கட்டுரைக் கதம்பம்/சிலம்பை யாத்த சீர்சால் புலவர்

9. சிலம்பையாத்த சீர்சால்புலவர்

சிலம்பையாத்த சீர்சால்புலவர் யாவரோ என ஐயுறவேண்டா. அவரே தண்டமிழ் மொழியில் தலைசிறந்து விளங்கும் ஐம்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் என்னும் சீரிய நூலை யாத்த இளங்கோ அடிகளார் ஆவார். அன்னாருடைய வாழ்க்கை வரலாற்றைச் சிறிது ஈண்டுச் சிந்திப்போமாக.

திருவள்ளுவர் தம் பொருட்பாலில் குடிமை என்னும் இயலில்

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பிற் தலைப்பிரிதல் இன்று."

என்னும் குறளைப் பாடியுள்ளார். அன்னதற்கு உரை கூறிய பரிமேலழகர், தம் விளக்கவுரையில், "பழமையாவது தொன்று தொட்டு வருதல்; அது சேர சோழபாண்டியர் என்பது போல ஆதிகாலந் தொடங்கி மேம் பட்டுவருதல் என்பதாம்" என்று கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டுப் பழங்குடி மூவேந்தர்தம் குடி என்பது புலனாகிறது அன்றோ ? இப் பழங்குடிகளுள் ஒன்றாகிய சேரர் குடி, சிறப்புடைய குடிஎன்பது சேர, சோழ, பாண்டியர் என்னும் வைப்பு முறையில், முதன்மைக்கண் வைத்துப் பேசப்பட்டு வருதலாலும், சேரர்கட்கு வானவர் என்னும் சொல் இலக்கியங்களில் பெய்யப்பட்டிருத்தலாலும், ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனாரும் மூவேந்தரது மலர்களைக் குறிக்கையில், "போந்தை, வேம்பே ஆரெனவரூஉம் மாபெருந் தானையர்" என முதற்கண் சேரர் மாலையை வைத்திருப்பதனாலும் ஒருவாறு உணரலாம். சோழ பாண்டியர்கள் தம்மை, முறையே சூரிய மரபினர், சந்திர மரபினர் என்று கூறிக் கொள்ளுதற்கேற்பச் சேரர்கள் தம்மைத் தீக்கடவுள் மரபினர் எனச் செப்பிக்கொள்ளும் சிறப்பு வாய்ந்தவர்கள். இதனை வில்லியார் தம் பாரதத்தில், இவன் “செந்தழலோன் மரபாகி ஈரேழுலகம் புகழ்சேரன்” என்று குறிப்பிட்டிருத்தல் கொண்டும் நன்கு உணரலாம்.

இச் சேரமரபினர் பாரத காலத்திலும் பெருஞ் சிறப்புடன் வாழ்ந்தவர்; கௌரவ பாண்டவர்கள் போரிட்டபோது அவர்கள் படைகள் சோர்வுறாதிருக்க உண்டி கொடுத்து ஊக்கமூட்டிய உதியஞ் சேரலாதன் செயலால் இதனைத் தெள்ளெனத் தெளியலாம். இதனைப் புறநானூறு என்னும் புராதன நூல் “ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்று கூறி மகிழ்கிறது. சோர் புகழ்களையே செப்புதற்குரிய நூல் பதிற்றுப்பத்து என்னும் பெயரால் இன்றும் இருப்பதிலிருந்தும் இம் மரபினர் அருமையையும் பெருமையும் நன்கு அறியலாம்.

இன்னோரன்ன சீரும் சிறப்பும் வாய்ந்த சேரர் குடியில் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னன் இற்றைக்குச் சற்றேறக்குறைய 2000 ஆண்டுகட்கு முன்னர், சேரநாட்டு மன்னனாய்த் திகழ்ந்துவந்தனன். இமய வரம்பன் என்னும் அடைமொழி, இப்பெருவேந்தனது வடநாட்டு வெற்றியை அறிவிப்பதாகும். இதனால், இமயம் வரை சென்று ஆண்டுளாரை வென்று மீண்டு அன்னதற்கு அறிகுறியாகத் தன்குலக் கொடியாகிய விற்பதாகையினை இமயத்து நிலை நிறுத்தி மீண்டான் என்பதும் புலனாகிறது.

