கட்டுரைக் கதம்பம்/திருக்கோவையார்

4. திருக்கோவையார்

தோற்றுவாய்

தமிழ் மக்கள் தம் வாழ்வை இருகூறாக வகுத்துக் கொண்டனர். அவையே, அகவாழ்வு புறவாழ்வு என்பன. புறவாழ்வில் அறம், பொருள், வீட்டின் பாகுபாடுகள் விளக்கப்பெறும். அகவாழ்வில் இன்பப் பகுதியே இயம்பப்படும். அகம் எனும் சொல்லே இன்பம் என்னும் பொருள் தந்து நிற்குமாயின் வேறு கூறுவானேன்?

கோவையின் இலக்கணம்

அகமாகிய இன்பத்தை விளக்க எழுந்த இலக்கணங்களும், இலக்கியங்களும் பலவாகும். அவற்றுள் கோவை என்னும் நூலுக்கு இடனுண்டு. தமிழ்மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகையான பிரபந்தங்களுள் ஒன்று கோவையென்பது. இக்கோவை அகப்பொருள் பற்றிக் கூறுவதனால் இஃது அகப்பொருள் கோவை என்றே கூறப்பெறும். இதனை எவ்வாறு பாடுதல் வேண்டும் என்பதை இலக்கணமுகத்தான் அறிய வேண்டின்,

“முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத் தாகி
நலனுறு கலித்துறை நானூற் றாக

கூறுவ தகப்பொருள் கோவை ஆகும்.”

என்ற இலக்கணவிளக்க நூற்பாவால் நன்கு அறியலாம்.

கோவையால் அறியக்கிடப்பன

கோவை நூல்களிலிருந்து தமிழ்நாட்டுத் திருமண முறையை ஒருவாறு உணரலாம். கோவையின் பொருட் சுருக்கம் பின்வருமாறு, ஒருவன் தன் தோழனோடு சோலைவழியே வருவான். அவ்வாறே ஒருத்தி தன் தோழியோடுசோலையில் பூக்கொய்யவும் புனல் விளையாடவும் வருவாள். அவள் தனித்து இருக்கையில் தலைமகன் கண்டு காதலிப்பான். இவருைைடய மனமும் இயைந்து ஒன்றுபடும். இந்த நிகழ்ச்சி சில நாள் பிறர் அறியாமல் நிகழப் பின் தோழி அறிவாள். அவள் துணையால் சிலநாள் தலைவன் தலைவியர் கூடி மகிழ்வர். தலைவியின் வேறுபாட்டை அறிந்த தலைவியின் உறவினர் தோழியை வினவத் தோழி தலைவிக்கு ஏற்பட்ட காதல் நிகழ்ச்சியைப் புனல்தரு புணர்ச்சியாலும், பூத்தரு புணர்ச்சியாலும், களிறுதரு புணர்ச்சியாலும் உறவினர்க்கு உணர்த்துவள். அதனால், சுற்றத்தினர் தலைவியை வெளியில் ஏகாதவாறு தடுப்பர். இத்தடையால் தலைவன் தலைவியைத் தோழியின் துணையால் தன்னூருக்கு அழைத்துச் செல்வான். அங்கு மணத்தை முடிப்பன். மீண்டும் மணமகள் இல்லம் திரும்புவான். பெற்றோர் அவனுக்கே அவளை ஈந்துவிடுவார். இருவரும் இல்லறத்தை இனிது நடத்துவர். மக்கட் பேற்றை மாணுறப்பெற்று இன்பம் கர்வர்.

இன்னோரன்ன நிகழ்ச்சிகள் கோவையாகச் சொல்லப்படுதலின், இது கோவை என்னும் பெயரைப் பெற்றது. இதுகாறும் கூறிப்போந்தவை கோவையின் பொதுத்தன்மைகளாகும். இனி நாம் எடுத்துக்கொண்ட பொருளாகிய திருக்கோவை யாரைப்பற்றிக் கூறுவோமாக. திருக்கோவையார் என்பது திருவாதவூரரால் பாடப்பட்ட கோவை நுலாகும்.

