கட்டுரைக் கதம்பம்/சேக்கிழாரும் கம்பரும்

6. சேக்கிழாரும் கம்பரும்

திருவளர்ந்தோங்கும் இப்பரத கண்டத்துத் தெய்வப் புலவர் என்னும் பட்டம் பெற்ற புலவர் சிகாமணிகள் இருவரே. ஒருவர் உலகம் புகழும் உத்தமராம் திருவள்ளுவ நாயனார். மற்றொருவர் சைவ மணங்கமழும் சேக்கிழார் பெருமானார். இவ்விரு பெரும்புலவர்கட்டு அமைந்துள்ளபேறு, வேறு எப்புலவர்களும் எய்திற்றிலர் என உறுதியாக உரைத்து விடலாம். இங்ஙனம் கூறுதற்குப் பலகாரணங்கள் உள. ஏனைய புலவர்கள் தனித்துவிளங்கும் நூல்வடிவில் புகழத்தக்க பெருமைபெற்றிலர். அப்புலவர்களின் சிறப்பையும் அவர்கள் யாத்த நூலின் மாண்பையும் புகழும் முகத்தால் சிற்சில தனிப் பாடல்கள் மட்டும் உள்ளன. அவை அவ்வப்புலவர்களின் நூற்களுக்குச் சிறப்புப்பாயிரச் செய்யுட்களாகத் திகழ்கின்றன, அவை தனியன்கள் என்றும் சாற்றப்பெறும். ஆனால், திருவள்ளுவரையும் அன்னர் இயற்றிய நூலின் பெருமையையும் கூறும் தனிநூல் திருவள்ளுவமாலை என்றே திகழ்ந்து வருகிறது. இதுபோலவே, நம் சேக்கிழார்பெருமானரையும் இவர் திருவாய்மலர்ந்த பெரியபுராணத்தையும் சிறப்பித்துப் பேசும் தனிநூல் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பது. இந்தத் தனிப்பெருமையுடன் மட்டும் இப்புலவர் பெருமானர் புகழப்படுதலன்றிக் கொற்றவங்குடி உமாபதி சிவச்சாரிய சுவாமிகள் தம் திருவாக்காலும் சேக்கிழார்மீது புராணம் பாடியிருத்தலையும் நாம் பாராட்டாமல் இருக்க இயலாது. அப்பெரியார் தண்டமிழ் மேலாந்தர நூல்களாகச் சிலவற்றை விதந்து கூறுகையில்நம் தொண்டர் புராணமாம் பெரிய புராணத்தையும் இணைத்து,

வள்ளுவர் நூல் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாங் தரம்.

எனப் பாடியும் உள்ளார். சேக்கிழார் மாண்பினே உணர அவாவுவார் சேக்கிழார் புராணத்துள்ளும், சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும் பரக்கக் காணலாம்.

வடநூற்கடலும் தொன்ற்கடலும் ஒருங்கே நிலை கண்டுணர்ந்து அறிவுமயமாய்த் திகழ்ந்த சிவஞான முனிவர்தம் வாயார,

தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கினால் சொல்ல வல்லபிரான் எங்கள் பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சிங்தை இருத்துவாம்.

எனப்பாடிப் பரவியுள்ளார். மற்றும் சேக்கிழார் பெருமை பலவாகும். இவரது நுண்ணறிவுத்திறன் காண விரும்புவோர் இவர் பாடியுள்ள பெரிய புராணத்தில் கண்டுகளிக்கலாம். இவர் வாழ்ந்த காலம் அனபாயச்சோழனாகிய இரண்டாம் குலோத்துங்கன் காலம். அதாவது கி. பி. 1123 முலல் 1148 வரை அவன் அரசு புரிந்தகாலமாகும். மேலும் தெள்ளத் தெளியக் கூறப்புகின் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு எனலாம், இனிக் கம்பரது பெருமையைச் சிறிது காண்போமாக.

கம்பர் ஒரு சிறந்த கவி. "கல்வியில் சிறந்தவர் கம்பர்." "கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்". "கம்பநாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே" என்பனபோன்றவை கம்பர் பெருமையை விளக்க வந்தவைகளே.

