கருவேப்பிலைக்காரி


ழக்கம்போல் இன்றும் விடியற்காலை ஐந்து மணிக்குப் படுக்கையைவிட்டு எழுந்தேன், மணி பத்தாகும் வரை 'அவ'ருக்கு வேலை செய்வதற்கே பொழுது சரியாயிருந்தது.

மாதம் பிறந்தால் அந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் அவருக்குத் தொண்ணூற்றைந்து ரூபாய் 'பிச்சைக்காசு' கொடுத்தாலும் கொடுத்து விடுகிறான். அவர் மட்டுமா அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது? நானும்தான் அவர் மூலம் அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது!

மணி பத்துக்கு மேல் ஒரு நிமிஷம் ஆகிவிட்டால் போதும், அவர் தவியாய்த் தவித்துக் குதியாய்க்;குதிப்பார்! —அவர் குதிப்பதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க முடிகிறதா?—கை பிடித்த தோஷம்! நானும் அவருடன் சேர்ந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

இதனால் அவருக்கு ஒன்றும் கஷ்டமில்லே—நேரம் கழித்துச் சென்றால் மானேஜர் கோபித்துக் கொள்வாரே என்பதைத் தவிர! எனக்குத்தான் கஷ்டமெல்லாம்.

நான்தான் அவருக்குப் பயந்து தொலைகிறேன்; பாழாய்ப் போன அடுப்பு அவருக்குப் பயந்து தொலைகிறதா என்ன? அது தன்பாட்டுக்கு நிர்விசாரமாக எரிந்துத் தொலைகிறது!

அவசரத்தில் நான் அதைத் தூண்டிவிடும் போது, அது சில சமயம் என் கை விரல்களைத் தீண்டிவிடும்: 'அப்பப்பா!' என்று துடித்துப் போவேன். அதுதான் சமயமென்று கஞ்சித்தண்ணீர் வேறு என் காலில் கொட்டிக் கொண்டு விடும்; பச்சைத் தண்ணீரைக் கைமேலும் கால் மேலும் கொட்டியவண்ணம் பதை பதைத்துப் போவேன்.

இந்தச் சமயத்தில், "என்ன, லலிதா! ஏதாவது கொண்டு வருகிறாயா? இல்லை, நான் போகட்டுமா?" என்று அவர் வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாகக் கேட்பார்.

அவர் அவ்வாறு கேட்கப் பிறந்தவர்; கேட்கலாம். "இப்பொழுது ஒன்றும் கொண்டு வருவதற்கில்லை; நீங்கள் போகலாம்!" என்று நான் பதிலுக்குச் சொல்ல முடியுமா? —அவ்வாறு சொல்ல நான் பிறந்தவளல்லவே?—நான் மட்டும் என்ன, எங்கள் வர்க்கமே அவ்வாறு சொல்வதற்குப் பிறந்ததல்லவே!

ஆகவே, "இதோ வந்து விட்டேன்!" என்று எல்லாவற்றையும் ஆவி பறக்கப் பறக்க எடுத்துக் கொண்டு கூடத்தை நோக்கி ஓட்டமாய் ஓடுவேன். அவர் தம்முடைய காரியங்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருப்பார். இலையைப் போட்டு எல்லாவற்றையும் பரிமாறிய பிறகு, நிமிர்ந்து நின்று எரியும் கையை வாயால் ஊதி ஊதித் தணிக்கப் பார்ப்பேன். அதற்காக அவர் "ஐயோ, பாவம்!" என்று பச்சாதாபப் படுவார் என்கிறீர்களா? அதுதான் கிடையாது. "அவ்வளவு அஜாக்கிரதை" என்று கடிந்து கொள்வார்!