திருக்கோவையார் மாண்பு

தமிழில் உள்ள கோவைகள் யாவும் யார் மீது பாடப்படுகின்றனவோ, அவர்கள் பெயரையொட்டியும், எத்தலத்தின் மீது பாடப்படுகின்றனவோ அத்தலத்தின் பெயரைச் சார்ந்தும் வழங்கப்பெறும். முறையே தஞ்சைவாணன் கோவை, திருவாரூர்க்கோவை என்னும் பெயர்களால் இவ்வுண்மையை நன்கு உணரலாம். இவ்வாறே ஏனைய கோவை நூல்கள் விளங்குவதைக் காணலாம். இவ்வாறு பாட்டுடைத் தலைவன் பெயரையோ தலத்தின் பெயரையோ சார்த்தி வழங்கப்பெறாமல் கோவை, என்று கூறியதும், இன்ன கோவை என்றுணரப்பெறாமல் திகைக்க நேரிடும். ஆனால், திருக்கோவையார் என்று கூறிய அளவில் நமக்கு வேறு கோவை நூல்களில் எண்ணம் செல்லாமல், திருச்சிற்றம்பலக் கோவையின்மீதே செல்லும் என்பதை எவரும் மறுக்க இயலாது. இதன் ஈடும் எடுப்பும் இல்லாப் பெருமையை முன்னே திரு என்னும் சொல்லையும், பின்னே ஆர் என்னும் உயர்வு சிறப்பு விகுதியையும் புணர்த்திக் கூறியதினின்றும் நன்கு உணரலாம். திரு என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் ‘கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ என்று பொருள் கூறியதற்கேற்ப, இக் கோவையும் விளங்குதலின், ‘திருக்கோவையார்’ என்ற பெயருடன் இலங்குவதாயிற்று.

இந்நூலின் சிறப்பைப்பலபடப் புனைந்து கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். தமிழில் ஒருவன் நல்ல புலமைபெற்றுத் திகழவேண்டின், மூன்று நூல்களைப் படித்துவிடின் போதுமானது என்பதை இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் கூறும்போது.

“பல்கால் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும்”
என்று கூறிப் போந்தனர். தொல்காப்பியம், திருக்குறள் நூல்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் நூல் திருக்கோவையார் என்று இலக்கணப் பேர் ஆசிரியர் இயம் பின், இதற்குமேல் இதன் மாண்பை இயம்பவும் வேண்டுமோ?

திருமுறை வகுத்த பேராசிரியராம் நம்பியாண்டார் நம்பிகள்,


“................................................. ........திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயும்மற் றப்பொருளைத்

தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே”

என்று இதில் அடங்கிய பொருட்சிறப்பை நனிவியந்து கூறியுள்ளார். செவ்வந்திப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் ஆசிரியர்கள் திருக்கோவையார் பாடிய ஆசிரியரைப் புகழ்கையில், முறையே ‘திருக்கோவை, நானூறும் அமுதூற மொழிந்தருளும் நாயகனை,’ என்றும். சிற்றம் பலக்கோவைத் தேன்சொரியும் செம்முகிலை, என்றும் கூறி நூலின் இன்சுவையை எடுத்துக்காட்டுவார் ஆயினர்.

திருக்கோவையாரின் சொல்லின்பத்தையும் பொருள் இன்பத்தையும் ஒருங்கே துய்த்து இன்புறவிழைந்த ஒரு புலவர், தாம் வழிபடும் கடவுளை நோக்கி,

“கண்ணிய ர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை

என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு”

என்று வேண்டுவார் ஆயினர்.

திருக்கோவையாருக்கு எந்நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அஃது, இறைவனே இதைத் தன் கையால் எழுதிய சிறப்பாகும். இறைவன் ‘பாவை பாடின வாயால் ஒரு கோவை பாடுக’ என்றனன். இன்னோரன்ன சிறப்பியல்பு இந்நூலுக்கு இல்லையானால்,

“ஆரணங் காண்என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
எரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”

 என்று ஒரு புலவர் இம்முறையில் அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருப்பரோ ?

திருக்கோவையார் பாடிய ஆசிரியர் யார்?

