ஒரே உரிமை/014-015
அனந்தகிருஷ்ணனுக்கு ஐந்து வயது. ஆனால் செல்வத்தின் காரணமாக அவன் ரொம்ப ரொம்பச் சின்னக் குழந்தையாகப் பாவிக்கப்பட்டு வந்தான். ஸ்ரீமான் ராமேஸ்வரனுக்கு அவன் ஏகபுத்திரன். வழக்கம் போல் அன்றும் மாலை வேளையில் அவனைத் தள்ளு வண்டியில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றாள் வேலைக்காரியான விசாலம்.
விசாலத்துக்கும் ஒரு குழந்தை இருந்தது. சேகரன். என்பது அவன் நாமதேயம். அவனுக்கும் ஏறக்குறைய ஐந்து வயதுதான் இருக்கும். ஆனால் வறுமையின் காரணமாக அவன் ரொம்ப ரொம்பப் பெரிய குழந்தையாகப் பாவிக்கப் பட்டு வந்தான். அம்மாவின் இடுப்புக்கூட அவன் சவாரி செய்வதற்குக் கிடைப்பதில்லை. அது கூட அனந்த கிருஷ்ணனுக்குத்தான் அடிக்கடி உபயோகப்பட்டு வந்தது.
அன்று என்னவோ தெரியவில்லை; சேகருக்குத் தானும் தள்ளுவண்டியில் ஏறிக்கொண்டு சவாரி செய்யவேண்டு மென்ற ஆசை வந்து விட்டது.
"அம்மா!"
"ஏண்டா?"
"தள்ளு வண்டி, அம்மா!"
குழந்தை தன்னுடைய நிலைமை தெரியாமல் தனக்கும் ஒரு தள்ளு வண்டி வாங்கிக் கொடுக்கச் சொல்கிறானாக்கும் என்று நினைத்து விசாலம் சிரித்துக்கொண்டே, "ஆகட்டும்; நாளைக்கே ஒரு வண்டி வாங்கி விடலாம்; அந்த வண்டியில் உன்னை உட்கார வைத்துத் தள்ளிக்கொண்டு செல்ல ஒரு வேலைக்காரியையும் வைத்துக் கொள்ளலாம்!" என்றாள்.
வாழ்க்கையில் அவ்வளவு நம்பிக்கை அற்றுப் போயிருந்தது அவள் உள்ளம்.
"இல்லை, அம்மா!" என்று தன் பிரேரணையில் ஒரு சிறு திருத்தம் கொண்டு வந்தான் பையன்.
"பின் என்னடா?" என்று அதட்டினாள் தாயார்.
அன்னையின் அதட்டலைக் கேட்டதும், அஸ்தமிக்கும் ஆதவனைக் கண்ட அல்லி மலரைப் போலக் குழந்தையின் வதனம் குவிந்து விட்டது.
தன் விருப்பத்தை வாய் மூலம் தெரிவிப்பதற்குக்கூட அஞ்சிய குழந்தை ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால் தள்ளு வண்டியில் உட்கார்ந்திருந்த அனந்தகிருஷ்ணனைச் சுட்டிக் காட்டினான்.
அப்பொழுதும் விசாலத்துக்கு விஷயம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால் குழந்தையின் மனம் குழந்தைக்குத் தெரியுமோ என்னமோ, சேகரின் விருப்பத்தை அனந்தகிருஷ்ணன் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டான். உடனே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, "ஊம்......ஏறிக்கோ!" என்றான்.
பரஸ்பரம் குழந்தைகள் தங்களுக்குள் இப்படி விட்டுக் கொடுத்துக் கொண்டதுகூட விசாலத்துக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காமற் போனதோடு மட்டும் இல்லை; அவளுக்குப் பயமாயும் இருந்தது—எஜமான் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? இந்த வேலையில்கூட மண்ணைப் போட்டுக்கொண்டு அப்புறம் எப்படிக் காலத் தள்ளுவது? இந்தச் சண்டாளன் வேலைக்கு எமனாயிருப்பான் போலிருக்கிறதே!
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்ததைக் குழந்தைகள் கவனித்ததாகத் தெரியவில்லை. அனந்த கிருஷ்ணன் 'ஊம்' என்றதுதான் தாமதம்; சேகரன் 'ஜம்' என்று வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
விசாலம் பொறுமையை இழந்து விட்டாள். அவள் ஆத்திரத்துடன் சேகரனைத் தூக்கிக் கீழே விட்டுவிட்டு, "அனந்த், ஏறிக்கொள்!" என்றாள்.
"ஊஹூம்...மாட்டேன்! கொஞ்ச தூரம் நான் நடக்கத் தான் போகிறேன்!" என்று பிடிவாதம் பிடித்தான் அனந்தகிருஷ்ணன்.
