கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/முன்னுரை

முன்னுரை

ஒரு மொழியின் உண்மையான வளர்ச்சியை, எந்த அளவுகோலைக் கொண்டு மொழியியல் வல்லுநர்கள் அளவிட்டுக் கணிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.

காப்பியம் முதலான மரபுக் கவிதை வடிவிலான இலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது புதுக்கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற நவீன புத்திலக்கியப் படைப்புகளைக் கொண்டா அல்லது அம்மொழியில் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களின் பெருக்கத்தைக் கொண்டா?

இவை மட்டுமே மொழி வளர்ச்சியின் முழுமையான அளவுகோல்கள் ஆகா. 'மொழியில் புதிது புதிதாக வந்து இணையும் சொல் வளத்தை, குறிப்பாக, கலைச்சொற்களின் பெருக்கத்தைக் கொண்டே ஒரு மொழியின் வளர்ச்சியின் அளவு கணிக்கப்படும்' என்பதுதான் உலக மொழியியலார் தரும் முடிவு. இதிலிருந்து சொல் வளமே ஒரு மொழியின் உண்மையான மொழி வளம் என்பது தெளிவாகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சிச் சூழலுகேற்ப, ஆயிரமாயிரம் கலைச் சொற்கள், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் தமிழில் உருவெடுக்க வேண்டியது காலத்தின் இன்றியமையாக் கட்டாயமாகும் எனக் கூற வேண்டியதில்லை.

'இன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சி முழுக்க முழுக்க மேனாட்டவர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அவற்றிற்கான அறிவியல் கலைச்சொற்களும் அவர்களாலேயே ஆங்கிலத்தில் படைக்கப் பட்டுள்ளன. அவை உலகினரால் 'உலகப் பொதுமொழி' போன்று பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை நாமும் ஆங்கில வடிவில் அப்படியே ஏற்றுப் பயன்படுத்த வேண்டியதானே? தமிழில் எதற்குப் புதிதாகக் கலைச் சொல்? வேண்டுமானால் விளக்கங்களைத் தமிழில் எழுதிக் கொள்ளலாம். முழுமையாகத் தமிழிலும் இதற்கான கலைச்சொற்களை உருவாக்குவது வீண் வேலை அல்லவா?' என்று கூறுவோரின் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பது போல் தோன்றினும் இக்கூற்று முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

அறிவியல் - தொழில்நுட்பக் கலைச்சொற்களில் இருவேறு தன்மை உண்டு. முதலாவது சாதாரணமாகப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். மற்றொரு வகை அசாதாரணத் தன்மைகளோடு கூடிய சிறப்புப் பொருளுணர்த்தும் கலைச்சொற்கள். இவை 'பன்னாட்டுக் கலைச்சொற்கள்' (International Technical Terms) எனப்படும். இவ்வகைக் கலைச்சொற்கள் உலக முழுவதிலும் மொழி பெயர்க்கப்படாமல் ஒலி பெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு, பயன் படுத்தப்படுவனவாகும். சான்றாக, லேசர் (Laser), ரேடார் (Radar) போன்ற முதலெழுத்துச் சொற்களும் என்சைம், ஐசோடோப், ஓசோன் போன்ற சொற்களும் மற்றும் அறிவியலார் பெயரில் அமைந்த ஆம்பியர், ஓம் போன்ற சொற்களும் பன்னாட்டுக் கலைச்சொற்களாகும்.

ஆங்கில மொழியும் அறிவியலும் நன்கு அறிந்தோரே இவற்றின் பொருள்நுட்பம் அறிவர். மற்றவர்கட்கு இச்சொற்கள் வெறும் குழுஉக்குறிகள் போன்றே தோன்றும்.

