11. பேரறிஞர் அண்ணா
சிந்தனைகள் சில


பேரறிஞர் அண்ணா அவர்களை நினைக்கும்போது சிந்தனை நீள்கிறது; ஐம்பது ஆண்டுகள் எல்லையைக் கடந்தும் அது செல்லுகிறது. நானும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவனாதலின், இளமை முதற்கொண்டே அண்ணா அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இளமையில் படிக்கும் காலத்தில் காங்கிரசு கட்சியின் சார்பு கொண்டவனாயினும், 1937ல் இந்தி தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது அதிலிருந்து நீங்கி, தமிழ்த் தொண்டு செய்து வருகின்றவன். அந்த நாள் தொட்டும் அதற்கு முன்பும் அண்ணா அவர்களை நன்கு அறிவேன். 1930ல் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க மாநாட்டில் தொண்டனாகப் பணியாற்றியவன் ஆதலின், அந்த நாள் தொட்டே ‘ஐயா’ பெரியார் அவர்களையும் அண்ணா அவர்களையும் அறிவேன். 1936ல் காஞ்சியில் பணி ஏற்ற பின்பு அவர்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு வந்தது.

1938ல் நான் காஞ்சியில் ஆண்டர்சன்ட் பள்ளியில் பணியாற்றிய அந்த நாளில் ‘காங்கிரசு’ கட்சியை எதிர்த்து மாவட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன் நான். அந்தக் காலத்தில் மாவட்ட எல்லா அதிகாரங்களும் அதனிடம் குவிந்திருந்தன. எனவே போட்டி கடுமையாக இருந்தது. மேலும் அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தமையின், அதை எதிர்த்துப் போட்டியிடப் பெருந் தலைவர்களும் செல்வர்களும் அஞ்சினர். சாதாரண ஓர் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியனாகியநான் போட்டியிடுவதா? வெற்றி பெறுவதா? எனச் சிலர் ஏளனம் செய்தனர். ஆனால் அண்ணா அவர்கள் ‘தமிழாசிரியர் அரசியலுக்கு வருவது தமிழகத்திலேயே முதல் தடவை; எனவே துணிந்து நில்லுங்கள்’ என ஊக்கினார்கள். அத்துடன் அவர்களே என்னுடன் மாட்டு வண்டியில் சில ஊர்களுக்கு இரண்டொரு நாள் வந்து எனக்காக வாக்குகளைக் கேட்டு உதவினார்கள். (அப்போது அவர்கள் ஈரோட்டில் குடியரசு இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன்) இந்த மறவா நிகழ்ச்சியினை என் ‘காஞ்சி வாழ்க்கை’ என்ற நூலில் (பக்கம் 93) குறிப்பிட்டுள்ளேன்.

பின் காஞ்சியில் நான் ‘தமிழ்க்கலை’ தொடங்கி நடத்திய காலத்தில் ‘தமிழ்க்கலை’ இல்லத்துக்கு அண்ணா வந்து வாழ்த்து வழங்கினார்கள். அவர்கள் ஈரோட்டிலிருந்து 16.10.40ல் கலைஞர் தி.க.சண்முகம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் காஞ்சீபுரம் ‘தமிழ்க்கலை நம்மைச் சார்ந்த பத்திரிகை’ என்று குறிப்பிட்டுள்ளதை இன்றும் எண்ணி எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

காஞ்சியில் அவர்கள் திராவிடநாடு தொடங்கி, ஈழத்து அடிகளார் மேற்பார்வையில் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தகாலை, அடிக்கடி சென்று அவர்களோடு அளவளாவிய பேச்சுக்களும் பிறவும் கண்முன் நிழலாடுகின்றன.

பின் 1944ல் சென்னைக்கு வந்து பச்சையப்பனில் நான் பணி ஏற்ற பிறகு, அண்ணா அவர்கள் தாம் பயின்ற கல்லூரியில் பணி ஏற்றமை குறித்துப் பாராட்டினார்கள். பின் அவர்கள் முதலமைச்சராகப் பணியேற்றபோது, பச்சையப்பரில் அதுவரையில் தமிழாசிரியர் கல்லூரியின் முதல்வராக இருந்ததில்லை என்பதைக் கல்லூரி அளித்த பாராட்டுவிழாவில் விளக்கிச் சொன்னார்கள். அனைவரும் என்னை எண்ணித்தான் அண்ணா அவர்கள் அதைச் சொன்னார்கள் என்றனர். அப்போது இருந்த முதல்வரும் துணை முதல்வரும் என்னினும் இளையவர்கள் ஆனதால் எனக்கு அப்பதவி தர இயலா நிலையில், எண்ணி எண்ணி, ஆட்சிக் குழுவினர் என் ஓய்வுக் காலத்தை 62 வயதுவரை தள்ளி வைத்து, மூன்றாண்டுகள் மற்றொரு பதவி அளித்து துணை முதல்வராக நியமித்தனர். நான் ஓய்வு பெற்றதும் அப்பதவியும் இல்லையாயிற்று. அண்ணா அவர்கள் கருத்தின் வழியே நான் பெற்ற பதவியை எண்ணி மகிழ்ந்தேன்.