இத்துணைப் புகழ்உரைகளும் உண்மை உரைகளே அன்றிப் புனைந்துரைகள் அல்ல. உண்மையாகவே கம்பரது கவிகள் அத்துணையளவு சுவை பயக்கவல்லவைகளாக உள்ளன. கம்பரையே சில அறிஞர்கள், "ஐய! புலவர் மணியே! உமது கவிகள் மிக்க நயமுடையனவாகவும் சுவையுடையனவாகவும் உள்ளனவே; இன்னதற்குக் காரணம் உளதோ?" என வினவினார்களாம். அதுபோது கம்பர் என் கவிகள் சுவையுடையனவாய் இருத்தற்கு யான் காரணன் அல்லேன். அது அதில் ஒவ்வோர் அகப்பை அள்ளிக்கொண்டேன். அதாவது எனக்கு முன்பு இருந்த புலவர் பெருமக்களின் சொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் அப்படியே எனது நூலில் அமைத்துப் பாடியுள்ளேன். இவையே என்கவிகள் சிறத்தற்குக் காரணமாகும்" என்றனராம். இஃது உண்மை என்று உறுதிப்படுத்தற்குத் திருமணம், செல்வக்கேசவராய முதலியார் எம். ஏ. (பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் போராசிரியர்) எழுதியுள்ள "கம்பர் என்னும் நூலே சான்றாகும். அதில் பல தலைப்புக்களைக் கொடுத்து எழுதிய அறிஞர், கம்பர் பயின்ற நூற்களைக் குறிப்பிடும்போது சைவத் திருமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கம்பர் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தினையும் நன்கு பயின்றவர் என்பது புலனுகிறது. பயின்றதோடு நில்லாமல் பற்பல அரியசொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் அப்பெரு நூலினின்றும் எடுத்து மிகமிகப் பொருத்தமான இடங்களில் அமைத்துத் பாடியுள்ளார் என்பதை அறிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கம்பர், சேக்கிழார் பெருமானாரது காலத்திற்குப் பிந்தியவர். கம்பர், இரணடாம் இராஜராஜ சோழர் காலத்தவர். அதாவது, கி.பி. 1171 முதல் 1178-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த அரசர்காலத்தவர். முன்பு சேக்கிழார் காலம் குறிப்பிட்டிருப்பதையும், ஈண்டுக் கம்பர் விளங்கிய காலத்தைக் குறிப்பிட்டிருப்பதையும் உற்று நோக்கில்லை கம்பர் பிற்பட்டவர் என்பது நன்குவிளங்கும். மேலும், "காவலன், மண்ணில் கடலில் மலையில் பெரிது என் என எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை" எனக் கம்பர் சேக்கிழாரின் அறிவைப் புகழ்ந்து பாடினார் எனக் கூறப்படும் திருக்கைவழக்கநூல் சான்றினாலும் கம்பர் சேக்கிழாருக்குப் பிற்பட்டவராதல் தெளிவாகும். இது நிற்க.

சேக்கிழார் பெருமானார் இறைவன் தமக்கு 'உலகெலாம்' என்று எடுத்துக்கொடுத்த தொடரையே மகுடமாக அமைத்து

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

எனப் பாடியருளினர். இங்ஙனமே கம்பரும் தமது நூலின் தொடக்கத்தில்,

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடை யார் அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

என்று பாடி அமைத்துக் கொண்டனர், இவ்வமைப்பில் ஒற்றுமைகள் பல உள, அவற்றுள் தலை சிறந்தது சேக்கிழார் எந்தக் கலிவிருத்தயாப்பில் செய்யுளைப் பாடினரோ அதிலேயே கம்பரும் பாடி அமைத்திருப்பதேயாகும்.

சேக்கிழார்பெருமானார் தம் நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் எனப்பெயர் சூட்டியதோடு நில்லாமல், மாக்கதை என்னும் திருநாமத்தையும் பேசியுள்ளார். அங்ஙனமே கம்பரும் தம்நூலுக்கு இராமாவதாரம் என்றபெயர் சூட்டியதோடு அமையாது 'தோமறு மாக்கதை' என்றும் குறிப்பிட்டிருப்பதை உணர்வோமாக. இவ்விருபுலவர்களும் தாம்தாம்பாடும் நூற்களை ஆசையுடன் பாடத் தொடங்குவதாகக் கூறுகின்றனர். முன்னர்க் கூறியவர் சேக்கிழார். "அளவில் ஆசை துறப்ப அறைகுவேன்" என்பது அவர் வாக்கு. பின்ன வரான கம்பர் ' ஆசைபற்றி அறையலுற்றேன்" எனப் பாடி மகிழ்கின்றார்.