இஃதன்னியில் 'டெலிவிஷன்', 'டெலஸ்கோப்' போன்ற சொற்களும் உலகளாவிய முறையில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் அறிவோ அல்லது படிப்பறிவோ இல்லாதவர்கள் இச்சொற்களைக் குழுஉக்குறிச் சொற்களாகவே பயன்படுத்துகின்றனர். இந்த ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொற்களாக 'தொலைக்காட்சி', 'தொலை நோக்கி' எனத் தரும்போது தொலைவிலிருக்கும் காட்சிகளை அண்மையில் கொண்டு வந்து காட்டும் கருவியே 'தொலைக்காட்சி' என்றும் தொலைவிலிருப்பவர்களை நெருங்கிக் காண உதவும் கருவியே 'தொலைநோக்கி' என்றும் யாரும் விளக்காமலே தமிழ்க் கலைச்சொல் மூலம் பொருள் உணர்ந்து தெளிய முடிகிறது. இவ்வாறு ஆங்கிலம் அறியாத சாதாரண பாமர மக்களும் கேட்ட மாத்திரத்தில் தெளிவாகப் பொருள்புரியும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதால் ஏற்படும் இழப்பு எதுவுமில்லை. பயனோ ஏராளம், ஏராளம்!

எனவே, எழுத்தறிவின் உச்சத்தைப் பெறாத நம் மக்களிடையே அறிவியல் அறிவையும் உணர்வையும் அதிகரிக்க தாய்மொழியாம் தமிழ் மூலம் சொல்வதே சாலச்சிறந்ததாகும்.

அறிவியல் நுட்பங்களைத் திறம்பட விளக்கவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறதா என ஐயுருவோரும் இருக்கவே செய்கின்றனர். மொழியியல் பேரறிஞர் டாக்டர் கிரியர்சன் 'உள்ளத்தில் உருவெடுக்கும் சிந்தனைகளை - மிக நுட்பமான உணர்வுகளை, எண்ணிய எண்ணியாங்கு, திறம்பட வெளிப்படுத்தவல்ல மொழியாகத் தமிழ் அமைந்திருக்கிறது' எனப் புகழ்ந்துரைத்ததற்கொப்ப எத்தகைய அறிவியல்நுட்பச் செய்தியாயினும் அவற்றைச் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் தமிழில் கலைச்சொல் வடிவில் சொல்ல முடிகிறது என்பதுதான் என் நாற்பதாண்டு காலக் கலைச் சொல்லாக்கப் பட்டறிவு உணர்த்தும் உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக, அறிவியலைத் திறம்பட உணர்த்துவதற்கான ஆற்றல்மிகு மொழியாக அமைந்திருப்பதுதான். இது நாமே அறிந்துணரா உண்மைநிலை.

தமிழ்மொழி வரலாற்றை, வரலாற்று வழி நுணுகி ஆராய்ந்தால், காலந் தொறும் தமிழ் பல்வேறு துறைக் கலைச்சொற்களை உருவாக்கி, வளர்ந்து வந்துள்ள வரலாறு தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.

'காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப ஒருமொழி தன்னைத் தகை வமைத்துக் கொள்வதன்மூலமே வளர்ச்சியும் வளமும் பெறமுடியும்' என்பது மொழியியல் வரலாறு. அவ்வகையில் சமயத்தாக்கம் ஏதுமில்லாத சங்க காலத்தில் அறிவியல் அடிப்படையில் சமுதாயப்பூர்வமாக அகம், புறம் என வளர்ந்த தமிழ், வைதீக சமய, சமண, பெளத்த, கிருத்துவ, இஸ்லாமியத் தமிழாக, தத்துவம் சார்ந்த சித்தாந்தத் தமிழாக வளர வேண்டிய தவிர்க்கவியலா சூழல். ஆங்கிலேயர் உறவால் அறிவியல் அடிப்படையிலும் புதினம், சிறுகதை என்ற புத்திலக்கியப் போக்கிலும் வளர வேண்டிய சூழ்நிலை. இக்கால கட்டங்களிலெல்லாம் புதிய கருத்துகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த புதிய புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டு வளர, வளமடையத் தவறவில்லை. ஆனால், தயக்கமெல்லாம் தமிழர்களிடம்தான். தொய்வு மனப்பான்மை படைத்த சிலர் தங்களால் இயலாது என்பதை வெளிப்படுத்த விரும்பாது, அஃது தமிழாலேயே இயலாது என விளம்ப முற்பட்டு விடுகின்றனர்.

