ஓ மனிதா/6. மாடு கேட்கிறது
6. மாடு கேட்கிறது
‘மாடு’ என்றதும் நீ காளை மாட்டை நினைத்துக் கொண்டுவிடாதே! சற்று நின்று உன்னுடன் பேச அதற்கு எங்கே நேரம் இருக்கிறது? உனக்காக ஏர் உழவும், வண்டி இழுக்கவுமேதான் அதற்கு நேரம் சரியாயிருக்கிறதே!
பகலில்தான் இப்படியென்றால் இரவிலாவது நீ அதைச் சும்மா விடுகிறாயா? இல்லை; பொழுது விடிந்ததும் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னிரவிலோ, பின்னிரவிலோ வண்டி நிறைய ஏதாவது ஒரு விளைபொருளை ஏற்றிக்கொண்டு நீ கிளம்பிவிடுகிறாய். உனக்கென்ன, நீ ராஜா! தூக்கம் வந்தால் வண்டியிலேயே படுத்துக்கொண்டு தூங்கி விடுவாய். மாடு? — தூக்கம் வந்தாலும் அதை உதறி விட்டு வழி தெரிந்து நடக்க வேண்டும். நடந்து, உன்னையும் உன் விளைபொருளையும் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சந்தையில் சேர்க்க வேண்டும்.
பாவம் இப்படி உழைக்கிறதே அந்த மாட்டுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டா? இல்லை; அது உனக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பதற்காக நீதான் அதைக் காயடித்து விட்டுவிடுகிறாயே?
என்ன சுயநலம்!
நான் பசு; உங்கள் வணக்கத்துக்குரிய பசு, அப்படியென்று நான் சொல்லிக் கொள்ளவில்லை; நீங்கள் தான் சொல்லிக் கொள்கிறீர்கள், அதன் பலன்?—மதம் உங்களை மட்டும் பிடித்து ஆட்டினால் போதாதென்று என்னையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதில் ஒரு வேடிக்கை! இந்துக்களான உங்களில் சிலருக்கு நான் தெய்வம்; வேறு சிலருக்குத் தீனி.
இப்படியிருந்தும் என்னைக் காப்பாற்ற உங்களில் சிலர் ஓர் இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; அதற்காகச் சத்தியாக்கிரகம்கூடச் செய்கிறார்கள். எங்கே?— அதுதான் ரசனைக்குரிய விஷயம்.
வெள்ளைக்காரன் ஆதிக்கத்திலிருந்து உப்பை மீட்க வேண்டுமென்று நினைத்தார் மகாத்மா. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— கடற்கரையில்.
அந்நிய நாட்டுத் துணிகளின் பிடியிலிருந்து உள் நாட்டுத் துணிகளைக் காக்க வேண்டுமென்று நினைத்தார் காந்திஜி. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— அந்நியத் துணிகள் விற்கும் கடைகளில்.
மதுவரக்கனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார் மகாத்மா. அதற்காக அவர் எங்கே சத்தியாக்கிரகம் செய்தார்?— கள்ளுக் கடைகளில்.
என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் எங்கே சத்தியாக்கிரகம் செய்கிறீர்கள்?— மாட்டிக்கும் தொட்டியிலா?— இலலை; டெல்லி பார்லிமெண்ட் கட்டடத்தில்!இதிலிருந்தே உங்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்பது மக்களுக்கு புரிந்துவிடுகிறது. அதனால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் இயக்கமும் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.
என்னை விடுங்கள். ஒருகாலத்தில் தெய்வத்தின் பேரால் இந்த நாட்டில் எத்தனையோ யாகங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்த யாகங்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் பலியிடப்பட்டு வந்தன. அந்த யாகங்களிலிருந்து ஆட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்த புத்தர் என்ன செய்தார்?— ஆட்டின் கழுத்தை நோக்கி வந்த கத்திக்குக் கீழே தன் கழுத்தை நீட்டினார். அதனால் என்ன நடந்தது?—ஆடும் பிழைத்தது; அவரோடு அவருடைய தருமமும் பிழைத்தது.