இன்று நான் விழித்த வேளை நல்ல வேளை போலிருக்கிறது. மேற்கூறிய விபத்து எதுவும் இன்று எனக்கு நேரவில்லை; குழந்தை ராதையும் மணி பத்துக்கு மேலாகியும் தொட்டிலை விட்டுக் கீழே இறங்கவில்லை. அவள் தன் பாட்டுக்குத் தொட்டிலுக்கு மேலே கட்டித் தொங்கும் பறக்கும் கிளிப் பாவையுடன் ஏதோ 'ங்கா' பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அப்பப்பா! சில சமயம் அவள் தன் 'ங்கா' பாஷையைக் கை விட்டுவிட்டு, 'குவா, குவா' என்ற பாஷையில் கத்த ஆரம்பித்து விட்டால் 'போதும், போதும்' என்று ஆகிவிடுகிறது. இம்மாதிரி சமயங்களில் அடுப்புக் காரியமும் ஆகவேண்டி யிருந்தால், 'குழந்தை வேண்டாம்!' என்று தீர்த்த யாத்திரை போவதற்கு ஏதாவது கோயிலோ, குளமோ இருக்காதா என்று தோன்றி விடுகிறது!

நானும் குழந்தை பிறந்ததிலிருந்துதான் அவரிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன், "வீட்டில் இருப்பது நான் ஒருத்தி; அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் உங்கள் அவசரத்துக்குச் சமைத்துப் போட முடியாது. அதைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க யாராவது ஓர் ஆளைப் போடுங்கோ!" என்று. அவர் எங்கே அதைக் காதில் வாங்கிக் கொள்கிறார்!

"எனக்குக் கிடைப்பதோ மாதம் தொண்ணூற்றைந்து ரூபாய். அதில் ஐந்தே ஐந்து ரூபாயை என் செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி தொண்ணூறு ரூபாயை உன்னிடமே கொடுத்துவிடுகிறேன். நீயோ அதுவே செலவுக்குப் போதவில்லையென்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிகிறாய் —முடியுமானால், நீ அதற்குள்ளேயே குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதற்காக ஒரு வேலைக்காரியைப் பார்த்து வைத்துக் கொள்ளேன்; நானா வேண்டாம் என்கிறேன்!" என்று சொல்லி அவர் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகிறார்.

அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமற் போகவில்லை. அப்படியானால் நான் சொல்வதில்தான் நியாயம் இல்லையோ?

இவ்வாறு நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் அம்புஜம் வந்தாள் அவள் என் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரி. அவளுடைய கணவரும் என்னுடைய கணவருடன்தான் வேலைப் பார்க்கிறார். இருவருக்கும் ஒரே சம்பளந்தான் என்று கேள்வி.

அப்போதுதான் நான் அலமாரியைத் திறந்து ஒரு கதைப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தேன். அம்புஜம் வருவதற்கும், குழந்தை ராதை 'ங்கா' பாஷையைக் கைவிட்டுவிட்டு 'குவா' பாஷையில் கத்த ஆரம்பிப்பதற்கும் சரியா யிருந்தது.

"உன்னை வைத்துக் கொண்டுகூட யாராவது ஏதாவது படிக்க முடியுமோ?" என்று அலுத்துக் கொண்டே நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்வதற்காக எழுந்தேன்.

"இருப்பது நீங்கள் இரண்டே பேர்—இந்தக் குழந்தையைத் தவிர! பகவான் கிருபையில் அவருக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. மாதம் ஐந்து ரூபாய் கொடுத்தால் யாராவது ஒருத்தி வேலைக்கு வந்து குழந்தையை அழவிடாமல் பார்த்துக் கொள்ள மாட்டாளோ? அப்படிச் செய்வதை விட்டுவிட்டு இப்படி அலுத்துக் கொள்வானேன்?" என்றாள் அம்புஜம்.

"அவருக்குச் சம்பளம் நூறு ரூபாயா? இல்லையே!—தொண்ணூற்றைந்து ரூபாய். அதிலும் ஐந்து ரூபாய் அவருடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு என்னிடம் தொண்ணூறு ரூபாய்தானே கொடுக்கிறார்!" என்றேன் நான், குழந்தையைத் தூக்கித் தோளின் மேல் போட்டுக் கொண்டே.

