ஓடி வந்த பையன்/புனிதச் சிலுவை
2
புனிதச் சிலுவை
புன்னகை சிந்தப் பழகுகின்ற பாப்பாவைப் போன்று இளஞ்சூரியன் அப்போதுதான் பூவுலகைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை சொரியத் தொடங்கியிருந்தான்.
கீழ்வாசல், மிகுந்த அழகுடனும் நிறைந்த சுறுசுறுப்புடனும் விளங்கிக்கொண்டிருந்தது.
உமைபாலன் துவைத்து உலர்த்திய உடுப்புக்கள் துலாம்பரமாகப் பளிச்சிடவும், நெற்றியில் பூசப்பட்ட திருநீறு பக்திபூர்வமாக மின்னவும் நடந்து வந்து, நேற்று வரச்சொன்ன அந்த ஹோட்டலுக்குள் பிரவேசித்தான். அவன் தன்னையும் அறியாமல், கைகளைக் குவித்து வணங்க எத்தனம் செய்தான்.
ஆனால் என்ன ஏமாற்றம்!
கல்லாவில் தடிமனை மனிதர் ஒருவர் அல்லவோ வீற்றிருந்தார் ! ...
பின்வாங்கினான். உணவுக் கடையின் பெயரை மீண்டும் படித்தான். அட்டியில்லை; லக்ஷ்மி விலாஸ் ஹோட்டல்தான் !
சிறுவன் அறிந்ததுண்டு-கும்பிடு கொடுத்துத் தான் கும்பிடு வாங்கவேண்டும் என்பது!-ஆகவே, கும்பிட்டான். ஆனால், பாவம், அவன் பதிலுக்குக் கும்பிடு வாங்கவில்லை. நேற்று பார்த்த அந்த ஆள் எங்கே?’ என்று மனம் மறுகினான். இவர் இப்படி அழுத்தமாக இருக்கிறாரே? ...
ம் ... வாஸ்தவந்தான். நானோ வேலைக்கு வந்தவன். இவரோ முதலாளி. “பெரிய முதலாளி... பெரிய உடம்புள்ளவர் பெரியவர் இல்லையா, பின்னே ? ... அவரும் எனக்குச் சமதையாய் கும்பிட்டுவிட்டால், அப்பால், கும்பிடு என்கிறதற்கு அர்த்தம் இருக்காதே! ... வேடிக்கையான சிந்தனைகளை வினயமாகப் பின்னினான் அவன்.
கல்லா மனிதரை ஒரு முறை உன்னிப்பாக நோக்கினான் உமைபாலன். இரட்டை நாடியான உருவம். யானைக்குட்டியை-அதுவும் அவன் ட்ராயிங் வரைந்த யானைக்குட்டியை அதே சமயத்தில் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. திருநீற்றுப்பட்டைகளின் நடுவே சந்தனப் பொட்டு திகழ்ந்தது. உச்சியில் நாலந்து மயிரிழைகள். விசிறிக் காற்றில் அவை பறந்தன.
“ தம்பி, எங்கேருந்து வந்தே ? ’’ “ வடக்கே யிருந்துங்க ! - “ அடடே, வடக்கேயிருந்தா ? ...” “ ம்” “ சீனக்காரன் எப்படி இருக்கான்?” “அவன்தான் நம்ப மூஞ்சியிலே கரியைப்பூச நெனைச்சு, இப்ப தம் மூஞ்சியிலேயே கரியைப் பூசிக்கிட்டு, ஒட்டம் பிடிக்கத் தலைப்பட்டிட்டானே!... அந்தச் சீனுக்காரனுங்க பட்ட கஷ்டங்களை இப்ப நெனச்சாலும் எனக்கு ரொம்பக் குஷியாயிருக்குதுங்க!”
வெகு மிடுக்குடனும் கம்பீரத்துடனும் பேசினான். “நான் வடக்கே லடாக் பகுதியிலே இருந்த வரைக்கும் ஒரு சீனன் மூச்சுக் காட்டவேணுமே!... நம்ப மண்ணிலே ஒரு துளி எடுக்கிறதுக்கு அவன் யாருங்க? மேஜையில் ஓங்கிக் குத்தினன்.
இரண்டு பில்கள் அவனுக்குப் பயந்துகொண்டு ஒடினவோ? - அவனா விட்டுவிடுபவன் ?
“பலே பாண்டியா !” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் உமைபாலன்.
நேற்று கல்லாவில் காட்சியளித்த இளைஞன் நின்றன். முகத்தில் சிரிப்பு. கண்களிலே கனிவு. “ உன் மாதிரிச் சிறுவர்களைத்தான் நம் நேருஜி எப்போதுமே நேசிப்பார். நேருஜி இருக்கும்வரை இந்தச் சீனன் நம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டான், தம்பி ! ... உன்னுடைய தாய்நாட்டுப் பற்று ரொம்பவும் உயர்வு ! ..." என்று போற்றினான்.
பையனுக்குப் போன உயிர் திரும்பியது.
பிறகு, பெரியவருடன் அவ்விளைஞன் ஏதோ பேசினன். “ நீ சொன்னச் சரிடா கோபு!" என்று முடிவு வெளியிட்டார் அவர்.
கோபு குதூகலத்துடன் திரும்பினன். "தம்பி! உள்ளே வா !” என்று அழைத்துச் சென்றான். தம்பி, என்ற அச்சொல் அவனைப் புல்லரிக்கச் செய்தது.
