கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர் பாடல்கள்

  • பக்கம் 228 - 232

ஆனந்தக் களிப்பு - இசை

பல்லவி

தொகு
பாபஞ் செய் யாதிரு மனமே – நாளைக்
கோபம் செய்தே யமன் கொண்டோடிப் போவான்

கருத்து உரை

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் விளைகிறது. ஆகவே பாவம் செய்யாதிரு மனமே.நீ நிரந்தரமானவன் இல்லை. உன்னை உன் உயிரை என்றைக்காயினும் எமன் கொண்டோடிப் போவான். தீமை செய்தவர்களின் மரணம் எமனின் கோபத்தால் துயரம் மிகுந்ததாக இருக்கும். ஆகவே பாபஞ் செய்யாதிரு மனமே.

சரணங்கள்

தொகு

சாபம் கொடுத்திட லாமோ – விதி

தன்னை நம் மாலே தடுத்திடல் ஆமோ

கோபம் கொடுத்திட லாமோ – இச்சை

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபஞ்)

கருத்து உரை

தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது. விதியை நம்மால் தடுக்க முடியாது. கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது. பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.

சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தாற்

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் – எந்த

நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம் (பாபஞ்)

கருத்து உரை

பொய் சொல்லுதல் ஏமாற்றுதல் நேர்மையற்ற செயல்களை செய்ய்தல் கூடாது. செய்தால் உறவினர்கள் நண்பர்கள் உன்னை விட்டு விலகி விடுவர். நல்ல பழக்க வழக்கங்கள் பக்தி உண்மை இவைகள் நாளும் நன்மை தருவதுடன் அனைவரிடமும் நட்பையும் நேசத்தையும் கொண்டு வரும்.

நீர்மேல் குமிழியிக் காயம் – இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம் (பாபஞ்)

கருத்து உரை

நீர்மேல் குமிழி போன்று இவ்வுடம்பு நிலையில்லாதது. பிறந்து உலகியல் துன்பத்தில் வேகிறது. ஆசையினாலும் பாவத்தினாலும் இந்த உடம்பை ஏன் மீண்டும் உற்பத்தி செய்ய வேண்டும். இது மாயம் உண்மையில்லாதது ஆராய்ந்து இந்த உண்மையை அறிந்து கொள். ஆகையால் மறுபிறப்பு வேண்டாம். எல்லா உயிர்களையும் நேசிப்பது பற்றற்று இருப்பதற்கான வழி. மறுபிறப்பை அடைக்கும் வழி.

நந்த வனத்திலோ ராண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தாண்டி (பாபஞ்)

கருத்து உரை

ஆண்டி என்பது ஆன்மாவைக் குறிக்கும். குயவன் கடவுள். ஆன்மா கடவுளிடம் 4+6 மாதங்கள்(10) வேண்டி இந்த உடலை(தோண்டி) பெற்றது. உடல் பெற்றதன் நோக்கம் இறைவனை உண்மையை.அடைதல். எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல். ஆனால் அதை செய்யாமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கி உடலை நோய் துன்பம் துயரங்களுக்கு ஆட்படுத்தி தன்னையே அழித்துக் கொள்கிறான்.

தூடணமாகச் சொல் லாதே –தேடுஞ்

சொத்துக்களிலொரு தூசும் நில்லாதே

ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்

திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே (பாபஞ்)

கருத்து உரை

எதையும் / யாரையும் / எப்பொழுதும் பழித்துச் சொல்லாதே. தேடும் தனத்தில் ஒரு தூசு கூட நில்லாது போய்விடும். மூன்றுவிதமான ஏடணைகள் எனப்படும் ஆசைகளாகிய மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை பொல்லாதவையாகும். சிவத்தின்மேல் ஆர்வம் கொண்டால் எமலோகம் போகாதிருக்கலாம்.

நல்ல வழி தனை நாடு – எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு (பாபஞ்)

கருத்து உரை

நல்ல வழியில் செல். பக்தி தியானம் பிறருக்கு உதவுதல். மரணம் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். மரணத்திற்கு தாக்கு பிடிக்காத எல்லாவற்றையும் உதறி தள்ளு. நித்தியமான உண்மையான அந்த இறைவனையே நாளும் தேடு. நல்லவர்களின் பேச்சைக் கேள். அவர்களுடன் நட்பு கொள். குருவையும் திருவையும் நெஞ்சில் வாழ்த்தி வணங்கு.

நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே – கெட்ட

பொய்ம் மொழிக் கோள்கள் பொருந்தவிள் ளாதே (பாபஞ்)

கருத்து உரை

நல்லோரை காண்பதும் நன்மையை தரும். ஆதலால் நல்லோரை விலக்க கூடாது.அறங்கள் நாலு எட்டு(12) நான்கு வேதங்கள் அவற்றின் பிரிவுகள் எட்டு மொத்தம் 12 அவற்றின் சாரம் அறம் செய்தல். அறம் செய்வதை தவிர்க்க கூடாது. தினமும் அறம் செய்ய வேண்டும். ஒருவரிடமும் பகைமை கொள்ளக் கூடாது. கெட்ட பொய் குறை கூறுதல் பொருந்த சொல்லுதல் கூடாது.

வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு (பாபஞ்)

கருத்து உரை

வேதங்கள் வழியில் வாழ்க்கையை அமைத்து கொள்.நல்லோர் சொல்லும் வழிகளையே பின்பற்றி செல்.உண்மை நிலையை பிறருக்கு உபதேசி. பொல்லாத கோபத்தை கையாளக் கற்றுக் கொள்.யோசித்து விழிப்புடன் இருந்தால் கோபத்திற்கு அடிமையாகாமல் இருக்கலாம்.

பிச்சையென் றொன்றுங்கே ளாதே –எழில்

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே

இச்சைய துன்னையா ளாதே – சிவன்

இச்சை கொண்டவ்வழி யேறிமீ ளாதே (பாபஞ்)

கருத்து உரை

பிச்சை என்று ஒன்றையும் கேட்க கூடாது. அழகான பெண்களை கண்டு மயங்கி திரியாதே. பெண்ணை எப்போது மறக்க கற்றுக்கொள்கிறாயோ அப்போதுதான் உன்னை நினைக்க கற்றுக்கொள்வாய். பெண் பொண் மண் போன்ற இச்சைகள் உன்னை ஆள விடாதே. ஒன்றை மற்றொன்றாக காட்டுவது மாயை. மாயையில் மயங்காமல் இருக்க சிவனை விரும்பு. உண்மையை விரும்பு.

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு (பாபஞ்)

கருத்து உரை

இதுதான் உண்மையா? இதுதான் நானா? என இடைவிடாமல் ஆராய்சி செய்வதுதான் ஞான மார்க்கம். அந்த வழியில் செல். உன் உண்மை இயல்பை உணர்ந்து கொள். வெறுமை வெட்ட வெளி அதில் புகு. அஞ்ஞானமாகிய அறியாமையை விலக்கு. உண்மையை தேடி உன்னை தேடி செல் என நாடி வருபவர்களுக்கு சொல்.

மெய்க்குரு சொற்கட வாதே – நன்மை

மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே

பொய்க்கலை யால் நடவாதே – நல்ல

புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே (பாபஞ்)

கருத்து உரை

உண்மையான குருவின் சொற்படி நட. அவரின் சொற்களை மீறாதே. நன்மை செய்வதை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து நன்மை செய்து கொண்டிரு. பொய் சொல்லாதே. நல்ல புத்தியை பொய்யான வழியில் பயன்படுத்தாதே. புத்திசாலித்தனம் அதிகமாக பயன்படாது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கின்ற புத்திசாலித்தனம் இல்லாவிட்டால்.

கூடவருவ தொன்றில்லை – புழுக்

கூடடெடுத்திங்கன் உலைவதே தொல்லை

தேடரு மோட்சம தெல்லை – அதைத்

தேடும் வழியைத் தெளிவோரு மில்லை (பாபஞ்)

கருத்து உரை

இறக்கும் போது நாம் செய்த பாவ புண்ணியங்களை தவிர வேறொன்றும் கூட வராது. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே. பட்டுப்புழு தன்னை சுற்றி தானே கூடு அமைத்து அடைத்து கொள்ளும். மனிதனும் தன் ஆசையினால் உடல் என்ற கூட்டை மறுபடி மறுபடி உற்பத்தி செய்தி அடைபட்டு கொள்கிறான். உலகில் பிறப்பதற்கான நோக்கம் மோட்சம் தான் அதாவது விடுதலை. நாம் யார் என்ற உண்மையை உணர்ந்து கொள்வது. ஆசைகள் நம்மை உணரவிடாமல் மயக்கி விடுகின்றன. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்குவதை தவிர நாம் வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம். தெளிந்த அறிவு உடையவர்கள் கூட வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயனிப்பதில்லை.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த

ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

முந்தி வருந்தி நீ தேடு – அந்த

மூலம் அறிந்திட வாமுத்தி வீடு

கருத்து உரை

நாம் அனைவரும் ஐம்பூதங்களான(நீர் நிலம் காற்று மண் ஆகாயம் ) ஆகிய இயற்கையால் சூழப்பட்டிருக்கிறோம். நாம் எதை நாடுகிறோமோ அதை ஐம்புலன்களால் அடைகிறோம். உண்மையை நாடும் போது ஐம்புலன்கள் அமைதி அடையும். உடம்பு தேர் ஐம்புலன்கள் குதிரைகள் புத்தி கடிவாளம் ஜுவன் தேர்பாகன் ஆன்மா பிரயானம் செய்பவர். இடைவிடாமல் விழிப்போடு இரு. வாழ்க்கையில் கஷ்டபடாமல் எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கலனா அதுக்காக நீ கடுமையா உழைக்கலனு அர்த்தம். உண்மையை அடைவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர தயாராக இருக்க வேண்டும். எது ஒன்றையும் அறிய அதன் மூலத்தை அடைய வேண்டும். தாயை அறிந்தால் பிள்ளையை அறியலாம். தாயை போல பிள்ளை. மூலாதாரத்தை அடையும் போது முத்தி பெறலாம்.

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை

ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்

கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை (பாபஞ்)

கருத்து உரை

உடல் மனம் புத்தி தான்மை(அகங்காரம், நான்) ஆகிய நான்கு உறைகளுக்கு அப்பால் ஆன்மா உள்ளது. நான்கு கோட்டைகளின் பகைமைகளை வென்று கடந்து சென்றால் ஆன்மாவை அடைந்தால் உலகம் உன்னுடையது. தோற்றம் வேறு உண்மை வேறு. கள்ளப்புலன்கள் உண்மையை உணர்வதில்லை. ஆன்மா ஒன்று மட்டுமே உள்ளது. ஆனாலும் எப்படி இவ்வளவு வேறுபாடுகள் தோன்றுகிறது? புலன்களின் விஷமங்களை பார்த்தாயா? ஒன்றை மற்றொன்றாக காட்டுகிறத. இந்த புலன்களை நம்பாமல் எது என்ன? எது உண்மை? என ஆராய்ச்சி செய்தால் முத்தி அடையலாம்.

காசிக்கோடில் வினை போமோ – அந்தக்

கங்கையா டில்கதி தானும் உண்டாமோ

பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல

பேதம் பிறப்பது போற்றினும் போமோ (பாபஞ்)

கருத்து உரை

காசிக்குப் போனாலும் கங்கையில் நீராடினாலும் பாவங்கள் போகாது. பாகற்காயை கங்கையில் கழுவினாலும் அதன் கசப்புத் தன்மை நீங்காது. செய்த நல்வினையும் செய்கின்ற தீவினையும் ஒரு எதிரொலியை காட்டாமல் மறையாது. ஆகவே ஒருவர் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பிறகு ஏன் கடவுளை வணங்க வேண்டும்? முதலில் நாம் வாழ்க்கை என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதுவும் கஷ்டபடாம கிடைப்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் கஷ்டம் நஷ்டம் என்ற விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒருவன் தாமே உழைத்து பாடுபட்டு முன்னேற வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத்தான் கடவுளின் அருள் கிடைக்கும். முயற்சி செய்யாதவர்களுக்கு கடவுளும் உதவ மாட்டார். ஆனால் இந்த காலத்தில் என்ன நடக்கிறது? கடன் தீர மந்திரம். நோய் தீர ஸ்லோகம். கடவுளை வணங்கி விட்டால் நீ கேட்பதெல்லாம் கிடைக்க வேண்டும். ஒருவன் முதலில் யோசிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். வறுமை தீராத நோய்கள் துயரங்கள் விபத்துக்கள் இவற்றிற்கெல்லாம் காரணம் நம் வினைகள். இவைகள் சில நாட்கள் வரையிலோ ஆண்டுகள் வரையிலோ ஆயுள் வரையிலோ தெய்வங்களால் வரையறுக்கப்பட்டவைகளாகும். கடவுளை வவணங்குவதாலோ மந்திரங்களாலோ மாற்றி(ஏமாற்றி) விட முடியாது. கடவுளை வணங்க நாம் கடமைப்பட்டவர்கள் அவ்வளவு தான்.

பொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்

போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்

மெய்யாக வேசுத்த காலம் – பாரில்

மேவப் புரிந்திடில் என்னனு கூலம் (பாபஞ்)

பொய்யாக பாராட்டுதல்- நாம் யார் என்பதே நமக்குத் தெரியவில்லை. இதில் பிறரை பாராட்டுதல் எடை போடுதல் குறை கூறுதல் எல்லாம் தவறாகவே அமையும். முதலில் நான் யார் என்று கண்டுபிடி. தோற்றம் வேறு உண்மை வேறு. மரணம் உன் உண்மை நிலையை உணர்த்திடும். உண்மையை தேடி வாழ்ந்திடு. உண்மையாய் வாழ்ந்திடும் போது உலகம் அனுகூலமாக அமையும்.

சந்தேக மில்லாத தங்கம் – அதைச்

சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்

அந்தமில்லாத வோர் துங்கம் – எங்கும்

ஆனந்தமாக நிரம்பிய புங்கம் (பாபஞ்)

கருத்து உரை

நிலையாக இருப்பது இறைவன், உண்மை. மற்றவையெல்லாம் நிலையில்லாதவை. அவைகளை சார்ந்தால் அழிவு நிச்சயம். உண்மையை சார்ந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாம்.

பாரி லுயர்ந்தது பத்தி – அதைப்

பற்றின பேர்க்குண்டு மேவரு முந்தி

சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி (பாபஞ்)

கருத்து உரை

உண்மையை அடைய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பக்தி மற்றொன்று ஆராய்ச்சி(தியானம்) ஆனால், இரண்டுமே முடிவில் ஒரே உண்மையைத்தான் அடைகின்றன.

அன்பெனும் நன்மலர் தூவிப் – பர

மானந்தத் தேவின் அடியிணை மேவி

இன்பொடும் உன்னுட லாவி – நாளும்

ஈடேற்றத் தேடாய் நீ இங்கே குலாவி (பாபஞ்)

,கருத்து உரை

எல்லா உயிர்களிடத்தும் அன்போடு இருக்க வேண்டும். மண்ணுயிரையும் தன்னுயிர் போல் நினை. இறைவனை நினைத்து மகிழ்வோடு இடையறாது அவன் திருவடியை நினைத்து தியானித்து பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து ஈடேற்றம் காண வேண்டும்.

ஆற்றறும் வீடேற்றங் கண்டு – அதற்

கான வழியை யறிந்து நீ கொண்டு

சீற்றமில்லா மலே தொண்டு – ஆதி

சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கெண்டு (பாபஞ்)

கருத்து உரை

வீடு பேற்றை அடைவதற்கு முழு தியாகமே வழி. அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லோருமே இந்த உலகம் கனவு போன்றது இதிலிருந்து விழித்து கொண்டு உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர். இந்த கனவை தியாகம் செய்து விட்டு உண்மையை நோக்கி இறைவனை நோக்கி செல்லுங்கள்.

ஆன்மாவால் ஆடிடு மாட்டந் – தேகத்

தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்

வையி லுனக்கு வருமே கொண்டாட்டம் (பாபஞ்)

கருத்து உரை

இந்த உலகத்தில் ஆன்மா ஒன்றே உள்ளது. மற்றவைகள் ஆன்மா மீது வரையப்பட்ட சித்திரங்கள். இருப்பதாக தோன்றுகிறது. தோற்றம் வேறு உண்மை வேறு. ஆன்மா நீங்கினால் உடல் வாடிவிடுகிறது. ஆதலால் அந்த ஆன்மாவை உண்மையை உணர்ந்து கொள்வதே குறிக்கோள். இதை நினைவில் கொண்டு இடையறாது தியானித்தால் பேரின்ப நிலையை அடையலாம்.

எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை

எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து

வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த

வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து (பாபஞ்)

கருத்து உரை

வேதத்தின் பிறப்பிடம் இறைவன். அவனை சார்ந்து இன்பம் அடைவோமாக.