"ஏன், பாக்கி ஐந்து ரூபாய் எங்கே போகிறதாம்? நேற்றுக்கூட ஏதோ பேச்சு வாக்கில் அவர் என்னிடம் சொன்னரே, எனக்கும் நூறு ரூபாய்தான் சம்பளம் அடுத்த வீட்டுக்காரனுக்கும் நூறு ரூபாய்தான் சம்பளம் என்று!"

"பார்த்தாயா, அம்புஜம்! இப்படிப்பட்ட மனுஷனைக் கட்டிக்கொண்டு நான் என்ன செய்வது? அன்றைக்குக்கூடச் சொன்னேன், இந்த அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று! 'நான்தான் ஐந்தே ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே உன்னிடம் கொடுத்து விடுகிறேனே, இன்னும் என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?' என்று அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மாதிரி அலுத்துக் கொண்டாரே, அவர்? சாயந்திரம் வரட்டும்; அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன் பார்!" என்றேன் நான் ஆத்திரத்துடன்.

"நன்றாய்ப் படுத்து! இந்தப் புருஷர்களே இப்படித் தான்! சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் நூறு ருபாய்தான் சம்பளம் கிடைக்கிறதோ, இல்லை—அதற்கு மேல்தான் கிடைக்கிறதோ—யார் கண்டது?" என்று மேலும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டாள் அவள்.

என்னையும் மீறிவந்த ஆக்திரத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு. "என்னமோ, எல்லாம் அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும்!" என்றேன் நான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, "போய் வருகிறேன்" என்று சொல்வி விட்டு அவள் கிளம்பினாள்.

அதற்குள் குழந்தை ராதையும் நல்ல வேளையாகத் தூங்கி விட்டாள். அவளைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, நான் அம்புஜத்துடன் வாசல் வரை சென்றேன்.

கருவேப்பிலைக்காரி வந்தாள். அவளை அழைத்துத் திண்ணை யண்டை விட்டுவிட்டு, நான் உள்ளே சென்றேன் ஒரு பிடி அரிசி கொண்டு வருவதற்காக.

தனிக் குடித்தனம் செய்வதில் சௌகரியம் இருந்தாலும், அசௌகரியமும் இல்லாமற் போகவில்லை. தினந்தோறும் கடைக்குப் போய்வர அவருக்குச் சௌகரியப்படுகிறதா, என்ன? அவர் கடைக்குப் போய்வர முடியாத நாட்களில் எனக்குத் தெருவோடு போகும் அங்காடிக் கூடைக்காரர்களை விட்டால் வேறு வழியே கிடையாது.

***

", அம்மா! நேரமாவுது, அம்மா; சீக்கிரம் வா, அம்மா!" என்றாள் கருவேப்பிலைக்காரி.

"என்னடி, அப்படிப் பறக்கிறே? அரிசி எடுத்துக் கொண்டு வர வேண்டாமா?" என்று சொல்லிக் கொண்டே நான் வெளியே வந்தேன்.

"ஐயோ! காத்தாலே பொறப்படறபோதே, அவரு 'சீக்கிரமா வா!'ன்னாரு. நேரம் கழிச்சுப் போனா அவரு என்னை அடிச்சுக் கொன்னுப் பிடுவாரு. அம்மா!"

"அது யாரடி, அவர்?"

"எம் புருஷன், அம்மா!"

"ஏன், அவன் எங்கேயாவது வேலை வெட்டிக்குப் போவதில்லையா?"

