ஒரே உரிமை


ங்கள் கிராமத்தில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. சென்ற தை மாத அறுவடையின் போது நான் அங்கே போயிருந்தேன். வயலில் மும்முரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. களத்துமேட்டில் நின்றபடி நான் வேலையாட்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் என் கவனத்தைக் கவர்ந்தான். அதற்கு முன்னால் அவனை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது— எங்கே பார்த்திருப்போம்?

ஆம், அந்தச் சம்பவம் என் நினைவுக்கு வந்துவிட்டது. அவன் பெயர் சோலையப்பன். சென்ற வருடம் சித்திரை மாதம் நான் கிராமத்துக்கு வந்திருந்தபோது, என் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவருடைய மனைவி யாருக்கு முன்யோசனையுடன் காரியம் செய்வதில் அலாதி ஆவல். புது இடம் என்பதற்காக நான் எங்கே கூச்சப்பட்டுக் கொண்டு கொஞ்சமாகச் சாப்பிட்டு விடப்போகிறேனோ என்று அந்த அம்மையார் எனக்கு முன் கூட்டியே இரண்டு வேளைக்கு ஆகக் கூடிய சாதத்தை ஒரே வேளையில் படைத்து விட்டார். நானும் என்னால் ஆனவரை ‘ஒரு கை’ பார்த்தேன்; என்ன பார்த்தும் என்னால் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட முடியவில்லை. பாதிச் சாதம் அப்படியே மிஞ்சிப் போய் விட்டது. சொந்த வீடாயிருந்தால் கணவன் என்னதான் தீராத நோய்க்கு ஆளாகியிருந்தாலும் அவனுடைய எச்சில் சாதத்தைச் சாப்பிடுவது ‘பதிவிரதாதர்ம’ங்களில் ஒன்று என்று நினைக்கும் அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள். விருந்துக்கு வந்த வீட்டில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள் ? ஆகவே நான் அந்த இலையைத் தூக்கிக் கொண்டு, நாயைத் தேடிக் கொண்டு தெருவை நோக்கி நடையைக் கட்டினேன்.

எனக்கு எதிரே வந்த நண்பரின் மனைவி, “என்ன காரியம் செய்து விட்டீர்கள்! உங்களை யார் இலையை எடுக்கச் சொன்னார்கள்”? என்று பதட்டத்துடன் கேட்டாள்.

அன்னதானம் செய்வதிலுள்ள புண்ணியமனைத்தும் எச்சில் இலையை எடுத்துப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. என்னுடைய செய்கையால் அந்த மகத்தான புண்ணியம் தனக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்பதில்தான் அந்த அம்மாளுக்கு எவ்வளவு வருத்தம்!

உண்டுண்டுறங்குவதேயல்லாது வேறொன்றும் கண்டிலாத அடியார்’கள், தங்களுக்கு இயற்கையாயுள்ள சோம்பேறித்தனத்தால் புண்ணியத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு, எச்சில் இலையை எடுத்துப் போடும் வேலையைக் கூட அன்னதானம் செய்பவர்கள் தலையிலேயே கட்டிவிட்ட தந்திரத்தை அந்த அம்மாள் இந்த ‘அணுகுண்டு சகாப்’தத்தில் கூட அறியாமலிருந்தது எனக்கு ஆச்சரியமாய்த் தானிருந்தது.

என்னுடைய வியப்பை வெளியே காட்டி அந்த அம்மாளின் மனதைப் புண்படுத்த விரும்பாத நான், “பரவாயில்லை: இருக்கட்டும் அம்மா!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தெருவுக்கு வந்தேன். என் கையிலிருந்த இலையைக் கண்டதும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் என்னை நோக்கி ஓட்டமாய் ஓடி வந்தன. அவற்றில் ஒன்று நாய்; இன்னொன்று பெயருக்கு ‘மனித’னாகப் பிறந்திருந்த சோலையப்பன்.

“சாமி, சாமி! அந்த இலையை இப்படிக் கொடுங்க, சாமி! கீழே போட்டுடாதீங்க, சாமி! என்று கெஞ்சினான் அவன்.

அவனுக்குப் பக்கத்திலே நாய் வாயைப் பிளந்து கொண்டு, நாக்கை நீட்டிக் கொண்டு, வாலை ஆட்டிக் கொண்டு, என்ன நன்றியுடன் பார்த்துக்கொண்டு நின்றது.

அந்த நாயைப்போலவே அவனும் என்னை நன்றியுடன் பார்த்தான்; வாயைத் திறந்தான்; நாக்கை நீட்டினன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்; நாய் வாலை ஆட்டிற்று; அவன் ஆட்டவில்லை! — அதுகூட அவன் குற்றமில்லை; பகவானின் குற்றம். ஏனெனில் அவனுக்கு வால் வைக்காமற்போன ‘கருணை’ அந்தக் ‘கருணைக் கட’லைச் சேர்ந்ததுதானே?