இந்த வினாவும் எழுதற்கு இடனுண்டா என்று சிலர் ஐயுறலாம். ஆம் எழுதற்கு இடனுண்டு. வாதவூர் சிவபாத்தியன் பாடியது என்பது சிலர் கருத்து, தொன்றுதொட்டுப் பரம்பரையாக எவரும் கூறிக் கொண்டு வருவது திருக்கோவையாரைப்பாடியவர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் என்பதாகும். நூல் வழக்கும் இதனை நன்கனம் வலியுறுத்தும்.

‘’தேனு றும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை
நானூறும்.அமுதூற மொழிந்தருளும் நாயகனை
வானு றும் கங்கைநிகர் மாணிக்க வாசகனே
யானுாறு படாதவகை இருபோதும் இறைஞ்சிடுவேன்

என்று செவ்வந்திப் புராணமும்,

"சிற்றம் பலக்கோவைத் தேன்சொரியும் செம்முகிலை
மற்றொப் பிலாததிரு வாசகத்தின் வாரிதியைக்
கற்றைச் சடையான் கருத்துருக்கும் காதலனைக்
கொற்றத் திருவாத வூரனைக்கை கூப்புதுமே.;

என்று திருவெண்காட்டுப் புராணமும், அறிவிப்பதினின்றும் அறியலாம். இக்காரணங்களால் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரே திருக்கோவையாரைப் பாடினார் என்பதை அறிந்தோம். ஆனால், இவை அனைத்தும் புறச்சான்றுகளாகும். அகச்சான்றுகளாலும் இக்கருத்தை நன்கு வலியுறுத்தலாம். அதனையும் ஈண்டு நோக்குவோமாக.

அத் திருவாசகத்தில் காணும் சொல்லும்,பொருளும், திருக்கோவையாரில் ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்றமையின், அவற்றை எடுத்துக் காட்டின் மணிமொழியாரே திருக்கோவையார்க்கும் ஆசிரியர் என்பது வெள்ளிடைமலை என விளங்கும் என்க. திருக்கோவையாரில், வழி விதைல் என்னும் துறை கூறும் பகுதியில்,

“சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன் தன் சீராடியார்

குலம்பணி கொள்ள எனைக் கொடுத்தோன்”

என்னும் அடிகள் திருவாசகத்தில் திருப்பூவல்லிப் பகுதியில் வரும்,

“வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீர் அடியார் கூட்டமும் வைத்தெம்

                                                             பெருமான்’.

என்னும் அடிகளை நினைவுபடுத்துகின்றன.

“கருளார் கருங்குழல் வெண்ணகைச் செய்வாய்த்
                                                           துடையிடையீர்

அழளா தொழியின் ஒழியா தழியும்என் ஆருயிரே”

என்னும் ஆற்றாதுரைத்தல் துறையை உணர்த்தும் கோவையார்ப் பாடல்.

“அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பா
                                                             ரார்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்

பலக்கூத்த”

என்னும் திருவாசகக் கோயில் மூத்த திருப்பதிகத்தின் சொல்லையும் பொருளையும் தழுவி நிற்பதை உணரலாம்.

“மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல

                                                        விதிர்விதிர்த்து.”

என்பது திருக்கோவையாரில் இரக்கத்தோடு மறுத்தல் என்னும் துறையைச் சார்ந்த பாடல். இதில் விதிர் விதிர்த்து என்று பெய்யப்பட்ட தொடர்,

“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துன் விரையார்
                                                   கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி

                                                     உள்ளம்”

என்னும் திருவாசகத் திருச்சதக முதற்பாட்டில் மிளிர்வதைக் காண்க.

மாணிக்கவாசகர் தம்மை நாயினும் கடைப்பட்டவன் என்று அடிக்கடி கூறிக்கொள்வதைத் திருவாசதத்தில் பல இடங்களில் காணலாம்.

‘நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு’—சிவ
புராணம் ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த

நாயகனை—திருக்கோத்தும்பி

இந்தக் கருத்தைக் கருத்தில் கொண்டேதான் திருக்கோவையாரிலும்,

“நாய்வயின் உள்ள குணமும் இல்லேனை நற் றொண்டு
                                                              கொண்டு

தீவயின் மேனியன்”

என்று ஆசிரியர் மொழிவார் ஆனார். இவ்வாணித்தரமான அகச்சான்றுகளால் மாணிக்கவாசகரே திருக்கோவையாரின் ஆசிரியர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்குகிறது.

