ஓ மனிதா/1. கரிச்சான்குருவி கேட்கிறது

ஓ,மனிதா!


1. கரிச்சான்குருவி கேட்கிறது

‘உண்மையே கடவுள்’ என்றார் காந்தி. அவருடைய மனமாற்றத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்த அரிச்சந்திரன் அதற்காகத் தன்னை மட்டுமல்ல; தன்னுடைய நலன்கள் அனைத்தையுமே தியாகம் செய்தான் கதையில்!

வாழ்க்கையில்?—அப்படி ஒருவன் இருந்தானா, இருந்தாலும் அந்தக் கதைப்படி அவன் வாழ்ந்தானா?— தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது—இன்று உங்களில் யாரும் யாரையும் உண்மை சொல்ல விடுவதில்லை.

ஏன்?—அதுவும் ஒரு கலை, ‘வாழ்க்கைக் கலை’ என்கிறீர்கள்!

தப்பித் தவறி உங்களில் யாராவது ஒருவன் உண்மை சொல்லிவிட்டால் என்ன நடக்கிறது?— “இங்கிதம் தெரியாதவன்”, “பண்பாடில்லாதவன்”, “பிழைக்கத் தெரியாதவன்”, “அசடு”– இப்படி எத்தனையோ பட்டங்களை அவன் ஏற்க வேண்டியிருக்கிறது.

சுருங்கச் சொன்னால் நீங்கள் கடைப்பிடிக்கும் நாகரிகமே பொய்க்குப் புதுப் புதுப் பெயர் சூட்டி மகிழ்வதுபோல் தோன்றுகிறது!

இருந்தாலும் இந்த நாட்டில் உண்மை போன்ற உபதேசங்கள் இன்று நேற்றல்ல; எத்தனையோ நாட்களாக எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகங்களாக செய்யப்பட்டு வருகின்றன. மனிதனும் அவற்றைச் செவிமடுத்தே வந்திருக்கின்றான்.

பலன்?—அந்த உபதேசங்களை விதம் விதமான புத்தகங்களாக வெளியிட்டும் உபதேச கர்த்தாக்களின் திரு உருவங்களைச் சிலைகளாக வடித்தும், வண்ணப் படங்களாக அச்சிட்டும் விற்று, அவற்றால் கிடைத்த லாபத்தைக காதும் காதும் வைத்தாற் போல் தன் சட்டைப் பையில் போட்டுக் கொள்வதோடு சரி!

மாறுதல்? — புறத்தில்தான் காணப்படுகிறதே தவிர, அகத்தில் காணப்படவில்லை. இருந்தாலும் உபதேசம் செய்வது நின்றதா? இல்லை; தொடர்ந்தது.

“அறஞ் செய விரும்பு” என்றாள் அவ்வை; மனிதன் அதைத் தவிர மற்றவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான்.

“அச்சம் தவிர்” என்றார் பாரதியார்; மனிதன் அதைத் தவிர மற்றவற்றையெல்லாம் தவிர்த்துக் கொண்டிருக்கிறான்!

இந்த நிலையில் ‘வாயில்லாப் பூச்சி’யான நான், ‘வாயுள்ள பூச்சி’களான உங்களுக்கு எந்தவிதமான உபதேசங்களையும் செய்ய விரும்பவில்லை; செய்யவும் கூடாது; செய்வதிலும் பலனில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கே நான் சொல்லிவிட வேண்டும். அதாவது, இந்தக் கட்டுரைத் தொடரில் நாங்கள் சொல்லப்போவது அத்தனையும் உண்மை. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இதையாவது நம்பவேண்டுமே என்பதற்காக.

சில சமயம் உங்களிடையே நாங்கள் காணும் சில காட்சிகள் எங்களுக்கு வேடிக்கையாகவும் இருக்கின்றன. வேதனையாகவும் இருக்கின்றன. அவற்றை உங்களிடம் சொல்லி அதனால் ஏற்படும் ரசானுபவங்களை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கவேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.

தையைக் கேளுங்கள்: நான் இருக்கும் சோலையை ஒட்டி ஒரு தெரு. தெரு என்றால் ‘மேட்டுக் குடிமக்கள்’ வசிக்கும் தெரு, அந்தத் தெருவின் இரு மருங்கிலும் வரிசை வரிசையாக வீடுகள். ஒரு நாள் நடுப்பகல். “ஐயோ, திருடன்! திருடன்!” என்று கத்திக் கொண்டே ஒரு பெண் தன் வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தாள். அவளுக்கு முன்னால் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை போல் தோற்றமளித்த ஒருவன் கையில் சூட்கேசுடன் விறுவிறுவென்று கடந்து கொண்டிருந்தான். “ஐயோ, அவன் தான். திருடன்! அவனைக் கொஞ்சம் பிடியுங்களேன்! அவர் கூட வீட்டில் இல்லையே” என்று அக்கம் பக்கத்தாரைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டே அவனைத்தொடர்ந்து ஓடினாள் அவள். அதற்குள் அங்கே ஒரு சிறு கூட்டம் சேர்ந்தது. அந்தக் கூட்டத்தைக் கண்டதும் அவன் கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்துவிட்டுச் சட்டென்று ஒரு கத்தியை எடுத்துக்காட்டி, ஜாக்கிரதை கிட்டவந்தால் குத்திவிடுவேன்!” என்றான். அவ்வளவுதான்; அடுத்த கணமே அவனை ‘அம்போ’ என்று விட்டுவிட்டுக் கூட்டம் கலந்து விட்டது. எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்குள் ஒடித் தெருக்கதவைப் படாரென்று அடித்துச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு விட்டார்கள்.