காஞ்சியை அடுத்த வாலாஜாபாத்தில் நான் செயலாளனாக இருந்து ஓர் உயர்நிலைப்பள்ளியினைத் தொடங்கினேன். வட்டத் தலைநகரங்கள் தவிர்த்து வேறு இடங்களில் உயர்நிலைப்பள்ளி இல்லாத காலம் அது. 6 ஏக்கர் நிலமும் 25,000 ரூபாயும் தந்தால் அரசாங்க உயர்நிலைப்பள்ளி அமைக்க ஏற்பாடு செய்ய வழி இருந்தது. அப்போது நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் சொந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி தொடங்க விரும்பி முயன்றேன். பல அன்பர்கள் உதவினர். எனினும் 25,000 ரூபாய் சேர அன்று வழி இல்லை. உளம் உடைந்து நின்ற அந்த வேளையில், அண்ணா அவர்கள் தாமே வலிய வந்து உதவுவதாகக் கூறி ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற நாடகத்தையும் மற்றொன்றையும் இரண்டுநாள் வாலாஜாபாத்தில் நடத்தி, அதன் முழு வருவாயினையும் பள்ளிக் குழுவுக்கு அளித்ததை என்றும் நான் மறந்தறியேன்-ஆம்! அது மேநிலைப் பள்ளியாக இன்று நடைபெற்று வருகின்றது. அப்பள்ளியின் தொடக்கவிழா, கட்டடக் கால்கோள் விழா, கட்டடத் திறப்புவிழா அனைத்திலும் அண்ணா அவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். (பள்ளியில் உள்ள கல்வெட்டு இன்றும் சான்று பகரும்)

இடையில் அரசியல் மோதல் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தலின்போது-1957 என எண்ணுகிறேன்-காங்கிரசினை எதிர்த்து இருவர் போட்டியிட்டனர். இவர்கள் போட்டியினால் இருவரும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது. நான் அப்போது அரசியலில் இல்லையாயினும், என் வட்டத்தைச் சேர்ந்தகாரணத்தால் சிலர் சில செயல்களுக்காக என்னை அழைப்பர். இந்த இருவர் போட்டியினைப் பற்றி அண்ணாவும் நானும் கலந்து பேசி, ஒருநாள் இரவு ஒன்பது மணி அளவில் அண்ணாவின் இல்லத்துக்கு, அந்த இருவரையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வரச் சொன்னோம். அவ்வாறு அவர்கள் வந்தபிறகு, பேசியதில் இருவரும் தேர்தல் களத்திலிருந்து விலக மறுத்து எத்தனையோ காரணங்கள் காட்டினார்கள். என்றாலும் ஏழு மணி நேரம் பேச்சுக்கிடையில்-விடியல் மூன்று மணிக்கு-ஒருவர் விண்ணப்பத்தைத் திருப்பிப் பெற ஏற்பாடு செய்ய முடிந்தது. இந்த முயற்சியில் அண்ணா அவர்கள் கையாண்ட நல்ல உத்திகள் போற்றற்குரியனவாம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றபோது, நான் தமிழக அரசினால் ஐதராபாத் அனுப்பப்பெற்று, உஸ்மானியப்பல்கலைக் கழகத்தில் பணி செய்து வந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்கள் என்னைக் கேளாமலேயே என்னை அத் தமிழ்த்துறைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அங்கிருந்து உத்தரவு வந்தபோது அவர்களைக் கண்டு கேட்க, ‘நீங்கள் சொன்னால் போகமாட்டீர்கள் என்பது தெரியும்; எனவே சொல்லாமல் அனுப்பினேன்’ என்றார்கள். அவர் அன்பறிந்து அங்கேசென்று பணியாற்றினேன். அங்கிருந்த துணைவேந்தர் அவர்கள் என் பணிகண்டு மேலும் தொடர்ந்து சில ஆண்டுகளாயினும் இருக்கவேண்டும் எனக் கேட்டு, தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினார். அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நான் ஏப்பிரல் விடுமுறையில் அவர்களைக் காணச் சென்றேன். அவர்கள் உதகை சென்றிருந்தனர். அங்கே விருந்தினர் மாளிகையில் கண்டு மகிழ்ந்தேன். அவர்களே அரசாங்கத்துக்கு என்னைப்பற்றி வந்திருந்த தகவலைச் சொல்லி, ‘இனி நீங்கள் அங்கே போக வேண்டாம்; இங்கே உங்களுக்கு நிறையப் பணி காத்திருக்கிறது’ என்று சொன்னதோடு, என்னை அனுப்ப இயலாதென அவர்களுக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்துவிட்டனர். ஆம்! அவர்கள் என்வழியே தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் பல செய்ய நினைத்தார்கள். ஆனால் அதற்குள் அவர் வாழ்வின் எல்லை வற்றிவிட்டது; கண்ணீர் பெருகுகின்றது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுபவருக்கு, அக்காலத்திலெல்லாம் பட்டமளிப்பு விழா நடத்தி, அனைவரையும் வரவழைத்து ஒன்று கூட்டி உரையாற்றிப் பட்டமளித்தல் மரபு. அண்ணா அவர்கள் அவ் விழாக்களில் பட்டம் பெறுவோர் அனைவர் கையிலும் பட்டச் சான்றிதழோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்ற திருக்குறளும் இருக்குமாறு ஏற்பாடு செய்ய நினைத்தார்கள். அதற்குள் அவர் பயண எல்லை முடிவுற்றது.