இங்ஙனம் இருக்க, வாதவூர்ச் சிவபாத்தியன் திருக்கோவையாரைப் பாடினார் என்ற ஐயம் எழுந்தமைக்குக் காரணம், நம்பியாண்டார், “வாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை” என்று பாடி இருப்பதாகும். ஈண்டும் சிவபாத்தியர் என்பவர் மாணிக்கவாசகரே.

திருக்கோவையார் கவிநயம்

திருக்கோவையாரில் உள்ள நானூறு பாடல்களும் நனி சிறந்த பாடல்கள். ஆதலின், எல்லாப் பாடல்களின் சொல்நயம் பொருள் நயங்களை எடுத்து இயம்புதல் எளிதன்று. என்றாலும், ‘பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்னும் முதுமொழிக்கிணங்க, அந்நானூறு பாடல்களின் கருத்துக்களில் ஈங்கொன்று ஆங்கொன்றாகச் சிலவற்றையே ஈண்டெடுத்து இயம்புதல் நன்றன்றோ.

கோவையில் குறிப்பிடும் மணமகன் மணமகளை அகப்பொருள் இலக்கணப்படி தலைவன் தலைவி என்று குறிப்பிடுவது மரபாகும். அம்முறைக்கிணங்க மணிமொழியார் கூறிய தலைவனுடைய தன்மைகளையும் தலைவியின் பண்புகளையும் முதலில் சிந்திப்போமானால், அவர்கள் வாழ்க்கை பின்னால் எவ்வாறு சிறந்து விளங்கி இருக்கும் என்பது நன்கு தெரியவரும்,

தலைவன் தன்மை

“காரணி கற்பகம், கற்றவர் நற்றுணை, பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணி அணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன், தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்

ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற் றியாவர்க்கும் ஊதியமே”

என்னும் இப்பாடலில் தலைவனை மேகம், கற்பக விருட்சம், படித்தவர்களுக்கு நண்பன், பாணர்கட்கு உறவினன், சிந்தாமணி, கொன்றைமாலை, சங்கநிதி, ஊழ், ஊருணி என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியதற்கு ஏற்ற காரணங்கள் உண்டு, மேகம் கைம்மாறு கருதாமல் பிறர்க்குக் கொடுக்கும் தம்மையுடையது. கற்பகம் வேண்டியபோது வேண்டுபவர் வேட்கைக்கேற்பக் கொடுக்கவல்லது. நினைத்ததைத் தருதலில் சிந்தாமணி நிகர் அற்றது. அவரவர்கட்கேற்பப் பயன் கொடுக்கவல்லது விதி. பொதுக்குளமோ, கிணறோ எவர்க்கும் நீரை ஈந்து இன்புறத்தக்கது. இங்ஙனம் உவமிக்கப்பட்டவற்றின் பண்புகள் இத்தலைமகன்பால் பொருந்திக் கிடந்தமையின், அவனுக்குக் காரும், கற்பகமும், சிந்தாமணியும், சங்கநிதியும், விதியு நிகராயின. இவன். கல்வி அறிவில் சிறந்து விளங்கின மையால்கற்றவர்க்கு நற்றுணையாகவும், கல்வியறிவுக்கேற்பக் கடவுள் அன்பும் பெற்றவனாக விளங்கினமையால் சிவனடிக்குத்தார் அணர் கொன்றையனாகவும் திகழ்ந்தான். இங்ஙனம் தலைவனது தனிப்பெரும் பண்பை அங்கையில் நெல்லிக்கனியென அறிந்து கூறியவர் இதுவரையில் எவரேனும் உளரோ?

