18. காகிதம் செய்வதிலும்
அச்சுக் கலையிலும் சீன நாட்டின் பங்கு

ன்றைய நூல் அமைப்புக்கலையில்-வெள்ளைத் தாளில் கருமைகொண்டு அச்சிடும் நூல் அமைப்புக்கலையின் வளர்ச்சியில் சீன நாட்டின் பங்கு மிகப் பெரிதாகும். கிறித்து ஆண்டுத் தொடக்க நாளில் காகிதம் அல்லது தாள் சீனாவில் புதிதாகச் செய்யப்பெற்று அக் காகிதம் தற்கால எல்லைக்கு முன்பே உலக முழுதும் பரவிற்று என்பது அறிந்த ஒன்றேயாம். மர அச்சு முதலாவதாக சீனர்களால் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் செய்யப் பெற்றதோடு, தனி எழுத்தாக வடிக்கப்பெற்ற அச்சுக் கலையையும் ‘குண்டன்பர்க்’ என்பார்தம் காலத்தினும் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே சைனா பெற்றிருந்தது. ‘இந்திய மை’ என அழைக்கப் பெற்றது. எவ்வாறு என அறிய முடியாத, துடைத்தழிக்க முடியாத, புகைக்கரி மையும் சீன நாகரிகத்தின் தொன்மைக் காலத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இத்தகைய பொருள்களின் இணைப்பே பரந்து பரவும் பல பக்க நூல்களின் எண்ணற்ற படிகளை உலகுக்கு வழங்க வாய்ப்பாக அமைந்தது.

அச்சுக்கலையை நாகரிகத்தின் தாய் எனப் போற்றுவர். அந் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்ததால், மக்கள் கருத்துக்களையும் ஆசை அல்லது உணர்வுகளையும் உலகெங்கும் பரப்பவும் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தப் பெறுகின்றது. இன்றைய மேலைநாட்டுப்புதுமை வாழ்விற்கு அடிப்படையான நான்கு கண்டுபிடிப்புக்களுள் (வெடி மருந்து, திரைகாட்டி என்ற இரண்டு தவிர்த்த) தாள், அச்சு ஆகிய இரண்டும் சீனர்தம் கண்டுபிடிப்புக்களே. தாளும் அதன் வழித் தோன்றிய அச்சுக்கலையும் கண்டுபிடித்ததை ஒப்ப, வேறு எதையும் பழங்கால மனிதனின் வெற்றிக்கு அல்லது சாதனைக்கு மிக முக்கியமானதாகச் சொல்ல இயலாது. தாளும் அச்சுக்கலையும் இன்றையமனித அறிவு வெளியில் நெடுந்தூரம் ஒளி காட்டும் தன்மையில் அமைகின்றன. தாள் இல்லாதிருந்து அச்சுக்கலையும் தோன்றாதிருப்பின் இன்றைய மனித வாழ்வு என்னாகும் எனக் கற்பனை செய்து காண முடியுங்கொல்? வேறுபல செய்தி விளக்க வழிகள் இருப்பினும், அவை, அடிப்படையான நிலைத்த இத் தாள், அச்சு இவற்றிற்கு மாற்றாக அமைய முடியர்.

சீன நாட்டில் தாளின்
தோற்ற வளர்ச்சியும் பயனும்

தாள் அல்லது காகிதம் ஒரு நல்ல அரிதட்டி வழி நீர்கழிய நிற்கும் ஒட்டுப் பற்றாகிய நார்ப் பொருளால் ஆகியதாகும். நீங்கிய பின் ஒருவிரிந்த நார்ப்பொருளே உலர்ந்து தாளாகின்றது. காகிதம் செய்யும் கலைபற்றிய தொடக்க நாளிலிருந்து, இருபது நூற்றாண்டுகளுக்கும் பிறகும், அதன் வளர்ச்சி மாறி அதற்கென அமைந்த துணைக் கருவிகள் சில வேறுபட்ட போதிலும், அதன் அடிப்படைத் தன்மையும் உருவாக்கும் நடைமுறையும் மாறாதுள்ளன. கிறித்துப் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மக்கள், கந்தைகளைப் பொடி செய்து நீரில் கலக்கி அதன்வழியே காகிதம் செய்யும் கலையை அறிந்திருந்தனர். கந்தைகளிலிருந்து, நார்ப் பொருளை நீரொடு கலக்கி, அந் நீரினை அரித்து வடித்து, மெல்லிய தாளினை உருவாக்கும் திறனை, எதிர்பாராத வகையில் அவர்கள் கற்றிருக்கக் கூடும் எனக் கருதலாம்.