அண்ணா அவர்கள் அரசியலில் மாற்றாரையும் மதிக்கும் நல்லவர் என்பதை எண்ண வேண்டியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்கள் தம் பிறந்தநாள் விழாவினை ஆண்டு தோறும் கொண்டாடுவதுண்டு. நானும் அதில் முக்கியப் பங்கு கொள்வேன். அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த ஆண்டு, அந்த அவர்தம் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்ய முயன்றோம். யாரைத் தலைவராகத் கொள்வது என்ற பேச்சு எழுந்தது. பலரைச் சொன்னார்கள். நான் அன்றைய முதல் அமைச்சர் அண்ணாவே தலைமை வகிக்க வேண்டும் என்றேன். பலரும் ‘அவர் வரமாட்டார்’ என்றனர். எனினும் நான் ‘அந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள்; அண்ணாவின் நல் உள்ளத்தையும் கண்ணியத்தையும் உங்களுக்குக் காட்டுகிறேன்’ என்றேன். அனைவரும் இயைந்தனர். கூட்டம் திருவல்லிக்கேணியில் நடந்தது. நான் அங்கிருந்து நேரே நுங்கம்பாக்கம் அவின்யூ சாலைக்கு வந்தேன். அண்ணா தம் பணியில் ஆழ்ந்திருந்தார்கள்; நான் எப்போதும் நேரே உள்ளே சென்றுவிடுவது வழக்கம். அன்றும் அப்படியே சென்றேன். இரவு 8.30 இருக்கும். ‘இந்த வேளையில் எங்கே வந்தீர்கள்’ என்றார்கள். நான் நடந்தவற்றைச் சொல்லி மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் பிறந்தநாள் வாழ்வில் தலைமை வகிக்க வேண்டும் என்றேன்; நாளும் குறித்தேன். உடனே ‘இதைவிட எனக்கு வேறு என்ன வேலை? கட்டாயம் வருகிறேன்’ என்று சொல்லி, தன் செயலரை அழைத்து, அன்று இருந்த வேறு நிகழ்ச்சியை மாற்றச் சொல்லி, இந்த விழாவினைக் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்படியே குறித்த வேளையில் (திருவல்லிக்கேணி நேஷனல் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது) வந்து சிறப்பாகத் தலைமையேற்றுப் பேசி அனைவரையும் மகிழ்வித்தனர். கூட்டத்தில் வரவேற்ற நான் இன்றேபோல் ‘நும்புணர்ச்சி’ என்ற சங்கச் சான்றோர் அடியினால் வாழ்த்தினேன்.

