கட்டுரைக் கதம்பம்/வீரமா முனிவர்



11. வீரமா முனிவர்

தமிழ் மொழிக்கு அரும்பெருந்தொண்டு செய்தவர்கள் பல சமயத்தவர்கள் என்பதை நாம் நன்கு அறிந்துளோம். அவர்களுள் முஸ்லீம் சமயத்தவர்கள் செய்ததொண்டினை இதற்கு முன் உள்ள கட்டுரை வாயிலாக நன்கு அறிந்தோம். அவர்களைப் போலவே கிறிஸ்தவச் சமயத்தவர்களும் பல அரிய தமிழ்ப் பணியினைச் செய்துள்ளனர். அவர்களுள் ஈண்டு ரெவரெண்ட் பெஸ்கி என்னும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞரைக் குறித்துச் சிறிது சிந்திப்போமாக. இவரே வீரமாமுனிவர்ஆவார்.

ரெவரெண்டு பெஸ்கி அவர்கள் இத்தாலி தேசத்தில், வெனிஸ் நகரில் கி. பி. 8-11-1680-ஆம் தேதியில் பிறந்தார். பெற்றோர்கள் இவரது பிறப்பால் பெரிதும் களித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த இவர், தம் மழலைச் சொற்களினால் தாய் தந்தையரைக் களிப்பெனுங் கடலில் ஆழ்த்தி இன்புறச் செய்தார். இவர், தம் இளமைப் பருவத்திலிருந்தே கல்வியில் ஊக்கங்காட்டிகன்கு பயின்று வந்ததுடனிற்காமல், மக்களின் துன்பங்களுக்காகத் தம்மையே, பாவிகளிடம் ஒப்புவித்துச் சிறையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவிடம் அளவற்ற அன்புகொண்டு அவருடைய அன்புரைகளைப் போற்றித் துதித்தும் வந்தார். இவர்ரோமன் கல்லூரியில் கல்வியைத் திறம்படக் கற்றார். கல்லூரியில் பயிலும்போதே, கிறிஸ்துவின் பொன் மொழிகள் இவரது மனத்தில் பசுமரத்தாணி போன்று பதிந்துவிட்ட்ன. எனவே, இவர் இயேசு கிறிஸ்து 

திருச் சபையில் சேர்ந்து, அயல் நாட்டினர்க்கு அத் திருச் சபையின் சன்மார்க்க போதனைகளைப் பரப்பி, சமயப் பணி ஆற்றுவதிலேயே பேரூக்கங் காட்டி வந்தார்.

இவர் தம் பதினெட்டாம் வயதில், ரோமாபுரிக் கத்தோலிக்கப் பாதிரிமார்களின் சமயச் சங்கத்தில் சமயப் பயிற்சியின் பொருட்டுச் சேர்ந்தார் ; அங்கு இரு ஆண்டுகள் சமயப் பயிற்சியை நன்கு தெளிவுறப் பயின்றார். பின்பு இலக்கண ஆசிரியராய் இருந்தார். மூன்று ஆண்டுகள் தத்துவ ஞானம் என்னும் சாஸ்திரத்தைப் பயின்று தேர்ச்சியுற்றார்: பல நாட்டுப் பல்வேறு மொழிகளையும் கசடறக் கற்றார் , சமயாசார சாஸ்திரத்தின் நுட்பங்களைத் தெளிவுறப் பயின்று அதிலும் நல்ல புலமை பெற்றார் : இவ்வாறு சமய நுட்பங்களை நன்கு பயின்றதனால் இவர் சமய குருவானார். இவர் கிறித்துவ மதத்தில் கொண்டுள்ள பற்றையும், சமயப் பணியாற்றுவதில் அன்னாருக்கிருக்கும் தீவிர ஆர்வத்தையுங் கண்ட ரோமாபுரிக் கத்தோலிக்கக் குருமார்கள் உவப்புற்று, அயல் நாடுகளில் சமயப் பணி புரிவதற்குரிய தகுதி வாய்ங்தவர்களுள் வீரமா முனிவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தார்கள். கரும்பு தின்னக் கூலி கிடைத்தாற்போன்று, கிறித்தவ மதத்தைப் பிறநாட்டு மக்களிடம் பரவச்செய்ய இரவும் பகலும் சிந்தித்தவாறு இருந்த வீரமா முனிவர், குருமார்களின் கருத்தை அறிந்ததும், நடுக்கடலில் திசை காணாத நிலையில் திசை கண்ட மாலுமியைப் போன்று மனமகிழ்ச்சியுற்று, சமயப் பணி புரியும் அந்நன்னாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.