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொ டாயிடை

மன்மீக் கூறுகர் மறந்தபக் கடந்தே”

எனப் பதிற்றுப்பத்து நூல் கூறுவதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

நெடுஞ்சேரலாதனுக்கு இரு இல்லக் கிழத்தியர் வாய்த்தனர். ஒருத்தி சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பவள். மற்றொருத்தி வேளாவிக் கோமானான பதுமன் என்பான் மகள். இவள் பெயர் இன்னது என்பதை அறிதற்கில்லை. நற்சோணை ஈன்ற மக்களே செங்குட்டுவனும், இளங்கோ அடிகளும் ஆவார். பதுமன் மகள் பெற்ற மைந்தர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவார். இவ்விரு மைந்தருள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரன் அரச மரபிற்கேற்ற அருஞ்சிறப்புடன் வளர்க்கப்பட்டு, அரியாசனம் ஏறும் நன்னாள் வந்துற்றபோது, இவன் தலையில் சூட்டுதற்குரிய கண்ணியும் முடியும் பகைவேந்தரால் களவாடப்பட்டமையின், முடிசூட்டற்கென அமைத்த நல்ஓரை தவறாதிருக்க, உடனே அவ்விரண்டிற்கும் ஈடாகக் களங்காயால் ஆகிய கண்ணியும், நாரால் சமைத்த முடியும் இவனுக்குச் சூட்டப்பட்டு அரியாசனத்தில் அமர்த்தப்பட்டான். இக்காரணத்தால் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என இவன் அழைக்கப்படுவானானான். இவனது தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் நன்முறையில் வளர்க்கப்பட்டு, நல்லரசு நடாத்தும் நன்னிலை பெற்ற காலத்துச் செய்த வீரச்செயல்கள் பலவாகும். அவற்றுள் ஒன்று நண்ணார் ஆடுகளைக் கவர்ந்ததாகும். இவன் அவர்களை வென்று அன்னார் கொண்டு சென்ற தகரினங்களைத் தந்து தன் தொண்டிமாநகரில் சேர்ப்பித்த காரணத்தால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் எனப்பட்டான்.

இளங்கோ அடிகளாரின் திருத்தாதை நெடுஞ்சேரலாதன் என்பதும், அடிகளாரின் தமையன் செங்குட்டுவன் என்பதும் முன்னர் அறிவிக்கப்பட்டன. நெடுஞ்சேரலாதன் சிறந்த போர் வீரன். இவன் அஞ்சாநெஞ்சம் படைத்த ஆண்மையாளன் என்பது வேல் பல் தடக்கைப் பெருவிறல் கிள்ளியுடன் போரிட்டமையில் இருந்து உணரலாம். மேலும், இவன் சிறந்த சிவ பக்தன் என்பதும் தெரிகிறது. அவ்விறைவனார் திருவருள் பெற்றே தன் முதல் திருமகனான செங்குட்டுவனைப் பெற்றெடுத்தவன் என்பதை “செஞ்சடை வானவன் அருளினில் விளங்கவஞ்சித் தோன்றிய வானவ” எனச் சிலப்பதிகாரத்துக் கால்கோட் காதையடிகளால் காணலாம். இதனைமேலும் அறுதியிட்டு உறுதியாகக் கூறவேண்டுமானால், “ஆனே றூர்க் தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவன்” என அதே நூலில் வரும் வருந்தரு காதையின் அடிகளால் அறிந்துகொள்ளலாம். இச்செங்குட்டுவனுக்குப் பின்னர் பிறந்த திருமகனாரே இளங்கோ அடிகள் ஆவார். இவர் இயற்பெயர் இன்ன தென அறியக்கூடவில்லை. இவரைச் ‘சோ முனி’ என அடியார்க்கு நல்லார் அழைப்பர். இவர் அரச மரபிற்கேற்ப இளவரசுப் பட்டம் எய்துதற்குரியர் என்னும் காரணம் பற்றியும், செங்குட்டுவன் தம்பி எனும் முறைமை பற்றியும் இளங்கோ என அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது யூகித்தற்குரியது. ஆனால், இவர் அரசும் பெற்றிலர்; இளவரசு பட்டமும் அடைந்திலர். ஆனால் துறவுகொண்ட தூயராய் துலங்கினார்.