இனித் தலைவியின் தன்மையை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதையும் சிந்திப்போமாக. பெண்களுக்குப் பிறப்புரிமையாய் இருப்பது நாணம். இந்த நாணத்தை அவர்கள் உயிரினும் சிறந்ததாகக் கருதுவர் என்பது நம் முன்னோர் கருத்து. ஆனால், அதனினும் சிறந்ததாகப் பெண்கள் கொள்ள வேண்டியது கற்பு என்பதை அறிஞர்கள் அறிந்து கூறியதை நாம் சிந்திக்கும்போது பெண்களுக்குரிய பொறுப்பு அளவிடற்கரியது என்பது புலனாகும். இல்லையானால் ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியனார்,

“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று”

என்று விதி வகுக்கமாட்டார். இதனைக் கருத்துள் கொண்ட ஆசிரியர் தலைமகள் இலக்கணத்தை இயம்புகையில்,

“தாயிற்சிறந்தன்று காண்தைய லாருக்கங் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்

கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே”

என்று கூறி அவளது இயற்கை எழிலால் புறப்பண்பையும், கற்புச் சிறப்பால் அகப்பண்பையும் நன்கு விளக்கியுள்ளார்.

இவ்விரு கோவைப் பாடல்களால் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவியர் எவ்வாறு இலகினர் என்பது நமக்கு நன்கு புலனாகின்றது. இங்ஙனம் நலத்தாலும் குணத்தாலும் ஒற்றுமைப்பட்ட தலைவன் தலைவியர் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இருவர்க்கும் ஒன்றாகவே. அமையுமே அன்றி, ஏற்றத்தாழ்வாக அமையா என்பதை நன்கு விளக்கவே மணிமொழியார்,

கரகத் திருக்கண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்

ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம்இன்று யாவையுமாம்

ஏகத் தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன் றற்கும் ஒன்றாய் வரும் இன்பத்

                                                          துன்பங்களே”

என்று எடுத்து மொழிந்தனர்.

இப்பாடலிலிருந்து ஆசிரியர் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும் இயல்புடையவர் என்பதும் புலனாகிறது. காக்கையை நாமும் பார்க்கின்றோம். அதற்கு இரு கண்கள் இருப்பதையும் உணர்கிறோம். ஆனால், அவ்விரு கண்களும் ஒரே சமயத்தில் ஒரு பொருளைப் பார்க்கும் வலியற்றவை. அஃது ஒரு பொருளைப் பார்க்கின், தலையைச் சாய்த்தே காண்பதை ஆசிரியர் உணர்ந்தார். அவ்வுவமையைத் தக்க இடத்தில் அமைக்கத்தலைவன் தலைவியர்களை இடமாகக்கொண்டனர். தலைவன் தலைவியர்க்கு உடல் இரண்டே ஆயினும், உயிர் ஒன்றேயாகும் என்ற சீரிய கருத்துடன் இன்ப துன்ப நுகர்ச்சியும் ஒரு படித்தாகும் என்ற அரும்பெரும் கருத்தையும் காட்டக் காக்கையின் இரு கண்களை உவமை கூறி விளக்கிய நுட்பத்தை என்னென்று வியப்பது !

திருக்கோவையாரில் சீரிய கருத்துக்கள் பலப்பல காணப்படுகின்றன. தலைவன் தலைவியைத் தன்னூருக்கு அழைத்துக்கொண்டு செல்கிறான். அதனை ஆற்றாத நற்றாய் தன் மகளைத் தேடிவரப் புறத்தே பறப்பட்டாள். வழியில் யோகதண்டம் தாங்கிய முக்கோல்பகவரை நோக்கித் தன் மகள் செய்தியைக் கூறினள். அவர் அவ்வம்மைக்கு நல்லறிவு கொளுத்த ‘அம்மையீர் சந்தனம், முத்து, சங்கு ஆகிய இவை பிறர்க்குப் பயன்படாவகையில் தாம் தாம் பிறந்த இடத்திலேயே இருப்பின் யாது பயன்? விரும்பினவர்கள்பால் சென்றால் அன்றோ அவை பெருமை அடையும்? அதுபோலவே உம் திருமகளை நீரே நும் வீட்டில் வளர்த்து வைப்பின் பயன் உண்டோ! ஆதலின், அவளை விரும்பினவன் கொண்டுசென்றதில் தவ றில்லை. அதுகுறித்து மகிழ்வீராக’ என்று கூறினர்.