கி. பி. 1706-ஆம் ஆண்டு வீரமாமுனிவர் தம் தாய் நாடாகிய இத்தாலி தேசத்திலிருந்து புறப் பட்டுப் போர்த்துகீசியக் கப்பலில் இந்தியாவிற்குப் புறப்பட்டார் : செப்டம்பர் மாதம் போர்த்துகீசிய நாடாகிய கோவாத் துறைமுகத்தை யடைந்தார். அவ்வாண்டில் ரோமக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து சமயத் தொண்டாற்றும் பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்த சமய குருமார்களின் முதன் முதலாக வந்தவர் வீரமா முனிவரே யாவார் : அங்கிருந்து கொச்சித் துறைமுகத்தையடைந்து, கப்பலினின்றும் இறங்கினர் அங்குச் சில நாட்கள் ஒய்வு எடுத்துக் கொண்ட பின்பு கடற்கரையோரமாகவே யாத்திரை செய்துகொண்டே அம்பலக்காடு என்னும் இடத்தை அடைந்தார். மதுரைக் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த வீரமா முனிவர் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த புதுப்பட்டி, குருக்கல்பட்டி முதலிய இடங்களில் சில தினங்கள் இருந்தார். பின்பு வீரமாமுனிவர் சுமார் இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி ஜில்லாவில் வடக்கன் குளத்திலும், காமையநாய்க்கன்பட்டியிலும் பாதிரியாராய் இருந்து சமயப் பணியை ஆரம்பித்தார். இவ்விடங்களில்தாம் இவர் தம்மை வீரமா முனிவர் எனத் தம் பெயரை அமைத்துக்கொண்டனர். அது காறும் தாம் அணிந்திருந்த கருப்பு உடைகளைக் களைந்துவிட்டு, தமிழ்நாட்டு துறவிகளைப்போன்று காவி உடைகளை உடுத்திக்கொண்டும், தலையில் பாகை அணிந்துகொண்டும், கால்களில் மிதியடி அணிந்துகொண்டும், கையில் கோல் பிடித்துக் கொண்டும் சமயப் பணி ஆற்றிவந்தார், முனிவர் எவ்விடத்திற்குச் சென்றாலும் சீடர்கள் பலர் தம்மைச் சூழ்ந்து வரப் பல்லக்கில் அமர்ந்து செல்வார். இப் பல்லக்குப் பிரயாணம் அருகிலுள்ள பல சிற்றூர்களுக்குச் சென்று, சமயத் தொண்டு ஆற்ற இவருக்கு மிகவும் பேருதவியாயிருந்தது. தமிழ் நாட்டுத் துறவிகளைப் போன்று எப்பொழுதும் தரையில் புலித் தோலாசனமிட்டு உட்கார்ந்து, தம்மைச் சூழ்ந்துள்ள மக்களுக்கும் ஏனைய சீடர்களுக்கும் சமய போதனைகள் செய்துவந்தார். தமிழ் மக்களிடையே சமயப் பணி ஆற்றுவதற்கு உறு துணையாயிருப்பது, அம்மக்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழி என்பதை ஊகித்தறிந்து, தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கினர்.

வீரமாமுனிவர் இரண்டு தமிழ் இளைஞர்களைத் தம் இடத்தில் தொழிலாளராக அமைத்துக் கொண்டு, அவர்கள் சமைத்த உணவை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உண்டுவந்தார். முதன் முதலில் முனிவர் இந்து தர்ம சாஸ்திரங்களை நன்கு பயின்று, பல்வேறு தமிழ் நாடுகளுக்குஞ் சென்று, அவண் வாழும் மக்களின் நடையுடை பாவனைகளையும் அறிந்து கொண்டார்.

