ஓங்குக உலகம்/022-026
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கண்ணன் சொன்னதாகப் பகவத்கீதையில் காண்கிறோம். ஆம்! மார்கழி சிறந்த மாதமாகும். உள்மாசும் புறத்தூசும் போக்கும் திங்கள் இதுவாகும். பொங்கலுக்கு முன் மார்கழி முழுவதும் வீடுவாயில்களையும் பிறவிடங்களையும் தூய்மைப்படுத்தி, போகியன்றைக்குத் தேவையற்ற அனைத்தையும் நெருப்பிலிட்டுப் பொசுக்குவோம். அதே வேளையில் அவை தீயினில் தூசாவது போலவே, நம் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் நாளும் இதுவாகும் என அறிகிறோம்.
மார்கழி விடியலில் எழுந்து, தூயநன்னீரில் துதைந்து துதைந்து ஆடி, இறைவனை ஆடியும் பாடியும் போற்றுவது நம் மரபாகும். இதைப் ‘பாவை நோன்பு’ என்பர் மணிவாசகர். திருவெம்பாவையும் ஆண்டாள் திருப்பாவையும் மார்கழி முழுதும் விடியலில் பாடப் பெறுவன; பயன் தருவன.
பாவை நோன்பினைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் ஆண்டாள் காட்டுவதை மட்டும் இங்கே காட்ட நினைக்கிறேன். உலகில்-சிறப்பாகத் தமிழ் நாட்டில்-நடைபெறும் எல்லா விழாக்களும் நாடும் நாணிலமும் வாழக் கொண்டாடப் பெறுவனவேயாம். ‘பசியும், பிணியும் பகையும் நீங்கி, வசியும்வளனும் சுரப்பதற்கே விழாக்கள் என்பதை நம் பண்டைய இலக்கியங்கள் நன்கு விளக்குகின்றன. ஆண்டாளும் இந்த உண்மையினையே நமக்கு விளக்கி, வையம் வளம் பெறப் பாவை நோன்பினை மேற்கொள்ளப் பாவையரை அழைக்கின்றார்.
நோன்பு-விரதம் என்பன தன்னடக்கத்துக்கு அறிகுறி. சிலவற்றை நீக்க, தூய்மையாக-உள்ளும் புறமும் மாசற்றதாக அமையப் பயன்படுவன. இதை ஆண்டாள்,
‘வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாமுடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்’
என விளக்கிக் காட்டுகிறார். ஆம்! தூய நீரில் நம்மை மூழ்க வைக்கிறார். மார்கழி நீராட வைக்கிறார். ‘நம் பாவைக்கு’ என்று அவர் குறிப்பது நம் எல்லாரையும் உள்ளடக்கியே தான். சிலவற்றை விலக்கச் சொல்கிறார், செய்யாதனவற்றைச் செய்ய வேண்டாம் என்கிறார். கூடிய வரையில் சமூகத்தைக் கண்டு ஒல்லும் வகையால் உதவி செய்யச் சொல்கின்றார். மொத்தத்தில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழும் தியாக வாழ்வை மேற்கொள்ளச் செய்கிறார். அந்த நல்ல தூய நோன்பின் முடிவிலே உலகவாழ்விலே-மக்கள் வாழ்விலே-உயிர்கள் வாழ்விலே-இன்பம் பொங்குகிறது! எழில் பொங்குகிறது! யாவும் இனிமையுறுகின்றன. ஆண்டாளே, இந்த இன்பம் மலரும்-செல்வ வாழ்வும் மலரும்-என்பதை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறார்.
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்’
என்பது அவர்வாக்கு. ஆம்! பாவை நோன்பு மேற்கொண்டால் நாட்டில் நல்லமழை-மாதம் மும்மாரி பெய்யும். அடியொடு பெய்யாமல் காய்வதோ அன்றி அளவுக்கு மீறிப்பெய்து அழிப்பதோ அந்தப்பாவை நோன்பு பாடும்-நோற்கும் நாட்டில் இல்லை. அது மட்டுமன்று; நாட்டில் செந்நெல் அளவற்று விளையும். பால்வளம் பெருகும். எங்கும் பசியும் பிணியும் பகையும் நீங்கும். இன்னும் மக்கள் வாழ்விற்கு-உயிர் வாழ்விற்குத் தேவையான நலங்கள் யாவும் பெருகும்.
இன்று இவையெலாம் மாறுபட்டு நிற்கின்ற நிலையே நாம் பாவை நோன்பினைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றதன்றோ! சிந்தாதிரிப்பேட்டை கலியாணம் மகளிர்மேல் நிலைப்பள்ளியில் பயிலும் பெண்கள் அனைவரும் இக்குறை நீக்கும் வகையில் பாவை நோன்பினை மேற்கொள்ள வேண்டும். என்பது என் வேண்டுகோள். மார்கழி முற்றும் நோன்பிருந்து, அடுத்த தையில், நாடகவிழாக் கொண்டாடும் இப்பள்ளியின் நல்ல பெண்கள் வழி நாமும் நாடும் நானிலமும் நலம் பெறலாம் எனும் துணிபுடையேன்.