கட்டுரைக் கதம்பம்/பெருமை



13. பெருமை

நாட்டில் வாழும் மக்கள் நற்குடிப் பிறப்பினராய்த் தாம் பிறந்த குடி தாழ்வுறாதிருக்கச் செய்து உயர்த்தவல்லவராய், மானமுடையவராய் இருத்தல் வேண்டும். மக்கள் மானத்துடன் இருப்ப தோடன்றிப் பெருமையோடும் தம் வாழ்க்கையை நிலைநாட்டி நன்முறையில் நடக்க வேண்டும்.

பெருமையோடு வாழ்தலாவது, செயற்கரிய செயல்களைச் செய்தும், செருக்கு இல்லாமலும், பிறர்மீது குற்றம் கூருமலும் வாழ்தலாகும். இம் மூன்று பண்புகளும், உள்ள நிலையினும் மேல் மேல் உயர்த்தும் பண்புகளாகும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் அவனே அன்றிப் பிறர் இல்லை.

நன்னிலைக்கண் தன் ஆன நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழ் இடு வானும்-நிலையினும்
மேன்மேல் உயர்த்தி நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

என்று நாலடியார் கூறுவதாலும் இதனே நன்கூண்ரலாம்.

'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை' என்பர் வள்ளுவர். அதாவது, ஒருவனுக்குத் தான் இருக்கின்ற காலத்தும் மிக்குத்தோன்றுதல் உடைமை. அதாவது பிறரால் செயற்கரிய செயல்களைச் செய்வோம் என்னும் ஊக்கம் மிகுதி. இவ்வாருன மிக்குத் தோன்றுதலாகிய பண்பு மக்களுக்குத் தேவை.

செயற்கரிய செய்தலாவன, அளவு கடந்து உபகாரம் செய்தலும், ஈகைக்குணம் உடைமையும்  என்க. இப்பண்பைப் பெறாத நிலை, மக்களுக்குக் குற்றம் உண்டாக்கும். அபகீர்த்தியையும் ஏற்படுத் தும் என்பதை,

அய்து குடியில் பிறந்தரு நூல்
ஆய்ந்து செல்வத் துயர்ந்ததனால்
எய்தல் அரிது பெருமை.அ.ஃது
எய்தும் கொடைஒப் புரவாதி
செய்தற் கரிய செய்து பிறர்
செயிர்கூ றாமல் தருக்காமல்
உய்தி நெறியில் பிறழாமல்
ஒழுகு வார்க்குள் ளுதிமைந்தா,

என்ற விநாயக புராணப் பாடலால் அறியலாம்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிர் இனங்களுக்குள் வேறுபாடு இல்லை. பிறப்பளவில் எல்லாம் ஒன்றே. "எம்மினம் பெரிது ; உம்மினம் சிறிது ” என்று கூறுதற்கு இல்லை. பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுதல் சிறப்பாகாது. ஆனால், அவர் அவர்கள் செய்யும் தொழிலாலும் செயலாலும் மட்டும் பெருமை சிறுமைகளைக் கூறலாம்.

அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களின் காரியமாகிய உடம்பைப் பெற்றுகின்று அவ்வுடம்பின் பயனைத் துய்த்தல், எல்லா இனத்தவர்க்கும் சமம். ஆதலின், பிறப்பு, ஒத்து உள்ளது என்க. அவர் அவர்களின் பெருமை சிறுமைகளுக்கு உரைகல்லாக உள்ளவை, அவரவர் செய்யும் தொழிற் பிரிவுகள் ஆதலின், அங்கிலேயில் உயர்வு தாழ்வு கருதலாம். ஏனெனில், ' பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளேக் கல் என வள்ளுவர் கூறுகின்றார் அல்லரோ ? எனவே, குலத்தினால் பெருமையை அறிதல் ஆகாது. ஆசாரமே பெருமைக்குக் காரணம். இந்தத்  தருணத்தில் கம்பர் கூறுவதையும் நினைவிற்குக் கொணரலாம். "எக்குலத்து யாவருக்கும் வினேயினால் வரும் மேன்மையும் கீழ்மையும்" என்பது அவரது கூற்று. "உத்தியினால் எல்லோரும் ஒக்குமென ஒண்ணாதே" என்பது தினகர வெண்பா,

செயற்கரிய செம்மையான செயல்களைச் செய்யாமல் செல்வத்தின் உயர்வு காரணமாக விலை உயர் படுக்கை, ஆசனம் முதலியவற்றில் படுத்தும் அமர்ந்தும் இருப்பவர்கள், ஒருகாலும் பெரியராகமாட்டார். வறுமையுற்றபோதும் செயற்கரிய செயலைச் செய்பவர் வறுமையுடையார் என்று அ றிவுடைப் பெரு மக்களால் கருதப்படமாடடார்.

