4. இலக்கிய நெறி


19. வள்ளுவர் வகுத்த அரசு

ள்ளுவர் உலக அறிஞர்; அவர் வகுத்த அறநெறியும் சமுதாய அமைப்பும் எந் நாட்டிற்கும் எக்காலத்துக்கும் பொருந்தியவை. அவர் எழுதிவைத்த 1330 குறட்பாக்களைப் பொருள் கருதி அறம், பொருள், இன்பம் எனப் பாகுபடுத்தி, 133 அதிகாரங்களாக்கி என்றென்றும் வாழ வைத்தனர் அறிஞர். சிலர் வள்ளுவரே அவ்வாறு பகுத்தனர் என்பர். ஆயின் உரையாசிரியர் தம் குறள் வைப்புமுறையில் மாறுபாடு காண்பது பொருந்தாது. எப்படியாயினும் வள்ளுவர் குறள் வையத்தை வாழ வைக்கும் பொதுமன்ற என்பதை யாரும் மறுக்க இயலாது.

அறத்தாறு பொருள் ஈட்டி, இன்பம் துய்ப்பதே உயிரினத்தின் அடிப்படைப் பண்பாடு. இந்த அடிப்படையிலேயே குறள் அமைகின்றது. இவற்றுள் இடையில் உள்ள பொருட்பாலிலேயே ‘அரசு’ பற்றிய கருத்துக்கள் அமைகின்றன. ‘அரசு’ என்றதும் ‘வள்ளுவர்’ முடியாட்சியைப் பற்றித்தானே..சொல்லுகிறார்; எனவே இன்றைய குடியரசைப் பற்றி அவர் சொல்லவில்லையே’ எனச் சிலர் வாதிப்ப்ர். ஆனாலும் உற்று நோக்கின் அவர் வகுக்கும் அரசியல் நெறி என்றைக்கும் பொருந்துவதாக அமையும். இன்றைய ஆட்சி மக்களாட்சி; ஆளுகின்றவர் அமைச்சர்தாம். எனினும் இந்த ஆட்சி பற்றியோ ஆட்சி அடிப்படையில் அமைந்த பிற நிலைகள் பற்றியோ பேசும் போது ‘மக்களியல்’ என்றோ ‘அமைச்சியல்’ என்றோ நாம் கூறுகிறோமா? மாறாக ‘அரசியல்’ என்றே பேசுகிறோம். ஆக, ‘அரசியல்’ என்பது நாட்டாட்சிக்கு-அதன் அங்கங்களுக்கு-அவை பற்றிய அறநூலுக்கு-ஆக்கநூலுக்கு-பேச்சுக்கு-செயலுக்கு-பொதுப் பெயராக அமைகின்றது. வள்ளுவர் அரசியல் இத்தகையதே அங்கே ஆளுபவனை அரசு, அரசன், வேந்து, மன்னன் என்ற சொற்கள் குறிக்கின்றனவேனும் அவனும் பரம்பரையாக ஒரே மரபில் வருகின்றவன் எனக் குறிக்கவில்லையே. ஆளுகின்ற எவனையும் அச் சொல் குறிப்பதில் தவறில்லையே. இன்றைக்கும் இந்த நிலையில் மாநில ஆளுநர்களும் மத்திய குடியரசுத் தலைவரும் உள்ளனரே. அமைச்சர்கள் தவறு இழைப்பின் அவர்களைத் தள்ளி ஆளுநரும், குடியரசுத் தலைவரும் தாமே பொறுப்பேற்று நாட்டை நடத்திச் செல்லும் சட்டம் உள்ளதல்லவா! இது மட்டும் எப்படி மக்களாட்சி யாகலாம்? அன்று அமைச்சர் இருந்தனர்; அறவோர் இருந்தனர்; ஆணையர் இருந்தனர்; அருங்குடி மக்களும் இருந்தனர். அவர்களுக்கு மேலாக அரசன் இருந்தான். இன்று இருப்பதுபோலவே அன்றும் ஆட்சி இருந்தது எனக் கொள்ளல் தவறகாது. ‘ஜனாதிபதி’, ‘பிரசிடெண்டு’, ‘வைஸ்சிராய்’ ‘கவர்னர் ஜெனரல்’ ‘கவர்னர்’ என்று பல ஆட்சியாளர்கள் மக்கள் ஆட்சியால் நாடாளுவதைக் காண்கிறோம். இவர்கள் ஆட்சி எப்போதோ தேவைப்படும் என்றாலும் இவர்கள் என்றும் நிலைபெற்றவர்களாய் உள்ளமையைக் காண்கின்றோம். இதே நிலையில் அன்றும் மன்னர்கள் வாழ்ந்தனர் எனக்