இளங்கோ துறவு பூண்டமைக்குக் காரணமும் உளது. அதாவது, நெடுஞ்சேரலாதன் தம் அத்தாணி மண்டபத்தே அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் ஆகிய ஐம்பெருங்குழுவும், கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் ஆகிய எண்பேராயமும் புடைசூழத் தம் மைந்தர்களான செங்குட்டுவனும் இளங்கோவும் இருமருங்கிருக்கச் செம்பியரும் தென்னரும் தன்னடி போற்றும் தகைமையோடு இனிது வீற்றிருந்தனன். அப்போழ்தத்து ஆண்டு ஒரு நிமித்திகன் போந்தனன்.

நிமித்திகன் என்பான் சோதிடனாவான், சோதிட வல்லுநர் நம் நாட்டில் பலர் இருந்திருக்கின்றனர், சோதிடரைக் கணியன் என்று கன்னித் தமிழ் கழறுதல் உண்டு. அப்படிக் கணியராய் இருந்த புலவர் ஒருவரும் “கணியன் பூங்குன்றனார்” என அழைக்கவும் படலானார். நம்மவர் சோதிடக் கலையின் நுண்ணறிவை நம் தமிழ் நூல்களில் பலபடக் காணலாம். ‘மகத்தில் புக்கதோர் சனியெனக் கானாய்’ என்பது ஆளுடை நம்பிகளது மொழியாகும். இத்தகைய கலையில் வல்லான் ஒருவன் தன் அவைக்கு வரக்கண்ட அண்ணல் நெடுஞ்சேரலாதன், நல்வரவு கூறி, நல்லிருக்கை ஈந்து அமரச் செய்தனன். அறிவுடைய கணியர்கள் கணக்கிட்டுத் தான் சோதிடப்பலன் உரைத்தற்குரியர் என உரைத்தற்கில்லை. ஒருமுறை ஒருவரை ஏற இறங்கப் பார்த்த மாத்திரையில் பலனைக் கூறவல்ல அத்துணை நுண்ணறிவு படைத்தவர்கள். அவர்களுள் நெடுஞ்சேரலாதனைக் கண்டு செல்ல வந்த கணியன், கைகேர்ந்த அனுபவன் வாய்ந்த நிமித்திகன் ஆதலின், அரசனுக்கு இருமருங்கினும் அமர்ந்த இரு பெருங் காளையர்களான செங்குட்டுவனையும் இளங்கோவையும் உற்று நோக்கினன். முன்னவன் மூத்தவன் என்பதையும், பின்னவன் இளையவன் என்பதையும் உணர்ந்துகொண்டனன். வந்த நிமித்திகனது வாட்கண் பார்வை இளங்கோவையே கூர்ந்து கவனிக்கத் தூண்டியது. அதனால், மீண்டும் ஒருமுறைக் கிருமுறை இளங்கோவை ஏற இறங்கப் பார்த் தனன். பார்த்து முடிந்தபிறகு, உள்ளதை உள்ள வாறு உரைக்கும் உரம் படைத்திருந்த காரணத் தால், சேர மன்னனை நோக்கி, “மன்னர் பெரும்! நும் மருங்கு வீற்றிருக்கும் இருவரும் உம் அருமைத் திருமக்கள் என்பதை அறிகின்றேன். அரசமரபின் முறைமைக்கு ஏற்ப, உமக்குப் பின்னர் அரசுக்கட்டில் ஏறுதற்குரியன் மூத்த மகன் என்பது முறைமையேயானாலும், அப்பதவி ஏற்றற்குரிய இயல்புகள் அனைத்தும். நும் இளைய மகனுக்கே இயைந் துள்ளன, மூத்த மகன் பால் அரசு பெறுதற்குரிய தோற்றப் பொலிவு காண்டற்கில்லை. இஃது என் கலையில் கண்ட உண்மைக் கருத்தேயாகும்” என்று நுவன்றனன்.