"சரித்தான்; அவரு எங்கேயாச்சும் வேலை வெட்டிக்குப் போவாம, வூட்டிலே சும்மாக் குந்திக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லையே! அடிக்கொரு தரம் எங்கேயாச்சும் திருடி விட்டு அவரு ஜெயிலுக்குப் போயிடுவாரு. 'மவராசனுங்க அவரை எப்பவும் அப்படியே ஜெயில்லே வச்சிருக்க மாட்டானுங்களா!'ன்னு எனக்குத் தோணும். ஏன்னா, அந்த மனுசன் வூட்டிலேயிருந்தா எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தோசமே கெடையாது. அவரு இல்லாதப் போதாவது இந்தக் கறிப்பிலை வித்துக் கெடைக்கும் அரிசியைக் கஞ்சி காய்ச்சி வயிறாரக் குடிப்பேன். அவரு இருந்தா எல்லா அரிசியையும் வித்துக் காசை அவருக்குச் சூதாடக் கொடுத்துடணும், இல்லாவிட்டா அடிச்சுக் கொன்னுப்பிடுவாரு! அதுவும் சீக்கிரம் சீக்கிரமா! எல்லாத்தையும் அவருகிட்ட குடுத்துட்டு நானும் குழந்தையும் பட்டினி கெடக்க முடியுமா? அதாலே, அவருக்குத் தெரியாம இந்த முந்தானையிலே கொஞ்சம் அரிசி முடிஞ்சி வச்சுக்கிட்டுத்தான் நான் பாக்கியை விப்பேன். வித்த காசை அந்தக் கட்டையிலே போறவன் கையிலே கொடுத்துட்டு, 'கடவுளே!'ன்னு குடிசைக்கு வருவேன். முந்தானையிலே முடிஞ்ச அரிசியை அவிழ்த்து எடுத்துக் கஞ்சி காய்ச்சி, நான் கொஞ்சம் குடிச்சிப்பிட்டு—இந்தக் கொழந்தைக்கும் ரெண்டு பாலாடை ஊத்திப்பிட்டு—அந்த மனுசனுக்கும் கொஞ்சம் எடுத்து வச்சிருப்பேன்......"

"அப்படிப்பட்டவனுக்கு நீ ஏண்டி அந்தக் கஞ்சியிலே கொஞ்சம் மீத்தி வைக்கிறே? எல்லாவற்றையும் குடித்து விட்டு, வெறும் பானையை அவனுக்கு முன்னால் உருட்டி விடுகிறதுதானே?"

"நல்லாச் சொன்னே, அம்மா! அப்படிச் செஞ்சா அந்தப் பானை ஆயிரஞ் சுக்கலாப் போகும்; அத்தோட என் தலையும் ஆயிரஞ் சுக்கலாப் போகும். அதுவும் இல்லாம, 'ஏண்டி சோறு ஆக்கலே?'ன்னு என்னமோ கொண்டாந்து குடுத்தவன் மாதிரி ஏக அதிகாரமாக் கேட்டு என்னை ஒதை ஒதைன்னு ஒதைச்சுத் தொலைச்சுப்பிடுவாரு!"

"நல்ல கதை தாண்டி, உன் கதை! அவன்தான் வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, இந்தக் குழந்தையை நீ ஏன் முதுகிலே சுமந்து கொண்டு திரிய வேண்டும்? அவனிடம் இதை விட்டு விட்டு வரக் கூடாதோ?"

"அதுக்குக்கூட அவரு ஒப்ப மாட்டாரு, அம்மா! அந்தக் கொழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாம அப்படி என்னடி நீ வேலை செஞ்சு கிழிச்சுப் பிடுறே?’ன்னு எரிஞ்சு விழுவாரு, அம்மா!"

"அந்த 'அவரு' மட்டும் என்ன செய்து கிழித்து விடுகிறாராம்!" என்று கேட்டேன் நான்.

"என்ன இருந்தாலும் அவரு என்னைத் தொட்டுத் தாலி கட்டின புருசன்! அப்படி யெல்லாம் நான் அவரை எதிர்ச்சிக் கேட்கலாமா, அம்மா?"

"அடி, பைத்தியக்காரி! உன்னைப் பற்றி அவன் நன்றாய்த் தெரிந்துகொண்டுதான் அப்படி மிரட்டு மிரட்டு என்று மிரட்டுகிறான்! எங்களவர் இருக்கிறாரே, அவர் என்னை அப்படிக் கேட்டால் நான் என்ன செய்வேன், தெரியுமா? பிய்த்துப் பிரி கட்டிவிட மாட்டேனா?"

"உங்களோடு என்னையும் சேர்த்துப் பேச முடியுமா, அம்மா?"

