ஓ மனிதா/14. கீரி கேட்கிறது
14. கீரி கேட்கிறது
தெருவில் வித்தை காட்டுவோர் ‘கீரி-பாம்புச் சண்டை’ என்று ஏதோ ஒரு சண்டையைக் காட்டி வயிறு வளர்த்தாலும் வளர்க்கிறார்கள், அதைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னை வைத்து கயிறு திரிக்கிறீர்கள்!
நம்ப வேண்டியதை நம்பமாட்டீர்கள்; நம்ப வேண்டாததை யெல்லாம் நம்புவீர்கள். இதுதானே உங்கள் இயல்பு?
‘கண் ஒளி மங்கிவிட்டது; எந்தக் கண்ணாடி போட்டாலும் தெரியவில்லை. ஆபரேஷன் செய்தால் தான் பார்வை திரும்பும்’ என்கிறார் டாக்டர். அதில் உங்களுக்கு அவ்வளவு எளிதில் நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது; ‘பார்வை திரும்புமோ, திரும்பாதோ?’ என்று சந்தேகப்படுகிறீர்கள்.
திடீரென்று ஒரு கால் விளங்காமல் போய்விடுகிறது. கம்பை எடுத்து ஊன்றிக்கொண்டு ஒரு காட்டு வைத்தியரிடம் செல்கிறீர்கள். அவர் உங்கள் காலைத் தொட்டுப் பார்த்து, அசைத்துப் பார்த்து, ‘மூன்றே நாள் எண்ணெயில் இதைச் சரிப்படுத்தி விடலாம்’ என்கிறார். அதில் உங்களுக்கு அவ்வளவு எளிதில் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது; ‘மூன்றே நாள் எண்ணெயில் முடவனை எழுந்து கடக்க வைத் து விடுவானாம். இவன் சொல்வதை நம்ப நான் என்ன, முட்டாளா?’ என்று உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்களே மெச்சிக்கொண்டு திரும்பி விடுகிறீர்கள்!
இத்தகைய சந்தேகப் பிராணிகளான நீங்கள், ‘அற்புதப் பிரார்த்தனை! அதைச் செவி மடுத்ததும் பார்வையில்லாதவனுக்குப் பார்வை திரும்புகிறது; முடவன் கையிலுள்ள கோலை வீசி எறிந்துவிட்டு எழுந்து ஓடுகிறான்’’ என்று யாராவது சொன்னவுடன என்ன செயகிறீர்கள்?—உங்கள் வீட்டிலுள்ள குருடனையும் முடவனையும் இழுத்துக் கொண்டு சாரி சாரியாகச் செல்கிறீர்கள், அந்தப் பிரார்த்தனையைச் செவிமடுக்க!
உங்கள் ஊருக்குள்ளே ஒரு மடம் இருக்கிறது. மடத்துக்குள்ளே ஜடாமுடியுடனும், ஜடாமுடி இல்லாமலும் எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை உய்விக்கவும், அதே சமயத்தில் தங்களையும் உய்வித்துக் கொள்ளவும் என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. அது மட்டுமல்ல, உங்களில் சிலர் அவர்களை எள்ளி நகையாடவும் செய்கிறீர்கள்.
ஊருக்கு வெளியே திடீரென்று இரண்டு சாமியார்கள் தோன்றுகிறார்கள். இருவரும் இரு மலைக் குகைகளைத் தேடிப் பிடித்துத் தங்குகிறார்கள்.
அவர்களுடைய தலை முடியும் தாடி மீசையும் வளருகின்றன, வளருகின்றன, வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அவர்கள் பேசுவதில்லை; சதா மெளனம், மெளனம், மெளனம்.
சீடகோடிகள் என்று சிலர் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தேவைகளையும் அவர்களே தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
வேலையில்லையா?
பிடி விபூதி, வேலை கிடைத்துவிடுகிறது
பிள்ளை இல்லையா?
பிடி விபூதி, பிள்ளை பிறந்து விடுகிறது.
எல்லாம் ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை’ தான் என்றாலும் சாமியார்களின் புகழ் ஊர் முழுக்கப் பரவிக்கொண்டே இருக்கிறது.
பழமாகவும் பாலாகவும் செலுத்தப்பட்டு வந்த காணிக்கைகள், நாளடைவில் பணமாகவும் பவுனாகாவும் கூடச் செலுத்தப்படுகின்றன.
