2. நாடு நலமுற


‘எல்லாரும் இன்புற்றிருக்கும்’ சமுதாய வாழ்வுக்கு அன்றுதொட்டு இன்றுவரை உலகுக்கு வழிகாட்டிவரும் நாடு நம் பாரதநாடு. ‘பாரத நாடு பழம்பெருநாடு, பாடுவம் இதனை எமக்கிலை ஈடு’ என்று பாரதி எக்களித்துப் பாடி இதன் பெருமையை விளக்கினார். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு, இன்றுவரை எத்தனையோ அறிஞர்களும், அறிவர்களும், தவசிகளும், தம்மைப்போல் பிறரை ஒத்துநோக்கி உலகை ஓம்பிக் கர்த்த சான்றாண்மை மிக்கவர்களும் நம் நாட்டில் தோன்றி நாட்டையும் உலகையும் நடத்திச் சென்றனர். அவர்கள் சொல்லிச் சென்ற-எழுதிச் சென்ற-பல சாத்திரங்கள் என்றென்றும் உலகுக்குப் பல உண்மைகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. ஆன்மீக நெறியில் மட்டுமன்றி, சமுதாய வாழ்க்கை நெறி, அறிவியல் நெறி ஆகிய பல வழிகளிலும் அவர்தம் எழுத்துக்கள் அமைகின்றன. இன்றைக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுச் சான்றோர்கள் கூறிச் சென்ற பல சமுதாய அறிவியல் கருத்துக்கள் இன்று உலகவாழ்வில் மெய்ம்மையாக்கப் பெறுகின்றன. மேலைநாட்டுப் பொருட்காட்சிகளில் நம் நாட்டுப் பழம்பெரும் எழுத்துக்கள் உண்மையாக்கப் பெறுவதைக் காண்கின்றோம். (நம்மை நாம் அறியாத காரணத்தாலேயே இன்று, எதைஎதையோ புதுமைகளாக எண்ணிப் பூரிப்படைகின்றோம்) இத்தகைய பழம்பெரும் பாரதபூமி வற்றா வளமும் வணங்கா உரமும் கொண்டு வாழ்ந்த நாட்கள் பலப்பல. ஆனால் இடைக்காலத்தில் ஒருசில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு உழன்று அவதியுற்ற நிலையில்-அந்த அவலத்தைப் போக்கி, கோடானு கோடி மக்களின் கண்ணீரைத் துடைத்த பெரும் நிறுவனமே காங்கிரஸ் (இன்று நாட்டில் உள்ள பிற அனைத்தும் அதன் கிளைகளே எனலாம்.) ஆம்! இன்று அதன் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுவதறிந்து யாவரும் மகிழக் கடமைப்பட்டவராவார்கள்.

இந்திய நாடு சுதந்திரமடையத் தம் வாழ்வையும் வளத்தையும் செல்வத்தையும் சிறப்பையும் விட்டும் நாட்டுக்குத் தந்தும், தம்மையே தியாகம் செய்த எத்தனை எத்தனையோ பெரியவர்கள் என் கண்முன் நிற்கின்றனர். அண்ணல் காந்தி அடிகளார். ‘தாழ்வொடு வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத தேயத்தை வாழ்விக்க’ வந்த காட்சி மறக்கொணாக் காட்சியன்றோ? இன்றைக்கு ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அண்ணலார் தமிழகத்தினைக் கண்டு சுற்றி வந்த நாளில், அண்ணாமலைப் பல்கலைக்கழக எல்லைக்கு அழைத்தோம். நான் அங்கே மாணவர் தலைவனாக இருந்த காலம் அது. அவரை வரவேற்று அவரருகிருந்து அவர் அடிதொட்டு வணங்கி, அவர்தம் நல்வாழ்த்தினைப் பெற்ற அந்த நினைவு என் நெஞ்சில் இன்னும் பசுமையாக உள்ளது. அண்ணலார் அவர்கள் தம்மையே நாட்டுக்கு ஈந்தார்.