அந்த மகானைப் பின்பற்றி உங்களில் எத்தனை பேர் இன்று மாட்டிக்கும் தொட்டிக்கு வந்து, எங்கள் கழுத்தை நோக்கி வரும் கத்திக்குக் கீழே உங்கள் கழுத்தை நீட்டத் தயாராயிருக்கிறீர்கள்?
ஒன்று, இரண்டு, மூன்று....
எங்கே, நான் எண்ணியதுதான் மிச்சம்; உங்களில் ஒருவர் கூட ‘ம்’ என்று சொல்லமாட்டேன் என்கிறீர்களே!
மாட்டிடம் கருணை காட்டாவிட்டால் போகட்டும்; உங்களைப் போன்ற மனிதர்களிடங்கூட நீங்கள் கருணை காட்டாவிட்டால் போகட்டும்; உங்களைப் பெற்று வளர்த்து, எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் உங்களை ஆளாக்கிவிட்ட உங்கள் தாய், தந்தையரிடமாவது நீங்கள் கருணை காட்டுகிறீர்களா? இல்லை; ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் படித்ததுகூட, ‘படிக்காவிட்டால் வாத்தியார் குட்டுவாரே!’ என்ற பயத்தால் தானே?
யாராயிருந்தாலும் சரி, இந்த உலகத்தில் அன்பு செலுத்தக்கூடப் பணம் வேண்டும் என்பதை நான் அறிவேன், கையில் ஒரு முழம் பூகூட இல்லாமல் ‘என் அன்பே!’ என்று மனைவியை நெருங்கினால்கூட, ‘ஆமாம் போங்கள், இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்று அவள் எரிந்து விழுவாள் என்பதும் எனக்குத் தெரியும். அந்தக் குறைக்கு நான் இருந்த வீட்டில் இடமில்லை. ஏனெனில், நான் இருந்த வீடு ஓர் ஐ. ஏ. எஸ். அதிகாரியின் வீடு, சம்பளம், கிம்பளம், அது இது என்று எத்தனையோ வகைகளில் அவருக்குப் பணம் வந்து கொண்டே இருந்தது. அதனால் ‘லட்சுமி கடாட்சம்’ என்கிறீர்களே, அந்தக் கடாட்சம் அவருக்குப் பரிபூரணமாக இருந்தது.
அந்த ஆபீசருக்கு ஓர் அண்ணன். அவர் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தா. சம்பளம் பற்றாக்குறையாயிருந்தாலும். குழந்தைகள் விஷயத்தில் அவருக்குப் பற்றாக்குறை இல்லை, அதில் அவர் ‘நவீன குசேல’ராயிருந்தார். எப்போதாவது ஒரு சமயம் கண்ணன் வீட்டுக்கு ஒரு பிடி அவலோடு வந்த குசேலரைப் போல அவர் உள்ளூர் பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு, தம்பியையும் தம்பியின் குழந்தையையும் பார்க்க வருவார். ‘யார் யாரோ என்னைப் பார்க்க வருவார்கள். வீட்டுக்கு முன்னாலிருந்து என் மானத்தை வாங்காதே, பின்னால் போய் உட்கார்!’ என்பார் தம்பி. ‘அது எனக்குத் தெரியாதா?’ என்று பல்லைக் காட்டிக் கொண்டே அண்ணன் தான் கொண்டு வந்த பிஸ்கெட் பாக்கெட்டைத் தம்பியின் குழந்தையிடம் கொடுத்து விட்டுப் பின்னால் போவார். அந்த பிஸ்கெட், தான் வளர்க்கும் அல்சேஷியன் நாயின் உடம்புக்குக்கூட ஆகாது என்று தம்பி நினைப்பார்—அதையாவது, அவர் குழந்தை சாப்பிடுவதாவது?—வெடுக்கென்று பிடுங்கி எனக்காகப் புழக்கடையில் சேமித்து வைக்கும் கழுநீர்த் தொட்டியில் அண்ணனுக்குத் தெரியாமல் அதைப் போட்டு விடுவார்!