இங்ஙனம் நிமித்திகன் கூறக் கேட்டபோது, செங்குட்டுவன் உள்ளத்தில் வருத்தம் மிக்கது. அவ்வருத்தம் புறத்தும் தோற்றம் அளிப்பதுபோல் முகத்தில் தோன்றிய ஏக்கம் காட்டியது. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது பொய்யாமொழியன்றோ! என்றாலும், செங்குட்டுவன் அதனை நன்கு வெளிப்படுத்தா வண்ணம் வீற்றிருந்தான். இளங்கோ மட்டும் இதனை உணர்ந்துகொண்டனர். முன்னத்தின் உணரும் மூதறிவுடையார் அல்லரோ அவர்! பின்னர் நெடுஞ்சேரலாதன் நிமித்திகனுக்குச் சன்மானம் ஈய அவனும் வெளியேறினன். அவன் சென்ற பின்றை இளங்கோ அடிகள் நன்கு சிந்தித்து “முன்னவன் இருக்கப் பின்னவன் அரசு பெறுதல், முறைமை அன்று” என்பதை உணர்ந்தனர். “தாம் அரண்மனையில் இருப்பின் தம் அண்ணனான செங்குட்டுவன் உள்ளம் தம்மைக் காணுந்தோறும் வருந்தவும் கூடும், இந்தத் துயரம் நம்மால் அவருக்கு ஏன் எய்துதல்வேண்டும்? நாம் துறவு பூண்டு வெளியேறின், அரச பாரமும் நம்மை அடையாது. அண்ணன் மனமும் அமைதியுறும்” என்று எண்ணியவராய்த் துறவு நிலையை மேற்கொண்டு வஞ்சிமாநகர்க்குக் கீழ்த்திசைப் பாங்கரில் உள்ள அருகன் கோட்டத்தை அடைந்தனர். இந்த உண்மையை இளங்கோ அடிகளே தம் திருவாய் மலரால் தேவந்தி என்பாள் மீது மருள் ஏறப்பெற்றபோது அவள் கூறுவதுபோலச் ‘செங்குட்டுவன் தன் செல்லல் நீங்கப் பகல் செய்வாயில் படியோர் தம்முன் அகலிடம் பாரம் அகல நீக்கி’ என அறைந்துள்ளார். இங்ஙனம் அரசப் பற்றை அறவேதுறந்து வெளி வந்த பின்பே இவர் ‘அடிகள்’ என்று அழைக்கப்பட்டார் என்க.