ஆகா! இந்த மேட்டுக் குடியினருக்குத்தான் என்ன வீரம்! என்ன வீரம்!

இப்படி ஓடி ஒளிந்தவர்களில் வீரத்துக்குப் பேர் போன சேர நாட்டார் உண்டு; சோழ நாட்டார் உண்டு; பாண்டிய நாட்டார் உண்டு, பல்லவ: நாட்டாரும் உண்டு.

எதிரியைச் சிங்கமென எதிர்த்து நின்ற அந்த மாவீரர்களின் வழித்தோன்றல்களா இந்தச்சுண் டெலிகள்!

“தெருக் கதவைத் தாளிட்டு விட்டோமா?” என்று: ஒரு முறைக்கு இருமுறையாகப் பார்த்துவிட்டு ஒரு சுண்டெலி சொல்கிறது; “என்ன ஜனநாயகம் வேண்டி கிடக்கின்றது? இந்த ஜனநாயகத்திலே! ஜனங்களுக்குப் பாதுகாப்பே இல்லை. வெள்ளைக்காரன் காலத்திலே இப்படியா இருந்தது? நாளைக்காகட்டும். ‘ஆசிரியருக்குக் கடித’த்திலே தீட்டுத் தீட்டென்று: தீட்டி விடுகிறேன்!” இன்னொரு சுண்டெலி சொல்கிறது: “போலீசுக்குப் போன் செய்யலாமென்று போனேன். அதற்குள் கத்தியைத் தூக்கிவிட்டானே!”

இவர் புகழ் பெற்ற அரசியல் வாதிகளில் ஒருவர். அடிக்கடி ‘ரத்தம் சிந்துவதைப் பற்றி’யே வீராவேசமாகப் பேசுவார். அன்றைக்கு முதல் நாள் கடந்த ஒரு கூட்டத்தில் இவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவன் இவருக்குப் பின்னுலிருந்த மாமரத்தின் மேல் மாங்காய்க்காகக் கல்லை விட்டெறிய, அந்தக்கல் தவறி இவருடைய நெற்றிப் பொட்டில் பட்டு ரத்தம் கசிய, பழியை எதிர்க் கட்சிக்காரன் தலையில் போட்டு, உடனே தன்னைப் போட்டோ எடுக்கச் சொல்லி, அதை அடுத்த தேர்தலுக்குரிய வண்ணப்போஸ்டர்களில் ஒன்றாக்கிக் கொண்டவர். அத்துடன் இல்லாமல ரத்தக் கறை படிந்த அந்தக் கல்லை இவர் ஏலத்துக்கு விட, அதை ஒரு புத்திசாலி நூறு ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அந்தத் தொகையைக் கட்சிக்காகக் கொடுத்தவர். இத்தகையவர்கூட ‘வண்ணப் போஸ்டருக்காக, கட்சி நிதிக்காக ரத்தம் சிந்தினாலும் சிந்துவேனே தவிர, ஒர் அபலைப் பெண்ணுக்காக ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தத் துணிய மாட்டேன், போன் செய்யத்தான் போவேன்!’ என்றால் வேடிக்கையாக இல்லையா இது? வேதனையாக இல்லையா இது?

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும் தன்காளை எடுத்து

என்ற குறளில், “தன் உடம்பில் விழுப்புண் படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வீரன் நினைப்பான்” என்கிறாரே வள்ளுவர், அந்தக் குறளே மேடைக்கு மேடை எடுத்துச் சொல்வதோடு, கண்ட கண்ட இடத்திலெல்லாம் எழுதி வைப்பதோடு உங்கள் வீரம் நின்று விடுகிறதே, ஏன் சுவாமி.

ங்கள் இனத்தில் இருப்பது போலவே எங்கள் இனத்திலும் திருடர்கள் உண்டு.

அதிலும் இந்தக் காகம், இருக்கிறதே காகம், அது பொல்லாத திருடு, கொஞ்சம் ஏமாந்தால் போதும்; எங்கள் கூட்டில் புகுந்து முட்டை, குஞ்சு ஆகியவற்றையெல்லாம் திருடிக் கொண்டு போய்த் தின்று தீர்த்துவிடும்.

என்னைப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?—என் பெயர் கரிச்சான் குருவி. காவல் பறவை இனத்தைச் சேர்ந்தவன். என்னை அண்டி எத்தனையோ பறவைகள் வாழ்வது உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்று காகத்தைக் கண்டு குரல் கொடுக்க வேண்டியதுதான் தாமதம், விரைந்து சென்று அதை நான் விரட்டு விரட்டு என்று விரட்டவில்லையா?

இத்தனைக்கும் உருவத்தில் காகம் என்னைவிடப் பெரிது. இருப்பினும் ஒரு துணிவு; சகப்பறவைகளை எப்படியும் காக்கவேண்டுமென்ற ஓர் உறுதி—இவை இரண்டுமே அத்தகைய சக்தியை எனக்குக் கொடுக்கின்றன. அதைக் கொண்டு மிகச் சிறிய உருவத்தைப் பெற்றிருக்கும் நின் மிகப் பெரிய பறவையான காகத்தை மட்டுமல்ல—வைரி, வல்லுாறு போன்ற, பறவைகளைக் கூட எதிர்த்து நிற்கிறேன். ஓ, மனிதா! எனக்குள்ள இந்தத் தைரியமும் தன்னம்பிக்கையும் உனக்கு ஏன் இல்லை?

“அவை இரண்டும் தவிர மற்றவை எல்லாம்தான் எங்களிடம் இருக்கிறதே!” என்கிறாயா?—ரொம்ப சரி.