இக்கருத்தை மாணிக்கவாசகர் கற்றார் ஏத்தும் கலித் தொகையில் இருந்து எடுத்துத் தம் நூலில் ஆண்டுகொண்டனர் என்பது,

‘பலவுறும் நறுஞ்சாந்தம் படுப்பலர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செயும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங் கனையளே,

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செயும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங் கனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செயும்

சூழுங்கால் தும்மகள் நுமக்குமாங் கனையளே.’

என்னும் பாடல்களால் உணரலாம்.

கற்புப் பற்றிய சீரிய கருத்துக் திருக்கோவையாரில் நாகரிகமுறையில் கூறி இருப்பது போற்றப்படுவது போன்று வேறு எந்த நூலிலும், காண்டற்கு இல்லை என்று கூடக் இயம்பிவிடலாம், நாம் கற்பு என்பது பெண்மக்கள் சமூகத்திற்குரிய பண்பு என்று கருதி இருக்கிறோம். அது தவறான எண்ணமாகும். கற்பு என்னும் சொல் ஒழுக்கம் என்னும் பொருளில் ஒளிர்வதனால், அவ்வொழுக்கம் ஆண்மக்கள் இனத்திற்கும் பொருந்துவதாகும். இதனை நம் நூலாசிரியப் பெருந்தகையார், எவ்வளவு நாகரிகமாக மொழிகின்றர் என்பதை உணரும்போது, இவரது நுண்மாண் நுழைபுலம் தெள்ளிதாகத் தெரியவருகிறது.

நற்றாய், தன் மகளைப்பற்றி முக்கோல் பகவரை முன் வினாவியதைப்பார்த்தோம். அவர் அவ்வம்மை யாருக்கு ஏற்றவிடை கூறியதையும் உணர்ந்தோம். என்றாலும், நற்றாய் உள்ளம் அமைதி பெற்றிலது.

அந்நிலையில் இருவர் ஆணும் பெண்ணுமாகச் சேய்மையிலிருந்து தன் திசைநோக்கி வருதலைக் கண்டாள். கண்டதும் தன் மகளும், மகளை அழைத்துச்சென்ற மருகனும் தாம் மீண்டுவருகின்றனர் என்று எண்ணி மனம் மகிழ்ந்தாள். ஆனால், அவர்கள் அண்மியதும் தன் மகள் அல்லள் என்று உணர்ந்தும், தன் ஆற்றாமை மிகுதியால், ‘மணமக்களே! நீங்கள் வரும்வழியில் உம் எதிரே உம் போலும் காதலுடைய இருவர் ஆணும் பெண்ணுமாகப் போனதுண்டோ?’ என்று வினாவினாள். அதற்கு விடை கூறும் முகத்தால் ஆண்மகனான காளை, தன்னைத்தொடர்ந்துவரும் காதலியை நோக்கி, நான் ஆண்சிங்கம் போன்ற காளையைக் கண்டதுண்டு. அதனோடு வேறு ஒன்றையும் இந்த அம்மையார் கூறுகின்றாரே? நீ அதே சமயத்தில் வேறு யாரையேனும் கண்டதுண்டோ?’ என்று வினவுவதிலிருந்து அவ்வாண் மகன் ஆணையே பார்த்தனன் என்பதும், அவனுக்கு அயலே வந்த பெண்மகளைத் தான் ஏறிட்டும் பார்த்ததில்லை என்பதும் விளங்குவதால், அவனது கற்பொழுக்கம் நமக்கு எவ்வளவு கழிபேர் இன்பம் பயக்கவல்லதாக இருக்கிறது பாருங்கள்!

“பிறன்மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு

அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு,”

என்னும் திருக்குறள் செப்புவதும் இதைத்தானே! இந்தக் கருத்தைத் திருக்கோவையார் எத்துணையழகாக,

“மீண்டார் என உவந் தேன்கண் டும்மைஇம் மேதகவே
பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்
றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேன் அயலே
தாண்டா விளக்கனை யாய்என்னை யோ அன்னை

                                                        சொல்லியதே’.
என்று எடுத்துக்காட்டுகிறது?