இந்த ‘அபூர்வ சகோதரர்’களின் தாயும் தந்தையும் தான் இப்போது என் ‘போஷகர்’கள். போஷகர்கள் என்றால் நான் கொடுக்கும் பாலுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. மாமனார் கிழவனுக்கு என்றாவது ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போய், அதனால் சாப்பாடு பிடிக்காமல்போய், ‘கொஞ்சம் பாலாவது கொடுக்கிறாயா, குடித்துவிட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்கிறேன்’ என்று மாமியார் கிழவி மருமகளைக் கேட்டால், ‘வளரும் குழந்தைகளுக்கே பால் போதவில்லையாம்; வயசானவர்களுக்கெல்லாம் பால் கொடுக்க நான் எங்கே போவேன்?’ என்று அவள் தன் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி இழுப்பாள். கிழவி உடனே ‘டன்கர்க்’ ஆகிவிடுவாள். சாப்பாட்டு வேளையின்போது மட்டும் மோர் என்னும் பேரால் கொஞ்சம் நீர் வந்து இவர்களுடைய இலைகளில் விழும். அதை வாசனை பிடித்துக் கொண்டே இவர்கள் சாப்பிட்டு எழுந்து விடுவார்கள். என் பாலைப் பொறுத்த வரை என்னுடைய போஷகர்களுக்கு இருந்து வந்த சம்மந்தம் இதுவே.
என்னைக் கழுவிக் குளிப்பாட்டி விடுவதோடு, என் தொழுவத்தையும் கழுவிச் சுத்தப்படுத்துவது கிழவியின் வேலை. எனக்குத் தீனி வைப்பது, தண்ணீர் காட்டுவது, பால் கறந்து கொடுப்பது கிழவனின் வேலை. இந்த வேலையைக்கூட மகனோ மருமகளோ பார்த்து இவர்களுக்குக் கொடுக்கவில்லை; தண்டச் சோறு’ என்ற அபவாதத்திலிருந்து தப்புவதற்காக இவர்களாகவே ஏற்றுக்கொண்ட வேலைதான் இது.
அப்படியும் சில சமயம் இவர்களுடைய மகன் சொல்வதுண்டு—“நான் ஒருவன் தான் உங்களுக்கு மகனா? உங்களுக்குச் சோறு போட வேண்டுமென்று என் தலையில் தான் எழுதி வைத்திருக்கிறதா? இன்னொருத்தன் இருக்கிறானே; அவன் வீட்டுக்குப் போக உங்களுக்கு என்ன கேடு?” என்று. அம்மாதிரி சமயங்களில் ‘ஒரு கேடுமில்லை’ என்று இவர்களும் அவர் வீட்டுக்குப் போய்ச் சில நாட்கள் தங்கிவிட்டு வருவதுண்டு.
சுருக்கமாகச் சொல்கிறேனே— அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே அகப்பட்ட கால் பந்தாக இவர்கள் இருந்து வந்தார்கள். எப்போது யார் எந்தப் பக்கம் உதைத்துத் தள்ளுகிறார்களோ, அந்தப் பக்கம் இவர்கள் போவதும் வருவதுமாக இருந்து வந்தார்கள்.
எங்கே இருந்தாலும் இவர்களுக்குக் கிடைக்கும் இடம் எனக்குக் கிடைக்கும் அதே இடம்தான். அதாவது வீட்டின் பின்புறம். இந்த விஷயத்தில் ஒன்றுபட்டிருந்த நாங்கள் இன்னொரு விஷயத்தில் மட்டும் ஏனோ ஒன்றுபட்டிருக்க வில்லை. அது என்ன விஷயம் என்கிறீர்களா?—சொல்கிறேன்.
எனக்குப் பால் மறத்துப் போயிருந்த சமயம் அது. ஒரு நாள் யாரோ இருவருடன் ஐ. ஏ. எஸ் அதிகாரி என்னைத் தேடி வந்தார். தன்னுடன் வந்தவர்களிடம் என்னைக் காட்டி, ‘இதுதான் நான் சொன்ன மாடு, என்ன விலை கொடுப்பீர்கள்?’ சட்டென்று சொல்லுங்கள். எனக்கு ஆபீசுக்கு நேரமாகிறது என்றார்.
‘நாங்க எப்படிச் சொல்றதுங்க, நீங்களே சொல்லுங்க.’
‘நான் வாங்கும்போது இதை ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கினேன்...’