சேகரன் அழ ஆரம்பித்து விட்டான்.
தாயாருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தாள்.
அனந்தகிருஷ்ணன் அவளைக் கவனிக்கவில்லை. சேகரனை மீண்டும் வண்டியில் ஏற்றிவிட்டு, தானே வண்டியைத் தள்ள ஆரம்பித்தான்.
'பாம்ப பாம், பாம்ப பாம்!' என்று பங்களாவுக்கு வரும் பாதையிலிருந்து மோட்டார் 'ஹார்ன்' சத்தம் கேட்டது—ஆமாம்; விசாலம் எதிர்பார்த்தபடி எஜமான் தான் அந்தக் காரில் வந்து கொண்டிருந்தார்.
கதிகலங்கிப் போய் விட்டாள் விசாலம்.
கடைசியில் என்ன?—எஜமான் அந்த அநீதியை— அக்கிரமத்தைப் பார்த்தே விட்டார்! —சேகரன் வண்டியில் ஏறிக் கொண்டிருப்பதையும், தம்முடைய குழந்தை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வதையும்தான்!
என்ன கர்வம், இவளுக்கு! தள்ளு வண்டியில் தன் பிள்ளையை உட்கார வைத்ததோடு இல்லாமல், அனந்த கிருஷ்ணனை விட்டு அல்லவா வண்டியைத் தள்ளச் சொல்லியிருக்கிறாள்!
"ஏய்!"—ஆமாம்: இது எஜமானின் அதிகார பூர்வமான அழைப்பு! உழைப்பைப் பெற்றுக் கொண்டு ஊதியம் கொடுக்கும் அவனுக்கு, அவள் சுயமரியாதையையும் தத்தம் செய்துவிட வேண்டும்!
விசாலத்தின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. கார் நிறுத்தப்பட்டது.
விசாலம் பயபக்தியுடன் வந்து நின்றாள். "மன்னிச்சுடுங்கோ!" என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து ஒவ்வொரு அக்ஷரமாகத் தயங்கித் தயங்கி வெளியே வந்தது.
எஜமானின் விழிகள் அப்படியும் இப்படியுமாக ஒரு நிமிஷம் உருண்டன. மறு நிமிஷம் ஒரு நீண்ட பெருமூச்சு: கடைசியில் 'உம்' என்ற ஒரு பயங்கர உறுமல்; கார்கிளம்பி விட்டது.
'அப்பாடி!' என்று விசாலம் 'விடுவிடு'வென்று தள்ளு வண்டி சென்ற திக்கை நோக்கி நடந்தாள். வண்டியில் உட்கார்ந்திருந்த சேகரனின் இரு கன்னத்திலும் இரண்டு அறைகள் வைத்தாள். குழந்தை 'வீல்' என்று கத்தினான்; துடியாய்த் துடித்துப் போனான்: "அம்மா! அம்மா!" என்று அலறினான். ஆனாலும் அவள் மனம் இரங்கவில்லை—கூலிப் பிழைப்பை விடவா குழந்தை?
பரபரப்புடன் அனந்தகிருஷ்ணனைத் தூக்கி வண்டியில் உட்கார வைத்தாள்; பங்களாவை நோக்கி வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றாள்.
குழந்தையைக் கூடக் கவனிக்காமல் தான்!
எஜமான் முன்னால் வண்டியை நிறுத்தினாள். அவர் விரைந்து வந்து அனந்தகிருஷ்ணனைத் தூக்கித் தோளின் மேல் போட்டுக்கொண்டு "ஜாக்கிரதை! இன்னொரு முறை இம்மாதிரி செய்தாயோ, வீட்டுக்குத்தான்!" என்று எச்சரித்தார்.
இந்தச் சமயத்தில், "அவள் செய்யவில்லை, அப்பா! தானேதான் அவனை வண்டியில் உட்கார வைத்துத் தள்ளினேன்; எனக்கு அப்படிச் செய்ய வேண்டுமென்று ஆசையாயிருந்தது, அப்பா!" என்றான் அனந்தன்.
"குழந்தை! உனக்கென்ன தெரியும்? நீ செய்தால் அவள், பார்த்துக் கொண்டிருப்பதா?" என்று சொல்லிக் கொண்டே ராமேஸ்வரன் உள்ளே போய்விட்டார்.
விசாலம் திரும்பினாள். அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. அடிக்கும் கைதானே அணைக்கவும் வேண்டும்? சாலையிலேயே நின்று அழுது கொண்டிருந்த குழந்தையை நோக்கி நடந்தாள். குழந்தையும் விக்கி விக்கி அழுது கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருவரும் சந்தித்தனர்— ஐயோ! இரண்டு கன்னத்திலும் என்ன, அத்தனை பெரிய தழும்புகள்?