இந்தவுலகமு ள்ளு – சற்றும்

இச்சைவையாமலே யென் நாளுந் தள்ளு

செந்தேன் வெள்ளம் மதை மொள்ளு – உன்றன்

சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு (பாபஞ்)

கருத்து உரை

இந்த உலகம் ஒரு சிறைக்கூடம். உடல் ஒரு சிறை. இதில் நாம் அடிமையாக அடைக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். இந்த நினைப்பு தான் வாழ்க்கையை கெடுக்கிறது. நம் ஆசைகளால் தான் இந்த உலகத்தை படைத்து உடலை படைத்து நம்மை நாமே அடிமையாக்கி கொண்டோம். ஆதலால் விழித்திரு. கனவுகள் போல் ஆசைகள் காணாமல் போய்விடும். விட்டு விடுதலையாகி விடுவாய்.

பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே

மைவிழியாரைச் சாராதே – முன்

மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே (பாபஞ்)

கருத்து உரை

பொய் வேதம் என்பது வாழ்வின் குறிக்கோள் இன்பம் என போதிப்பது. அவர்கள் சொற்புத்தியோ சுயபுத்தியோ இல்லாதவர்கள். அவர்கள் பேச்சை கேளாதே. இன்பம் அல்ல முழு தியாகமே வாழ்வின் குறிக்கோள். காமத்திலும் பணத்தாசையிலும் உன்னை அழைத்து செல்கின்றவளை சாராதே. இறைவனிடத்தில் உன்னை அழைத்து செல்லும் பெண்களிடத்திலே நட்பு கொள்ள வேண்டும். சாப்பிடு குடி சந்தோஷமாயிரு இதுவே மக்களின் உறவினர்களின் நண்பர்களின் குறிக்கோள். மரணமோ வெகு அருகில். பிறகென்ன சீக்கிரம் சீக்கிரம் இறை பக்தியிலும் பிறருக்கு உதவி செய்வதிலும் வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்திரு.

வைதோரைக் கூடவையாதே – இந்த

வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே

வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே (பாபஞ்)

கருத்து உரை

அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை. உலகம் முழுவதும் பொய்யாக வாழ்ந்தாலும் நீ நேர்மையாக உன் கடமைகளை செய்து கொண்டிரு. தீயதை செய்யாதே. வீணாக பறவைகள் மீது கல்லெறியாதே. எல்லா உயிர்களும் வாழ வேண்டும். எந்த உயிரையும் கொல்லக் கூடாது. மண்ணுயிரையும் தண்ணுயிர் போல் நினை. அகிம்சையே இறைவனை அடைவதற்கான முதற்படி.

சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்

தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே

தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல

சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே (பாபஞ்)

கருத்து உரை

இறைவனே உண்மை. மற்ற அனைத்தும் நிலையற்றவை கனவு போல் கலைபவை. ஆதலால் இறைவனையே நாடு. சண்டை சச்சரவுகளை தூண்டாதே. தேவையானவைகளில் மட்டும் கவனம் செலுத்து. தவநிலை அதாவது பொறுப்புடன் வாழ்வதை கடைபிடி. தேவையற்ற நூல்கள் சினிமாக்களில் நேரத்தை வீணாக்காதே. உடல் இன்பத்திற்காக என்னவெல்லாமோ செய்து விட்டாய். மரணம் வரப்போகிறதே அதற்காக என்ன செய்திருக்கிறாய்?

பாம்பினைப் பற்றி யாட்டாதே –உன்றன்

பத்தினி மார்களைப் பழித்து காட்டாதே

வேம்பினை யுலகி லூட்டாதே – உன்றன்

வீறாப்புத் தன்னை விளங்க நாட்டாதே (பாபஞ்)

கருத்து உரை

பாம்பு முதற்கொண்டு எந்த உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. நல்ல குணமுள்ள பெண்கள் பிறப்பது அபூர்வம். அப்படிப்பட்ட பெண்களை பழிப்பது உன்னை அழித்துக் கொள்வதற்கு சமம். தீயதை உலகிற்கு கற்றுக் கொடுக்காதே. உன் ஆணவத்தை நிலைநாட்ட முயற்சி செய்யாதே. நான் என்பதை நாய்க்கு போட்டு விட்டு இருப்பதெல்லாம் இறைவனே. செய்வதெல்லாம் இறைவனே. நாமெல்லாம் அவன் கைகளில் வெறும் கருவிகளே என்ற உண்மையை உணர்ந்து அவன் திருவடிகளில் சரணடைவோமாக.