வழக்கம்போல் சுற்றிலும் பக்த கோடிகள் இல்லாத சமயமாகப் பார்த்துக் கண் விழித்த ‘சாமிகள்’ ஒரு நாள் தங்கள் சீட கோடிகளிடம் தங்களைத் தொட்டுக் காட்டிக் கேட்கின்றன:
‘இந்தக் காணிக்கைகள் எந்தச் சாமிக்கு அதிகம்? இந்தச் சாமிக்கா, அந்தச் சாமிக்கா?’
‘அந்தச் சாமிக்குத்தான்’, ‘அந்தச் சாமிக்குதான்!’ என்று இரண்டு சாமிகளின் சீடகோடிகளும் சொல்கின்றன.‘ஏன்?’
‘நீங்கள் இருவருமே பொதுவாகத் ‘தாடிச் சாமியார்கள்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுவதால உங்களில் எந்தச் சாமி சக்தி மிக்க சாமி என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. அந்தக் குழப்பத்தில் இங்கே செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொண்டுபோய் அங்கே செலுத்திவிடுகிறார்கள்; அங்கே செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொண்டு வந்து இங்கே செலுத்தி விடுகிறார்கள்!’
‘இதைத் தடுக்க வழி?’
இருக்கிறது.
‘என்ன வழி?’
‘ஒருவர் மொட்டை சாமி’யாகவும், இன்னெருவர் ‘தாடிச்சாமி’யாகவும் மாற வேண்டும்.
‘நல்ல யோசனை! இப்போதே நீங்கள் அந்தச் சாமியிடம் போய் நிலைமையை விளக்கி, அவரை உடனே மொட்டைச் சாமியாகி விடச் சொல்லுங்கள்.’
இவ்விடத்துச் சீடகோடிகள் அவ்விடம் தூது செல்கின்றன; அவ்விடத்துச் சீடகோடிகள் இவ்விடம் தூது வருகின்றன.
நிலைமையை விளக்கியது தான் மிச்சம், எந்தச் சாமியும் மொட்டைச் சாமியாகச் சம்மதிக்கவில்லை. ‘அவன் சக்திக்கு என் சக்தி ஒன்றும் குறைந்ததல்ல’, ‘என் சக்திக்கு அவன் சக்தி ஒன்றும் மிஞ்சியதல்ல’ என்று இரண்டு சாமிகளுமே அடம் பிடிக்கின்றன.அப்புறம்?...
‘இன்னொரு வழி இருக்கிறது’ என்று மெல்ல ஆரம்பிக்கின்றன சீடகோடிகள்.
‘அது என்ன வழி?’
‘உங்கள் விபூதியை விட உங்கள் முடியே சக்தி மிக்கதென்று ஒரு புரளியை மக்களிடையே ரகசியமாகக் கிளப்பிவிடவேண்டும். அந்த முடியைக் கேட்டால் நீங்களாகக் கொடுக்க மாட்டீர்களென்றும், நீங்கள் நிஷ்டையிலிருக்கும் சமயம் பார்த்து அவற்றில் ஒன்றைக் கத்தரித்து எடுத்துக் கொண்டு போய் வெள்ளித் தாயத்திலோ, தங்கத் தாயத்திலோ வைத்துக் கட்டிக்கொண்டால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்லிவிட வேண்டும். அப்புறம் பாருங்கள், சவரத் தொழிலாளிக்குக்கூட வேலை வைக்காமல் பக்தர்களே அந்தச் சாமியை மொட்டைச் சாமியாக்கி விடுவார்கள்!’
‘பேஷ்! அதுவே சரி, அதுவே சரி!’
இந்த அபூர்வ யோசனை ஒரு தரப்பாருக்கு மட்டும் உதித்திருக்கக் கூடாதா? இரு தரப்பாருக்குமே ஏக காலத்தில் உதித்துவிடுகிறது. பலன்? இரண்டு சாமிகளுமே மொட்டைச் சாமிகளாகி விடுகின்றன!
நல்ல வேளையாகச் சிறையிலிருந்து தப்பி வந்திருந்த அந்தச் ‘சாமி’களைப் போலீசார் தக்க சமயத்தில் வந்து பிடித்துவிடவே விவகாரம் முற்றாமல் அத்துடன் நிற்கிறது.இதெல்லாம் உங்களைப் போன்ற மனிதர்களைப் பொறுத்த விஷயம். கடவுளைப் பொறுத்த விஷயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது?