"சரி சரி, இந்தா அரிசி—நீ கருவேப்பிலை போடு!" என்று அலுத்துக்கொண்டே நான் அரிசியை அவள் நீட்டிய மூங்கில் தட்டில் கொட்டினேன். அதைப் பெற்றுக் கொண்டு அவளும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

அவள் தெருக்கோடி திரும்பும் வரை, "கறிப்பிலை வாங்கலையோ! கறிப்பிலை வாங்கலையோ!" என்ற குரல் என் காதில் எதிரொலி செய்து கொண்டே யிருந்தது.

***

தென்னமோ தெரியவில்லை, அன்று முழுவதும் அந்தக் கருவேப்பிலைக்காரியை என்னால் மறக்கவே முடிய வில்லை. "உங்களோடு என்னையும் சேர்த்துப் பேச முடியுமா, அம்மா?" என்ற அவளுடைய கேள்வி என் மனதை விட்டு அகலவே யில்லை.

ஆமாம், அவளோடு என்னையும் சேர்த்து ஏன் பேசக் கூடாது? ஜாதியில் வேண்டுமானால் உயர்வு தாழ்வு இருக்கலாம்; வாழ்வில் வேண்டுமானுல் உயர்வு தாழ்வு இருக்கலாம். பிறப்பிலே...? நானுந்தான் பெண்ணாய்ப் பிறந்தேன் அவளுந்தான் பெண்ணாய்ப் பிறந்திருக்கிறாள்.

ஆயினும் மனோ பாவத்தில் அவளுக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்!

அவனால் அவனுக்கு ஒரு காலணாவுக்கு வழி கிடையாது: திருடிவிட்டு ஜெயிலுக்குப் போவான்; வீட்டில் சும்மா இருக்கும் அவன் அந்தக் குழந்தையைக் கூடத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க மாட்டான்; அதையும் நாளெல்லாம் அவள் முதுகில் சுமந்துகொண்டு திரிய வேண்டும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இவள் சம்பாதித்து எடுத்துக்கொண்டு போய் அவனுக்குச் சூதாடக் கொடுக்க வேண்டும்; அதுவும் அவசர அவசரமாக. இல்லையென்றால் அவன் அவளை அடித்துக் கொன்று விடுவான். இதை யெல்லாவற்றையும் விட, தான் சம்பாதித்த அரிசியில் தானே கொஞ்சம் திருடி எடுத்துக் கொண்டு போய்ச் சமைத்து, தானும் சாப்பிட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து வைப்பது போன்ற கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்த அழகான வாழ்க்கையில் அவனிடம் இவளுக்கு என்ன பயபக்தி!

என்ன இருந்தாலும் அவன் இவளைத் தொட்டுத் தாலி கட்டிய புருஷனாம்! அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாதாமே!

பாவம், தீராத வியாதிக்கு ஆளாகியிருந்தும் வேசி வீட்டுக்குப் போக ஆசைப்பட்ட அயோக்கியனைக் கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு சென்ற பைத்தியக்காரி நளாயினியின் கட்டுக் கதையைக் கேட்டு ஏமாந்தவர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இல்லையா? அவர்களில் இந்தக் கருவேப்பிலைக்காரியும் ஒருத்தி போலிருக்கிறது!

அப்பப்பா! அவளுடைய துரதிர்ஷ்டத்தைப் பார்க்கும் போது என்னுடைய அதிர்ஷ்டம் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே!

ஐந்து ரூபாய்!—ஆம், ஐந்தே ஐந்து ரூபாய்—அதையும் எனக்குத் தெரிந்து எடுத்துக் கொள்ள அவருக்குத் தைரியமில்லை. எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வதற்காக இத்தனை நாளும் அவர் என்னிடம் பொய் சொல்லி வந்திருக்கிறார்-எனக்குப் பயந்துதான்; ஆம், என்னுடைய வாய்க்குப் பயந்துதான்!

