கடல்வீரன் கொலம்பஸ்/கடிதம் கிடைத்தது

6

கடிதம் கிடைத்தது


கொலம்பஸ் தான் கண்டு பிடித்த தீவுகளைப் பற்றியும், தன் எதிர் காலத் திட்டங்களைப் பற்றியும், பேரரசியார்க்கும், மாமன்னர்க்கும் எழுதிய கடிதம் சுவையானது. அவன் அக்கடிதத்தை மாமன்னரின் தனிச் செயலாளரான சாண்டாஞ்சலுக்கு அனுப்பியிருந்தான். அக்காலத்தில் ஸ்பெயினில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அரசவையைச் சேர்ந்தவர்களும்தான், அரசர்களுக்கு நேரடியாகக் கடிதம் எழுதலாம். மற்றவர்கள் எழுதுவது மரியாதைக் குறைவென்று கருதப்பட்டது. எனவேதான், தன் பயணத்துக்கு முற்றிலும் உதவியாயிருந்த சாண்டாஞ்சலுக்கு எழுதி, அவன் மூலம் அரசர்க்கும் அரசிக்கும் தகவல் அறிவிக்கச் செய்தான் கொலம்பஸ். 1493-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள் நைனாக் கப்பலில் உட்கார்ந்து எழுதிய இக்கடிதத்தைத்தான், கொலம்பஸ் தான் லிஸ்பன் துறைமுகம் வந்து சேர்ந்தவுடன் மார்ச் மாதம் 14-ஆம் நாளன்று அரசவைக்கு அனுப்பினான்.,

இக்கடிதம் கொலம்பஸ் கடிதம் என்று பெயரிடப்பட்டு இன்று உலகத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பத்திரமாகக் கருதப்படுகிறது. இக்கடிதத்தைக் கொலம்பசின் சொற்களிலேயே அப்படியே மொழி பெயர்த்துக் கீழே கொடுத்திருக்கிறோம்:

ஐயா,

நம் இறைவன் என் பயணத்திற்களித்த பெரும் வெற்றியை அறியத் தாங்கள் மிக மகிழ்ச்சியடைவீர்கள் என்றறிந்தே இக்கடிதத்தைத் தங்களுக் கெழுதுகிறேன். நம் அரசர் பெருமானும் பெருந்தகை அரசியாரும் அளித்த கப்பல்களுடன் நான் முப்பத்து மூன்று நாட்களில் இந்தியத் தீவுகளை யடைந்தேன். எண்ணிக்கையற்ற மக்கள் வாழும் பற்பல தீவுகளை நான் அங்கே கண்டேன். மேன்மை மிக்க அரசர் பெருமானுக்கும் அரசியாருக்கும் சார்பாக நான் அவற்றையெல்லாம் நம் உடைமையாக்கினேன். நம் அரசுக் கொடியுடன், நான் இத்தீவுகளை நம் அரசுக்கு உரிமையாக்கிச் செய்த அறிவிப்பை யாரும் மறுத்துரைக்கவில்லை.

நான் முதன் முதலில் கண்ட தீவுக்கு அதிசயமான இத்தீவுகளையெல்லாம் அளித்த விண்ணகத்தின் இறைவன் நினைவாக சான் சால்வடார் என்ற அவன் பெயரையே சூட்டினேன். இத்தீவை அங்குள்ள மக்கள் குனாகானி என்று அழைக்கிறார்கள். இரண்டாவது தீவுக்கு இஸ்லாடி சாண்ட மாரியா என்றும் மூன்றாவதற்கு பெரான்டினா என்றும் நான்காவதற்கு லா இஸ்லா பெல்லா என்றும், ஐந்தாவதற்கு லா இஸ்லா ஜுலானா என்றும் பெயரிட் டேன். இவ்வாறாக நான் கண்டு பிடித்த ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு புதுப் பெயரிட்டேன்.