இளையான் குடிமாற நாயனார் பெருஞ் செல்வத்தைப் பெற்றிருந்த போதிலும், தம் இல்லத்தில் அடியவர்களுக்கு உண்டியும் உறையுளும் தந்து உபசரித்து மேன்மை பெற்றார். பின்பு வறுமையுற்றபோதும், தம் செய்கையினின்றும் மாறாது உபசரித்து மேன்மையுற்றார் "அல்லல் நல்குரவு ஆனபோதிலும் வல்லவராய் விளங்கினார்." ஆகவே, பெருமையுடையவர் என்பதற்கு அறிகுறி செல்வமோ, குடிப்பிறப்பே காரணம் அன்று செயலே இன்றியமையாதது. மனை, மாடு, பொருள், பூமி முதலியவற்றால் பயனில்லை. குலம், ஒழுக்கம், குணம், ஞானம் முதலியன மக்களுக்குத் தேவை. இவை இல்லார் மிகவும் சிறியரினும் சிறியரே.

நக்கீரர் சங்கப் பலகையின் மேல் வீற்றிருந்து பெரியர் ஆகிவிட்டனரோ? சிவனார் அப்பலகையில் நிற்றல் இன்றி அவர் முன் கீழே, நின்று இருந்ததனால் சிறியர் ஆகிவிட்டனரோ ? நக்கீரர் பெரியர் ஆயிலர், சிவனார் சிறியர் ஆயிலர.

'சங்கரன்போய் நின்றளவில் சங்கப் பலகையின்மேல்
அங்கிருந்தான் மக்கீரன் ஆயினும் என்‘’ என்ற முதுமொழிமேல் வைப்புவெண்பா இக்கருத்தை எவ்வளவு அழகாக நிலைநாட்டுகிறது. பாருங்கள் !

நகுடனும் பல்லக்கில் முனிவர்கள் சுமந்து செல்ல ஊர்ந்துதான் சென்றான். ஆனால், விரைவாகச் செல்க என்ற பொருளில் 'சர்ப்ப' என்று கூறிய அளவில் என்னானான்? சுமந்து சென்ற முனிவரால் சர்ப்பமாகும் சாபத்தைப் பெற்றான் அல்லனே ?

"கும்பமுனி யால்நகுடன் சர்ப்பஎன்றே குண்டலியாய்
மொய்ம்பிழந்து வீழ்ந்தான்."

என்னும் முருகேசர் முதுகெறி வெண்பாவைக் காண்க.

இத்தகைய பெருமை ஒருவனுக்கு எப்போது வரும்? ஒருமனப்பட்ட மகளிர் தம் மனத்தைப் பலவாறு சிதரவிடாமல் இருந்து, தன் கற்பைக் காத்துக் கொள்வதுபோல, ஒரு மனிதன் தன் நிறையினையும் தவறாமல் காத்து வந்தால்தான் உண்டாகும். அதாவது காக்கவேண்டுவனவற்றைக் காத்துக் கடிவனவற்றை நீக்கி ஒழுகுதல் என்பதாம். சுருங்கக் கூறின் மன மொழி மெய்களை அடக்கி,உபகாரம் முதலியவற்றைச் செய்து வருதல் எனலாம். வறுமையுற்ற காலத்திலும் பிறரால் செயற்கரிய செயலைச் செய்ய வல்லவரே பெருமை அடைவர். இங்ங்னம் செய்பவரே சால்புடைய மக்கள் ஆவார்.

அரிய செயலைச் செய்யும் மக்களா கிய பெரியாரை நாமும் போற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் அரிய செயல்களை ஒவ்வொருவரும் செய்ய முந்த வேண்டும். ஆனால், சிறியவராயினார் இங்ஙனம் இப்பெரியார்களைப் போற்றுதலும் செய்பார். அவர்கள் செயலை மேற்கொண்டு ஆற்றுதலையும் செய்யார். அச்சிறியார் ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்பதை மனத்தாலும் நினையார், சிறியார்  குடிப் பிறப்பு, செல்வம், கல்வி இவற்றால் இறுமாப்புத் கொண்டிருப்பர். பெரியோர்களோ செல்வம் கல்வி முதலியவற்றையுடையாாய் இருப்பினும், செருக்குருது என்றும் அடங்கி இருப்பர்.