‘காரைக் கூடத்தான் வாங்கறப்போ பத்தாயிரம் இருபதாயிரம்னு வாங்கறீங்க; விற்கிறப்போ அதே விலைக்கா விற்கிறீங்க? ஆயிரம் இரண்டாயிரத்துக் கூடக் கொடுக்கலையா? அந்த மாதிரிதான் இதுவும். நாங்க அடிமாட்டுக்காரனுங்க, எங்களுக்கு அம்பது ரூவான்னாத்தான் கட்டும். அதுக்கு மேலே உங்க இஸ்டம்.’
கிழவன் சும்மா இருக்கக் கூடாதா? ‘ஐயையோ! இத்தனை நாளா நம்மைப் போஷித்து வந்த பசுவை இப்போ அடிமாட்டுக்காரனுக்கா கொடுக்கப் போறே? வேண்டாம்டா. பசு லட்சுமி மாதிரி, பேசாம ஏதாவது ஒரு கிராமத்துக்கு ஓட்டு, மாசம் ரெண்டு மூணு வாங்கிக்கிட்டு இதை மேய்க்க அங்கே எத்தனையோ பேரு இருக்காங்க. அவங்களே இதைச் சினைக்கும் விட்டு மாடும் கன்றுமா ஓட்டிவந்து இங்கே விட்டுடு வாங்க!’ என்றார்.
‘அது எனக்குத் தெரியும், நீ பேசாமல் இரு! என்ற அதிகாரி, எங்கே ஐம்பது ரூபாய் கொடுங்கள் இப்படி!’ என்றார்; அவர்கள் கொடுத்தார்கள். ‘ஓட்டிக்கொண்டு போங்கள்’ என்றார். அவர்கள் என்னை ஓட்டிக்கொண்டு சென்றார்கள்.கிழவர் சொன்னார்:
ஒரு சமயம் நானும் இப்படி ஒரு மாட்டை விற்றேன். ஆனால் அடிமாட்டுக்காரனுக்கு விற்கலே, என்னைப்போல சம்சாரிக்கு விற்றேன். அது அவன் கிட்ட நிற்காம என்னைத் தேடி ஓடி வந்துடும். அவ்வளவு பாசம் அதுக்கு என் மேலே. கடைசியிலே இருக்கிற கஷ்டம் இருக்கட்டும்னு அவன் கொடுத்த காசை அவன் மூஞ்சியிலேயே விட்டெறிந்துவிட்டு அந்த மாட்டை நானே வாங்கி வெச்சுக்கிட்டேன். அந்த மாதிரி இதுவும் என்னைத் தேடி வரணும்கிறது தான் இனிமே என் கவலையாயிருக்கும்.
ஐ. ஏ. எஸ். அதிகாரி சொன்னார்.
“என் கவலை என்ன தெரியுமா? பால் மறத்த மாட்டை வாங்க அடி மாட்டுக்காரன் என்று ஒருவன் இருப்பது போல, வயசாகிப் போன உங்களை வாங்க அப்படி ஒருவன் இல்லையே என்பதுதான்.”
எப்படி இந்தப் பிள்ளை மனம்?
ஓ, மனிதா! இப்போது தெரிகிறதா, உனக்கு?— நானும் அந்தக் கிழட்டுத் தம்பதியரும் எந்த விஷயத்தில் ஒன்று பட்டிருக்கவில்லை என்று?
தெரியவில்லையென்றால் மீண்டும் சொல்கிறேன்—நான் தேவையில்லாத போது அந்த ஐ. ஏ. எஸ். காரரால் என்னை அடிமாட்டுக்காரனுக்கு விற்றுவிட முடிகிறதாம். அதே மாதிரி தன் தாய்-தந்தையரை விற்றுவிட அவரால் முடியவில்லையாம்!இதிலிருந்து என்ன தெரிகிறது? அன்புக்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது; குணமும் வேண்டுமென்று தெரியவில்லையா? அந்தக் குணம் உங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது? பட்டப்பகலில் யாரோ விளக்கை ஏற்றிக்கொண்டு எதையோ தேடினராமே, அப்படித்தான் தேடவேண்டும், இல்லையா?
இந்த லட்சணத்தில் உங்களுக்குள்ளேயே நீங்கள் காட்டிக்கொள்ளாத கருணையை என்னிடமா காட்டப் போகிறீர்கள்?—வெட்கக் கேடு!