இளங்கோ அடிகளார் மேற்கொண்ட சமயம் இன்னதென நாம் அறிதல் வேண்டும் இவருடைய தங்தையான நெடுஞ்சேரலாதன் தன் மூத்த மகனை செங்குட்டுவனைச் சிவபெருமான் அருளால் பெற்றெடுத்தான் என்பதை முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஆகவே, இளங்கோவின் தந்தையார் மேற்கொண்ட சமயம் சைவம் என்பது தெள்ளெனப் புலனாகிறது. இவனது மூத்த மகனான செங்குட்டுவனும் சைவசமயப் பற்றும் சார்பும் உடையவன். இவன் தன் தந்தையார் சிவபெருமானை வணங்கி அப்பிரானது திருவருட் பேற்றால் தோன்றியவன் என்னும் காரணங்கொண்டு அன்று, இவன் சைவ சமயப்பற்றுடையவன் என்பது. இவனது சைவப் பற்று இவன் வடநாட்டுக்குப் புறப்பட்டபோது நிகழ்ந்த நிகழ்ச்சியாலும் அதனை நன்கு உணரலாம். அதாவது, "இவன் வடதிசை நோக்கிப் புறப்படுகையில், முக்கண் மூர்த்தியை முறையாக வணங்கினன். அம்மூர்த்தியின் இணையார் திருவடிகளேத் தன் சென்னி மீது தரித்துக் கொண்டனன். பின் தன் அரசு யானை மீது இவர்ந்தனன். அந்த அமயத்து ஆடகமாடமாம் திருவனந்தபுரத்தில் திருப்பள்ளி கொண்டுள்ள திருமாலின் பிரசாதமாகிய துளசி மாலையைச் சிலர் கொண்டுவந்து இவனை வாழ்த்தி வணங்கிக் கொடுக்க, அதற்றை அன்புடன் பெற்றுத் தன் தலையில் சூட்டிக்கொள்ளாமல், தன் திருத் தோளில் தாங்கிச் சென்றனன்” என இளங்கோ அடிகளே கால்கோட் காதையில் கழறியுள்ளார். சென்னியில் தாங்காது, மணித்தோளில் தாங்கியதற்கு அவரே காரணங் காட்டுகையில், "செங்குட்டுவன் சென்னி சிவனாருடைய திருவடி சூட்டப்பட்டு விட்டமையின், அங்குத் திருமால் சேடம் இருத்தல் முறையன்று எனக் கருதித் தன் திருத்தோளில் தாங்கிச் சென்றனன்” என்றார், இக் கருத்தினை :

“ ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்”

என்னும் அடிகளால் நன்கு உணரலாம். தந்தையும் தமையனும் வழிபட்டு வந்த சைவ சமய மரபில் தோன்றியவர் இளங்கோ அடிகள். ஆகவே, இளங்கோ அடிகளும் சைவராகத்தான் இருக்க வேண்டும் என அறுதியிட்டு உறுதியாகக் கூறி விடலாம். ஆனால், அவ்வாறு கூறிவிட இயலாது. முன்னோர் சமயத்தையே பின்னோர் மேற்கொள்ள வேண்டும் என்னும் கட்டுப்பாடும் நியதியும் இல்லை. எனவே, இளங்கோ அடிகளும் சைவசமயத்தைச்சார்ந்தவர் என்பதைச் செப்புதற்கு இடம் இல்லை. இவர் துறவு பூண்டதும், ' “குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்தனர்” என வரும் அடிகளில், கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார். அருகதேவன் சமணசமயக் கடவுள். ஆகவே, இளங்கோ அடிகள் சைனசமயத்தைத் தழுவினவராக இருக்கலாம். இந்த ஒரு காரணம் மட்டும் இவர் சைனசமயத்தவர் என்பதை நிலைநாட்ட வல்லது என்று சொல்லுதற்கும் இல்லை. இவர் எழுதியுள்ள சிலப்பதிகாரத்தில் சைனசமயக் கொள்கைகளையும் கருத்துக்களையும் ஆங்காங்கு மிகுத்துச் சொல்லி இருத்தலின், இவர்சைனர் எனச் சாற்ற இடங்தருகிறது. இதனை நாடுகாண் காதையில், 'கண்ணகி நடந்து சொல்லுங்கால் கீழே உள்ள உயிர் இனங்களை மிதிக்கவும் நேரும், ஆகவே அறிந்து நடத்திசெல்ல வேண்டும் எனக் கோவலனிடம் கவுந்தி அடிகள் கூறுவதாக உள்ளவை இளங்கோ சைனசமய சீவகாருண்யக் குறிப்பை உணர்த்தி நிற்கின்றன. ஆகவே, இளங்கோ அடிகள் சைன சமயத்தைத் தழுவியவர் என்பதில் எள்ளவும் ஐயமிலைலே என்க. இதமனைமெய் யெனவே கூறலாம். இதனால், இவர் தம் முன்னோர் மேற்கொண்டவைதிக சமயத்தை இழிவாகக் கருதியவர் என நினைக்க வேண்டா. பிற சமயச் சார்பாகப் பேசும் சமயங் கிடைக்குந்தோறும் சிறப்புறவே செப்புகிறார்; பாடுகிறார். சிவபெருமானுக்கு முதன்மைத்தானமே ஈந்து மொழிகிறார். “நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்” என மொழிகையில் இவ்வுண்மையை உணரலாம். திருமாலைப்பற்றிச் செப்புகையில் "திருமால் சீர்கேளாத்செவியென்ன செவியே” என்று உள்ளங் குளிர உரைத்துள்ளார்.