தொண்டர் சீர்பரவுவார் தம் ஆசையின் பெருக்கத்தினையும் ஆர்வத்தின் விழைவினையும் ஒர் உவமையில் வைத்துப்பேசுகையில் பெருகு தண்கடல் உற்றுண் பெருங்சை ஒருகணங்கனை ஒக்கும் தகைமையேன் என மனமுவந்து பகர்ந்துள்ளார். இம்முறையில் தாமும் அமைய வேண்டும் என்று எண்ணிய கம்பநாடரும், "ஒசைபெற்றுயர் பாற்கடல் உற்றொருர பூசை முற்றவும் நக்குபு புக்கென" என இசைத்துள்ளார். முன்னவர் கூறியதில் நாய் உவமையாக வந்துளது. பின்னவர் பாடியதில் பூனை எடுத்துக்காட்டாக இயம்பப்பட்டுள்ளது.

சேக்கிழார் காவிரியாற்றைப்புகழ்ந்து உவமை தருகையில் செவிலித்தாயைக் குறிப்பிட்டுள்ளார். இதனைச் 'செய்யபூமகட்கு நல் செவிலி போன்றது’ என்னும் அடிகளில் காணலாம். இங்ஙனமே கம்பரும் சரயுநதிக்கு உவமை பேசுகையில் 'சரயு என்பது தாய்முலை அன்னது' என்றனர். செவிலி என்பாள் வளர்த்ததாய். தாய் என்பாள் பெற்றதாய். இவ்விருதாயரும் தாய்ம்மைப்பண்பில் ஒன்றுபட்ட மனப்பான்மையுடையவர். ஆகவே, நதிக்கு இவ்விரு உவமைகளும் பொருத்தமானவைகளே.

சேக்கிழார்பெருமானர் சோழமன்னனது அரசியல் மேம்பாட்டைப் புகழ்ந்து கொண்டு வருகையில் "அவனது நாட்டில் அமைந்த செங்கோன்மை காரணமாக விலங்குகள் தமக்குள் பகைமையின்றி வாழ்ந்தன : பறவைகள் தமக்குத் தான்யம் இன்மை காரணமாக வேற்றுநாட்டகம் புகாது சோழ நாட்டகத்திலேயே வாழ்ந்து வந்தன". என்னும் கருத்துக்களை அமைத்து "நீதியபுள்ளும் மாவும்" என்று சுருங்கக்கூறி விளங்கவைத்தனர். இவ்வாறு புலவர் பெருமானர் புகன்றதன் நுண்பொருளை நன்கு உணர்ந்த கம்பர் தம்நூலில் தசரதன் அரசியல் மேம்பாட்டைக் கூறுகையில்,

'வெள்ளமும் பறவையும் விலங்கும் ஒருவழி ஒடநின்றவன்'

என விதந்துகூறினர். நீதியபுள்ளும் மாவும் என்று சேக்கிழார் கூறிய தொடருக்குக் கம்பரது வாக்கு ஒரு விளக்கம்தருவதாக அமைந்திருப்பதை அறிஞர்கள் ஊன்றிச் சிந்திப்பாராக.

திருநீலகண்டர் வரலாற்றில் நடுநாயகமாக விளங்கும் சீரிய நிகழ்ச்சி திருநீலகண்டநாயனார் தம் வாழ்க்கைத் துனைவியாரிடம் உறுதி கூறிய கருத்தாகிய 'எம்மை என்ற தனால் மற்றைய மாதரார் தம்மை என்றன் மனத்தினுந் தீண்டேன்’ என்றதாகும். இச்சீரிய கருத்தைக் கம்பர் தம் நூலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பாடவேண்டும் என்று கருதி, அதற்குரிய இடங்களே நாடியபொழுது அவர்க்கு ஒர் இடம் கிடைத்தது, அதுவே அது மனும் சீதையும் பேசிக்கொண்ட இடமாகும். அப்பேச்சில் சீதை இராமனிடம் அறிவிக்குமாறு அது மனுக்குக் கூறுகையில்,

வந்தெ இனக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த விப்பிற விக்கிரு மாதரை
சிந்தை யாலும்தொ டோன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

என்று செப்பியதாகும். சேக்கிழாரது தொடரான மனத்தினுந்தீண்டேன் என்பதும், கம்பர் வாக்கான சிங்தையாலும் தொடேன் என்பதும் எத்துணைப் பொருத்தமாக இருக்கின்றன பாருங்கள் !