மருத்துவத் துறைக்கான ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் காணும் முயற்சி நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம். அம்முயற்சிக்கு வடிவம் தந்தவர் ஈழத்தில் மருத்துவம் பயிற்றுவிக்க வந்த, யாழ்ப்பான மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஃபிஷ்கிரீன் என்ற அமெரிக்கர். அவர் தமிழில் உருவாக்கிய கலைச்சொற்கள் தமிழ்ப் பெயர் தாங்கியிருந்தபோதிலும் பெரும்பான்மையான கலைச்சொற்கள் சமஸ்கிருத ஒலி வடிவினவாகும். இதற்குக் காரணம் இக்கால கட்டத்தில் அங்கு உச்சத்தில் இருந்த இந்து சமயத் தாக்கமும் அதன் புனித மொழி என்ற போர்வையில் தமிழ் மீது செலுத்தி வந்த ஆதிக்கப் போக்குமாகும். இந்நிலையே இங்கும் நிலவிய போதிலும் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு தமிழிலேயே கலைச் சொல்லாக்க முயற்சிகள் வலுப்பெறலாயின.

அன்றைய சமஸ்கிருதச் செல்வாக்கு தமிழ்க் கலைச்சொல்லாக்கத்துக்கு ஏதோ ஒருவகையில் முட்டுக்கட்டையாக அமைந்தது போன்றே இன்று 'தூய தமிழ்' ஆர்வலர்களின் தனித்தமிழ்ப் போக்கும் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தாமலிருக்க முடியவில்லை. இலக்கியத்தில் மொழி முதன்மை நிலை பெறலாம். அறிவியல் கலைச்சொற்களைப் பொறுத்தவரை மொழியைக்காட்டிலும் கருத்துணர்த்தும் திறனுக்கே முதலிடம். சொல்வழி கருத்தை வெளிப்படுத்த உதவும் துணைக்கருவி மட்டுமே மொழி என்பதை நாம் உணர்ந்து தெளியவேண்டும். அறிவியலில் மொழிக்கு முதன்மைதர முற்பட்டால் கருத்துச் சிதைவும் பொருட்பிறழ்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளில் காணமுடியாத ஒரு தனித்தன்மை தமிழ்க் கலைச்சொற்களுக்கு உண்டு. அதுதான் வேர்ச்சொல் தேடல்.

ஆங்கில மொழியில் ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டு மெனில், அதற்கான வேர்ச்சொல்லை லத்தீன், கிரீக், ஹீப்ரு அல்லது வேறு மொழிகளில் தேடிப் பெறவேண்டும். ஆங்கில மொழியில் வேர்ச்சொல் கிடைப்பது மிக அரிது. ஏனெனில், ஆங்கில மொழி, மேற்கூரிய மொழிகளின் கூட்டுக் கலவையாகும்.

ஆனால், அதே சமயத்தில் இந்தியிலோ அல்லது மராத்தியிலோ ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச் சொல்லை சம்ஸ்கிருதத்திலோ, பாலி, பிராகிருத மொழிகளிலோ தேடிப் பெற வேண்டும். கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளின் சொல் உருவாக் கத்துக்கான வேரை சமஸ்கிருதத்திலோ அல்லது தமிழிலோ தேட வேண்டும். ஆனால், தமிழில் ஒரு கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற் கான வேர்ச்சொல்லைத் தமிழில் மட்டுமே காண முடியும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் தேடிக் காணவே முடியாது.