தமிழ்நாட்டில் கொடியேந்தி உயிர்விட்ட குமரனும் செக்கிழுத்த சிதம்பரனாரும் கர்மவீரர் காமராசரும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களும் காங்கிரஸின் அச்சாணியாக நின்று அன்று போராடிய காட்சிகள் மறக்க முடியாதன. நான் என் இளமைக்காலத்தில்-செங்கற்பட்டுப் பள்ளியில் பயின்றஞான்று, அண்ணல் கர்ந்தி அடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டு உப்புசத்தியாக்கிரகம் செய்ததையும் அதே வேளையில் நடந்த தமிழ்நாட்டின் வேதாரணிய உப்பு யாத்திரையும் அவை மக்கள் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிகளையும் எண்ணினால் கண்ணீர் பெருகுகின்றது. அக்காலத்திலெல்லாம் மக்கள் இணைந்து செயலாற்றிய ஒரே நிறுவனம் காங்கிரஸ் என்பதை யாரும் மறுக்க இயலாது. ‘குமரியொடு வடஇமயத்து ஒருமொழி வைத்துலகாண்ட’ என்ற இளங்கோவடிகள் வாக்கு, அவர் காலத்துக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து மறுபடியும் நனவாயிற்று என்றால் அந்தப் பெருமை காங்கிரஸ் மகாசபையினையே சாரும். அந்த காங்கிரஸ் மகாசபையின் எழும்பூர் ஏரியில் 1927-28ல் நடைபெற்ற மாநாட்டுப் பந்தலில்-நான் மிக இளைஞனாக வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில பயின்ற நாளில்-நாடகம் நடித்ததை நினைத்துப் பார்க்கிறேன். பின் நடைபெற்ற ஆலடி காங்கிரஸ் மாநாட்டின் நிகழ்ச்சிகள் என் நினைவில் வருகின்றன, அப்படியே காஞ்சிபுரத்தில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டின் நிகழ்ச்சிகள் என் நினைவில் விருகின்றன. அப்போது காஞ்சிபுரத்தில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்த வரதராசலு நாயுடு, திரு.வி.க போன்றவர்கள் வாலாஜாபாத்துக்கும் வந்து, பள்ளிக்கூட்டத்தில் நான் சாதி ஒற்றுமையைப் பற்றிப் பேசியதைக் கேட்டதையும், தலைமை வகித்த டாக்டர் நாயுடு அவர்கள் தமக்கிட்ட மாலையினை எனக்கிட்டு என்னை வாழ்த்தியதையும் எண்ணிப் பார்க்கிறேன். இப்படி எத்தனை எத்தனையோ வகையில் பல பெரியவர்கள் நாடு முழுவதும் நம் மக்களைத் தட்டி எழுப்பி, ‘நம்மை நாம் உணரும்’ வகையில் உணர்வூட்டிய காரணத்தாலேயே காங்கிரஸ் தன்னிகரற்றுத் தலைநின்று நாட்டிற்கு நல்லதொரு விடுதலையை வாங்கித் தந்தது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகளார் உழவாரப்பணி செய்து சமூகநலம் காத்தவர். அக்காலை பெருமன்னனாகிய மகேந்திரன் அவரைத் துன்புறுத்திய காலத்தில் ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதும் இல்லை’ என்று வீறு பேசி, ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்பதை எடுத்துக்காட்டி, தன் கொள்கையை நிறுவி வெற்றி பெற்றார். ஆம்! அதே நிலையில் அதே வயதில் அண்ணல் காந்தியடிகளார் ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்று விண்முட்டப் பேசி வீறுகாட்டி வெற்றி பெற்றார். அத்தகைய அண்ணல் வழி நடந்த பாரத மக்களின் நெஞ்சை நினைத்த பாரதியார் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று பாட்டிசைத்தார். ஆக நம் நாட்டுப் பழம்பெரும் செம்மையும் தீயதற்கு அஞ்சா நெஞ்சுரமும் சமுதாயம் செழிக்கக் காணும் தொண்டும் மீண்டும் நாட்டில் நிலைக்கச் செய்த பெருமை தியாகத் தொண்டர்களாகிய அப் பெரியவர்களையே சாரும்.