ஓ.-10 கொள்ளல் பொருந்தும். இன்றைய நிலையினும் அன்று அவர்கட்கு அதிக அதிகாரங்கள் அளித்திருக்கலாம். இன்றும் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் எத்துணைச் சட்டங்கள் செய்யினும் அவை தலைவர் கையெழுத்தினைப் பெற்ற பிறகன்றோ நாட்டுச் சட்டமாக்கப் பெறுகின்றன. அவசரச் சட்டங்களும் அவருடைய கையொப்பத்தினைப் பெற்றே வெளிவர வேண்டுமல்லவா? ஆங்கில நாட்டு ‘அரசி’யின் நிலையும் நேபாள நாட்டு ‘மன்னர்’ நிலையும் எத்தகையன? அங்கெல்லாம் முடியாட்சிதான் நடைபெறுகிறதென்று யாரேனும் கூற முடியுமா? மக்கள் எண்ணத்துக்கு முன் மன்னவன் மண்டி இட்டே ஆகவேண்டும் என்ற உண்மையை எட்டாம் எட்வர்டு முடிதுறந்த வரலாறு நமக்குக் காட்டவில்லையா! எனவே இந்த வகைகளுள் ஒன்றினாலே அன்றைய அரசன் ஆட்சியைத் தக்கார் வழி காட்டச் சூழ்வார் கண்ணாக நின்று ஆண்டிருப்பான் என்று கொள்ளுவதே பொருந்தும். இந்த நிலையிலேயே அமைச்சர்களும், சூழ்வார்களும் கண்ணாக நின்று காட்டித் தெளிவிக்கத் தெளிந்த ஆணை செலுத்தும் மன்னனாக அன்று அவன் விளங்கினான். மேலும் அரசியலில் கூறும் பலவும் அனைவருக்கும் பொருந்துவனவே. உதாரணமாக இறை மாட்சிக்கு அடுத்த கல்வியையே எடுத்துக் கொள்வோம்.

கல்வி அரசியலில் வந்துள்ளமையின் மற்றைய அமைச்சர்களுக்கும் பிற குடிமக்களுக்கும் அக் கல்வி தேவை இல்லாதது என்று பொருள்படுமா? அது எவ்வாறு பொருந்தும்! இறை மாட்சியை அடுத்துக் கல்வியை வைத்திருப்பவர்கள். அந்த இறை கற்றவனாக இருப்ப தோடு, அவனை அந் நிலைக்கு உயர்த்துபவர்களும் கற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே வைத்திருப்பார்கள். நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் கற்றவர்களுக்கு, எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்தமை அறிவோம். நாடாளும் நல்ல தலைவர்கள் கற்க வேண்டிய கல்வியைக் கசடறக் கற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இல்லை. அத்தகைய கற்பன கற்றவரைத் தலைவராக்கும் கடமை நாட்டில் வாழ்ந்த கற்றவர்களுக்கே இருந்தது என்பது தேற்றம். எனவே தான் வள்ளுவர் கல்வி, கல்லாமை என்ற இரண்டு அதிகாரங்களில் கல்வியின் ஏற்றத்தையும் அதைக் கண்ணாகக் கொள்ளவேண்டிய இன்றியமையாமையினையும் விளக்குகிறார். அவ்வாறு கற்றவரே நாடாளும் மன்னரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் அம் மன்னரும் கற்றவர் குழுவைச் சேர்ந்தவராகவே இருக்கவேண்டிய நிலையையும் (among themselves) உணர்தல் வேண்டும். மன்னன் தன் மனம்போன போக்கிலே போக இயலாது என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் நன்கு விளக்குகிறார். பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும்” என்பார். அவன் கெடாத பரம்பரையில் வருபவனாயின், இவர்கள் துணையில்லாவிடின்-கற்றார் பெரியார் துணையில்லாவிடின்-கெடுவான் என்று கூறுவதன் பொருள் என்னை? அவ்வாறாய பெரியவர்கள் துணை இன்றேல் அவன் என்றும் தள்ளப்படுவான் என்பதுதானே? இதுதானே இன்றைய நாட்டு நிகழ்ச்சியும்.