இனி இளங்கோ அடிகளார் காலத்தைப் பற்றிச் சிறிது சிந்திப்போமாக. இவர் கடைச்சங்க காலத்தவர் என்பது பலர் கொள்கை. அக்கடைச்சங்க காலத்தின் இறுதிக்காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் பலர் கொள்கை. ஆனால், கடைச்சங்கத்தின் காலம் கி. பி. ஐந்தாம்நூறாண்டே எனக் கூறுவோராகவும் ஒரு சிலர் உளர். ஆகவே, இளங்கோ அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு புலவரா? அன்றி கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு புலவரா? என்பதை இப்பொழுது நிலைநிறுத்த வேண்டும். “கடைச்சங்கம் இரண்டாம் நூற்றாண்டாக இருப்பினும் சரி, அன்றிக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாக அமையினும் சரி. இளங்கோ அடிகள் கடைச்சங்க காலப் புலவர் வரிசையில் அமைத்தற்குரியர் அல்லர்; அப்படி அமைத்தற்குரியராயின், சங்க காலத்துத் தொகை நூல்களுள் ஒன்றிலேனும் இவர் பாடிய பாடலாக ஏதேனும் ஒன்று காணப் படவேண்டும்” என்று வாது புரிபவரும் சிலர் உளர். இக்கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இவர் கடைச்சங்க காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்குரிய சான்றுகள் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் கானல் வரி என்னும் பகுதியில் உள்ள பாடல்கள் சிலவற்றைத் திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் இயற்றித் தந்த இறையனார் அகப்பொருட்கு உரை வகுத்த மதுரைக் கணக் காயனார் மகனார் நக்கீரனார் உரை கூறுகையில், மேற்கோளாகக் காட்டிச் சென்றுள்ளார். இவ்வெடுத்துக்காட்டே யன்றி நம்புலவர் பெருமானாரின் தமைபனான சேரன் செங்குட்டுவன் கற்புக்கடம் பூண்ட கண்ணகி தேவிக்குக் கோயில் அமைத்து விழாக் கொண்டாடினான் என்றும், அவ்விழாவைக்கொண்டாடியபோது இலங்கை வேந்தனாம் கயவாகு என்பானும் உடன் இருந்தான் என்றும் வருந்தருகாதையில் இளங்கோவடிகள் கூறியுள்ளார் :

“கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்
எங்நாட் டாங்கன் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாள் அணி வேள்வியுள்”

என்னும் அடிகளில் இவ்உண்மையைக் காண்க. இங்ஙனம் உடன் இருந்து கண்ணகி விழாவைக் கண் குளிரக் கண்ட கயவாகு தன்னாட்டகத்தும் அக்கண்ணகிக்குத் திருத்தளி அமைத்துத் திருவிழாக் கொண்டாடினன் என்பதை இந்நூல் பதிகத்தில் " அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாள்பலி பீடிகை கோட்டமுந், துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என் ஆடித் திங்கள் அகவையின் ஆங்கு ஒர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடா யிற்று” என்று கூறப்பட்டுள்ளது.