"அழுகிற பிள்ளையை வைத்துக் கொண்டு அடுப்புக் காரியத்தையும் என்னால் கவனிக்க முடியாது!" என்று நான் அடித்துச் சொல்லும்போதுகூட, அவர் அந்தக் கருவேப்பிலைக்காரியின் கணவனைப் போல "அதைவிட நீ என்ன வேலை செய்து கிழித்து விடுகிறாப்?" என்று என்னை எதிர்த்துக் கேட்பதில்லை.

"என் செலவுக்கு எடுத்துக் கொண்டது போக மீதியைத்தான் உன்னிடம் கொடுத்து விடுகிறேனே, முடியுமானால் ஆள் வைத்துக் கொள்ளேன்!" என்று அடக்கத்துடன் தான் பதில் சொல்லுகிறார். ஆனால் மறைமுகமாக, "என்னுடைய செலவுக்கு மேற்கொண்டு ஐந்து ரூபாய் தேவையாயிருக்கிறது: உனக்குத் தெரிந்தால் எரிந்து விழுவாயே என்று தெரியாமலே எடுத்துக்கொண்டு விடுகிறேன்!" என்று இத்தனை நாளும் அவர் என்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்!

அப்படித்தான் எடுத்துக் கொள்கிறாரே, அதையாவது தன் சொந்த உபயோகத்துக்காகச் செலவழித்துக் கொள்கிறாரோ என்று எண்ணிப் பார்த்தால் 'இல்லை' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அடிக்கடி எனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து என்னைத் திருப்திப்படுத்த முயலுகிறாரே, அதற்கு வேண்டிய காசு அவருக்கு எங்கிருந்து வரும்? இப்படி ஏதாவது எடுத்துக் கொண்டால்தானே உண்டு? ஒரு நாளாவது இதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேனா!

அப்பாவி மனுஷர், பாவம்! உண்மை தெரியாமல், "சாயந்திரம் வரட்டும், அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன். பார்!" என்று அம்புஜத்திடம் சொன்னோமே, இது நியாயமா?

இப்படி யெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த எனக்குப் பொழுது போனதே தெரியவில்லை. அவர் வரும் காலடிச் சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்.

ஏனோ தெரியவில்லை; அவரைக் கண்டதும் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக நான் 'களுக்' கென்று சிரித்து விட்டேன்.

"ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே, அவர் ஒன்றும் புரியாமல் தம்முடைய முகத்தை ஓடோடியும் சென்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்!

"முகத்தில் ஒன்றுமில்லை; அகத்தில்தான் இருக்கிறது!" என்று நான் அமுத்தலுடன் சொல்லிக்கொண்டே காப்பியைக் கொண்டு போய் அவருக்கு முன்னால் வைத்து விட்டு, "நிஜத்தைச் சொல்லுங்கள், உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?" என்று கேட்டேன்.

"இதென்ன கேள்வி, திடீரென்று"

"சொல்லுங்களேன்!"

"ஏன், தொண்ணுற்றைந்து ரூபாய் தான்!"

"பொய், பொய்! எனக்குத் தெரியவே தெரியாது என்று நினைத்தீர்களா......?"

"இல்லை, லலிதா! எனக்குச் சம்பளம் என்னமோ நூறு ரூபாய்தான்! ஆனால் உன்னிடம் உண்மையைச் சொன்னால்......"

"என்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன? நீங்கள் மேற்கொண்டு ஐந்து ரூபாய் எடுத்துக் கொள்வதை நான் 'வேண்டாம்!' என்றா சொல்லியிருக்கப் போகிறேன்?" என்று நான் ஒரு போடுபோட்டேன்.

அதை அப்படியே நம்பி, "உன்னுடைய மனசு இவ்வளவு தங்கமான மனசு என்று இதுவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டதே!" என்றார் அவர் உருக்கமுடன்.

அவர் சொல்லுகிறாரே, நீங்கள் சொல்லுங்கள்; அவர் நினைக்கிறபடி என் மனசு என்ன, அவ்வளவு தங்கமான மனசா?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரே_உரிமை/009-015&oldid=1150396" இலிருந்து மீள்விக்கப்பட்டது