காகிதம் செய்யும் கலை சீன நாட்டில் தோன்றிய தென்பதனை மேலைநாட்டு அறிஞர்கள் சில வேளைகளில் ஐயுறுகின்றனர். ‘பேப்பரஸ்’ என்ற பெயரிலிருந்து ‘பேப்பர்’ என்ற பெயர் வந்திருக்க வேண்டும் எனக் கருதுவதும் சீனத்தாளின் இயற்கை நிலையை அவர்களே அறியாதிருப்பதும் அதற்குக் காரணங்களாகலாம். தாளுக்கு முந்திப் பயன்படுத்தப் பெற்ற ‘பேப்பரஸ்’ என்னும் பெர்ருள் ஒருவகை நாணற்புல் தண்டிலிருந்து துண்டாக்கி விரிக்கப்பெற்றதாக அமைய, காகிதமோ நார்க் குழம்பிலிருந்து உண்டாகியது என்பதை அவர்கள் உணரவில்லை. (‘பேப்பரஸ்’ என்ற சொற்கு நாணற் புல்வகை என்பதே பொருள்) துணியில் எழுதப்பெற்று, அதனினும் சிக்கனத்தைக் கையாளும் வகையிலே பின் வளர்ச்சியடைந்த ஒன்றே தாளின் தோற்ற நிலை என்பது தேற்றம். தாளும் துணியும் ஒன்றோடொன்று நெருங்கிப் பின்னியவை. அவை இரண்டும் ஒரே வகையான மூலப் பொருள்களினால் ஆக்கப்பெறுவதோடன்றி, புற அமைப்பினும் பொருள் செறிவிலும் ஒரே தன்மை உடையனவாகவும் உள்ளன. அவற்றை ஆக்கும் செயல் முறையிலும் அதன் வழி அமையும் மதிப்பின் தரத்திலும் உள்ள வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகளே முக்கியமான வேற்றுமைகளாகும். கையினால் நூற்ற மெல்லிய நூலிழைகளைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெறுகின்றன. காகிதமோ இடித்துக் கூழாக்கிய நாட்டுப் பொருள்களை வேதியல் முறைப்படி கலந்து செய்யப்பெறுவதாகும்.

மரத்தின் அடிப்பட்டை, சணல் நார், கந்தை, மின் வலை இவற்றின் கூட்டுக் கூழால் செய்யப்பெற்ற காகிதம், டிஸ் ஐ லூன் (Ts ai Lun) என்பவரால் கி.பி. 105ல் அரசவையில் காட்டப்பெற்றது எனக் கருதுகின்றனர். தொன்றுதொட்டு எண்ணப்பெறும் இக் கால எல்லை ஏதோ ஒருவகையில் கணக்கிடப்பெற்றுள்ளது, ஏனெனில் அவன் காலத்துக்கு முன்பே செடி, பட்டுத் தாள்களினால் செய்யப்பெற்ற காகிதம் வழக்கத்தில் இருந்தது என்பதை உணர முடிகின்றது. வட சீனாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற பழைய காகிதத் துணுக்குகள் வழியே கிறித்துப் பிறப்பதற்கு முன்பே அது கண்டுபிடிக்கப்பெற்றதென அறிய முடிகின்றது. சென்சி மாநிலத்தின் (Shensi Province) பா.ச.கியோ (Pa-ch’ Kiao) என்னுமிடத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் கட்டப் பெற்ற ஒரு கல்லறையிலிருந்து 1957ல் கண்டெடுக்கப் பெற்ற சில காகிதத் துண்டுகள் அவற்றின் தொன்மைக்குச் சான்றாக உள்ளன. இஃது உண்மையாகக் கொள்ளப்பெறின் ‘டிஸ்.ஐ.லூன்’ என்பார் காலத்துக்குக் குறைந்தது இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே காகிதம் செய்யும் கலையின் தொன்மைநிலையைக் கொள்ளவேண்டியிருக்கும். ஒருவேளை அதுவரை உபயோகப்படாத புதுப் பொருள்களிலிருந்தும், பயன்படுத்தப்பெறாத புதுமுறைகளினாலும் காகிதம் செய்யப்பெற்ற பெருமையை ‘டிஸ்-ஐ-லூன்’ என்பவரைச் சாரலாம். கந்தைகளும் பிற கழி பொருள்களும் ஒருவேளை கிடைப்பதற்கு அரிய வாக நிற்க, (அவற்றின் மாற்றுப் பொருளாக) புதிதாக நார்ப் பொருள்களும் மரப்பட்டைகளும் பிற செடிகளும் மூலப் பொருளாக அமைய, காகிதம் அதிக தேவைக்கு ஏற்ற வகையில் அதிகமாகத் தயாரிக்கும் முறையினை மேற்கொண்டிருக்கலாம்.