முனிவர் முதன்முதலாகத் தென்னாற்காடு ஜில்லா கோனான்குப்பம் என்னும் சிற்றுாரில் தேவாலயம் ஒன்றைக் கட்டுவித்தார். முனிவர் இவண் வசித்த மக்களுக்குக் கிறித்தவப் போதனைகளே உபதேசித்து, பலரைக் கிறிஸ்தவர்களாகச் செய்தார்; ஒவ்வொருவர் இல்லத்திற்கும் சென்று, இயேசு கிறிஸ்துவின் பொன் மொழிகளை அன்புடன் போதித்து, அவர்களனைவரையும் கிறித்தவ வழிபாட்டில் திளைக்கச் செய்தார். மேலும், தமிழ் அணங்கு அணியும் உடையுடன், இயேசு நாதராகிய குழந்தையைக் கையிலேந்தியவண்ணம் கன்னிமேரி அம்மையாரின் திருவுருவத்தை வரைந்து, அவ்வோவியத்தைத் தாம் ஏற்படுத்திய தேவாலயத்தில் பிரதிட்டை செய்துவைத்தார் : அவ்வம்மையார்க்குப் ‘பெரியநாயகி அம்மாள்’ என்னும் திருப்பெயரிட்டு, பதினைந்து தோத்திரப் பாடல்களையும் பாடித் திரு விழா நடத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழவராயன் என்னும் சிற்றரசனின் ஆளுகைக்குட்பட்டிருந்த திருக் காவலூரிலுள்ள கிறித்தவ மக்கள் மிகவும் பிறரால் துன்பமடைந்து, மதப்பற்று அற்றவர்களாயிருந்தார்கள். சமயப் பணியையே தம் பிறவிப் பயன் எனக் கருதிய முனிவர், திருக்காவலூர் மக்களின் அஞ்ஞானத்தைப் போக்கத் திருவுளங் கொண்டு, விரைந்து அவண் சென்றார்; அங்குள்ள மக்களுக்குச் சமய போதனைகளைத் தெளிய உரைத்தனர். அவருடைய இன்சொல் போதனைகளாலும், மலர்ந்த முகத்தின் பொலிவினாலும் பலர்கிறித்தவ மதத்தைத் தழுவலானார்கள். சிற்றரசன் மழவராயனும் முனிவரிடம் பேரன்புகொண்டது மன்றி, மேரியம்மையார்க்குத் திருக்கோயில் கட்டுதல் பொருட்டு, வேண்டிய நிலமும் ஈந்தனன். ஆண்டவனின் திருவருளை நினைத்து உவப்புற்ற மாமுனிவர், அந் நிலத்தில் அழகிய தேவாலயம் ஒன்றைக் கட்டி முடித்தார்; பின்பு மேரியம்மையாரின் அழகிய உருவத்தை அத் தேவாலயத்தில் பிரதிட்டை செய்து, அவ்வம்மையாருக்கு ‘அடைக்கல மாதா’ என்னும் திருநாமமும் சூட்டினார். முனிவருக்கு அடைக்கல மாதாவிடம் பூரண பக்தி இருந்தது. எனவே, அவர் மாதாவைப்பற்றி நெஞ்சுருகப் பல பாமாலைகளையும், கலம்பகங்களையும் இயற்றினார். முனிவரின் மனம் உருக்கும் சமயப் போதனைகளும், அடைக்கல மாதாவின் அன்புருவமும் மக்களைக் கிறித்தவச் சமயப் பற்றில் ஆர்வமுள்ளவர்களாக ஆக்கின.

கி. பி. 1713-ஆம் ஆண்டில் வீரமா முனிவர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள குருக்கல்பட்டி என்னும் கிராமத்திற்குச் சென்றார். இங்குள்ள மக்களில் சிலரே கிறித்தவ மதத்தைத் தழுவியவர்கள். அதுகண்ட முனிவர் மனம் புழுங்கினார்; நீர்வடித்தார். எனவே, ஒவ்வோர் இல்லத்திற்கும் அவர் சென்று,  இயேசுநாதரின் சன்மார்க்க போதனைகளை இனிய தமிழல் உபதேசித்தார்; ஆங்காங்குத் தேனினுமினிய தமிழ்மொழியில் சமய நன்மார்க்கங்களைப் புற்றிய சொற் பொழிவுகளை ஆற்றினார். அன்னாரது சொற்பொழிவுகள் மக்களின் மனத்தைப் பிணித்தன. ஆகையினால், அவரது இனிய சமய விளம்பரங்களில் ஈடுபட்டுப் பலர் கிறித்தவர்களானர்கள். சுற்றுப்புறங்களிலிருந்து மக்கள். தங்கள் மனைவிமக்களுடன் கால் நடையாகவே குருக்கல்பட்டிக்கு வந்து, முனிவரின் எழில் உருவத்தைக் கண்டு வணங்கிப் பெரியாரிடம் உபதேசம் பெற்று, பேரானந்தத்துடன் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு சிலவாண்டுகள் முனிவர் அவண் வாழ்ந்த கிறித்தவ மக்களுக்குச் சற்குருவாக இருந்து, அவர்களுக்கு நற்போதனைகள் பலவற்றைப் போதித்துவந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் வீரமா முனிவர் சமயப் பணி ஆற்றிக்கொண்டு வருகையில் திடீரென்று அவருக்கு ராஜ பிளவு என்னும் பெருங் கட்டி ஒன்று முதுகில்தோன்ற, அதன் காரணமாகப் படுக்கையில் நாற்பதுநாள் இருந்து மிகவும் துன்பமடைந்தார். அவ்வமயம் பக்கத்தூர்களிலிருந்து இரண்டு பாதிரிமார்கள் வந்து, முனிவரின் தினசரி அலுவல்களைக் கவனித்து, அவருக்குப் பதிலாகச் சமயப் பணி ஆற்றிவந்தனர். சில நாட்களில் முனிவர் குணமடைந்து தம் பணியை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆனால், மீண்டும் அக்கட்டியினல் அவர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையினிமித்தம் புதுச் சேரிக்குச் சென்றார், அங்குச் சில தினங்கள் தங்கிப் பூரண சுகமுற்றதும், புதுச்சேரியினின்று புறப் ட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடுகர் பட்டிக் கிராமத்திற்குச் சென்று, அங்குச் சில நாட்கள் உறைவாராயினர்.