அரசியலில் அறிவுடைமை என்ற அதிகாரம் அமைக்கப் பெற்றுள்ளது. அரசன் அறிவுடையனாயின் மற்வவர் அறிவற்றவர்களாவாரா? அதுமட்டுமின்றி அவ்வறிவின் திறத்தை அவர் காட்டும்போது அரசன் ‘குடிதழீஇ’ச் செல்லும் நிலையினை உணர்த்துகின்றாரன்றோ! வள்ளுவர்தம் அறிவென்பது, வெறும் தேர்வில் பெறும் வெற்றியைக் கணக்கிடும் இன்றைய உலகுக்குப் புரியாததாக இருக்கலாம். ஆனால் அவர் திட்டமாக மக்கள் வாழ்வினைத் தன் வாழ்வாக மதிப்பிடும் மன்னன் எப்படி இருக்கவேண்டும் என இந்த அதிகாரத்தால் நன்கு காட்டுகிறாரன்றோ! ‘உலகம் தழீஇய தொட்பம்’ என்பதன் கருத்தென்ன? அவன் ‘காட்டு ராஜ தர்பார்’ நடத்தும் நிலையில் வாழ முடியாதல்லவா! ‘எவ்வ துறைவது உலகம் உலகத்தோ டவ்வ துறைவதறிவு’ என்பது எதைக் காட்டுகிறது? உலகம் விரும்பும் நெறியில் செல்லவேண்டிய பண்பைத் தானே! அவ்வாறு செல்வது தானே மக்கள் ஆட்சி! வழிவழியாக வரும் மன்னனாயின் இத்தகைய அறிவு ஏன்? அவனை யார் என்ன செய்ய முடியும்? அவனுடைய பங்காளிகளோ மாற்றாரோ அவனை அழிக்கலாம்; ஆனால் மக்கள் அவன் வாக்கை மீற மாட்டார்களல்லவா! அதுதானே முடியாட்சி. இதையா வள்ளுவர் வற்புறுத்துகிறார்? மேலும், வழிவழியாக வரும் முடியாட்சி மன்னர் அனைவரும் அறிவுடையவராக இருக்கவேண்டும் என நியதி ஏது? இருக்கத்தான் முடியுமா? அவ்வாறு இல்லையானால் அவனை நீக்கி வேறு ஒருவரை மன்னனாக்கிக் கொள்ள வழிதான் உண்டா? எனவே வள்ளுவர் இந்த அறிவுடைமையால் ‘அறிவுடை யோனாறு அரசும் செல்லும்’ என்ற உண்மையை வற்புறுத்தி, மக்கள் தம்மை ஆளும் தலைவர்களைத்-தாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களை அறிவு உடையவர்களாகவே இருக்கச் செய்தல் வேண்டும் என்பதையே விளக்குகிறார்.