'இன்றையக் கலைச்சொல் தேவையை நிறைவு செய்யுமளவுக்குத் தமிழில் அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கான வேர்ச்சொற்கள் வேண்டுமளவு கிடைக்க வாய்ப்புண்டா? என வினா எழுப்பத் தோன்றலாம். இதற்கு நாம் விடை கூறுவதைவிட தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்தவரும் 'மொழியியல் தந்தை' எனப் போற்றப்படு பவருமான டாக்டர் எமினோ என்பார் கூறுவதைக் கேட்போம். "உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச்சொற்களையுடைய மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது", எனப் பாராட்டியுள்ளது இங்கு நினைவுகூரத் தக்கதாகும். வேர்ச்சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் மிகுதியாக விரவிக் கிடக்கின்றன. அதையெல்லாம்விட தமிழில் புதிய வேர்களை எளிதாக உருவாக்கவும் இயலும். அந்த அளவுக்கு நெகிழ்வுத் திறமுள்ள மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது.

கலைச்சொல்லாக்கப் பணியை மேற்கொள்வோருக்கு இருக்க வேண்டிய தகுதிப்பாடுகள் என்னென்ன என்பதிலும் நாம் கருத்துன்ற வேண்டியவர்களாக உள்ளோம்.

முதற்கண் எந்தத்துறை சார்ந்த சொல்லாக்க முயற்சி மேற்கொள்ளப்பட விருக்கிறதோ அந்தத் துறையில் சிறப்பறிவு பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த ஆங்கிலக் கலைச்சொல் உணர்த்தும் பொருள்நுட்பத்தை நன்கு உணர்ந்து, தெளிந்து, அதனைத் தமிழில் முழுமையாக வெளிப்படுத்தத்தக்க வகையில் தமிழ் சொல்லாட்சி வல்லவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழ் வேர்ச்சொற்களை இனங்கண்டு தேர்வு செய்யுமளவுக்கு தமிழ் இலக்கிய புலமை அல்லது பயிற்சிமிக்கவராக இருத்தல் வேண்டும். சரியான கட்டுக்கோப்பில் இலக்கண வரம்புகளுடன் சொல்லை வடித்தெடுக்குமளவுக்கு இலக்கண அறிவும் அவசியம். இலக்கியங்களிலோ அல்லது அன்றாட வழக் காற்றிலோ உரிய சொல் அல்லது வேர்ச்சொல்லை இனங்காணும் திறன் வேண் டும். உரிய சொல்லோ அல்லது வேர்ச்சொல்லே கிடைக்காதபோது புதிய சொல்லை உருவாக்க மொழியியல் அறிவு ஒரளவு அவசியம். இவையே கலைச் சொல்லாக்க வல்லுநருக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகளாகும்.

கலைச்சொல்லாக்கத்தில் முதல் உரிமையும் பொறுப்பும் உடையவர்கள் அவ்வத்துறை வல்லுநர்களே என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர் களில் போதிய தமிழறிவும் இலக்கியப் பயிற்சியும் இலக்கண அறிவும் உடை யவர்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதிக அளவு இல்லை யென்றாலும் ஒரு சில சொற்களையேனும் உருவாக்கும் முயற்சியில்

8 ஈடுபடலாம். இப்பணியில் ஒரு சிலர் முனைப்புக் காட்டியபோதிலும் பெரும் பாலான தமிழறிந்த துறை வல்லுநர்கள் "கலைச்சொற்கள் தமிழில் மிகுதியாக வேண்டும். அதில் நாம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்", என வேண்டு கோள் விடுவதிலும் அறிவுறுத்துவதிலும் ஆர்வம் காட்டி, காலத்தை ஓட்டுகிறார்களே தவிர, அப்பணி தங்களுக்குரியது எனக் கருதி செயல்படத் துணிவதில்லை. மற்றவர்களைச் செய்யச் சொல்லும்முன், தான் அதில் முனைப்போடு, ஈடுபட்டு வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு ஏனோ அவர்களிடம் இல்லாமற் போய்விடுகிறது.