நாரியல் உள்பட்டை உடைய சணல் வகைச்செடி, ஆளிவிதைச் செடி, ராமி என்னும் சீனப்புல், பிரம்பு ஆகிய செடிகளின் நார்ப்பட்டைகளும், முசுக்கட்டை, தான்மல்பரி போன்ற மரங்களின் அடிப்பட்டைகளும் மூங்கில், நாணல் போன்ற புல்களும், அரிசி கோதுமை ஆகியவற்றின் தவிடு உமிகளும், பருத்தி விதை போன்றவையுமே சீனத் தாள் செய்வதற்குரிய பெரும்பாலான பொருள்களாகக் கொள்ளப்பெற்றன. சிறந்த நல்ல நீண்ட நார்த் திரளைத் தரும் சணலும் பருத்தியும் உயர்ந்ததாகக் கருதப்பெற்றன. ஆயினும் அவை இரண்டும் ஆடை நெசவுக்கு இன்றியமையாப் பொருள்களாகக் கருதப்பட்டமையின், தான்மல்பரி (முசுக்கட்டை) மூங்கில் போன்றவையே காகிதம் செய்யத் தக்க முலப்பொருள்களாகச் சீனத்தில் பலநூற்றாண்டுகள் கொள்ளப்பெற்றன.

தாள் தோன்றிய நாளிலிருந்தே எழுது பொருளாகப் பயன்பட்டு வந்ததெனினும், மூங்கிலும் மரப்பலகைகளும் நூல்களுக்கெனப் பயன்படுத்திவந்த நிலையைத் தாள் மாற்றிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இல்லை எனலாம். இக்காலத்திலிருந்தே நல்ல செவ்விய முறையில் அளவிட்டு, வரையறுத்து, உருவச்சில் அமைத்து எழுதுவதற்கேற்ற நல்ல முறையிலும் என்றும் நிலைக்கும் வகையில் பூச்சிகளால் தின்னப்படா தவகையிலும் காகிதம் செய்யப்பெற்றது. மேலும் கவிதை, குறிப்பு, கடிதம் எழுதுவதற்கேற்ற வகையிலும், துண்டுகளாக்கி ஒப்பனை, வேலைப்பாடு, அழகுபடுத்தல் ஆகியவற்றிற்கும் ஏற்ற வகையிலும் செம்மையுறப் பலவகையிலும் வண்ணங்களிலும் காகிதங்கள் செய்யப்பெற்றன. மற்றும் ஆவணங்கள் எழுதுவதற்கும் நூல்கள் செய்வதற்கும் வண்ணம் தீட்டுதற்கும் கை எழுத்துத்திறன் காட்டும் எழுத்தமைப்புக்கும் பார்வைச் சீட்டுகளுக்கும் தெய்வ வழிபாட்டிற்கும், அட்டையிடுவதற்கும் வீட்டுப் பலகணிகளை மறைப்பதற்குமெனக் காகிதம் பலவகையில் பயன்படுத்தப்பெற்றது. அவற்றுடன் மேலும் வீட்டுப் பொருள்களாகிய விசிறி, குடை, விளக்கு, காற்றாடி, விளையாட்டுப் பொருள், தூய்மைக்குப் பயன்படு பொருள் ஆகியவை அமைப்பதற்கும்கூடக் காகிதம் பயன்படுத்தப் பெற்றது. இவையனைத்தும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே பழக்கத்தில் வந்து விட்டன என அறிகிறோம்.

கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, தொப்பி, உடை, கால்உறை, படுக்கை விரிப்பு, கொசுவலை, திரை போன்றவையும் பிறவுமாகிய பல வீட்டு அழகுபடுத்தும் பொருள்களும் கருவிப் பொருள்களும் செய்யக் காகிதம் பயன்படத் தொடங்கிவிட்டதெனவும் அறிகிறோம். மேலும் தடுப்பு அல்லது தட்டி, கூரை மற்றும் போர்க்கவசம் போன்றவைக்கும் காகிதம் பயன்படுத்தப் பெற்றது. உலோகத்தாலான திண்ணிய காசுகளாகிய பணத்துக்குப் பதில் ‘பறக்கும் பண’மெனக் காகிதம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகுத்தப்பெற்றது. பேரரசன் ‘கான்’ என்பான் காலத்தில் காகிதப் பணம் பெரும் புழக்கத்தில் இருந்ததையும், மாதிரி உருவம் உருவப்படம் ஆகியவை இறந்தார் வழிபாட்டில் பெருவாரியாக எரிக்கப்பட்டதையும் சீன நாட்டிற்குத் தொடக்கத்தில் சென்றவருள் ஒருவரான மார்க்கபோலோ என்பார் கண்டிருக்கிறார். இத்தாள் காகிதப்பணம், விளையாட்டுச் சீட்டு போன்றவையும் பிற காகிதப் பொருள்களும் அச்சுக்கலையும் மங்கோலியர்தம் வளர்ச்சி வளர வளர உலகின் பிற பாகங்களுக்கும் பரவத்தொடங்கின. சீனப் பேராகிய ‘சாவ்’ (cau) என்னும் பணப்பெயர் கொண்ட காகிதப்பணம் பாரசீகத்தில் முதல் முதல் கி.பி. 1294ல் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. ஐரோப்பிய நாட்டு (மேலைநாட்டு) வங்கிகளின் கணக்கு முறை, சேமிப்பு, சான்றிதழ் போலச் சிலவும் சீன முறைகளைப் பின்பற்றி அமைந்தன என்று சொல்லப்படுகின்றது.

