடம் விரிவாய் விவாதிக்கலாம் என்று நினைத்து, கேட்ட பணத்தை, மீண்டும் கேட்கப்படும் முன்னாலே கொடுத்துவிட்டு, கமிஷனர் ஆபீஸ் வளாகத்திற்குள் வந்தார். நவரத்தினத்தின் அறையைத் தேடிக் கண்டுபிடித்து, தள்ளுக் கதவை தள்ளியபடியே துள்ளிப் பாய்ந்தவரை, நந்தியான பி.ஏ., கண்களை, கொம்புகள் போல் நீட்டி முட்டப்போனது.
"என்பேருதான் பழனிச்சாமி... ஒங்களிடம் டெலிபோன்ல..."
"தெரியும்... வெயிட் பண்ணுங்க"
அந்த பி.ஏ.க்காரரிடம் பழனிச்சாமி, தனது விசிட்டிங் கார்டை கேளாமலே கொடுத்தார். கால் மணி நேரம் கழித்து உள்ளே போன பி.ஏ. அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார். நண்பர் நவரத்தினம், அறைக்கு வெளியே வந்து, தன்னை ஆரத் தழுவுவார் என்று எதிர்பார்த்த பழனிச்சாமி, தனது அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு, அந்த பி.ஏ.வை நெருங்கிய போது, அது "வெயிட் ப்ளீஸ்" என்றது கடுகடுப்பாய்... இவ்வளவுக்கும் பெண் பி.ஏ...
பழனிச்சாமி காத்திருந்தார். காத்திருந்தார். நிமிடங்கள், மணிகளாயின. பகல் இரண்டு மணி அளவில், நவரத்தினமே வெளிப்பட்டார். இவரைப்பார்த்து 'எஸ்'... என்று இழுத்தார்.
நான்... பழனிச்சாமி. ஒன்னோட... ஸாரி... ஒங்களோட கிளாஸ்மேட்..."
“என்ன வேணும் சொல்லுங்க..."
'ஒங்க டிராபிக் போலீஸ் பகல் நேரத்திலேயே பண வேட்டை நடத்துறாங்க... ஆட்டோக்காரங்க மக்களுக்கு சூடு போடுறாங்க... இதைப் பற்றி ஒங்க கிட்ட விரிவாய் பேசணுமுன்னு...'
"லுக் மிஸ்டர்... பழனிச்சாமி... நீங்க... 'பிரியா இருக்கலாம்... ஆனால் நான் அப்படி இல்ல... இவ்வளவு வயசாகியும் நீங்க வளராமலே இருக்கீங்க... அப்போ காலேஜ்லதான் ரேகிங் செய்யப்படாது... பொண்ணுகள... கலாட்டா செய்யப்படாதுன்னு வம்புக்கு வருவீங்க... இன்னும் அந்தப் புத்தி போகலியா... ஓ.கே... பஸ்ட் அண்ட் லாஸ்ட்..., ஒங்களுக்கு... ஏதாவது போலீஸ் பிரச்சினை இருந்தால் சொல்லுங்க... ஊரைச் சுற்றி... தோரணம் கட்டுற வேலை வேண்டாம்... ஓ..கே... என்ன வேணும். பழனி... ஐ அம் பிஸ்ஸி.."
"எனக்குன்னு ஒண்ணுமில்ல நவரத்தினம்; கர்த்தர் ஒன்னையும் இரட்சிப்பாராக..."
பழனிச்சாமி, திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி, வெளியே வந்தார். 'சட்டை நுனியால், கண்களைத் துடைத்துக் கொண்டார். அந்த வளாகத்தை விட்டு வெளியேறி, பிரதான சாலையில், கால் போன போக்கில், நடந்தார். மனமே, அற்றுப்போன சூன்ய நிலை... உடம்பே காணாமல் போன அரூவ நிலை...
பழனிச்சாமிக்கு, எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை... தலை, பம்பரமானது... இருதயம் மத்தள மானது... சில நிமிடங்களில், அந்த குளிரிலும் உடம்பு வியர்த்தது... மார்பும், முதுகும், ஒன்றை ஒன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன... சொல்ல முடியாத வலி. நரம்புகள் தொய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய்... நல்ல தண்ணீரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. டெலிபோன் போல், மூச்சு கட்டாகி, முகமோ, கோணல் மாணலாகி...
பழனிச்சாமி, புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதன் எதிர் விகிதாச்சாரத்தில் இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது-இந்த நாட்டைப் போல...
பழனிச்சாமி, "ஆனந்தம்மா... ஆனந்தம்மா..." என்று அரற்றியபடியே, தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார்.
இந்த பழனிச்சாமி, செத்ததே செத்தார், இன்னொன்றை தெரிந்து வைத்துக் கொண்டாவது செத்திருக்கலாம். அதாவது, இவரது சடலத்தை, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஆஸ்பத்திரியில் இருந்து எடுப்பதற்குக் கூட, 'அன்பளிப்பு' கொடுக்க வேண்டும் என்பது, சமூகச் சிலுவை சுமந்த பழனிச்சாமிக்குத் தெரியவே தெரியாது.
—ஆனந்த விகடன்