இக்கயவாகு இருந்த காலம் சற்றேறக்குறைய 1820 வருடங்களுக்கு முன்பு என்பது இலங்கைச் சரித்திரமாகிய மகாவம்ஸம் என்னும் வரலாற்று நூலால் அறிகிறோம். கயவாகுவுக்கும் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோ அடிகளார்க்கும் தொடர்பு இருந்திருக்கவேண்டும் அன்றோ ? எனவே, இவர் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டே என்பது வெள்ளிடை மலையென விளங்குகிறது.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை த் தவிர்த்து வேறு நூல் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இவர் இந்நூலையும் தாம் துறவு பூண்ட பின்பே யாத்திருப்பதாகத் தெரிகிறது. இவர் யாத்த இச் சிலப்பதிகார கதை இவர் காலத்தின் கதையாகவும் தெரியவருகிறது. இவர் இந்நூலைச் சீத்தலைச் சாத்தனார் வேண்டுகோட்கிணங்கிப் பாடியுள்ளார் என்பதும் நமக்குப் புலனாகிறது. இப்படிப் பாடுதற்குக் காரணமாக இருந்தவர் முன்புதான், இவர் இந்நூலையும் அரங்கேற்றி வைத்தனர் என்பதும் தெரியவருகிறது. "உரைசால் அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்” என்பதும் சிலப்பதிகாரப் பதிகத்துக் காணும் குறிப்பாகும்.

இளங்கோ அடிகளார், தாம் சேர மரபினராய் இருந்தும், தாம் மரபின் ஆண்மையும் அரசும் இன்னோரன்ன ஏனைய சிறப்புக்களையும் மிகுதிப்படுத்திக் கூறுதற்குரிய வாய்ப்புப் பெற்றவராக இருந்தும், தாம் துறவு பூண்டு தூயராய் விளங்கிய காரணத்தால், நடுநிலை பிறழாது முடிவுடை மூவேந்தர்க்கும் தாம் இயற்றும் நூல் உரித்தாதல் வேண்டும் என்னும் காரணத்தால் தம் நூலைப் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என வகுத்துக்கொண்டு ஒவ்வொரு மன்னரது சீரும் சிறப்பும் தோன்றும் இடங்களில் நன்கு பாடிச் சென்றிருப்பதைப் படிக்குங்தோறும் யாரும் பரவசம் உறாமல் இருக்க இயலாது; இவரது நடுநிலைமைப் பண்பையும் போற்றாமல் இருக்க இயலாது.