இந்நிலையில்தான், ஒரளவு துறையறிவு பெற்றவர்கள் முனைந்து மேன் மேலும் துறையறிவை முனைப்போடு வளர்த்துக்கொண்டு, அதனடிப்படையில் சொல்லாக்கம் செய்து, அதனை அவ்வத்துறை வல்லுநர்களின் மேற்பார்வையோடு செப்பனிட்டு, தகுதிமிக்க கலைச்சொற்களாக உருவமைத்து வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். இவர்களின் வெற்றி தமிழின் வெற்றியாகவும் அமைகிறது. என்போன்ற ஆர்வலர்கள் அம்முறையில் தான் வீறுநடைபோட்டு வருகிறோம். 'தோள் கண்டார் தோளே கண்டார் ' என்றாற்போல் துறை வல்லார்க்கு அவர் சிறப்பறிவு பெற்ற ஒரு துறை மட்டுமே களமாக அமைகிறது. ஆனால் என்போன்ற ஆர்வலர்கட்கு எதனையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பெருவேட்கையோடு முனைந்து கற்பதால், 'இதுதான் நம் துறை' என்ற வேறுபாடு இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் எல்லையே இல்லாமல், எல்லாதுறைகளுமே களமாயமைகின்றன. இவ்வகையில் தான் உயிரியல் முதல் கணினி ஈராக அனைத்து அறிவியல், தொழில்நுட்பத்துறைகளுக்கான ஐந்து கலைச்சொல் தொகுதிகளை (சுமார் மூவாயிரம் பக்கங்களில், சுமார் ஐம்பதினாயிரம் கலைச்சொற்கள்) வெளியிட முடிந்தது. வேறு சிலரும் என்னைப் போலவே சொல்லாக்கப் பணியில் முனைப்புக் காட்டி உழைத்து வருகிறார்கள்.

கலைச்சொல்லாக்க முயற்சியைப் பொறுத்தவரை, ஆர்வமுடையவர் கட்கு, சொல்லாக்க வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்ற நன்னோக்கில், ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் சொல்வதோடு அமையாமல், சொல்விளக்கம், பொருள்விளக்கங்களைப் படத்தோடு தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதைப் படித்துத் தெளிவுபெறும் சொல்லாக்க ஆர்வலர்கள் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற்செட்டும், பொருட் செறிவுமுடைய, நயமிக்க கலைச்சொற்களை உருவாக்க வாய்ப்பேற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.

இனி, கணினி கலைச்சொல்லாக்கத்தைப் பொறுத்தவரை நான்மேற் கொண்டு வரும் வழிமுறைகள் சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

எனது கணினி அகராதிகளை வெறும் ஆங்கில-தமிழ்க் கலைச்சொல் பட்டியல்களாக (Glossaries) அமைக்காமல், களஞ்சியத் தன்மையும் அகராதித் தன்மையும் ஒருங்கியைந்த, 'களஞ்சிய அகராதி'களாக அமைத்து வருகிறேன். காரணம், அவை சொல் விளக்கமும் பொருள் விளக்கமும் ஒருங்கிணைந்து படிப்போருக்கு தெளிவைத் தரவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். அதற்காக ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இயன்றவரை பல கலைச்சொற்களைத் தருகிறேன். சான்றாக,

Data  : தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.
Mouse  : சுட்டி, கட்டுக் கருவி, சுட்டுப்பொறி, கட்டு நுண்பொறி.
Key  : விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவி,
Pixel  : படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு.

இதில் ஏதாவது ஒரு சொல் நிலைபேற்றுத் தன்மையைப் பெறதா என்ற எண்ணமும் நாளை தரப்படுத்தம் செய்ய விழையும்போது, ஒப்பீட்டாய்வு செய்வதற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தேவைப்படுமே என்பதும் காரணங்களாகும்.