மனிதர்களுக்கு ஒரு விசித்திரமான மனோபாவம். என்னைப் போன்ற—அதாவது பணத்தைக் கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ளக் கூடியவர்களைக் கண்டால் அவர்கள் வருந்தி வருந்தி விருந்துக்கு அழைக்கிறார்கள்; மறுத்தால் அவர்களுக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. ஆனால் இந்தச் ‘சோலையப்பன்கள்’— அதாவது பணத்தைக்கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ள முடியாதவர்கள்—வலுவில் வாசலுக்கு வந்து ஒரு கை சோறு கேட்டால் கூட எரிந்து விழுகிறார்கள்! — ஏன் இப்படி?

அவனைக் கண்ட மாத்திரத்தில் இப்படியெல்லாம் அலை மோதிய என் உள்ளத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “மனிதனாகப் பிறந்த உனக்குக் கேவலம் இந்த எச்சில் இலைக்காக நாயுடன் போட்டியிடுவதற்கு வெட்கமாயில்லையா?” என்று கேட்டேன்.

இந்தக் கேள்விக்கு நியாயமாகப் பதில் சொல்லியிருக்க வேண்டுமானால், “எனக்கு என்ன சாமி வெட்கம்? இதுக்காக வெட்கப்பட வேண்டியவங்க. ராசாங்கத்தாரு தானே?” என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவன் அவ்வாறு சொல்லவில்லை; “வெட்கப்பட்டா முடியுமா, சாமி! வயிறுன்னு ஒண்ணு இருக்குதே!” என்றான்.

“அதற்கு எங்கேயாவது போய் ஏதாவது வேலை செய்வது............!”

“கெடைச்சாத்தானே?”

“ஏன் கிடைக்காது?”

“அறுவடை காலமாயிருந்தா எங்கேயாச்சும் வேலை கிடைக்கும், சாமி! இப்பத்தான் வெய்யில் பட்டையை உரிக்குதுங்களே!”

“உனக்காக வருஷம் முந்நூற்று அறுபது நாளும் அறுவடை காலமாயிருக்குமா, என்ன? அறுவடை வேலை கிடைக்கும்போது அறுவடை வேலை செய்ய வேண்டும்; மற்ற சமயங்களில் கூலி வேலை, கீலி வேலை............”

“கூலி வேலை தினம் தினமா கெடைக்குதுங்க? எப்பவோ ஒரு சமயம் கெடைக்கும். அப்போ செய்யறது தானுங்க எந்த வேலையும் கெடைக்காத போதுதான் இப்படி நாய்க்குப் போட்டியா வந்து நிக்கிறது !” என்றான் அவன்.

அத்துடன் என் வாய் அன்று அடைத்துப் போயிற்று. பேசாமல் அவன் ஏந்திய கையில் எட்டணாவை எடுத்துப் போட்டு ஏதாவது வாங்கித் தின்று பசியாறும்படி சொன்னேன். அதைப் பெற்றுக் கொண்டு அவன் போய்விட்டான். நான் கையிலிருந்த இலையை அந்த நாயின் முன்னால் எறிந்து விட்டு உள்ளே வந்தேன்.

***

ந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததும், நான் சோலையப்பனின் பிற்கால வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கலானேன்.

“இந்த அறுவடை வேலை முடிந்ததும் அவன் வழக்கம் போல எச்சில் இலைக்கு நாயுடன் போட்டி போட வேண்டியதுதானா?” என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது.

“ஏன் இல்லை? அப்படிச் செய்தால் என்ன ?” என்று மறுகணம் என் வாய் முணுமுணுத்தது.

உடனே சோலையப்பனைக் கைதட்டிக் கூப்பிட்டு, “உனக்கு என்னைத் தெரிகிறதா ?” என்று கேட்டேன்.

அவன் ஒரு முறை என்னை உற்றுப் பார்த்து விட்டு “தெரிகிறதுங்க !” என்றான்.

“சாயந்திரம் வேலை முடிந்ததும் என்னை வந்து பார்க்கிறாயா ?"

“பார்க்கிறேனுங்க !”

“சரி, போ!” என்று சொல்லிவிட்டு நான் என்னுடைய நண்பரின் வீட்டுக்குத் திரும்பினேன்.

அன்று மாலை அவன் வந்தான்.

“என்ன, சோலையப்பா! உனக்குப் படிக்கத்தெரியுமா?” என்று கேட்டேன்.