இரு புறமும் அற்புதமாக அலங்காரம் செய்து போடப்பட்டிருந்த நாற்காலிகளும் அவற்றின் உச்சியில் அலங்காரம் செய்த வண்ணம் இருந்த சுவாமி படங்களும் சிறுவனின் பிஞ்சு மனத்தைக் கவரலாயின.
"தம்பி!”
உள்ளே எட்டிப் பார்த்தான்.
அது ஒரு கிட்டங்கி.
மூட்டை முட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. டின்கள் வேறு. வேறு சின்னப் பையன் ஒருவன் குந்தியபடி அரிசி அளந்துகொண்டிருந்தான். அவன் வேர்வையை வழித்துவிட்டுக் கொண்டு ஒயிலாகத் தன்னுடைய சட்டைக் காலரைத் துாக்கிவிட்டபடி, உமைபாலனே ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான்.
சிறுவர் பட்டாளத்துக்குப் பொழுது போக்குவதற்குக் கூட இன்னொரு புள்ளி கிடைத்துவிட்டது என்கிற மனுேபாவத்தில் விளைந்த சிரிப்புப் போலும்! ஆனாலும், அவனுக்கென்று இப்படி ஒரு கர்வமா?
உமைபாலன் நடந்தான்.
அடுத்த அறையில் சரக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
கோபு ஒரு போண்டாவை எடுத்து ஊதி அதை உமைபாலனிடம் நீட்டினான். உமைபாலன் ரொம்பவும் யோசித்தான்; பிறகு தயங்கினன். "எனக்கு உங்க அன்புதான் இப்ப வேணுமுங்க. என்னால உங்களுக்கு ஒரு பத்துக் காசு நஷ்டம் ஏற்பட எனக்கு மனசு வரலீங்க!” என்று நாசூக்காகச் சொன்னன்.
கோபு வியப்பில் விரிந்த விழிகளுடன் அவனையே இமை மூடாமல் பார்த்தான். ஏனோ, புராண புருஷர்கள் சின்னஞ் சிறார்களாக இருக்கையில் செய்து காட்டிய திருவிளையாடல்களின் நிழல்கள் அவன் உள்ளத் திரையில் ஒடிக் காண்பித்தன.
"தம்பி!”
"அண்ணா"
பாசத்தின் குரல்கள் தழுவின.
“உனக்கு ஊர்?”
“ராமநாதபுரம் சீமைங்க!”
“அப்பா அம்மா?”
“நான் அனாதையுங்க!”
“உனக்கு என்ன வேலை தெரியும்?”
"இன்ன வேலை தெரியும்னு சொல்றதுக்கு எனக்கு முன் அனுபவம் ஏதுமில்லிங்க. இப்பத் தான் முழுவருஷப் பரீட்சை எழுதினேன். ஒன்று விட்ட மாமாவோடே கொஞ்சம் மனத்தாங்கல். பிரிஞ்சு வந்திட்டேன். அதனாலே, எந்த வேலையையும் பெருமை சிறுமை பார்க்காமல் பார்க்க வேணுமிங்கிற நினைப்பு எனக்கு இருக்குதுங்க!”
'ஒவ்வொரு பேச்சையும் எவ்வளவு தூரம் சிந்தனை பண்ணிப் பேசுகிறான் இச்சிறுவன்!'கோபுவுக்கு அதிசயம் அடங்கவில்லை. "தம்பி! இப்போதைக்கு நீ எடுபிடி வேலை செய்துக்கிட்டு இரு. போகப் போக, பின்னடி வேற நல்லதா ஏற்பாடு செய்யிறேன்!”
“ரொம்பப் புண்ணியமுங்க!”
“சம்பளம் சாப்பாடு போட்டு அஞ்சு ரூபா தான் தரமுடியும்!”
“சரிங்க! எல்லாம் உங்க தயவுங்க!”
கோபு வாசலுக்கு விரைந்தான்.
உமைபாலன் அவனைப் பின்தொடர்ந்து திரும்பிய நேரத்தில், கிட்டங்கிப் பையன் விரல்களை இணைத்துத் தட்டி அழைத்தான். “அண்ணாச்சி புதுசு போல!" என்று மெல்லப் பேச்சைக் கொடுத்தான். அவன் கழுத்தில் சிலுவைச் சின்னம் அழகு காட்டிக் கிடந்தது.
உமைபாலன் ‘ம்’ கொட்டிவிட்டு, ரவை நேரமும் தாமதிக்காமல் தன்னுடைய கடமைகளைச் செய்யவேண்டிப் புறப்பட்டான்.
ஹாலில் ஒரு முடுக்கில் கிடந்த அழுக்குத் துணியை எடுத்துக்கொண்டு மேஜைகளைச் சுத்தம் செய்யலானான், உமைபாலன்.
வேலை முடிந்த கையுடன், அவனுக்குக் காலைச் சிற்றுண்டி கிடைத்தது. கலங்கி வந்த கண்களை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். இட்டிலிகளைச் சாப்பிட்டான். தொண்டையை அடைத்தது. சமாளித்துக்கொண்டான். தண்ணிர் குடித்தான். சாப்பிட்டு முடித்ததும், தன்னுடைய ட்ரவுசர்பையிலிருந்த அந்தச் செய்தித்தாளை மீண்டும் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்கிற துடிப்பு வலுவடைந்தது!