ஜுலானாத் தீவை நான் அடைந்தவுடன் அதன் மேல் கரையோரமாகச் சென்றேன். அப்பகுதிதான் சீன நாட்டைச் சேர்ந்த கத்தேயோ மாநிலமாக இருக்குமோ என்று நான் ஐயுறும் வண்ணம் அந்தக் கரை நீண்டு கொண்டே சென்றது. அந்தத் தீவில் நான் சென்ற வழியில் பட்டணங்களோ நகரங்களோ காணப்படவில்லை. சிறு சிறு கிராமங்களே தென்பட்டன. அந்தத் தீவின் குடி மக்கள் யாருடனும் நான் பேச முடியவில்லை. ஏனெனில் அவர்கள் என்னைக் கண்டவுடன் ஓடத் தொடங்கி விட்டார்கள். ஏதாவது ஒரு நகரத்தைக் காணலாம் என்ற நம்பிக்கையோடு நான் சென்று கொண்டேயிருந்தேன். ஆனால், பல காதங்கள் சென்ற பின்னும் பயனில்லை. கரையோ வடக்கு நோக்கி என்னை நடத்திக் கொண்டு சென்றது. குளிர்காலம் துவங்கிவிட்டபடியால் நான் தெற்கு நொக்கித் திரும்பி ஒரு குறிப்பிடத்தக்க துறை முகத்திற்கு வந்தேன். பிறகு இரண்டு ஆட்களை உள் நாட்டுப் பகுதிக்கு அனுப்பி ஏதாவது நகரமோ அல்லது யாராவது அரசரோ இருப்பதையறிந்து வரச் செய்தேன். அவர்கள் மூன்று நாள் பயணம் மேற்கொண்டும், சிறு சிறு கிராமங்களையும் அங்கு வாழும் எண்ணற்ற மக்களையும் கண்டு வந்தார்களே தவிர, வேறு முக்கியமான எதையும் காண முடியவில்லை. ஆகவே, பேசாமல் திரும்பி வந்து விட்டார்கள்.

ஏற்கெனவே நான் பிடித்து வைத்திருந்த இந்தியர்கள் மூலம் அது ஒரு தீவு தான் என்று அறிந்தேன். அதன் கரையோரமாகவே கிழக்கு நோக்கிச் சென்றேன். அது முடியும் இடத்தில் உள்ள முனைக்குச் சென்ற பின், அங் கிருந்து பதினெட்டுக் காத தூரத்தில் மற்றொரு தீவு இருக்கக் கண்டேன். அந்தத் தீவிற்கு நான் உடனே லாஸ் பானோலா என்று பெயரிட்டேன்.

அந்தத் தீவுக்குச் சென்று அதன் வடபகுதியில் கிழக்கு நோக்கி 178 காதம் வரை சென்றேன். ஜுலானாவைப் போலவே இதுவும் மிக வளம் நிறைந்த பூமியாக உள்ளது. கடற்கரையோரங்களில் வசதியான துறைமுகங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெரிய பெரிய ஆறுகளும், உயர்ந்த மலைகளும் மலைக்குவடுகளும், ஆயிரக்கணக்கணக்கான வகைகளைச் சேர்ந்த மிக உயரமான வானளாவிய மரங்களும் பச்சைப்பசேலென்று பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் இலை தழைகளுடனேயே இருக்கும் என்று சொன்னார்கள். அது நம்பும்படியாக வேயிருந்தது. சில மரங்கள் பூத்திருத்தன; சில மரங்கள் பழுத்திருந்தன. ஒவ்வொரு வகை மரமும் அவ்வவற்றின் பருவத்திற்கேற்ற நிலையில் விளங்கின. தென்னை பனை இவற்றின் வகையைச் சேர்ந்த ஏழெட்டு விதமான மரங்கள் அங்கே இருக்கின்றன. அவை யாவும் பார்க்க அழகாகவும் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. பைன் மரக்காடுகளும் ஆங்காங்கே யிருந்த சமவெளிப் பகுதிகளும் அழகானவை. அங்கே தேன் இருக்கிறது. வானம்பாடிகள் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கின்றன. வகை வகையான பழங்களும் வித விதமான பறவைகளும் காணப்படுகின்றன. சமவெளிகள் உழவுத் தொழிலுக்கு ஏற்றவையாயிருக்கின்றன. மேல் தீவில் பலவிதமான உலோகங்கள் இருக்கின்றன. ஆடுமாடுகள் வளர்ப்பதற்கும், நகரங்கள் அமைப்பதற்கும் ஏற்ற பகுதிகள் பல இருக்கின்றன. ஓடைகளிலும் ஆறு களிலும் தங்கம் நிறைய இருக்கிறது. தங்கச்சுரங்கங்களும் வேறு உலோகச் சுரங்கங்களும் இருக்கின்றன.

இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் ஆடையுடுத்துவதே யில்லை. அந்த மக்களிடம் எவ்விதமான ஆயுதங்களும் இல்லை. அவர்கள் நல்ல உடற்கட்டும் அழகும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஆயுதம் நுனியில் கூரான சிறு கம்பு கட்டிய பிரம்புதான். அவர்கள் புது மனிதர்களைக் கண்டதும் பயந்து ஓடுகிறார்கள். பிறகு சிறிது பழக்கம் ஏற்பட்டதும் மிகத்தாராளமாகப் பழகுவதோடு, தங்களிடம் உள்ள பொருள்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். எதைக் கேட்டாலும், உடனே கொடுத்துவிடுகிறார்கள். சில மாலுமிகள் சிறிய கண்ணாடிப் பொருள்களைக் கொடுத்துவிட்டு தங்கம் வாங்கினார்கள் அந்த எளிய மக்கள் அந்தக் கண்ணாடித்துண்டுகளை வைர மணிகளைப் பெற்றது போல் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு தங்களிடம் உள்ள தங்கத்தை அப்படியே கொடுத்து விட்டார்கள். இவ்வாறு செய்வது சரியல்ல என்று தடுத்ததுடன், அவர்கள் திருப்தியடையும்படி ஆயிரக்கணக்கான அதிசயப்பொருள்களை வழங்கினேன். அவர்கள் நம்மிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிறகு அவர்களை கிறிஸ்தவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். அவர்களுக்குத் தொழுகை முறைகளோ, மதங்களோபற்றி எதுவும் தெரியாது. எல்லா சக்தியும் வானத்திலிருந்து வருவதாக மட்டும் நம்பினார்கள். எங்களையே வானத்திலிருந்து வந்தவர்கள் என்று எண்ணித் தான் வரவேற்றார்கள். கப்பல்களையோ, உடையுடுத்திய மனிதர்களையோ முன்பின் பார்த்திராததால் தான், நாங்கள் வானத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.

முதன் முதலில் நான் இறங்கிய இந்தத் தீவில், சில மக்களைப் பலவந்தமாகப் பிடித்தேன். அவர்கள் அச்சம் அகன்றபின் சைகை மூலமாகப் பேசி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டோம். அவர்களின் மூலம் நான் அந்தப் பகுதிகளைப்பற்றிக் கேட்டறிந்து கொண்டேன். அவர்கள், வேலைகளுக்கு நன்கு பயன்பட்டார்கள் அவர்களை இன்னும் நான் வைத்திருக்கிறேன். இவ்வளவு பழகிய பிறகும் இன்னும் அவர்கள் நான் வானத்திலிருந்து வந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு போனாலும் அவர்கள் மற்ற குடிமக்களுக்கு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். உடனே மற்றவர்கள், வீட்டுக்கு வீடு ஓடி, "வானத்திலிருந்து வந்தவர்களை வந்து பாருங்கள் ! வாருங்கள் வாருங்கள்!" என்று கூவுவார்கள். ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பெரியவர்களும் ஒருவர் பாக்கியில்லாமல் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் கூடிவிடுவார்கள். ஒவ்வொருவரும் குடிப்பதற்கும் உண்பதற்கும் ஏதாவது கொண்டு வந்து பயபக்தியுடன் என் முன் படைப்பார்கள்.