இலக்குவன் தாயாகிய சுமத்திரையென்பாள் இலக்குவனுக்கு அறிவுரை கூறி இராமனிடம் கானகத்தில் எங்ஙணம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகையில்,

ஆகாத தன்றால் உனக்கவ்வனம் இவ்வயோத்தி மாகாதல் இராமன்நம் மன்னவன் வையம்ஈந்தும் போகாஉயிர்த் தாயர்கம் பூங்குழல் சீதையென்றே ஏகாய்இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்என்றாள்,

என்று பாடியுள்ளார், இங்குக் கம்பர் "இவ்வயின் நிற்றலும் ஏதம்" என்றதன் குறிப்பு, இவ்வளவு நேரம், தாமதம்செய்தல் கூடாது; இராமன் காடு நோக்கிப் புறப்படுவதற்கு முன்சென்று வழிகாட்டியாகச் செல்லவேண்டும் என்னும் விரைவினைக் காட்டுவதாகும். இந்தவிரைவு குறிக்கும் கருத்தினைக் கம்பர் யாண்டுப் பெற்றார் எனில், சேக்கிழார் பெருமானர் நூலில் பெற்றார் என்றால், அது மிகையாகாது. இயற்பகை நாயனார் விரைந்து நின்ற செயலைச் சேக்கிழார் குறிப்பிடுகையில்,

நின்றது பிழையாம் என்று நினைந்து வேறிடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய வீக்கி

என்றனர். இங்கு "நின்றது பிழையாம்" என்னும் தொடரே கம்பரது நினைவிற்கு “இவ்வயின் நிற்றலும் ஏதம்" என வந்து அவர் நூலில் இடம்பெறலாயிற்று.

கண்ணப்ப நாயனர் புராணத்துள் திண்ணனர் வேட்டையாடும் சிறப்பைச்சிறப்பிக்குங்கால், யானையும் சிங்கமும் கண்ணப்பர் கடுங்கணைபட்டு ஒருங்கே சாய்வதை உவமை கூறுகையில் 'இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே' எனக் கூறினார். கரியின் நிறத்திற்கு இரவு உவமையும், அரியின் நிறத்திற்குப்பகல் உவமையும் ஆக நின்றன. இந்த உவமையினை ஏற்ற இடத்தில் அமைக்க எண்ணிய கம்பர், யுத்தகாண்டத்தில் விபீணடனும் சுக்ரீவனும் ஒருவரை ஒருவர் தழுவி நின்ற நிலைமைக்கு உவமைகாட்டி மகிழ்வுற்றார். "இருவரும் ஒருநாள் உற்ற, எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவின் தோளார்" என்பது கம்பரது பாடல். சுக்ரீவனுக்குப் பகலும், வீபீடணனுக்கு இரவும் உவமைகள் ஆயின, விபீடணன் கரியன்; சுக்ரீவன் செம்மையின்; ஆகவே, உவமைகள் இவ்விருவர்க்கும் உகந்தவைகளாகவே அமைந்தன. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் புராணத்துள்,

"கேட்டவப் பொழுதே சிந்தை கிளர்ந்தெழு மகிழ்ச்சிபொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா"

என்னும் இவ்வடிகளேயே,

"இப்பொழு தெம்மனேரால் இயம்புதற் கெளிதே யம்மா
செப்பரும் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உரைப்பக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செத்தா மரையினை வென்றதம்மா"

எனக் கம்பர் தமது இராமனது திருமுகப் பொலிவுக்கு, "அப்பொழுது அலர்ந்த செந்தாமரை” என இப்பாட்டில் இணைத்துப் பேசிக்கொண்டார் எனில், இதுபொருத்தமே ஆகும். பெரிய புராணத்தில் பூம் பாவையார் எழிலினைப் பேசுகையில் சேக்கிழார் “ஒவியர்க்கு எழுத ஒண்ணாப் பாட்டொளி ஒளிர்வுற் றோங்க" எனக்குறிப்பிட்டனர். இக்குறிப்பு நினவிற்கு வந்தே கம்பர் இராமனது அழகை வாலியின் வாக்கில் வைத்துப் புகழ்கையில் 'ஓவியத்தெழுத ஒண்ணா உருவத்தாய் ' என்று உளமுவந்து உரைத்தருளினர்.