சுவரொட்டித் தாள்களுக்கும் பிறப்பிடம் சீனமேயாகும். அது பதினாறாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டுச் சமயத் தொண்டர்களால் ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டுவரப்பெற்று, பதினேழாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பெற்றது. அத் தாள் எக்காலத்திலிருந்து சீனத்தில் பயன்படுத்தப் பெற்றதென்பது காணமுடியாது. எனினும் மிகப் பழங்காலத்திலிருந்தே வண்ணம் தீட்டப் பெற்ற கைவண்ணக் கவின் புனைந்த பல தொங்குச் சுருள்கள் சீன வீடுகளை அழகு செய்தன என அறிகிறோம். இத்தகைய தொங்குச் சுருள்களே மேலை நாட்டு வீடுகளில் முதலில் தொங்கும் நிலையில் பொருத்தப் பெற்று, பின் சுவர்களில் ஒட்டப் பெற்றிருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு.

சீன அச்சின் தோற்றமும் வளர்ச்சியும்

காகிதத்தாற் செய்யப்பெற்ற நூல்கள் எளிமையில் பெறக் கூடியனவாயும் எடுத்துச் செல்லத் தக்கதனவாகவும் அமைந்தபோதிலும், அச்சுக் கலையில் தோற்ற நாள்வரை பல படிகள் பெறவும் பெருவாரியாக வழங்கவும் வசதி இல்லாமற் போயிற்று. சீனாவில் முதல் நூல் யாரால் எக்காலத்தில் அச்சிடப் பெற்றதென்பது உறுதியாகப் பெறக் கூடவில்லை. இக் கலையின் தொடக்கம் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். சமயத் தலைவர்களிடமுள்ள சமயத் துறையினை விளக்கும் தூய சமயநூல் படிகளின் தேவை கருதி, அச் சமயநெறி வளர்த்த மெய்யன்பர்கள் பெருமுயற்சியினாலும், பொதுவாகப் பலர் கூட்டு உழைப்பாலுமே இக் கலை தொடக்கத்தில் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சீன நாட்டில் படிஎடுக்கும் அச்சுக் கலைத்திறன் தோற்றத்துக்குமுன் நீண்ட வரலாறே உள்ளது. தொடக்கத்தில் களிமண்ணிலும் பின் காகிதத்திலும் இலச்சினைகொண்டு முத்திரை இடப்பெற்றமையும் துணியிலும் தாளிலும் பல்வேறு வேலைப்பாட்டு இயல்பினைப் பதித்துப் படி எடுத்தமையும், கல்வெட்டுகளிலிருந்து மை கொண்டுபடி எடுத்தமையும் அந்த நீண்ட வரலாற்றின் கூறுகளாகும். இவையனைத்தும் பின் மர அச்சுப் பயன்படுத்தப் பெற்றமைக்கு வழி வகுத்தன என்பது பொருந்தும்.

கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமே சீனாவில் முதன்முதல் அச்சுத் தொடங்கிய பழங்காலமெனக் கொள்ள இடமுண்டு. கொரியாவில் 1965ல் கண்டுபிடிக்கப்பெற்ற, கி.பி. 751க்கு முன் அச்சிடப் பெற்ற சீன மொழியிலுள்ள புத்த சமய மறைமொழியும் அதற்குமுன்பே அறியப்பெற்று, சுமார் கி.பி. 770ல் ஜப்பான் நாட்டில் சீன மொழியில் அச்சிடப் பெற்ற மறைமொழியும் அச்சுக் கலை அக்காலத்திலேயே தெளிவு பெற்றதாகவும் பரவி நின்ற கலையாகவும் விளங்கியதென்பதைக் காட்டுகின்றன. இவ் வாசகங்கள் அச்சிடப்பெற்ற காலத்துக்கு நெடுநாட்களுக்கு முன்பே கொரியாவும் ஜப்பானும் சீனப் பண்பாட்டின் செல்வாக்கிற்கு உட்பட்டமை உண்மையாதலால் இவ்வச்சுக் கலைத் திறன் சீன நாட்டிலிருந்தே புகுத்தப்பெற்றது என்பதில் ஐயமில்லை.