அந்த மக்கள் கடலைக் கடக்கச் சிற்றோடங்களையே பயன்படுத்தி வந்தார்கள். இந்த ஓடங்கள் ஒரே மரத்தாலானவை. சில சிறியவை, சில பெரியவை. பெரிய ஓடத்தில் சுமார் 70 அல்லது 80 பேர்வரை ஏறிச் செல்ல முடியும். ஏறியுள்ள ஒவ்வொருவரும் துடுப்புவலித்துக் கொண்டு போவார்கள். இந்த ஓடங்களிலேயே அவர்கள் அந்தத் தீவுக்கூட்டங்களுக்கிடையே போய் வருவார்கள். பொருள்களை ஏற்றிச் சென்று வாணிபம் நடத்துவார்கள். இந்தப் பற்பல தீவுகளிலும் வாழ்ந்த மக்களிடையே அதிகமான வேற்றுமை எதனையும் நான் காணவில்லை. ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும். பேச்சும் கூட மற்ற தீவைச் சேர்ந்தவர்களுக்கும் புரிவதாயிருந்தது. இதனால் தான் இவர்கள் எல்லோரையும் நம் சமயத்தில் எளிதாகச் சேர்த்துவிடலாம் என்றும், இவர்களின் பேரரசரின் ஒப்புதல் கிடைக்கும் என்றும் நான் நம்பிக்கை கொண்டேன்.

ஜூலானா என்ற தீவு இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்துப்பார்த்தால் கூட அவற்றிலும் பெரியதென்றே சொல்லவேண்டும். இந்தத் தீவில் மேல்திசைப் பக்கம் இரண்டு மாநிலங்கள் உள்ளன. அவற்றிற்கு நான் செல்லவில்லை. இவற்றில் ஒன்றின் பெயர் அவான் என்பதாகும். இங்கு மக்கள் வாலுடன் பிறக்கிறார்கள். 

எஸ்பானோலர் என்ற தீவு ஸ்பெயின் ஆளுகைக்குட்பட்ட நிலங்கள் அனைத்தையும் விடப் பெரியது. இங்கு தங்கச் சுரங்கங்கள் உள்ளன . இங்கிருந்து கொண்டு மற்ற தீவுகளுடனும், கான் பேரரசருக்குச் சொந்தமான மற்ற பகுதிகளுடனும் இலாபந்தரும் வாணிபம் செய்யலாம். இங்கு நான் ஒரு பெரிய நகரத்தை உரிமையாக்கிக் கொண்டுள்ளேன். இந்த நகரத்திற்கு லாவில்லா டி நேவி டாட் என்று பெயரிட்டுள்ளேன். இங்கு ஒரு பாதுகாப்புக் கோட்டை கட்டியிருக்கிறேன். இந்தக் கோட்டையில் நம் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுசரணையாக நம் ஆட்கள் சிலரைக் குடியிருக்கச் செய்திருக்கிறேன். அவர்களுக்குத் துணைக்கு வேண்டிய ஆயுதங்களும் வெடிமருந்துகளும், படகு ஒன்றும். ஓராண்டுக்குக் காணக் கூடிய உணவுப் பொருள்களும் விட்டு வந்திருக்கிறேன். இவர்களிடையே கடலனுபவம் மிகுந்த ஒரு தலைவனும் இருக்கிறான். இந்தத் தீவின் அரசன் என் சிறந்த நண்பன். அவன் என்னைத் தன் அண்ணன் என்றே பாராட்டுபவன். அவன் மனம் மாறி நம் ஆட்களுடன் பகைமை கொண்டாலும் கூடப் பயமில்லை. ஏனெனில் அவனுக்கோ அவனு டைய குடிமக்களுக்கோ ஆயுதங்களை உபயோகிக்கத் தெரியாது. மேலும் முன் நான் சொன்னபடி அம்மக்கள் மிகவும் அச்சமுடையவர்கள். ஆகவே, அங்கு நான் விட்டு வந்த சிறு கூட்டத்தினரே அந்தத் தீவு முழுவதையும் அழிக்க வேண்டு மென்றாலும் அழித்துவிடலாம். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்தால், தங்களுக்கு எவ்விதமான ஆபத்துமின்றி அவர்கள் நன்றாக வாழ்ந்து வரலாம்.