 திருச்சிராப்பள்ளியில் முனிவர் இருக்கும் பொழுது, சந்தா சாகிபு என்னும் நவாபு ஆட்சி புரிந்துவந்தார். அவர் முனிவரின் வசீகர சொற்பொழிவுகளையும், கல்விப் புலமையையும், அறிவின் தெளிவினையுங்கண்டு, அவருடன் நட்புக்கொண்டார். முனிவர் நவாபுடன் அளவளாவும்பொருட்டு இந்துஸ்தானி, பாரசீகம் முதலிய மொழிகளைப் பயின்றார் : பின்பு சந்தா சாகிபைக் கண்டு பேசி, தம் பொன் மொழிகளால் நவாபை வசீகரித்தார். அப்பொன்னுரைகளைக் கேட்டு இன்புற்ற சந்தா சாகிபு, அவரது அறிவின் திறத்தை மெச்சி, அவரைத் தம் திவானாக நியமித்துக் கெண்டார்; மேலும், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள அரசூர், நல்லூர் முதலிய சிற்றுார்களை முனிவருக்கு இனமாகத் தந்து, தந்தப் பல்லக்கு ஒன்றையும் ஈந்தார். இச்சிற்றூர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் 12,000 ரூபாய் வருமானம் தருபவை.

வீரமா முனிவர் தம் 66-ஆம் வயதில் சேர நாட்டைச் சேர்ந்த அம்பலக்காடு என்னும் ஊரை அடைந்தார். அவர் அங்குள்ள கல்லூரியின் மேற் பார்வையாளர் பதவியைத் திறம்பட வகித்து வந்தார்; அப்பதவியிலிருந்தவாறே பல உரைநடை நூல்களையும், செய்யுள் நூல்களையும் இயற்றினார். இறுதியில் தைரியநாதர் ரெவரெண்டு பெஸ்கி என வழங்கும் வீரமாமுனிவர் கி. பி. 1747-ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 4-ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலக வாழ்வை அடைந்தனர்.

வீரமா முனிவர் தமிழ் மொழியைப் பயின்று, புலமை பெற்றதுடன் நிற்காமல், அம்மொழியில் பலசெய்யுள் நூல்களையும், உரைநடை நூல்களையும், இலக்கண நூல்களையும், அகராதிகளையும் இயற்றித் தமிழ் அன்னையை அலங்கரித்துள்ளார்.

 அவைகளுள் செய்யுள் வடிவில் அமைந்தவை , தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பக்ம், கித்தேரியம்மாளம்மானை. திருப்பாவணி, திருக்காவலுர்க் கலம்பகம் மூலமும் உரையும், தேம்பாமாலை, அடைக்கலமாலை என்பன. வேத விளக்கம், வாமன் சரித்திரம், வேதியர் ஒழுக்கம், ஞான விளக்கம், பரமார்த்த குரு கதை, திருச்சபைக் கணிதம் முதலியன உரைநடை நூல்கள்.

தொன்னுால் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம் என்பன இலக்கண நூல்கள். அகராதிகள்: சதுரகராதி, தமிழ்-இலத்தீன் அகராதி என்பன.