அக் காலத்துக்கு ஒத்ததான அச்சடித்த பொருள்கள் சீனத்தில் கிடைக்கவில்லை யாயினும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டின் அச்சுப் படிவங்களின் மாதிரிகள் கண்டு பிடிக்கப்பெற்று கி.பி. 848ல் அச்சிடப்பெற்றுத் தாள் சுருளில் உள்ள புகழ்பெற்றவை இன்றளவும் காப்பாற்றப் பெறுகின்றன. ‘வைரச் சூத்திரம்’ (Dimand formula) என்னும் முழுநூல், 877, 882 ஆம் ஆண்டுகளின் நாள் காட்டி (Calender), 947-983ல் வெளியான பல புத்தர் படங்களைக் கொண்ட தனித்தாள்கள், 957, 973ல் அச்சாகிய தோத்திரப் பாடல்களின் இரு பதிப்புக்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். இந்தப் பழைய அச்சுக்களின் மாதிரி அனைத்தும் புத்த சமயத் தொடர்புடையவையே. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ‘கன்பூஷியஸ்’ சமயமுறை பற்றிய நூல்கள் அச்சிடப் படவில்லை. அக் காலத்தொடு அரசியல் ஆணையர், தனியார், சமயத்தார் வணிகர் ஆகியோர் முயற்சியினால் இவ்வச்சுக்கலை தத்தம் தேவைக்கெனக் கொள்ளப்பெற்றுச் செம்மை செய்யப்பெற்று வளர்ச்சியுற்றது. ஐரோப்பிய நாட்டில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் அச்சிட்ட நூல்களோடு ஒப்பு நோக்கும்பொழுது பதினோராம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை சீனத்து அச்சுப் படிகள், சிறந்த தாள், மை, எழுத்தமைப்பு, படங்கள், கை வண்ணத்திறன் போன்றவற்றிலும் வேறு சில சிறந்த தன்மைகளிலும் போற்றத் தக்கனவாக உள்ளன.

அச்சுக்கான மரக்கட்டைகள் அனைத்தும் மென்மையும் ஒரே தன்மையும் அமைப்பும் கருதி இலை உதிர்மரங்களாகிய பேரி, இலந்தை, போன்றவற்றிலிருந்தும் சில சமயம் ‘ஆப்பில்’ பழத்திலிருந்தும் கொள்ளப்பெற்றன. எழுதப்பெற்ற மெல்லிய தாளினை, தலைகீழாகத் திருப்பிக் கூழ்ப்பசையினால் (கஞ்சியினால்), அம் மரக்கட்டைகளில் ஒட்டுவர். அக் கூழ்ப் பசை காய்ந்த பிறகு தாளின்பின் பக்கம் மெல்லச் சீவி எடுக்கப்பெற மெல்லிய அந்த எழுத்து வடிவங்கள் அம் மரக் கட்டைகளில் தலை கீழாகத் தெரியுமாறு அமையும். பின் சறுக்கு சட்டக் கருவி, குந்தாலி, உளி முதலியவற்றால் அவ்வெழுத்துக்களைச் சுற்றியுள்ள தேவையற்ற மரப்பகுதிகளை வெட்டி எடுப்பர். இவ்வாறு மர அச்சுக்கட்டை தயாரானதும் ஒரு மயிர்த் தூரிகையினால் அதன் மேல் மை பூசுவர். பிறகு ஒரு தாளை அந்த மையிட்ட மர அச்சின் மேல் வைத்து, பின்புறத்தைத் தூரிகையினால் மெல்ல வருடுவர். பின் அத் தாள் அச்சிட்ட தாளாகும். இவ்வாறு இருபுறம் அச்சிட்ட தாள் 1500 அல்லது 2000 வரை திறனுடை அச்சடிப்பர் ஒருநாளில் அச்சிட்டார் எனச் சொல்லப் பெறுகின்றது.

இத்தகைய சீன அச்சுக்கலை. பதினோறாம் நூற்றாண்டில் அசையும் தனி அச்சு எழுத்து புகுத்திய போதும் பதினான்காம் நூற்றாண்டில் பலவண்ண அச்சு நுழைந்தபோதும் மேலும் வளர்ச்சியுற்றது. அக்காலத்தில் ஆவணம் ஒன்றினைக் கொண்டு, பீ செங் (Be sheng) என்ற தொழிலாளி ஒருவரால் கி.பி. 1041-1048 ஒட்டி, மண்ணால் செய்யப்பெற்ற அச்செழுத்துப் பெட்டி பயன்படுத்தப் பெற்றதென அறிகிறோம். அவன் நல்ல மெல்லிய களிமண்ணால் எழுத்துக்களைச் செய்து, நெருப்பில் சுட்டு உருவாக்கினான் என அறிகிறோம். அவ்வெழுத்துக்கள் தேவைக்கேற்ப, ஒரு தகட்டின் மேல் நீரில் கரையாத மரப்பிசின், மெழுகு ஆகியவற்றால் ஒட்டிப் பொறிக்கப்பெறும். பின் அவை சரிசமனாக அமையுமாறு தட்டையான பலகை அவ்வெழுத்துக்களின் மேல் வைத்து அழுத்தப்பெறும். அச்சுப்பணி விரைந்து செயப்பெறுவகையில், பல தகடுகள் பயன்படுத்தப் பெற்றன. பிற்காலத்தில் இத்தகைய (தனியே பிரித்து வைக்கக்கூடிய) எழுத்துக்கள் மேலும் வளர்ச்சியுற்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மரத்தோடு பிற பொருள்களும் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பதினாறாம் நூற்றாண்டில் வெண்கலமும் பயன்படுத்தப்பெற்றன. மரம், வெண்கலம், வெள்ளீயம், ஈயம், மண் இவற்றாலாகிய அச்செழுத்துக்கள் பின்வந்த நூற்றாண்டுகளில் அடிக்கடியும் இடைவிட்டும் பயன்படுத்தப்பெற்றன.