இன்னும் அரசியலில் வருகின்ற பல அதிகாரங்களும் இத்தகையனவே. ‘குற்றங் கடிதல்,’ பெரியாரைத் துணைக் கோடல்’ முதலிய அதிகாரங்களில் இறை, மன்னன், ஆள்வார் என்ற சொற்கள் வருகின்றனவேனும் அவை அனைத்தும் வழிவழியாக வரும் ஆள்வோரைக் குறிக்காதன என்பதை உணர்தல் வேண்டும். அப்படிக் குறிப்பின், உலகத்தால் ஒன்றும் செய்ய முடியாத அப் பரம்பரை மன்னர்களை இவ்வாறெல்லாம் இருக்க வற்புறுத்தல் தேவை இல்லை என்பதை வள்ளுவர் உணராரா? மேலும் மன்னன், இறை முதலியவற்றிற்கு உள்ள பல்வேறு பொருள்களும் நமக்கு வழிகாட்டுகின்றனவே! ‘மன்னன்’ என்ற சொல், எப்பொருட்கும் இறைவன், அரசன், (சேனைத்) தலைவன், கணவன், ஆடவன், (32-48 வயதுக்கு உட்பட்டவன்) உத்திரட்டாதி நாள் என்று பல பொருள்களில் வருகின்றது. அப்படியே ‘இறை’ என்ற சொல்லும் உயரம், தலை, கடவுள், தலைமை, நடுவு நிலைமை (கண்ணோடாது இறை புரிந்து - குறள் 541), தமையன், கணவன் எனப் பல பொருளில் வருகின்றது. ‘அரசு’ என்பதும் அரசன், இராச்சியம், அரசாட்சி, தலைமை, வேளாளர் பட்டப் பெயர் போன்ற பல பொருள்களில் வருகின்றது. இவற்றையெல்லாம் தொகுத்துக் காணின் நாட்டை ஆள, அக் காலத்தில் மக்கள் நல்ல அறிவுடையவராய், மக்களை ஒத்து நோக்கி நடப்பவராய், மக்கள் வாழ்வே தம் வாழ்வாக உள்ளவராய்க் குடும்பத் தலைவனைப் போன்றே நாட்டையே நல்ல குடும்பமாக நினைத்து வழி காட்டுபவராய், பெரியார் தம் துணைக்கொண்டு அவர் வழி கேட்டு இடித்துரைத்தால் தம் தவறுகளைத் திருத்திக் கொள்பவராய், குறித்த வயதின் எல்லைக்கு உட்பட்டவராய், நடுவு நிலைமை தவறாது, இன்னார் இனியார் என்னாது நேரிய அறம் உரைப்பவராய், நாட்டு வாழ்வின் அடிப்படை உழவே என்பதை உணர்ந்து அவ்வுழவின் பயனை நன்கு விளைப்பவராய் உள்ள நல்லவர்களைத் தலைவர்களாக-மன்னர்களாக-அரசர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் அவர்களும் ‘குடிதழீஇக் கோலோச்சினார்கள்’ என்பதும் வள்ளுவர் வகுத்த அரசின் வழியே காணும் உண்மைகளாகும் என்பது தேற்றம். அத்தகைய மரபு பிற்காலத்திலும் இருந்ததென்பதைச் சோழர் காலத்திய குடவோலை முறை நமக்கு வற்புறுத்துகின்றது. மேலும் சங்ககாலத்திலேயே குடவோலை முறை இருந்தது என்ற உண்மையை அகநானூறு, சான்றுகாட்டி உவமை முகத்தான் விளக்குகின்றதன்றோ!

கயிறுபிணி குழீஇ
ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும்
ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர
நல்லமர்.கடந்த
தருக ணாளர்
குடர்தரீஇ தெறுவர
செஞ்செவி எருவை
அஞ்சுவர இகுக்கும்
கல்.அதர் கவலை’

(அகம் 77)

என்ற அகம் அக் காலக் குடஓலை முறையை நமக்கு உணர்த்தவில்லையா! எனவே வள்ளுவர் காலத்தில் ஆளும் மக்களைத் தேர்ந்தெடுப்பது குடவோலை முறை என்பதும் தெரிகின்றதன்றோ?