‘இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டும்’ பதம்திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றும், எதற்கும் அஞ்சாது நிமிர்ந்துநின்று வெற்றிவாகை குடி, 1947-ல் அப் பெருமக்கள்-அண்ணலார் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய்படேல் தமிழ்நாட்டுத் தனிப் பெருந்தலைவர் காமராசர் போன்றோர்-நாட்டிற்குச், சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். அத்தகைய தியாகச் செம்மல்களுள் இன்றும் நம்முடன் மாண்புமிகு மீ. பக்தவச்சலம் போன்று இரண்டொருவர் வாழ்ந்து வருவது நம் மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. ‘நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ அல்லவா?

ஆம்! விடுதலை பெற்று நாற்பதாண்டுகள் ஆகப் போகின்றன. அந்தப் பெரியவர்களுடைய தியாக வாழ்வினையெல்லாம் அறியாத இளைய தலைமுறைகள் இப்போது வாழ்கின்றன. அவர்களுக்கெல்லாம் அந்தப் பெருந்தொண்டுகள்-தியாகங்கள்-செயல் திறன்கள்-செம்மை நலன்கள் தெரிய வழியில்லை. நாடு எத்தனையோ வகையில் வளர்கின்றது என்றாலும் மக்கள் உள்ளம் வளரவேண்டிய அளவில் வளரவில்லை; ஏன் சுருங்கி வருகிறதோ என்று எண்ணவும் தோன்றுகின்றது. ‘ஒன்றே நாடு-ஒன்றே உணர்வு-ஒன்றே குலம்-ஒருவனே தேவன்’ என்கின்ற நினைவும் நெறியும் மாறி, நாட்டில் சாதியால், சமயத்தால், நீதியால், நெறிமுறையால், செல்வத்தால், இன்ன பிறவற்றால் வேறுபாடுகள் வளர்ந்து சமுதாயத்தின் செம்மை வாழ்வு சிதையுமோ என்ற அச்சத்தை உண்டாக்குகிறது. நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் காங்கிரஸ் மகாசபை அந்த அவலநிலையை மாற்ற முயலவேண்டும். ஆம்! நாட்டில் காந்தியடிகளும் காமராசரும் தோன்றவேண்டும். அனைவரும் தம்மை மறந்த-நாட்டு வாழ்வை நம் வீட்டு வாழ்வு என்ற உணர்வில் செயல்பட வேண்டும். ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்த வேண்டும்’ என்ற கம்பன் கனவு நனவாக நாமெல்லாம் ஒன்றி உழைக்க வேண்டும். ‘சிந்தனை’ வார ஏடு இந்த ஒன்றிய சிந்தனையை மக்கள் உள்ளங்களில் உருவாக்கி, ‘எல்லாரும் ஓர் நிறை’ என்ற ஒருமை உணர்வினைத் தட்டி எழுப்பி ‘நாடெங்கும்-வாழக் கேடொன்றும் இல்லை’ என்ற கொள்கையினை நிறுவ வேண்டும். அத்தகைய ஆக்க நெறிக்கு அனைவரும் இணைந்து செயலாற்ற ‘இதுவே காலம்-நேரம்-பொழுது’ என்று கண்டு ‘ஒன்றுகூடுங்கள் ஒன்றி உணருங்கள்-ஒன்றிச் செயல்ாற்றுங்கள்’ என்று வேண்டி அமைகின்றேன்.

1985 ‘சிந்தனை’ நூற்றாண்டு மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/002-026&oldid=1135747" இலிருந்து மீள்விக்கப்பட்டது