“ஏதோ கொஞ்சந் தெரியுங்க; மதுரைவீரன் கதை, தேசிங்குராஜன் கதை—இதெல்லாம் படிப்பேனுங்க!”

“தேவலையே, அவ்வளவு தூரம் நீ படித்திருக்கிறாயா?”

“எல்லாம் அந்தக் காந்தி வாத்தியாரு புண்ணியமுங்க!”

“அது யார், காந்தி வாத்தியார்?”

“அவர் இப்போ செத்துப் பூட்டாரு! நல்லவரு, பாவம்! அவரு, காந்தி எங்க எனத்தவரை யெல்லாம் முன்னுக்குக் கொண்டாரச் சொல்றாருன்னு சேரிக்கு வந்து, எங்களுக்கெல்லாம் படிப்புச் சொல்லிக் கொடுப்பாருங்க! நாங்க அவரை ‘காந்தி வாத்தியாரு, காந்தி வாத்தியாரு’ன்னுதான் கூப்பிடுவோமுங்க!”

“ஓஹோ!-சரி, நான் ஒன்று சொல்கிறேன். கேட்கிறாயா?”

“கேட்காம என்னங்க?”

“இந்த அறுவடை வேலை முடிந்ததும் நீ வேலைவெட்டி கிடைக்கவில்லையே என்று பழையபடி எச்சில் இலைக்கு நாயுடன் வந்து நிற்காதே! நான் உனக்கு ஒரு கடை வைத்துத் தருகிறேன்.”

“என்ன கடைங்க?”

“ரொட்டி, மிட்டாய் எல்லாம் லாபத்துக்கு வாங்கி விற்கிறது.........”

“ஐயய்யோ! இதென்ன கூத்துங்க! எங்கேயாச்சும் பறப் பயல்.........”

“என்னடா, அப்படிச் சொல்கிறாயே! அதெல்லாம் அந்தக் காலம். இப்போது பார்த்தாயா, உங்களுக்குக் கோயிலைத் திறந்து விடுகிறார்கள்!”

“ஆமாம், ஆமாம். அன்னிக்குக் கூட அங்கே எங்கேயோ கோயிலைத் திறந்து விடறாங்கன்னு தர்ம கர்த்தா ஐயா வந்து என்னைக் கூப்பிட்டாரு. எப்பவோ ஒரு நாளைக்கு அபூர்வமாக் கெடச்ச வேலையை விட்டுட்டு நான் எங்கே கோயிலுக்குப் போறது, சாமி அந்த வேலையே எனக்கு அப்போ ‘சாமி’ மாதிரி இருந்தது; தினந்தினம் அதன் ‘தரிசனம்’ கெடைச்சாத்தானே எங்க வயிற்றுக்குக் கஞ்சி? அதாலே இன்னொரு நாளைக்குக் கோயிலைப் பார்த்துக்கலாம்னு நான் போகலே!—அது சரி, சாமி! அதற்குத்தான் காந்தி என்னமோ சொன்னராமே......!”

“என்ன சொன்னாராம்?”

“ஹரிஜனங்களுக்குக் கோயிலைத் திறந்து விட்டா மட்டும் போதாது; இத்தனை நாளா அவங்களை ஒதுக்கி வச்ச ஒசந்த சாதியாரு இன்னும் அவங்களுக்கு எவ்வளவோ செய்யணும்னு!"

"அதற்காகத் தான் நான் உனக்கு இந்த உபகாரம் செய்கிறேன் என்கிறேன்......"

"என்னமோ செய்யுங்க, சாமி!"

"சரி, நான் பட்டணத்துக்குப் போகுமுன் உனக்கு அந்தக் கடையை வைத்துக் கொடுத்துவிட்டுப் போகிறேன், போ!" என்றேன்.

அவன் போய்விட்டான்.

***

சோலையப்பனுக்கு நான் அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு அடுத்தாற் போலிருந்த ஒரு சிற்றூர்க் கடை வீதியிலே ஒரு நல்ல இடத்தைத் தேடிப் பிடித்தேன். கண்ணாடி பீரோக்கள், குப்பிகள் முதலியவற்றை வாங்கிக் கடையை அழகாக அலங்கரித்தேன். ஒரு நூறு ரூபாய்க்குப் பட்டணத்திலிருந்து ரொட்டிகள், மிட்டாய்கள் எல்லாம் வாங்கி அவற்றில் அடுக்கினேன். ‘சோலையப்பன் ரொட்டிக் கடை’ என்று ஒரு பலகையில் எழுதி, கடையின் வாசலில் தொங்க விட்டேன். பிறந்ததிலிருந்து சட்டையையே காணாத சோலையப்பனின் உடம்பையும் சட்டை தைத்துப் போட்டு மூடினேன். ‘நாம் வாங்கிய சரக்குகளின் விலை இவ்வளவு, விற்க வேண்டிய விலை இவ்வளவு’ என்று சொல்லிக் கொடுத்தேன். ‘அப்பாடா! எப்படியோ அவன் விதியை மாற்றியமைத்து விட்டோம்’ என்ற திருப்தியுடன் சென்னைக்குத் திரும்பினேன்.