இளங்கோ முத்தமிழ்க் கல்வியில் மூதறிவுடையவர். இதனால்தான், இவருடைய நூலாகிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காவியமாய் இவ்வுலகில் நிலவி வருகிறது. இளங்கோ அடிகளார் புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படுபவர். சுப்பிரமணிய பாரதியார், தாம் அறிந்த புலவர்களாக எடுத்துப் பேசிய மூவர்களுள் இளங்கோவடிகளார்க்கு இடங் தந்து பாடி இருத்தலை நன்கு சிந்திக்கவும். "யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனமே பிறந்ததில்லை; இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்று உயர்த்திப் பாடுவாராயினர். இளங்கோ அடிகள் முத்தமிழ்த் துறையிலும் மூதறிவு படைத்தவர் என்பது இவர் யாத்துள்ள சிலப்பதிகாரத்து யாண்டும் காணலாம். இதனால்தான், இந்நூலும் இயல் இசை நாடகப் பொருட்டொடர் நிலேச்செய்யுளாகக் கூறப்படுகிறது. நாடக உறுப்பினைப் பெரிதும் பெற்றுத் துலங்குதலின், நாடகக் காப்பியம் எனவும் நவிலப்பெறும் நன்னயம் வாய்ந்தது. இந்நூல் தன்னகத்து இசைப் பாட்டும், உரைப்பாட்டும் இடையிடையே விரவப் பெற்று வருதலின், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளெனப் பகரவும் படுகிறது. இந்நூல் தன்பால் உயரிய நீதிகளைக் கொண்டு விளங்குவது. அங்கீதிகளாவன : "அரசியல் பிழைத்த அரசர்கள் அறக்கடவுளாலேயே அழிக்கப்படுவர். ஊழ்வினை அதற்குரியவனை எப்பெற்றியானும் தேடி அடைந்து, அவனை நுகர்விக்கும். கற்புடைப் பெண்டிரை உயர்ந்தோரும் ஏத்துவர்” என்பன. இன்னோரன்ன சிறப்பியல்புகள் இதனிடத்து அமைந்திருத்தலின். இதனை 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' எனப் பாரதியார் செப்பிச் சென்றனர். இந்நூலுக்கு ஈர் உரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று அடியார்க்கு நல்லார் உரை. மற்ரறொன்று அரும்பதவுரை. இவ்விரு உரைகளினல் 'பொன்மலர் நாற்றம் உற்றாற்போல்” இந்நூலின் மாண்பு மேலும் சிறப்புற்றுக் காணப்படுகிறது. அடியார்க்கு நல்லார் உரையால் பல இறந்துபட்ட நூற்களின் பெயர்களையும் பாடல்களையும் அறியும் பேறு நாம் பெற்றுள்ளோம். இன்னோரன்ன நூல்கள், வெண்டாளி, முறுவல், பெருநாரை, பெருங்குறிஞ்சி, பெருங்குருகு, பாசாண்டம், பரதம், பரதசேனபதியம், பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், நூல், செயிற்றியம், சயந்தம், குருகு, குணநூல், களரியாவிரை, கனாநூல், இசை நுணுக்கம், அணியியல் முதலியன. இதுபோது திரு. பண்டித வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையும் வெளி வந்துள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், ஆசிரியர் அருமையையும், அந்நூலுக்குரிய் உரையின் சிறப்பினையும் கண்டோம். இனிச் சிலப்பதிகார நூல் நயம் ஒன்றை மட்டும் இங்குக் காட்டுவோமாக.

இளங்கோ அடிகளார் கதைப்போக்கிற்கேற்பக் கருத்துக்களைக் கவினுறச்சொல்லிச்செல்லும் திறன் பாராட்டற் குரியது. பாண்டியன் நெடுஞ்செழியன் ஆய்ந்தோய்ந்து பாராமல் கோவலனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கினன். அதனால், நீதிநெறி தவறாது செங்கோல் செய்துவந்த பாண்டியர் பெரும் பழி உண்டாயது. வளையாத செங்கோல் கொடுங் (வளைந்த) கோலாயது. அப்படிக் கொடுங்கோலானதை நிமிர்த்துச் செங்கோல் ஆக்கவேண்டியது தன் பொறுப்பென உணர்ந்த செழியர் பெருமான், அதற்குப் பரிகாரமாகத் தன் உயிரையே ஈந்தனன். இந்த இடத்தை இளங்கோவடிகள் எத்துணை அழகுறக் கூறியுள்ளார் என்பதைப் படிக்குந்தோறும், படிக்குந்தோறும் கவிஞரின் புலமைத் திறன் நன்கு புலனாகிறது.

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது ”

என்னும் இவ்வீர் அடிகளே முன்பு விளக்கப்பட்ட பொருட் சிறப்புப் பொதிந்துள்ள அடிகள். இவ்வாறு சுவை பயக்கவல்ல தொடர்களும் அடிகளும் சிலப்பதிகாரத்தில் எண்ணில் அடங்காதனவாக் உள்ளன. அவற்றை நும் அறிவு கொண்டு அலசி எடுத்து அறிந்து இன்புறுவீர்களாக. ஈண்டும் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் போல ஒன்றே காட்டப்பட்டது.