1340ஆம் ஆண்டிலேயே ஒரு வண்ணத்துக்கு மேற்பட்ட வண்ணங்கள் அச்சிடப்பெற்றமை அறிகிறோம். இக்கலை பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலகை ஏடுகளையும் மாதிரித்தாள்களையும் பல வண்ணங்களில் அச்சிட்டபோது மேலும் வளர்ச்சியுற்றது. இது, ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு தனி அச்சுக்கூட்டினை அமைத்து, ஒன்றன்பின் ஒன்றாகத் தாளில் அச்சிடப்பெற்றதாகும். நூற்படங்கள், நாட்டுப் படங்கள், மாதிரித் தாள்கள், குறியிடு உரையோடு பொருந்திய நூல்கள் அச்சிடுவதற்கெனவே தனித்த வகையில் இம்முறை பயன்பட்டது.

சீன அச்சு வளர்ச்சியில் தனி அச்சு ஒவ்வொரு சமயம் பயன் படுத்தப்பெற்ற போதிலும், தொடர்ந்து காலமெல்லாம் மர அச்சினையே பெரிதும் பயன்படுத்தியமையை அறிகிறோம். சீனமொழியின் தனி எழுத்தமைப்பில் சொல்லாக்கப் பெறுகின்றமையின், இம்முறை எளிமையாகவும் சிக்கனமாவும் அமைந்தது. தேவையான எண்ணிக்கை அளவில் தாள்கள் அச்சிட்டதும், அம் மரக்கட்டைகளைப் பத்திரப்படுத்தி வைத்து, மறுபடியும் வேண்டும்போது, தேவையான படிகள் அச்சிடப் பயன்படுத்திக் கொண்டனர். பெருநூல்கள் அதிக அளவிலே அச்சிட நேர்ந்த காலத்திலேயே பிரித்துப்போடும் தனி எழுத்துக்கள் பயன்படுத்தப்பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, இந்த மரக்கட்டை அச்சு, பழமையான தனியச்சு இரண்டும் கல்லச்சுக்கலை, வார்ப்பெழுத்து அச்சுக்கலை போன்ற பிற இயந்திர அச்சுக்கலைகளினால் மாற்றம்பெறலாயின.


உலகெங்கும் தாளும் அச்சும் வளர்ந்த வகை

காகிதம் கண்டுபிடிக்கப்பட்டபின், அது சீனாவில் பெரும் புழக்கத்தில் இருந்தது மட்டுமன்றி, உலகெங்கணும் நாற்புறமும் பரவலாயிற்று. கீழ்த்திசை நோக்கிக் கொரியாவிற்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிலும் ஜப்பானில் ஐந்தாம் நூற்றாண்டிலும் பரவிச் சென்றது. தெற்கு நோக்கி இந்தோ சைனாவிற்கு மூன்றாம் நூற்றாண்டிலும் இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பும் சென்று பரவிற்று. மேற்கு நோக்கி சீனத்துருக்கித்தானத்திற்கு மூன்றாம் நூற்றாண்டிலும் மேற்கு ஆசியாவிற்கு எட்டாம் நூற்றாண்டிலும் ஆப்பிரிக்காவிற்குப் பத்தாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவிற்குப் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் அமெரிக்காவிற்குப் பதினாறாம் நூற்றாண்டிலும் சென்று பரவிற்று. எட்டாம் நூற்றாண்டில் அரபியர்களால் காகிதம் செய்யும் திறனறிந்த சிலர் கைது செய்யப் பெற்றவரை, இக்காகிதம் செய்யும் திறனைச் சீனர்கள் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்தனர் என்று பரவலாகச் சொல்லப் பெறுகின்றது. அக் காகிதம் செய்தொழில் கைவரப்பெற்ற உடனேயே, சீனாவின் அண்டைநாடுகள் அச் சீனப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்ள, நுழைந்து பரந்தமையினால், அக்கூற்று உண்மையாகாது. மேலைநாடுகளுக்கு அந்தக் காகிதம் செய்யும் கலை பரவாததற்குக் காரணம் சீனர்கள் மறைத்து வைத்தார்கள் என்று கொள்வதைக் காட்டிலும், மேலை நாடுகள் நில அலைப்பு முறையிலும் பண்பாட்டு முறையிலும் சீன நாட்டொடு தொடர்பு கொள்ளா வகையில் தனித்திருந்ததே காரணம் எனக் கொள்ளவேண்டும்.