வீரமா முனிவர் நல்ல நாவன்மை படைத்தவர். அங்ஙனம் நாவன்மை படைத்துப் பற்பல சொற்பொழிவுகளை அவையஞ்சாது, மெய்விதிராது ஆற்றி வந்தமையால்தான் தைரியநாதர் என்னும் பெயரையும் பெற்றனர். நாவன்மை படைத்தது போலவே, பாவியற்றும் பாவன்மையும் படைத்தவர் என்பது அவர் யாத்துள்ள காவியத்தாலும், தோத்திரப் பாடல்களாலும் அறிகிறோம். அக்கவிகள் சொல்லழகு பொருளழகு நிரம்பப் பெற்றுள்ளன: படித்தற்கும் இன்பந் தருவனவாக உள்ளன. இவர் மேற்கு நாட்டினராக இருந்து, தமிழ் அறிவு பெற்றுத் தமிழ் மொழியில் பெருங்காவியமாகத் தேம்பாவணியை இயற்றியுள்ளார். இந்நூலின் காட்டு வளம், நகர் வளம் கூறும் பகுதிகள் சிந்தாமணி, இராமாயணம் முதலிய நூற்போக்கிற் கியைய அமைந்துள்ளன. அவற்றிற்கெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டுக்கள் எடுத்துக் காட்டப்பெறின், இக்கட்டுரை பரந்து போகும்.ஆதலின், ஒரு பாவின் நயத்தினை மட்டும் ஈண்டு விளக்கிக்காட்டி, மேலே சொல்வோமாக.


ஊக்கஏர் பூட்டி நோன்பால் உடல்செறு உழுது நன்றி
வீக்கமேல் விரதச் செந்நெல் வித்திநல் ஒழுக்க நீரைப்
போக்கநீ டிறைத்துத் தன் ஐம் பொறியெனும் வேலி காக்கின்
ஆக்கமாய்ப் பெருவீட்டின்பம் அண்டமேல் விளைக்கும் தானே

என்பது தேம்பாவணியில் ஒரு செய்யுள்,

இப்பாடல் கீழ்வரும் அப்பர் பெருமானார் அமுத வாக்கைப் போன்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும். கீழ் வருவது அப்பரது அருள்வாக்கு,

மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும்
வித்தை வித்திப்
பொய்மையாம் களையை வாங்கிப் பொறையெனும்
நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும்
வேலி யிட்டுக்
செம்மையுள் நிற்ப ராகில் சிவகதி
விளையு மன்றே.

என்பது.

மேலே உழவுத் தொழிலின் நடைமுறைகளையும், அதன் பயனையும் வீரமா முனிவர் நன்கு உருவகப்படுத்தி யுள்ளதைச் சிந்திப்போமாக. இவர் மதபோதகராய் வெளிநாட்டில் பிறந்தவராய் இருந்தும், தமிழ்நாட்டில் தலை சிறந்த தொழிலாகிய உழவுத் தொழிலின் சிறப்பையும் எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளார் என்பதை நாம் அவரது செய்யுளிலிருந்து உணரலாம். உழவுத் தொழிலோடு மோட்ச இன்பத்தை இயைத்துப் பேசுகிறார் புலவர். ‘’மோட்சம் என்பது அடைதற்கரிது, அணுகுதற்கரிது, சிந்தித்தற்கரிது என்று நினைக்க வேண்டா ! ஒழுக வேண்டிய முறையில், நடக்கவேண்டிய முறையில் ஒழுகினால், அவ்வரிய வீட்டின்பத்தையும் எளிதில் அடையலாம் என்பதை அவரது பாடலால் அறிவுறுத்துகிறார் இவ்வான்றவர்.

ஊக்கத்தை ஏர் என்றார் ; உடலை வயல் என்றார் ; விரதத்தைச் செந்நெல் விதை யென்றார் : ஒழுக்கத்தை நீர் என்றார் , ஐம்பொறிகளை வேலி என்றார். இப்படி உருவகப்படுத்தி உரைத்த அழகை அவரது பாட்டில் சுவைப்பீர்களாக. ஆகவே, புலவர் கருத்து ஆக்கமாகிய பேரின்பு வீட்டினை விரும்பின், ஊக்கம் வேண்டும் ; விரதங்களை மேற் கொள்ளவேண்டும் : ஒழுக்கத்தை யுடையவராய் இருத்தல் வேண்டும் , ஐம்புலன்களை அவற்றின் போக்கில் போகவிடாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றை எவ்வளவு இனிமையாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார் என்பதை ஒர்ந்து உணர்வீர்களாக !