பார்த்த மாத்திரத்தில் விசாலத்தின் வயிறு 'பகீர்'. என்றது. குழந்தையை வாரி மார்புடன் அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
அடி பைத்தியக்காரி! உன்னே யார் அடிக்கச் சொன்னார்கள், அப்புறம் யார் அழச்சொன்னார்கள்?
***
அன்று ஏனோ தெரியவில்லை; வீட்டுக்கு வரும் போதே ஸ்ரீமான் ராமேஸ்வரன் ஒரு மாதிரியாக வந்தார். தேள் கொட்டிய திருடனின் வேதனை அவருடைய திவ்யவதனத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. "அடியே!" என்று மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே ஆயாசத்துடன் ஹாலிலேயே உட்கார்ந்து விட்டார்.
'என்னமோ, ஏதோ' என்ற பீதியுடன் அவர் மனைவி மனோன்மணி ஓடோடியும் வந்தாள்.
அவளைப் பார்த்ததும், சுகாசனத்தில் நிமிர்ந்த படி உட்கார்ந்திருந்த ராமேஸ்வரன், "வந்துட்டாண்டீ!" என்று சொல்லிக் கொண்டே பின்னால் 'தொப்' பென்று சாய்ந்தார்.
"யார் 'வந்துட்டாண்டி?'" என்று பதட்டத்துடன் கேட்டாள் மனோன்மணி.
"நம்முடைய கம்பெனிக்கு ஒரு 'அக்கௌண்டெண்ட்' தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தேனோ இல்லையோ, அதற்கு ஒரு 'அப்ளிகேஷன்' வந்தது. ஆசாமியை நேரில் வரச் சொல்லி கடிதம் எழுதச் சொன்னேன்; வந்தான். பார்த்தால் அவனே அந்த ஆசாமி!"
"ஐயோ! 'அவன், இவன்' என்று சொல்லி ஏன் என் பிராணணை வாங்குகிறீர்? ஆசாமி யார் என்று சொல்லித் தொலையுங்களேன்!" என்று தலையில் அடித்துக்கொண்டு கேட்டாள் மனோன்மணி.
"போடி, போ! உனக்குத்தான் எல்லாம் தெரிந்த கதையாச்சே! பர்மாவிலிருந்து எவனுடைய பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கே நாம் இவ்வளவு அமர்க்களமாயிருக்கிறோமோ, அந்தப் பணத்துக்குச் சொந்தக்காரன் என்னிடம் 'அக்கௌண்டெண்ட்' வேலை பார்க்க வந்திருக்கிறான்!" என்றார் ராமேஸ்வரன்.
"நான் அப்பொழுதே சொல்லவில்லையா? எங்கேயாவது அவர் இன்னும் உயிரோடு இருந்தாலும் இருப்பார் என்று. நீங்கள்தான் அந்த மனுஷர் செத்தே போயிருப்பார் என்று ஒரேயடியாய்ச் சாதித்தீர்கள்!"
"நான் என்னத்தைக் கண்டேன்? நாம் வரும் போது நம் கண் முன்னாலேயே எத்தனையோ பேர் சாகவில்லையா? அத்தனை பேரில் அவனும் ஒருவனாயிருப்பான் என்று நான் நினைத்தேன். கடைசியில் என்னடா என்றால்..." என்று சொல்லிக் கொண்டே ராமேஸ்வரன் தம் முகவாய்க் கட்டையை அப்படியும் இப்படியுமாகத் தடவி விட்டுக் கொண்டார்.
"கடைசியில் என்னதான் ஆச்சு?"
"என்ன ஆவது? குற்றத்தை ஒப்புக் கொண்டேன். 'எல்லாம் உம்முடைய பணத்தான், சந்தர்ப்பம் உம்மிடம் பணத்தை ஒப்புவிக்க முடியாமல் செய்துவிட்டது. இப்பொழுது இந்தக் கம்பெனியை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். நான் பழையபடி உங்களிடம் 'அக்கௌண்டெண்ட்' டாகவே இருந்து உத்தியோகம் பார்க்கிறேன்' என்று சொல்லி விட்டேன். அவரும் என்னுடைய பெருந்தன்மையை மெச்சி என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார்"
"நல்ல மனுஷர், பாவம்!"
"நல்ல மனுஷராவது, நல்ல மனுஷர்! இப்பொழுது வந்து நம் குடியைக் கெடுத்தானே, அதைச் சொல்லு!"
"போகட்டும்; அந்த மட்டுமாவது விட்டாரே!—கடவுள் கிருபையிருந்தால் நாளைக்கே கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து விடுகிறோம்!"