போற்றுஞ் சடங்கை நண்ணாதே – உன்னைப்

புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே

சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்

தாழும் படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே (பாபஞ்)

கருத்து உரை

அறிவுபூர்வமாக பக்தி இருக்க வேண்டும். இல்லையேல் சடங்குகள் கேலிகூத்தாகி விடும். உன் புகழை பலரிடம் சாற்றாதே. இறைவனை உணர்வதற்கே வாழ்க்கை. அதற்கான முயற்சி இல்லையேல் வாழ்க்கை வீண். ஆதலால் இறைவனை தவிர மற்றவை தாழ்ந்தவை. அந்த தாழ்வை உண்டு பண்ணாதே.

கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி

காட்டி மயங்கியே கட்குடியாதே

அஞ்ச வுயிர் மடியாதே – பத்தி

அற்றவஞ் ஞானத்தின் நூல்படியாதே (பாபஞ்)

கருத்து உரை

எல்லா மதங்களும் போதை வஸ்துக்களுக்கு எதிராகவே உள்ளன. ஏனெனில் அது தன்னை தன்னிடமிருந்தே பிரித்து விடுகிறது. மதத்தின் முக்கிய லட்சியம் தன்னை உணர்வது. போதையினால் தண்ணுனர்வு போய்விடுகிறது. நாளாக நாளாக மந்த புத்தி உடையவர்களாக உணர்வற்றவர்களாக ஆகிவிடுவார்கள். ஆதலால் கஞ்சா, கள் குடிக்காதே. உயிர்களை அழித்து ஊண் உண்ணாதே. தேவையற்ற பயனில்லாத நூல்களை படித்து காலத்தை வீணாக்காதே. மரணமோ வெகு அருகில் பிறகென்ன சீக்கிரம் சீக்கிரம் விழித்திரு...

பத்தி யெனுமேணி நாட்டித் – தொந்த

பந்த மற்றவிடம் பார்த்ததை நீட்டிச்

சத்தியமென் றதை யீட்டி – நாளுந்

தன்வச மாக்கிக் கொள் சமயங்களோட்டி (பாபஞ்)

கருத்து உரை

ஒவ்வொரு கணத்தையும் முழு தியானத்திலும் முழு இறைசிந்தையிலும் நாட்டி சத்தியத்தை தன் வசமாக ஈட்டிக் கொள். ஒவ்வொரு கணத்தையும் இதற்கான சந்தர்பங்களாக பயன்படுத்தி கொள். நல்லவற்றின் மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். நாளையே கூட அது நிகழலாம். பொறுமையாக காத்திரு.

செப்பரும் பலவித மோகம் – எல்லாஞ்

சீயென்றொருத்துத் திடங்கொள் விவேகம்

ஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்

ஓர்ந்தறி வாயவ ற்றுண்மைசம் போகம் (பாபஞ்)

கருத்து உரை

பெண்ணாசை,பொண்ணாசை,மண்ணாசை இவை மூன்று அறியாமையால் உண்டாவது. ஆசை என்பதே அறியாமை தான். ஒவ்வொருவரும் பற்றில்லாதவராகவே பிறக்கிறோம். பிறகு எப்படி பற்று பகையால் சீரழிகிறோம். காரணமும் பற்றற்று பிறந்ததாலே தான். தண்ணீர் சூடாகவும் இல்லை குளிர்ச்சியாகவும் இல்லை. அதன் இயல்பு இரண்டையும் கடந்து. அதனால் நம்மால் அதை சூடாக்கவோ குளிர்ச்சியாக்கவோ முடிகிறது. அதேபோல்தான் நாம் பற்றில்லாதவராகவே இருப்பதால் நம்மால் விரும்பவும் வெறுக்கவும் முடிகிறது. இவைகள் நம் இயல்பு அல்ல. வெறும் புற நடவடிக்கைகள். ஏதாவது ஆசை தோன்றும் போது ஆராய்ச்சி செய்து பார். அங்கு உண்மையிலேயே ஆசை இருக்கிறதா? இருந்தால் யாருக்கு இந்த ஆசை நான் இருக்கிறேனே என விசாரணை செய். அவைகள் இல்லாமல் போய்விடும் இதுதான் விவேகம். இந்த விவேகம் என்ற வாளை தூங்கும் போதும் தலையனையில் அடியில் வைத்துக்கொள். ஆசை உன்னை நெருங்கவே நெருங்காது.