கணினித்துறை போன்ற அறிவியலுக்கான கலைச்சொல் உருவாக்கத்துக்கு இலக்கியத் தரமான சொற்களைப் பயன்படுத்த சிலர் விழைவதில்லை. உரிய பொருளை விளக்க அவைகளால் இயலாது என்று கருதப்படுகிறது. ஆனால், தக்க மாற்ற திருத்தங்களுடன் பயன்படுத்தினால் கருதிய பொருளைத் திட்ய, நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

Jergon : குழுஉச் சொல்
Slug : பருங்குழை
Finesse : நய நுட்பம்
Host : ஒம்புநர், புரவலர்
Malfunction : பிறழ்வினை

என அமைக்கலாம்.

எல்லாவற்றிற்கும் இலக்கியச் சொல்லைத் தேடி ஒடவேண்டியதில்லை. அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சாதாரணச் சொற்களையே பயன்படுத்தி அறிவியல் செய்திகளை நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

Jaggies : பிசிறுகள்
Pad : திண்டு
Glarefilter : கூசொளி வடிகட்டி

கலைச் சொல்லாக்கத்துக்கான வேர்ச்சொற்கள் வேண்டிய அளவுக்கு இலக்கிய நூல்களிலும் அன்றாட பேச்சு வழக்குச் சொற்களிலும் கிடைக்கின்றன. அவற்றைப் புதிய பகுதி, விகுதிகளோடு உருவாக்கினால் பொருளாழமிக்க சொற்களாக உருவாக்க இயலும்.

Quantum : துளியம்
Terminal : முனையம்
Bit : துண்மி
Robot : எந்திரன்
தெளிவுக்காக இரு சிறு சொற்களை இணைத்துப் புதுச் சொல்லாக்கிப் பொருள் விளக்கம் பெறலாம். சான்றாக,
Antenna    :  அலைவாங்கி
Virus    :  நச்சுநிரல்
Audio    :  கேட்பொலி

கூடுமானவரை ஆங்கிலத்திலிருந்து சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆங்கிலச் சொல் உணர்த்தும் பொருளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அதனைத் திட்பமாக உணர்த்தும் சொற்களைக் கொண்டு சொல்ல முற்படவேண்டும். சான்றாக,

Handset      :   ஒலியுறுப்பு
Cold fault      :   உடன்தெரியும் பிழை
Creet      :  விளங்கா மொழி
Femaleconnector    :   துளை இணைப்பி
Gun      :  வீச்சுப்பொறி

ஒரு கணினிச் சொல் தனியாக வரும்போதும் சொல் தொடருடன் இணைந்து வரும்போதும் சொல் மாறாமல் இடம்பெறச் செய்வதன்மூலம் பொருள் தெளிவை அளிக்க முடியும். சான்றாக,

Input    : உள்ளீடு
Inputting    : உள்ளிடுதல்
Input data    : உள்ளிட்டுத் தகவல்
Input Unit    : உள்ளிட்டகம்

எனக் குறிக்கலாம்.

தலைப்பெழுத்துக்களைக் கொண்ட குறும்பெயர்களை ஒலி பெயர்ப்பாக இணைந்து வரும் சொற்களுக்குப் பொருள் தரும் வகையில் அமைக்கலாம். சான்றாக,

PERT Chart    : பெர்ட் வரைபடம்
PET Computer    : பெட் கணினி

மற்றபடி, நிறுவனப் பெயர்கள், மென்பொருள் தொகுப்புப் பெயர்கள், பொருட்பெயர்கள். அளவீடுகள் மற்றும் சிறப்பு பெயர்களை ஒலி பெயர்ப்பாகக் குறிக்கலாம்.