கம்பர், சொற்பொருளின் ஆழத்தினை நன்கு சிந்திப்பதில் வல்லுநர். எளிய சொல்லாயினும் அஃது இடத்திற்கு ஏற்ப அமையப்பெறின், அஃது அரிய சொல்லே சீரிய சொல்லே-என்பது கம்பரது துணிபு. திருஞான சம்பந்தர் புராணத்தில் ஆளுடை பிள்ளையார் காளத்தியப்பரைக் கும்பிட்டதன் பயனாகக் காளத்தி வேடராம் கண்ணப்பரைக் கும்பிடு கையில் "கும்பிட்டபயன் காண்பார்போல் மெய் வேடர் பெருமானைக்கண்டு வீழ்ந்தார் எனப் பாடி உளம் பூரித்தார். ஈண்டு வீழ்ந்தார் என்னும் சொல் பாலருவாயருக்குக் கண்ணப்ப நாயனரிடத்து அமைந்த அன்பின் பெருக்கை அறிவிப்பதாய் விரைந்து பணிந்து வணங்கிய பண்பாட்டை விளக்கி நிற்கிறது. இதன் ஆழ்ந்த பொருளே அறிந்த கம்பர் தாமும் அவ் வீழ்ந்தார் என்னும் மொழியின் வேகத்தைத் தம்நூலில் பொருத்தமான இடத்தில் வைத்துப் போற்ற விழைந்து, விபீடணன் இராமனைக் கண்டு வணங்கும் போது அவனது அன்பின் மேம்பாட்டை அறிவிக்க, வரங்களின் வாரியன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் எனப்பாடி அகங்களித்துள்ளார் என்பதை அறியின், கம்பருக்குச் சேக்கிழார்பெருமானர் கவியினிடத்து எத்துணை ஈடிபாடும் அன்பும் ஆர்வமும் இருந்தன என்பதை அறிஞர்கள் பாராட்டாமல் இருக்க இயலாது.

காதால் கேட்டற்கும் சகிக்க ஒண்ணாத வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பமும் வாய்க்கப்பெறின், அவ்வார்த்தைகளின் கொடுமையினை விளக்க, தக்க உவமை கூறவேண்டுவது கவிகளது திறனே ஆகும், அந்த முறையில் சிறுத்தொண்டரிடம் வந்த வைரவர் தாம் கூறப்போகும் செய்தி கடுமையானது என்பதை முன்பே அறிவிப்பான்வேண்டி அதனைத் தக்க உவமை வாயிலாக, 

புண்செய் கோவில் வேல் எறிந்தாற்போலும் புகல்வ தொன் றென்றார்

'

எனக் கூறினர்.

துன்பந் தருதற்கு இதைவிடச் சிறந்த உவமை காட்டல் அரிது. இந்த உவமையின் பொருட்பொலி வினைக் கம்பர் உணர்ந்து தமது நூலில், விசுவா மித்திரர் தசரதனிடம் இராமனை வேண்டியபோது, அவ்வேண்டுகோள், தசரதனுக்கு எவ்வாறு இருந்தது என்பதை விளக்க,

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தால்
எனச்செவியில் புகுத லோடும்.

என்று சிறது மாற்றி அமைத்துக்கொண்டனர்.

இங்ஙணம் பல்லாற்றானும் கம்பர், சேக்கிழார் பெருமானார் கவிகளில் ஈடுபட்டு அக்கவிகளின் கருத்துக்களையும், தொடர்களையும், சொற்களையும் தம் நூலில் ஆங்காங்கு ஏற்ற இடங்களில் அமைத்துப் பாடித் தம் நூலினைச் சிறக்கச் செய்துள்ளார் என்பதில் ஐயம் உண்டோ ?