விண் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; மண் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; நீர் எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; நெருப்பு எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்; காற்று எந்த விஞ்ஞானியாலும் படைக்கப்பட்டதல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் அவற்றைப் படைத்த விஞ்ஞானி ஒருவன் இருக்க வேண்டும். அவனே ‘கடவுள்’ என்பதை நம்புபவர்கள் உங்களில் எத்தனை பேர்?
அந்தக் கடவுளை மையமாக வைத்து, ஒரு பாவமும் அறியாத அவரை உங்களுக்காகப் பத்து அவதாரங்கள் எடுக்கச் செய்து, அறுபத்துநாலு திருவிளையாடல்கள் புரிய வைத்து, அவற்றின மூலம் பல அற்புதங்களைப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் நடத்திக் காட்டி, அவற்றை வைத்து ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்று ஆத்திகனையும், நாத்திகனையும் மோத விட்டு உங்களைக் குழப்ப விட்டிருக்கிறார்களே, அவற்றை நம்புபவர்கள் உங்களில் எத்தனை பேர்?
நிச்சயமாக முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்கள்தான் அதிகமாயிருக்க வேண்டும், இல்லையா?ஆக, உண்மையாயிருந்தாலும் ஒருவனுடைய திறமையைப் பற்றி எழுதுவதை நம்ப நீங்கள் தயாராயில்லை; பொய்யாயிருந்தாலும் அவனை வைத்து எழுதப்படும் மகிமையை நம்பவே நீங்கள் தயாராயிருக்கிறீர்கள்!
ஒ மனிதா! நீண்ட நெடுங்காலமாகக் கீரியான என் விஷயத்திலும் நீ இந்தத் தவறான நம்பிக்கையையே கொண்டிருக்கிறாய்?
பாம்புக்கும் எனக்கும் என்ன பகை?
என் காதலியை அது களவாடப் பார்த்ததா? அதன் காதலியை நான் களவாடப் பார்த்தேனா?—ஒன்றுமில்லை; நத்தை, எலி போன்றவை எனக்கு உணவாவது போல அதுவும் உணவாகிறது. அதை உணவாக உட்கொள்ள நான் முயலும்போது அது தன்னைக் காத்துக் கொள்ள என்னுடன் போரிடுகிறது. நானும் அதனுடன் போரிடுகிறேன். அவ்வளவே!
ஆனால்...
அதன் நச்சுப் பையை மட்டும் நான் தின்பதில்லை.
ஏன்?
அதைத் தின்றால் நானும் இறப்பது உறுதி.
தின்றால் மட்டுமென்ன, நச்சுள்ள பாம்பால் கடிபட்டாலும் நான் மடிவது உறுதி, உறுதி, உறுதி!
அந்த நிலைமை எனக்கு ஏன் வரமாட்டேன் என்கிறது?
அதுதான் என் திறமை!திறமையென்றால் வெறும் திறமையல்ல; போர்த் திறமை!
நான் பாம்புடன் சண்டையிடும்போது, நீ என்னை கவனித்திருக்கிறாயா? முதலில் அதன் தலையைத்தான் நான் துண்டாக்க விரும்புவேன். அந்தத் தலையையும் அதற்கு முன்னால் சென்று கடித்துத் துண்டாக்க மாட்டேன். பின்னால் சென்று கடித்தே துண்டாக்குவேன். அதாவது, அதன் பிடரியைத்தான் கவ்விப் பிடித்து நான் சண்டையிடுவேனே தவிர, தொண்டையைக் கவ்விப் பிடித்துச் சண்டையிட மாட்டேன்.
இதுவே என் யுத்த தந்திரம். இந்தத் தந்திரத்தில் இருப்பது மகிமையல்ல, திறமையே!
இதைப் புரிந்து கொள்ளாமல் என்னிடம் ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாகவும், அந்தச் சக்தி இருப்பதால் பாம்பு கடித்தாலும் நான் இறப்பதில்லை என்றும் நீ சரடு விடுகிறாய்!
அப்படியே கடித்தாலும் குடு குடு வென்று ஓடிப் போய் எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் அற்புதப் பச்சிலையைத் தின்று அதை நான் அரைநொடியில் சரிப்படுத்திக் கொண்டு விடுகிறேன் என்று கரடி விடுகிறாய்!
இதெல்லாம் என்ன? ‘பொய்’யில் உனக்குள்ள மோகம் உண்மையில் ஏன் வரமாட்டேன் என்கிறது?
வந்தால் இந்த உலகம் வாழ்ந்து விடும் என்றா?
நடக்கட்டும்!