குடிமையும், செல்வமும், கல்வியும் சிறியார் இடத்தில் இருக்குமானல், அவற்றால் தருக்கு அடைவரே அன்றி, வேறு பெருமையுடையர் ஆகார். அவற்றைக் கொண்டு தகாதனவற்றையே செய்வர். ஆனால், இச் செருக்கு, குடிப்பிறப்பாலும், செல்வ வளத்தாலும், கல்வி மேம்பட்டாலும் நிறைந்த பெரியாரிடத்தில் என்றென்றும் காணப்படாது. அவர்கள் எக்காலத்தும் தாழ்ந்தே போவர். சிறியவர்களோ மேலே கூறப் பட்டவற்றைப் பெற்ற காரணத்தால் தம்மை வியந்து பெருமையாகப் பேசிக்கொள்வர். இவ்வாறான பெரியார் சிறியார் இயல்புகளை மதிலின் மீதும் அகழியின் மீதும் வைத்துத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கற்பித்துக் கூறிய கற்பனையைக் கற்றறிந்தால், நாம் கழி பேர் உவகை கொள்வோம் என்பதில் ஐயம் இல்லை.

தாழ்ந்தோர் உயர்வர் என்றுமிக
உயர்ந்தோர் தாழ்வர் என்றுஅறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம்
மதில்சூழ் கிடந்த தொல்அகழி
தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல்
நின்றன் றுயர்ந்து தடவரையைச்
சூழ்ந்தோர் வரையில் உதிப்பவன்தாள்
கீழ்நின் றதுபோய்ச் சூழ்எயிலே

என்பதே அவரது பாடல்

பெரியவர்கள் பணிந்து போவர் என்பதற்கு மற்றோர் எடுத்துக்காட்டினாலும் விளக்கலாம். புலிக்கால் முனிவரின் திருமகனார் உபமன்யு முனிவர். அவர், தம்மைப் பல இருடிகள் சூழக் கையிலையில் ஒரு சார்  வீற்றிருந்தார். அப்போது சுந்தரர் மண்ணுலகு விடுத்துக் கைலைக்கு எழுந்தருளினர். இங்ங்னம் அவர் வருதுலேக்கண்டஉபமன்யு முனிவர்தம்இரு கரங்களையும் சிரமேல் குவித்துச் சுந்தரரைத் தொழுது நின்றார். ஆனால், ஏனையவர் தொழுதிலர். காரணம் பெருமை என்றும் பணியும்; சிறுமை தன்னை வியந்து தருக்கும் அன்றோ ?

"நாவலர் வெள்ளானை நடத்தஉப மன்னியர்போல்
ஆவலுடன் கண்டுபணிங் தார்களோ"

என்ற திருத்தொண்டர் வெண்பாப் பாடலைப் படித்தால், இக்கருத்து நன்கு விளங்கும். ஆகவே, பெருமைக் குணமுடையவர் செருக்கு இன்றி இருப்பர். ஆனால், சிறுமைக்குணம் உடையவர் செருக்குடன் வாழ்வர். இதனால் குலத்தாலும் செல்வத்தாலும் பெரியராயினர்தாம், பெரியார் என்று எண்ணுதல் வேண்டா,

நற்குடி பிறவா மாந்தர் இவர் என்பதை அவர்களின் செருக்குற்ற மனப்பான்மையால் எளிதில் அறியலாம். "சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிவ" என்ற முதுமொழிக்காஞ்சி நூலால் இதனை உணரலாம்.

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப-துக்கின்
மெலியது மேல்மேல் எழச்செல்லச் செல்ல
வலிதன்றோ தாழும் துலைக்கு

என்கிறது நீதி நெறி விளக்கம்.

சிறியாரிடத்து மற்றொரு குற்றமும் உண்டு, என்றும் பிறருடைய குற்றங்களையே பிறரிடம் கூறித் திரிவர். ஆனால், பெருமைக்குணம் நிறைந்த பெருங்குடி மக்கள் பிறருடைய குற்றத்தையும் மறைத்தே பேசுவர். பிறருடைய நற்பண்பையே எடுத்துப் மொழிவர்.