Macpaint    : மாக் பெய்ன்ட்
Herts    : ஹெர்ட்ஸ்
Javlin plus    : ஜேவ்லின் பிளஸ்
Hentry :    : ஹென்றி

மற்றொன்று ஒலிக்குறைபாடு. ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ ஒலிக்குறிகள் தமிழில் இல்லாததால் Geroge-ஐ குறிப்பிடும்போது 'சார்சு' என்றுதான் எழுத நேரும். இவ்வொலிக் குறைப்பாட்டை நீக்க 'ஜார்ஜ்' என்றே எழுதலாம். ஏனெனில், கிரந்த எழுத்துகள் எனக் கருதப்படும் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்ற எழுத்துகள் சமஸ்கிருத வரி வடிவங்கள் அல்லவே அல்ல. அவை ஒளி வடிவங்கள் மட்டுமே. சில சம்ஸ்கிருத ஒலிகளை உரிய முறையில் வெளிப்படுத்த தமிழில் எழுத்துகள் இல்லை என்ற குறைபாட்டை நீக்க, பல்லவர்கள் காலத்தில் காஞ்சி மாநகரில் தமிழ் வரிவடிவச் சாயலில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் கன்னடத்திலோ தெலுங்கிலோ இல்லை. தமிழிலும் தமிழிலிருந்து கிளைத்த மலையாளத்திலும் மட்டுமே உள்ளன. அதிலும் கிரந்த எழுத்துகள் பலவாக இருந்தாலும் இந்த நான்கைந்து எழுத்துக்களை மட்டுமே தமிழ் பட்டும்படாமலும் தன்னுடன் உறவாட அனுமதித்து வருகிறது. எனவே, ஆங்கில எழுத்தொலியை ஒலி பெயர்ப்பின் போது முழுமையாக பெற இக்கிரந்த எழுத்துகளைபயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்.

இவ்விரண்டாம் தொகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. பயன்பாட்டுக்கு வந்திருப்பினும் ஆங்கில அகராதியில் இடம்பெறாத பல புதிய சொற்கள் இவ்விரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் நாடுகள் சென்றிருந்தபோது இக்கலைச் சொற்களைச் சேகரிக்க இயன்றது. ஆங்கில அகராதிக்கும் முந்தி, தமிழ் அகராதியில் நேர்ச் சொல்லாக்கம் இயல்கிறதென்றால் தமிழ் இயல்பிலேயே ஆற்றல்மிக்க அறிவியல் மொழி என்பது தெளிவாகிறதன்றோ!

இவ்விரண்டாம் தொகுதி சிறப்பாக வெளிவரப் பெருந்துணையா லமைந்தவர் கணினித் துறை வல்லுநரும் என் கெழுதகை நண்பருமான திரு. மு. சிவலிங்கம் அவர்களாவர். தமிழறிவும் அறிவியலறிவும் எழுத் தாற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அவர், இந்நூல் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் ஒத்துழைத்து உதவியதை என்னால் மறக்கவே முடியாது. அன்னாருக்கு என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நூல் தயாரிப்பின்போது கனடா வந்த எனக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்து, கணினி அகராதிப் பணி இனிது நிறைவேறப் பெருந் துணையாயமைந்த ஈழத்துக் கெழுதகை நண்பர் திரு. இராஜரத்தினம் அவர்கட்கும் இச்சமயத்தில் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் இன்று 1,250 பக்கங்களைக் கொண்ட இரண்டு கணினிக் கலைச்சொல் தொகுதிகளைத் தமிழில் வெளியிட இயன்றதென்றால், அதற்கு என் திறமையோ இப்பணியில் இணந்து பணியாற்றும் நண்பர்களின் திறமையோ மட்டும் காரணமில்லை. தமிழின் தனிப்பெரும் ஆற்றலே காரணம். ஏனெனில், இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக, அறிவியலைச்சொல்வதற்கென்ற உருவான மொழியாக அமைந்திருப்பதுதான்.

மணவை முஸ்தபா
நூலாசிரியர்