‘நுண்ணறிவுடைய நூலொடு பழகினும் பெண் ணறிவென்பது பெரும் பேதைமைத்து’ என்று கூறிப் பெண்ணுலகத்திற்கு ஒரு பழியைப் பிற்பட்டவர் ஏற்படுத்தியுள்ளார். அவ்வாறு நாம் கருதுதற்கில்லை. அவர்களும் ஆண்களைப்போலவே பேர் அறிவு படைதவர். சொல்லாற்றலோடு பேசவல்லவர். அவர்கள் பேச்சுத்திறன் மிகமிக வியக்கத்தக்கதாக இருக்கும். இதனைத் திருக்கோவையாரைப் படிப்பின் உணரலாம். தலைமகன் தலைவியைத் தான்கூடி வாழ வாய்ப்புக் கிடைக்காவிடின், மடல்ஏறித் தற்கொலை புரிந்து கொள்வதாகத் தோழியிடம்மொழிவான். மடல் என்பது பனையோலையாலும் மட்டையாலும் செய்யப்படும் குதிரைமீது தலைவன் ஏறித் தலை மகள் பால்கொண்ட தணியா வேட்கையைத் தோற்றுவிப்பதாகும். இத்தகைய குதிரையைச் செய்ய வேண்டுமானால் பனை ஓலையையும் மட்டையையும் மரத்திலிருந்து வெட்டி எடுத்தல்வேண்டும். பொதுவாகப் பறவைகள் பனை மரத்தில் கூடுகட்டி வாழும் இயல்பின.

இந்நிலையில் தோழி தலைவன் எண்ணியுள்ள மடல் ஏறும் எண்ணத்தை நீக்கவேண்டியவளாய், ‘மடல் ஏறற்க’ என்று மொழியினும், அவன் தலை மகள்பால் வைத்த காதல் மிகுதியால் அவ்வெண்ணத்தை நீக்க மாட்டான். இதனை எந்தமுறையில் எடுத்து இயம்பினால், அவன் மடல் ஏறுதலைத் தடுக்க இயலும், என்பதைச் சிந்தித்துத் தன் பேச்சுத்திறனால் அதனை விலக்க முன் எழுந்த தோழியின் பேச்சு வன்மையை என் என்பது.!

தோழி தலைவனைட்பார்த்து, ‘ஐயா! நீ மடல் ஏறத் துணிந்தனை. அம்மடற்கு வேண்டிய ஓலையும் மட்டையும் மரத்தில் இருந்து எடுக்கப்பட வேண்டியவை. அப்படியே எடுப்பின, அம்மரத்தில் கூடு கட்டி இன்புடன் வாழும் பறவைகட்கு இன்னல் செய்தவனாய் ஆவையே! இரக்க உணர்ச்சி உனக்குத் தோன்றவில்லையானால், வேறு யாரிடத்தில் தோன்றப்போகிறது? என்னும் பொருளில்,

“நடனாம் வணங்கும் தொல் லோன் எல்லை நான்முகன் மால்
                                                                   அறியா
கடனாம் உருவத் தரன் தில்லை மல்லல்கண் ஆர்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையும்
                                                                  கட்டழித்து

மடனாம் புனை தரின் யார்கண் ணதோமன்ன இன்னருளே“”

என்று கூறி மடல் விலக்கினாள்.

தலைமகளின் கண்களைப் புனைய வருகின்றார் புலவர் பெருமானார். அவற்றின் அகற்சி, நீளம், ஒளி, நிறம், ஆகியவற்றிற்கு உவமைகளாக அவர் கூறியவை பின்வருவன. அவற்றின் அதற்சிக்கு, ஈசன் இடத்து வைத்த அன்பின் அகலம் உவமையாயிற்று. அவற்றின் கருமைக்குப் பாசத்தின் நிறம் பொருளாயிற்று. ஒளிக்குத் தில்லை ஒளி உதாரணமாயிற்று. அவற்றின் வெண்மைக்குத் திருநீறு எடுத்துக்காட் பாயிற்று. நீட்சிக்கு, அன்பர் இறைவன் திருவடி களைப் புகழும் புகழ்உரைகள் உவமையாக நின்றன.