"கடவுள் கிருபையுமாச்சு, கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதுமாச்சு! இந்த ஜன்மத்தில் அதெல்லாம் நடக்கிற காரியமா?—என்னமோ ஜப்பான்காரன் நமக்காகப் பெரிய மனது பண்ணி பர்மாவைத் தாக்கினான்; நமக்கும் நல்ல காலம் வந்தது; அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு வந்து இங்கே குடியும் குடித்தனமுமானோம். கொடுத்து வைக்கவில்லை, போய்விட்டது!" என்று கையை விரித்தார் ராமேஸ்வரன்.
மனோன்மணி அதற்குமேல் ஒன்றும் கேட்க விரும்பவில்லை; பேசாமல் உள்ளே போய்விட்டாள்.
***
வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தபடி வீதியை நோக்கிக் கொண்டிருந்தார் ராமேஸ்வரன்— தமது பழைய எஜமானரின் வரவை எதிர்பார்த்துத்தான்!
சிறிது நேரத்திற்கெல்லாம் அவரும் வந்து சேர்ந்தார். மலர்ந்த முகத்துடன் அவரைக் கை கூப்பி வரவேற்று, தமக்கு எதிரேயிருந்த ஆசனத்தில் உட்காரும்படி வேண்டிக் கொண்டார் ராமேஸ்வரன். மரியாதைக்காகத் தமக்கு முன்னால் எழுந்து நின்ற ராமேஸ்வரனை நோக்கி, "பரவாயில்லை, உட்காருங்கள்!" என்றார் வந்தவர்.
இந்தச் சமயத்தில் ஏதோ வேலையாக வெளியே போய் விட்டு வந்த விசாலம், முற்றத்தில் உட்கார்ந்திருந்த புதிய மனிதரைப் பார்த்ததும், "ஹா! நீங்களா!" என்று அலறிக் கொண்டே மின்னல் வேகத்தில் அந்த மனிதரை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நிமிஷம் அவருடைய மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு அவள் விம்மி விம்மி அழுதாள்.
"விசாலம்! நீயா விசாலம்! இதென்ன கோலம்? இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா நான் இத்தனை நாளும் உயிரை வைத்துக் கொண்டிருந்தேன்? குழந்தை எங்கே?—குழந்தை எங்கே?" என்று கண்ணீர் மல்கத் துடிதுடித்து கொண்டே அவளைத் தூக்கி நிறுத்தினார் அவர்.
"நான் சொன்னபடி முதலிலேயே அந்தப் பாழாய்ப் போன பர்மாவை விட்டு வெளியேறியிருந்தால் நமக்கு இந்தக் கதி நேர்ந்திருக்குமா? 'இன்னும் என்ன ஆகிறதென்று பார்ப்போம்' என்று பணத்தை நம்பி நாளைத் தள்ளிக்கொண்டு வந்தீரே. கடைசியில் அந்தப் பணம் போன வழி நமக்குத் தெரிந்ததா? நாம் போன வழி பணத்துக்குத் தெரிந்ததா?" என்று விம்மலுக்கும் விக்கலுக்கும் இடையே கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள் விசாலம்.
ராமேஸ்வரனுக்கு ஒன்றுமே புரியவில்லை; அவருக்கு எல்லாம் ஒரே வியப்பாயிருந்தது. வாயைப் பிளந்தபடி, "நம்முடைய எஜமானியம்மாளா நமக்கு இத்தனை நாளும் வேலைக்காரியாக இருந்தாள்!" என்று எண்ணமிட்டார்.
மனோன்மணியும் இன்னதென்று சொல்ல முடியாத நிலையில் தவியாய்த் தவித்தாள்.
அடுத்த நிமிஷம் ஸ்ரீமான் ராமேஸ்வரனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, அவர் தம்மை அறியாமலேயே, "சேகர்! சேகர்!" என்று இரைந்து கொண்டே வாயிற் படிக்கு வந்தார்.
எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்த சேகர் ஓடோடியும் வந்தான். ராமேஸ்வரன் அவனை வாரியெடுத்து அன்புடன் அணைத்துக் கொண்டுபோய்த் தள்ளு வண்டியில் உட்கார வைத்தார்; தாமே வண்டியைத் தள்ளிய வண்ணம் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
சேகருக்கு ஒன்றும் புரியவில்லை; திருதிருவென்று விழித்தான்—என்றும் இல்லாத திருநாளாய், கேவலம் ஒரு வேலைக்காரியின் பிள்ளையை ஆனானப்பட்ட எஜமானே வண்டியில் வைத்துத் தள்ளுவதென்றால்......?