எவ்வகையாக நன் னீதி – அவை

எல்லா மறிந்தே யெடுத்து நீ போதி

ஒவ்வாவென்ற பல சாதி – யாவும்

ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி (பாபஞ்)

கருத்து உரை

இறைவனை முதலில் நீ அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிந்து கொள். பின் அவரது ஆணை கிடைத்தால் எல்லா வகையான நீதியையும் மக்களுக்கு போதி. இல்லையென்றால் உன் பேச்சை யார் கேட்பார்கள். கேலிகூத்தாகி விடும். குளத்தை சென்றடைய பல பக்கங்களில் உள்ள படிகளில் செல்வது போல எல்லா மதங்களும் இறுதியில் இறைவனையே அடைகின்றன. ஆதலால் சண்டை சச்சரவுகள் தேவையில்லை.

கள்ள வேடம் புனையாதே – பல

கங்கையிலேயுன் கடம் நனையாதே

கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்

கொண்டு புரிந்து நீ கோள் முனையாதே (பாபஞ்)

கருத்து உரை

உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது நல்லது. நாமாக அந்தந்த விஷயங்களை வாழ்ந்து பார்த்து உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் மட்டுமே அதை மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். ஆனால், இன்றைய காலகட்டத்திலோ பைத்தியங்கள் தான் மக்களுக்கு அதிக அறிவுரை அளிக்கின்றன. அவர்களே பட்டங்கள் வேறு வைத்துக்கொள்கின்றன. சொல் வேந்தர், சொல்லின் செல்வி, தமிழ் கடல், மதகுருமார்கள், போலி சாமியார்கள் அப்பப்பா வேதனை. தாமே அனுபவித்து உணராத ஒன்றை வேறு யாருக்கும் போதிப்பதில்லை என்ற ஒன்றை மட்டும் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இந்த உலகமே தெய்வீகமாகி விடும். தெரியாததை தெரியும் என்பது போல் வேஷம் போடாதே. உன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி சீரழியாதே. உண்மையாக இரு. கங்கைக்கு போனாலும் கர்மம் தொலையாது. மிளகாயை கடித்தால் காரத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாது. பாவம் செய்தால் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். கொள்ளை கொள்ள நினையாதே. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாமே உழைத்து தான் முன்னேற வேண்டும். எந்த கடவள் மீதும் பொறுப்பை சுமத்த முடியாது. எல்லாவற்றையும் நீயாகவே தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும். ஆன்மா உட்பட. நட்பு மிகவும் சிக்கலான விஷயம். எல்லா விஷயங்களையும் ஒவ்வொரு அதிகாரத்தில் விளக்கிய வள்ளுவர் நட்பிற்கு மட்டும் ஐந்து அதிகாரங்கள் அமைத்தார். ஆதலால் அவர் கூரியபடி நட்பை அமைத்து கொள்ள வேண்டும்.

எங்குஞ் சயபிர காசன் – அன்பர்

இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

துங்க அடியவர் தாசன் – தன்னைத்

துதிக்கிற் பதவி அருளுவான் ஈசன் (பாபஞ்)

கருத்து உரை

அங்கிங் கெனாதபடி நீக்க மற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அன்பு நிறைந்து நிற்கும் இதயத்தில் வாசம் செய்கிறான். அடியவர்களுக்கு தாசன். இறைவனை நினைப்பவர்கள் இன்ப பேற்றை அடைவார்கள்.

  • முற்றும் *

கருத்து உரை 2

எங்கேயும் பிரகாசமானவர் இறைவன் அவரை இன்முகத்துடன் இருதயத்தில் இருந்து வாசம் செய்யும் அடியவர்க்கு தன்னை துதிக்கின்ற பதவி அருள்வார் இறைவன் எப்போதும்

  • முற்றும் *
"https://ta.wikisource.org/w/index.php?title=கடுவெளிச்_சித்தர்&oldid=1731367" இலிருந்து மீள்விக்கப்பட்டது