“ஈசற்கி யான்வைத்த அற்பின கன்றவன் வாங்கியஎன்
பாசத்திற் கார்என் றவன் தில்லை இன்ஒளி போன்றவன்
                                                              தோள்
பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம்

பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே”

என்பது மேலே கூறிய கருத்தை உணர்த்தும் பாடல்.

சில்லோர், தமிழில் குறைகாண முற்படுவது இக்கால நாகரிகமாக இன்னமும் இருந்து வருகிறது. அவர் கூறும் குறைகளில் தமிழ் இலக்கியங்களில் (humor) நகைச்சுவை இல்லை என்பது. இலக்கண நூற்களில் வரும் சூத்திரங்களுக்கே நகைச்சுவை பொருள் காட்டி நகைக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தமிழ்ப்பெருமக்கள், இலக்கியங்களில் அச்சுவையை அவர்கள் புகுத்தாமல் இருப்பரோ?

“முன்னிலை முன்னர் ஈயு மேயும்

அந்நிலை மருங்கின் மெய்யூர்ந்து வருமே”

என்பது தொல்காப்பிய நாற்பா. இது முன்னிலைச் சொற்கள் ‘சென்றீ,’ ‘சென்மே’ என வருவதற்கு இலக்கணம் கூறும் முறையை அறிவிப்பதற்கு எழுந்ததாயினும், இதில் நகைச் சுவைப் பொருளையும் கண்டு ஏன் சுவைக்கக் கூடாது? ‘உண்ணும் இலைக்கு எதிரே எறும்பு முதலியன ஊர்ந்துவருதலே அன்றி, ஈயும் மேயும் ; அப்படி மேய்தலோடு நில்லாமல், உடலிலும் ஊர்ந்து செல்லவும் தொடங்கும்,’ என்று வேடிக்கைப் பொருள் கூறிச் சுவைக்கச் செய்யவும் கூடும். நகைச்சுவை தமிழ் நூல்களில் இல்லை எனக் கூற இயலுமா ?

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்

றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் நகைச்சுவை ஆன்றோ முன்னர்க் கூறப்பட்டுள்ளது? இத் தருணம்,

“எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்

எழுத்தறிவார்க் காணின் இலையாம்”

என்னும் துறைமங்கலத்தார் தூயமொழிகொண்டு குறை கூறுவாரை அடக்கிவிடலாம். இனி நாம் திருக்கோவையாரில் காணப்படும் நகைச்சுவையை அறிந்து நனி வியப்படைவோமாக.

தலைவன் தோழியிடம் வந்து தலைவியின் கூட்டுறவைப் பெறுதற்கு அவளோடு பேசத் தொடங்கினான். அவன் கையில் பூந்தழை கொண்டு அவளை நோக்கி “அம்மையீர் ! இவ்வழியே யான் எய்த அம்புபட்டு யானை ஒன்றுபோந்ததுண்டோ?,” என்று வினாவினான். பிறகு தான் கொணர்ந்த பூந்தழையை ஈந்து. “இதனை நும் தலைவி அணியுமாறு செய்க,” என்று வேண்டினான். இப்படிக் கெஞ்சிக் கூத்தாடி நின்ற தலைவனைக்கண்ட தோழி, அவன் செயலை எள்ளி நகையாடுவாள்போல,

‘மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை ஏந்திக் கடமா வினாய்க்கையில் வில்இன்றியே

பித்தழை யா நிற்பரால் என்ன பாவம் பெரியவரே’
என்று கூறிய கூற்று, எத்துணை நகைச்சுவை பயக்க வல்லதாகக் காணப்படுகின்றது பாருங்கள்! கையில் வில் இல்லை. ஆனால், தழை இருக்கிறது. இப்படிப் பட்டவர் யானையை எய்ததாகக் கூறுகிறார். இக்கூற்றுத் தம்மைப் பித்தர் என்பதை அறிவித்து நிற்கிறது. பார்த்தால் பெரியவராய்க் காணப்படுகிறார். ‘ஐயோ பாவம்’ என்று கூறப்பட்டவை நம்மை விடா நகைப்பினை நகைக்கச் செய்கின்றன அல்லவா?