என்னுடைய திருப்தி நெடுநாள் நீடித்திருக்கவில்லை. நான் ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுக்கெல்லாம் சோலையப்பனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், அவன் என்னை உடனே புறப்பட்டு வரும்படி எழுதியிருந்தான். அவனுடைய அவசர அழைப்பை ஏற்றுக் கொண்டு, நானும் அவசர அவசரமாகக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

முதலில் சோலையப்பனின் ரொட்டிக் கடைக்குத்தான் சென்றேன் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கடையைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் வாங்கி வைத்துவிட்டுச் சென்ற ரொட்டிகள், மிட்டாய்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன.

“என்ன, இத்தனை நாளாக ஒன்றுமே விற்க வில்லையா?” என்று கேட்டேன்.

“அது எப்படிங்க விற்கும்?”

“ஏன், இந்தக் கிராமத்தில் ரொட்டி, மிட்டாய் தின்பவர்கள் யாருமே இல்லையா?”

“இல்லாம என்னங்க? அதோ, அந்த முதலியாரு ரொட்டிக் கடை இருக்குதுங்களே, அதிலே தினம் தினம் எம்மா வியாபாரம் ஆவுது!”

“பின்னே என்ன? உன்னுடைய கடையிலே மட்டும் ஏன் வியாபாரம் ஆகவில்லை?”

“என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன் தானுங்களே? என் கடையிலே யாராச்சும் ரொட்டி, வாங்கணும்னா அவங்களும் பறையர்களாத்தானே இருக்கணும்? அவங்களுக்குத்தான் கூழுக்கே பஞ்சமாச்சுதுங்களே, அவங்க எங்கே ரொட்டி, கிட்டி வாங்கப் போருங்க? வந்தா ஒசந்த சாதிக்காரருதான் வரணும். அவங்க எங்கிட்ட எங்கேயாச்சும் வருவாங்களா?—ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லணுங்க; அந்த மட்டும் அவங்க என் கடைக்கு வராம இருந்ததோடு நின்னாங்களே! ‘பறப் பயலுக்கு இங்கே என்னடா ரொட்டிக் கடை?’ ன்னு என்னையும் அடியா அடிச்சுப் போட்டு, இந்தக் கடையையும் காலி பண்ணாம இருந்தாங்களே, அதைச் சொல்லுங்க!”

“என்னடா, திருப்பித் திருப்பிப் பறையன், பறையன் என்கிறாயே?” என்று நான் அலுத்துக் கொண்டேன்.

“நானாங்க சொல்றேன்? ஊர் சொல்லுது, உலகம் சொல்லுதுங்க! இந்தப் பதினஞ்சு நாளா என் கடையை யாரும் எட்டிப் பார்க்காமலிருப்பதிலிருந்தே இது தெரியலங்களா?”

“சரி, அப்படியென்றால் நீ இப்பொழுது என்னதான் சொல்கிறாய்?”

“இது உங்க கடை; இதிலே போட்டிருக்கிற பணம் உங்க பணம். நீங்களே இந்தக் கடையை எடுத்துக்குங்கோன்னு சொல்றேன்!”

“இதென்னடா வேடிக்கையா யிருக்கிறதே! உனக்குத் தினசரி வேலை கிடைப்பதற்குத்தான் வழியில்லை; யாருடைய உதவியையாவது கொண்டு சொற்ப முதலில் ஒரு ரொட்டிக் கடை, மிட்டாய்க் கடை இப்படி ஏதாவது ஒன்றை வைத்துப் பிழைத்துக் கொள்வதற்குக் கூடவா உனக்கு உரிமை இல்லை?”

“ஏதுங்க, யோசித்துப் பார்க்கப்போனா எனக்கு இருப்பது ஒரே உரிமைதானுங்களே?”

“அது என்னடா, ஒரே உரிமை?”

“வேறே என்னங்க, தற்கொலை செய்துகொள்ளும் உரிமை தானுங்க அது!” என்றான் அவன்.

அவன் கண்களில் நீர் சுரந்தது.

பாவம், அதற்குக் கூட உரிமை இல்லை என்னும் விஷயம் அவனைப் போன்ற அப்பாவிகளுக்கு எப்படித் தெரியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரே_உரிமை/001-015&oldid=1150387" இலிருந்து மீள்விக்கப்பட்டது