இந்தத் தீவுகளில் இருப்பவர்கள், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மனைவியே கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அரசன் மட்டும் இருபது மனைவிமார் வரையில் வைத்திருக்க உரிமையுண்டு. அங்கு ஆண்களை விடப் பெண்களே அதிகமாக உழைக்கிறார்கள். பெண்களுக்குத் தனிச் சொத்து உள்ளதா என்பதை இன்னும் நானறிந்து கொள்ளவில்லை. ஆனால், பொதுவாக ஒருவர் வைத்திருப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். முக்கிய உணவுப்பொருள்களில் இந்தப் பகிர்வு முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீவுகளில், பலர் எதிர் பார்த்தபடி அகோரப்பிறவிகள் எதையும் நாங்கள் காணவில்லை. இங்குள்ள மக்கள் எல்லோருமே நல்ல அழகிய தோற்றமுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் கினியாவில் உள்ள நீக்ரோக்களைப் போல் இல்லை. நீண்ட கூந்தலையுடைய தலையுடன் காட்சியளிக்கிறார்கள். சூரியனின் கதிர்கள் நேராகப் பாயும் கடுமையான வெப்பமுடைய நாடு அல்ல என்றாலும், பூமத்தியரேகைக்கு 26 டிகிரி தள்ளியிருந்தாலும் சூரிய வெப்பம் இங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மலைகள் மிகுந்திருப்பதால் வாடைக்காலம் குளிர் அதிகமாயிருக்கிறது. ஆனால் இங்குள்ளவர்கள் பழக்கத்தினாலும், சூடுண்டாக்கும் உணவுகளை உண்பதன் மூலமாகவும் குளிரைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

இந்தத் தீவுகளில் நான் இராட்சதப் பிறவிகள் எதையும் சந்திக்கவில்லை. ஆனால், இந்தியத் தீவுகளில் இரண்டாவதாக உள்ள தீவில் இருப்பவர்கள் மனித இறைச்சி தின்னும் பழக்கமுடையவர்கள். இவர்கள் வில்லும் அம்பும் ஆயுதமாக உடையவர்கள். இரும்பு கிடைக்காததால் அம்பின் நுனியில் கூர்மையான மரப்பலகையே அமைத்து வைத்துள்ளார்கள். மற்ற தீவுகளில் உள்ள மக்கள் அஞ்சிய இயல்புடையவர்கள். அவர்களிடம் இந்த மக்கள் கொடுமையாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் பெண்களைப் போல் கூந்தல் வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், பிற தீவு மக்களுக்கும் இவர்களுக்கும் வேறு எவ்விதமான வேற்றுமையும் புலப்படவில்லை.

மனித இறைச்சி, தின்னும். இந்த இந்தியர்கள் வேறு தீவுமக்கள் யாருடனும், உறவுவைத்துக் கொள்வதில்லை. ஆனால், மாட்ரிமோனியேர் தீவில் உள்ள பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்கள். இந்தப் பெண்கள் வில்லம்பு உபயோகிப்பதில் வல்லவர்கள். போரில் தங்களைக் காத்துக் கொள்ள செப்புத் தகடுகளால் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய தீவில் ஓர் ஆண்பிள்ளை கூட இருக்க இடமளிப்பதில்லை. எஸ்பானோலாவைவிடப் பெரிய ஒரு தீவு இருக்கிறதென்று சொன்னார்கள். அங்குள்ள மக்களுக்குத் தலையில் முடியேயில்லை. இந்தத் தீவுகளிலிருந்து மாதிரிக்காகச் சில இந்தியர்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.

முடிவாகச் சொன்னால் மேன்மைதங்கிய மாமன்னரும் பேரரசியாரும், விரைந்து முடித்த இந்தப் பயணத்தைக் கொண்டு நான் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் தங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்க முடியுமென்பதை அறிந்துகொள்ளலாம். அவர்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்தால் போதும்; வாசனைப் பொருள்களும் பருத்தியும் தவிர, கிரேக்க நாட்டிலும், சியோங் தீவிலுமே கிடைக்கக் கூடிய பசைப் பொருளும், கரும்போழை மரமும் எத்தனை கப்பல் வேண்டுமானாலும் ஏற்றி அனுப்புவேன். உத்தரவிடும் எண்ணிக்கையுள்ள அடிமைகளைப் பிடித்து. ஏற்றுமதி செய்தனுப்புவேன். சீனக்கிழங்கும், கருவாப்பட்டையும்கூட நான் கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் நான் அங்கு வீட்டுவந்தவர்கள் அங்கு கிடைக்கும் எத்தனையோ பொருள்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். கப்பல்கள் மட்டும் என் தேவைக்குச் சரியானபடி பயன்பட்டிருந்தால் இன்னும் எத்தனையோ செயல்கள் செய்திருப்பேன்.