சீனப் பண்பாடு கிழக்கு நோக்கிப் பரவத் தொடங்குகையில் கொரிய மக்கள் சீன நூல்களை வாங்கிப் பெற்றதோடு, நான்காம் நூற்றாண்டிலேயே சீன எழுத்துக்களையும் கடன் வாங்கித், தமதாக்கிக் கொண்டனர். ஜப்பானிய இளவரசருக்குப் பயிற்றாசிரியராக ஒரு கொரியப் புலவர் அழைக்கப்பெற்ற காலை, அந்த ஐந்தாம் நூற்றாண்டில் கொரியாவழி, ஜப்பானிலும் சீன நூல்கள் அறிமுகப் படுத்தப்பெற்றன. எனினும் கி.பி. 610-ல் ஒரு கொரியத் துறவி சீன நாட்டில் மை, காகிதம் ஆகியவற்றைச் செய்யும் திறனைக் கற்றுக்கொண்டு, ஜப்பான் நாட்டு அரசவையில் அவற்றை விளக்கும் வரையில் தாள் செய்யும் கலை ஜப்பானில் பரவவில்லை. இந்த நாள்தொட்டு பல நூற்றுக்கணக்கான சமயப் போதகர்களும் மாணவர்களும் கொரிய ஜப்பானிய நாடுகளிலிருந்து அக்கலையைக் கற்று நூல்களைப் பெறச் சீன நாடு சென்றனர். அவர் தம் நாடு திரும்பி வந்தபின் அச் சீன நாட்டு அச்சுக்கலை முறையினைத் தத்தம் நாட்டில் பயன்படுத்தினர் எனலாம்.

காகிதம் செய்யும் கலை தெற்கு நோக்கிச் சென்ற காலம் திட்டமாக வரையறுக்கப் பெறாவிடினும், அது மிகப் பழங்காலத்திலேயே சென்றிருக்க வேண்டும் என்பது தேற்றம். மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இந்தோசீனாவில் உள்ள சிறந்த மூலப்பொருள்களால் செய்யப்பெற்ற காகிதம் சீன அரசவைக்கு அன்பளிப்பாக (திறையாக) அனுப்பப்பெற்றது. சீனர்களிடமிருந்தே இந்தோசீனா மக்கள் இக் கலைத் திறனைக் கற்றார்கள் எனக் கொள்ளலாம். இன்றும் இந்தோசீனாவில் காகிதம் செய்யப் பயன்படு முறை, ஆசியாவின் பிறநாடு முறைகளிலும் சீன நாட்டு முறையோடு பொருத்தியிருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டிலிருந்தே கன்பூசியம், புத்தம், தாவ்நெறி சமய இலக்கியங்கள் மருத்துவநூல்கள் நாவல்கள் உள்ளிட்ட பல சீன இலக்கியங்களை, இந்தோசீனா அச்சிடுவகையில், ஏற்றுக் கொண்டுள்ளது. சீன மொழியிலும் சீனம், வைட்நாமிய மொழி ஆகிய இருமொழிக் கலப்பிலும் பல நூல்கள் பல நூற்றாண்டுகளாகவே மர அச்சு, தனி அச்சு, வண்ண அச்சு முதலியவற்றால் சீன நாட்டில் அச்சிடப்பெற்றன.

ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே காகிதம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப் பெற்றது. கி.பி. 671-694-ல் இந்தியாவிற்கு வந்த சீனத் துறவியாகிய ‘ஐ-சிங்’ (I-ching) என்பார் தம் சீன வடமொழி அகராதியில் காகிதத்துக்குரிய சீனச் சொல்லுக்குப் பொருளாக வடமொழியில் ‘காகளி’ என்ற சொல்லைக் குறித்திருக்கிறார். மிகப் பழங்காலத் தொட்டு, இந்தியாவின் தூய பழ மறைகள் மனப்பாடம் செய்யப்பெற்றும் வாய் மொழியாகப் பரிமாற்றம் பெற்று வந்தமையின், அங்குப் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப்பின் முகமதியர் ஆட்சிக்காலம்வரையில், காகிதம் நன்கு பரவவில்லைபோலும். அச்சுக்கலை இந்தியாவிற்கு இன்னும் காலம் தாழ்த்தே சென்றது.