காஞ்சியில் கல்லூரி இல்லையே என்ற குறை அண்ணா அவர்களுக்கு உண்டு. அதில் நானும் பங்கு கொண்டேன். பல அன்பர்கள் உதவினர்; கல்லூரி உருவாயிற்று. கல்லூரித் தொடக்க விழாவில் சர். ஆர்க்காடு இராமசாமி முதலியார் அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தார். அவர் பேச்சு ஆங்கிலத்தில் அழகுற அமைந்தது. ஆயினும் அதைப் பழகு பைந்தமிழில் அண்ணா அவர்கள் மொழி பெயர்த்துத் தந்தமையே அதற்கு ஏற்றம் அளித்தது. அப்படியே அதற்கெனக் கட்டி முடிக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழாவிற்குச் சர். ஆர்க்காடு இலட்சுமணசாமி முதலியார் தலைமை வகித்து அதைத் திறந்து வைத்தார்கள் அவரும் ஆங்கிலத்தில் அழகுறப் பேசினார்கள். ஆயினும் அதை மொழிபெயர்க்க அண்ணா அன்று அங்கு இல்லை. அங்குள்ள அனைவரும் அண்ணா இல்லை; அவர்கள் வாரிசாக நீங்கள்தாம் மொழிபெயர்க்க வேண்டுமென என்னிடம் கூறினர். நானும் மொழிபெயர்த்தேன். காஞ்சிவாழ் மக்கள் என்னை அண்ணாவுடன் இணைத்துப் பாராட்டிய பெருமையினை இன்றும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

ஒருமுறை அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு துறையில் உள்ள குறைபாடுகளை அவரிடம் சுட்டிக் காட்டி, அவர்களை அத்துறையின் அமைச்சரிடம் சொல்லித் திருத்துமாறு கூறினேன். அவர் உடனே ‘உங்கள்......’ தானே அத்துறை அமைச்சர்; ‘நீங்களே சொல்லுங்கள்’ என்றார். நான் உடனே என்ன அண்ணா! ‘உங்கள்’ என்று இப்படிச் சொல்லுகிறீர்கள். உங்கள் தம்பி அல்லவா அவர் என்றேன். அவரும் ‘தம்பிதான், தம்பி அண்ணன் சொல்லைக் கேட்கவில்லையே; என்ன செய்வது’ என்று வேதனைப்பட்டார். அந்த வேதனைக் காட்சி என் உள்ளத்தை உலுக்கியது, உருக்கியது.

சென்னை உலகத்தமிழ் மாநாட்டின் அறிஞர் கூட்டத்தின் கடைசி நாளில் பல்கலைக்கழக மண்டபத்தில் அண்ணா அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆங்கிலத்தில் பேசிய பேச்சினை-சொல்லாட்சியும் பொருள் மாட்சியும்-கேட்டு, வந்திருந்த அனைவரும் பாராட்டிய அந்தப் பாராட்டு, ‘கல்வியே கரையிலாத காஞ்சி மாநகர்’ தந்த அந்த அறிவுச் செல்வத்தின் சிறப்பினை-பாரறியச்செய்த நலத்தினை எண்ணி எண்ணி வியந்தேன்-வியக்கிறேன்-உள்ள நாள் வரையில் இவை அனைத்தையும் எண்ணி மகிழ்வேன்.

அவரோடு மட்டுமன்றி அவரைப் புரிந்து வளர்த்த சிற்றன்னையாருடன் அவர்கள் வீட்டில் பல நாட்கள் பேசிய பேச்சுக்களும், அவ்வன்னையார் கூறிய ஆக்கநெறி-வாழ்க்கை நெறி பற்றிய அறிவுரைகளும் எழுத்தில் அடங்கா!

அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது எண்ணி மகிழ்ந்து ‘திருத்தொண்டர் அண்ணா’ என்ற «»தலைப்பில் ஐந்து பாடல்கள் எழுதினேன். அவை என் கவிதை உள்ளம் என்ற நூலில் (பக்கம். 156-57) இடம் பெற்றுள்ளன.

எண்ண எண்ண எத்தனையோ கருத்துக்கள்-அவரொடு பழகிய காலத்தில் பெற்ற அனுபவங்கள்-பல போட்டியிட்டு உள்ளத்தில் ஒன்றன் முன் ஒன்றாக வந்து நிற்கின்றன. எனினும் எல்லை கருதி இந்த அளவோடு அமையலாம் என எண்ணுகின்றேன். அண்ணாவின் புகழ் என்றும் வாழ்க! அவர் வழி ஆற்றும் தொண்டுகள் சிறக்க!

—1984

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/011-026&oldid=1135810" இலிருந்து மீள்விக்கப்பட்டது