தன்வழியில் நடப்போருக்கு வெற்றியளிக்கும் என்றுமுள்ள இறைவன் என் பங்கில் தன் கருணையை நிறைய வழங்கியிருக்கிறான். இந்தத் தீவுகளைப் பற்றி. இதற்கு முன் பேசியவர்களும் எழுதியவர்களும், இவற்றைப் பாராமலே பேசியும் எழுதியுமிருப்பதால், அவை யாவும் கட்டுக் கதைகள் போல் தோன்றுகின்றன. அவையெல்லாம் வெறும் அனுமானங்களே.

மேன்மைதங்கிய அரசருக்கும் அரசியார்க்கும், பெரும் வெற்றியைத் தேடித்தந்த கருணைமிக்க இறைவனுக்கு, நன்றி செலுத்தி எல்லோரும் தொழுது விழாக் கொண்டாடவேண்டும். இவ்வளவுபெரும் தொகையினரான மக்களை கிறிஸ்தவ சமயத்தில் சேர்க்கும் வாய்ப்பையளித்தமைக்கு ஸ்பெயின் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ நாடுகள் அனைத்துமே மகிழ்ச்சியடைய வேண்டும்.

சுருக்கமாக இருந்தாலும் மேற்குறித்தவைதான் உண்மையில் செய்யப்பட்ட செயல்களாகும்.

கானரித் தீவுகளைக் கடந்தபின் 1493 - ம் ஆண்டு பிப்பரவரி மாதம் 15 ம் நாள் கப்பலில் இருந்து எழுதியது.

தங்கள் பணிவுள்ள.

பெருங்கடல் தளபதி.

இக்கடிதத்துடன் இணைந்துவந்த குறிப்புச் செய்தி இது:

இதை எழுதியபின், ஸ்பானியக் கடலில் வந்து கொண்டிருக்கும்போது தெற்கிலும் தென்மேற்கிலும் எழுந்த ஒரு பெருங் காற்று கப்பலைத் தாக்கியது. ஆகவே, கப்பலை நான் காற்றின் போக்கில் விடவேண்டியிருந்தது. ஆனால் இன்று லிஸ்பன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தேன். இது உலகத்திலேயே மிக அதிசயம்தான். இங்கிருந்து நான் மேன்மைதங்கிய அரசர்க்கும் அரசியார்க்கும் கடிதம் எழுத முடிவுசெய்தேன். இந்தியத்தீவுகளில் எப்போதும் மே மாதத்துப் பருவநிலை இருப்பதைக் கண்டேன். முப்பத்து மூன்று நாட்களில் நான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டேன். 28 நாட்களில் நான் திரும்பியிருப்பேன். ஆனால், புயல் எழுந்து 23 நாட்கள் என்னைக் கடலில் அலைக்கழிய வைத்து விட்டது. இங்குள்ள கப்பல்காரர்கள், இவ்வளவு மோசமான குளிர்காலத்தைக் கண்டதில்லையென்றும், பல கப்பல்களை இழக்கும்படி நேரிட்டதென்றும் கூறுகிறார்கள்.

மார்ச்மாதம் 4ம் நாள் எழுதியது.

கொலம்பஸ் எழுதிய இந்தக்கடிதத்தில் அவன் தன் அனுபவங்களைச் சுருக்கி எழுதியிருந்தான் என்றாலும், சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதியிருந்தான். சில இடங்களில் அவன் தான் காணாதவைகளை, அனுமானத்தின் பேரில் எழுதியிருந்தான். ஒரு தலைநகரத்தைக் கூடக் காணாவிட்டாலும், அவன் அந்தத் தீவுக் கூட்டங்கள் ஆசியப்பகுதியைச் சேர்ந்தவை என்றே நம்பிக்கொண்டிருந்தான்.