தாள் செய்யும் தொழிலறிந்த இருவர் கைதிகளாக அரபு நாட்டிற்குக் கொண்டு செல்லப்பெற்ற பிறகு, அவர்கள்வழி கி.பி. 751-ல் சாமல்கண்டில் இக் காகிதம் செய்யும் தொழில் தெரியலாயிற்று. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப்பின் பாக்தாத்துக்குச் சில சீனக் காகித உற்பத்தியாளர் கொண்டுவரப்பெற அவர்கள்வழி இரண்டாவது காகிதத் தொழிற்சாலை பாக்தாத்தில் தொடங்கப்பெற்றது. இக் காலம் முதல் தமாஸ்கஸ் திரிபோலி ஆகிய நகரங்களில் காகிதத் தொழில் தொடங்கப்பெற்றதோடு, ஏமன், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளிலும் இத் தொழில் பரவலாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இக் காகிதம் செய்யும் தொழில் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதற்குமுன் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் அராபியர் இத் தொழிலைத் தம் முழு உரிமையில் கொண்டிருந்தனர்.

‘இபேரியன்’ (Iberian) தீபகற்பத்தை மூர்ஸ் (Moors) வெற்றிகொண்ட பிறகு அவர்கள் இக்கலையை ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டுவந்து, கி. பி. 150 ‘சாடிவா’ (x‘ativa) வில் காகிதத் தொழிற்சாலை அமைத்தனர். அங்கே காகிதத்தை மென்பதமாக்கிக் கூழாக்கும் ஓர் ஆலையும் செயல்பெற்றிருந்தது. மத்தியதரைக் கடல் வழியாக பாலஸ்தீனம் அல்லது எகிப்து நாட்டிலிருந்து சிசிலித்தீவின் வழி இத்தாலியா நாட்டிற்கு இக் காகிதம் செய்யும் தொழில் வந்திருக்கலாம். இத்தாலிநாட்டில் நகர்களான பாபிரியானா (Babriyana) போலோக்னா (Bologra) ஜினோவா (Genova) ஆகியவற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பிரான்சு ஜர்மனி நாடுகளில் பல நகரங்களில் பதினான்காம் நூற்றாண்டிலும் பல காகித ஆலைகள் தொழில் படத் தொடங்கின. 1390-ல் நூரம்பக்கில் (Nuremberg) காகிதச் சாலை கட்டிய புகழ்வாய்ந்த தாள் தயாரிப்பாளரான உல்மான்ஸ்டாமர் (Ulma stramar) என்பவர் சீனநாட்டில் உபயோகித்த மை போன்றதாகிய கருவிகளையும் நீர் குழம்பாக்கி வடிகட்டும் முறை உள்பட பல முறைகளையும் பயன்படுத்தினார். நெதர்லேண்ட் (Netherland) சுவிஸர்லேண்டு (Swizerland) இங்கிலாந்து நாடுகளில் பதினைந்தாம் நூற்றாண்டிலும் புது உலகமாகிய அமெரிக்காவில் பதினாறாம் நூற்றாண்டிலும் இக்காகிதம் செப்யும் தொழில் தொடங்கப்பெற்றது. அமெரிக்கா நாட்டில் மெக்சிகோவில் (Mexico) கி. பி. 1580-லும் பிற குடியேற்ற நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலும் இத்தொழில் இடம்பெற்றது.

நீண்ட பதினைந்து நூற்றாண்டின் நெடும் பயணவழி இக்காகிதம் (தொழில்) சீனநாட்டிலிருந்து உலகில் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றது. இன்றைய ஐரோப்பிய அச்சுக்கலை சீன அச்சுக்கலையின் செல்வாக்கால் (திறமையால்) வளர்ந்தது என்ற கொள்கை ஆய்வின் பாற்பட்டதேனும், சீன அச்சுக்கலையும் சீனத்தில் அச்சிடப்பெற்ற பல பொருள்களும் ஐரோப்பாவில் முதல் அச்சுப்பணி தொடங்குவதற்கு முன்பே நன்கு அறிமுகமாகி இருந்தன, சீனாவிலேயே காகிதம் தோன்றியதென்பதும் அதையே பிற நாடுகள் கடனாகப் பெற்றன என்பதும் உறுதியான மறைக்கமுடியா உண்மை. காகிதம் செய்யும் திறன் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பே நிறை வளர்ச்சி பெற்றிருந்தமையின் தன் கண்டுபிடிப்பின் திறன் முற்றிய நிலையிலேயே, சீனா அதை உலகுக்கு வழங்கியது எனக் கொள்ளப் பொருந்துவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/018-026&oldid=1135838" இலிருந்து மீள்விக்கப்பட்டது