மன்னனுக்குத் துணையாகும் பெரியாரைப் பற்றியும் அவர் வழிமொழி நடக்காத வேந்து கெடுவதையும் வள்ளுவர் நன்கு விளக்குகிறார். அதில் மன்னனை ஒருமையிலேயே குறிக்கின்றார். எனவே அவன் அந் நாட்டுத் தலைவனாக-‘இராட்டிரபதியாக’ வேண்டும். நல்ல அறிஞர் அமைச்சர் தொடர்பை அவன் விடுவதால் உண்டாகும் தீமையை அவர் விளக்கிக் காட்டியுள்ளார். பிற அதிகாரங்களி லெல்லாம் நேராக மன்னனுக்கு உணர்த்தும் அறவுரைகள் போன்றல்லாது பொது நெறியிலேயே அனைத்தையும் காட்டுகின்றார். அரசியல் இருபத்தைந்து அதிகாரங்களில் நாட்டில் நல்ல அரசு நிலவ வேண்டியதற்கு அடிப்படையான எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகின்றார். செங்கோன்மை என்ற அதிகாரத்திலே மன்னவனைத் தனியாகக்காட்டுகின்றார். அதில் அரசன் உயிர்களோடு பிணைந்திருக்க வேண்டிய நிலையினையும் குடிகள் அரசனிடம் காட்டும் பரிவும் பற்றுமே அவன் பகைவரிடமிருந்து நீங்கிக் காக்கும் திறனையும், நாட்டில் சட்டமும் நீதியும் நேர்மையும் நிலைத்தாலன்றி அவன் வாழமுடியா வகையினையும் விளக்கிக் காட்டி, அவனுடைய நாட்டில் இயற்கை நலம் கெடாத வளம் கொழிக்கும் எனக் காட்டுகிறார். ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் மன்னவன் குடிதழீஇ அக்குடிகளைப் புரந்து சிறக்கவேண்டும் என்று ‘செங்கோன்மை’ என்ற அதிகாரத்தில் விளக்கும் முறையிலேயே அச் செங்கோன்மைக்கும் குடிகளுக்கும் உரிய தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார். இதே கருத்தைத் தான் பின் கொடுங்கோன்மையிலும், மக்களைச் சூழாது செய்யும் அரசு கெடுவதோடு குடிகளையும் கெடுக்கும் என்றும், கோலோடு நின்றான் கொடுமை பெரிது என்றும் மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுவராயின் மன்னன் வாழமுடியாது என்றும், அத்தகைய மக்கள் நலம் பேணா முதல்வன் நாட்டில் உடையவரும் இல்லாதவராவர் என்றும், இயற்கையும் நிலைகெடும் என்றும் சொல்லுகிறார். எனவே மன்னன் வாழ்விற்கும் மாநிலச் செழிப்பிற்கும் மற்றுள்ள எல்லா வளங்களுக்கும் அடிப்படை குடிமக்களே என்று உணர்தல் வேண்டும்.

தலைவராவர் தன்மைகளை மேலும் பல அதிகாரத்தில் வள்ளுவர் விளக்குகிறார். அவ் விடங்களிலெல்லாம் ஒருமையே எடுத்தாளப் பெறுகின்றது. பின்வரும் அமைச்சர் பலராயினும் மக்கள் கோடிக் கணக்கில் இருப்பினும் தலைவன் ஒருவன்தானே இருக்க முடியும். எனவே இந்த உண்மையையும் அதனால் காட்டுகின்றார். வழிவழியாக வரும் மன்னர் பரம்பரையிலேயும் தகாதவர் ஆட்சிக்கு வந்தால், அவரை விலக்கித் தக்காரை ஆட்சி பீடத்தில் அமரச் செய்த சிறப்பு அன்றைய கரிகாலன் வரலாற்றால் அறிகின்றோம். ‘ஐம்பெருங் குழு’வே ஆட்சியில் முக்கிய இடம் வகித்தது என்ற உண்மையும் வெளிப்படை. எனவே வள்ளுவர் அரசியலில் முடியாட்சியைக் கூறுகின்றார் எனக் கூறினாலும், ஆய்ந்து நோக்கின் அவர் முடியாட்சி குடியாட்சியுள் அடங்கும் என்பதையும் அக் குடியாட்சியே சிறந்தது என்பதையும் விளக்குகிறார் எனத்தெளிதல் வேண்டும். விரிப்பிற் பெருகும். வள்ளுவர் காட்டும் குடியாட்சி வளர்வதாக!
–1969
"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/020-026&oldid=1135843" இலிருந்து மீள்விக்கப்பட்டது