கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/A

A

A : ஏ : டாஸ், விண்டோஸ் மற்றும் சில இயக்க முறைமை (ஆப்ப ரேட்டிங் சிஸ்டம்)களில், முதல் அல்லது முதன்மை நெகிழ்வட்டு இயக்ககப் பெயர் - இரண்டு நெகிழ்வட்டுகள் இருப்பின் ஏ,பி (A,B) என்று அழைக்கப்படும். கணினிக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ள நிலைவட்டு எப்போதும் சி (C) என்றே அழைக்கப்படும். தொடக்க காலக் கணினிகளில் நெகிழ்வட்டுகள் மட்டுமே இருந்தன. பிற்காலக் கணினிகளில் தான் நிலைவட்டு இடம் பெற்றது. எனவேதான் பெயர்வரிசை இவ்வாறு அமைந்தது. கணினியை இயக்கும்போது, இயக்க முறைமை உள்ளதா என முதலில் ஏ-வட்டில்தான் தேடும். இல்லையேல் சி-யில் தேடும். இதற்கான குறிப்பு சீமாஸ் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் இந்த வரிசையை மாற்றியமைக்க வும் முடியும்.

abbreviated dialing : சுருங்கிய சுழற்றுகை: குறுக்குச் சுழற்றுகை.

abios : ஏபயாஸ் : உயர்நிலை அடிப்படை உள்ளீட்டு/வெளியீட்டு முறைமை என்று பொருள்படும். 'advanced basic input/output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப்பட்ட இயக்க முறைமைக்குத் துணை செய்யும், உள்ளீட்டு/வெளியீட்டுப் பணி ஆணைத் தொகுதிகள். ஐபிஎம் பீஎஸ்/2 சொந்தக் கணினிகளில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

abondon : கைவிடு.

about : பற்றி

absolute addressing : சரியான முகவரியிடல்.

absolute cell reference : தனிச் சீற்றம் குறித்தல்; நேரடிக் கலம் குறித்தல்.

absolute code : தனிக் குறிமுறை

absolute error : தனித் தவறு; தனி வழு; முற்றுப் பிழை.

absolute link : நேரடித் தொடர்பு; முழு இணைப்பு.

absolute path : முழுமையான பாதை. முழுப்பாதை : ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory)திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை. (எ - டு) c:\windows\system\ms386.dll

absolute pointing device : முற்றப் பொருந்திய சுட்டுக் கருவி : பேனாவையொத்த சுட்டுக் கருவிகளில் ஒருவகைக் கருவிக்குப் பெயர். பயனாளர், வரைகலைப் பட்டிகை மீது வலது மேல் மூலையில் பேனாச் சுட்டுக் கருவியை வைக்கும்போது, திரையிலுள்ள சுட்டுக்குறி (cursor)யும் கணினித் திரையின் வலது மேல் மூலைக்கு நகரும். இவ்வாறு திரையில் நகரும் நிலை சுட்டுக்குறியின் இடத்துடன் பொருந்தி நகர்த்தப்படும் இடம் அல்லது நிலை இருப்பதால் சுட்டுக் கருவிக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.

absolute URL : முழு யூ ஆர் எல். abstract automotic : தன்னியக்கக் கருத்துரு ; தானியங்கு கருத்தியல்.

abstract class : கருத்தியல் இனக்குழு

abstract data type : கருத்தியலான தரவு இனம்.

abstract machine : கருத்தியல் எந்திரம்; பொழிப்பு எந்திரம். ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்துவதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஓர் இடைநிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒரு மாதிரி வடிவமைப்பு. இந்த வடிவமைப்பை ஓர் ஆணை மாற்றியோ (interpreter) மொழிமாற்றியோ (compiler) பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நுண்செயலியின் ஆணைத் தொகுதி உண்மையான கணினி ஆணைகளோடு ஒத்திருக்காது. மொழிமாற்றம் (compile) செய்யப்பட்ட ஆணைத் தொகுதியுடன் பெரிதும் ஒத்திருக்கும்.

abstract methods : கருத்தியல் வழி முறைகள்.

abstract syntax : கருத்தியல் தரவு தொடரியல் : கருத்தியல் தரவு இன வரையறை. கணினியின் வன்பொருள் கட்டமைப்பு மற்றும் குறியீட்டு முறை சாராத, ஒரு தரவு கட்டமைப்பின் வரையறை அல்லது இலக்கணம். இத்தகைய தரவு இன வரையறை, எல்லாவகைக் கணினிக்கும், எல்லாவகைக் கணினி மொழிகளுக்கும் பொதுவான ஒன்றாகும்.

abstract syntax notation : கருத்தியல் தரவு இனக் குறிமானம் - 1 : கருத்தியல் தரவு இனங்களுக்கும், தரவு கட்டமைப்பு பற்றிய வரையறைகளுக்குமான ஐஎஸ்ஓ-வின் தரக்கட்டுப்பாடு. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதற்கு இத் தரக்கட்டுப்பாடு அடிப்படையாக விளங்குகிறது.

abstract syntax tree : கருத்தியல் தொடரமைப்பு மரவுரு : பல்வேறு, ஒருங்கிணைந்த கட்டளைத் தொடர் சூழல்களிலும் கட்டமைப்பு சார்பான உரைத் தொகுப்பான்களிலும் பயன்படுத்தப்படுகின்ற மர உரு.

A/B switch box : ஏ/பி நிலைமாற்று விசைப் பெட்டி : இருநிலை விசை அமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெட்டி. இந்தப் பெட்டி வழியாகச் செல்லும் சைகை (சமிக்ஞை) யை இரு வகையாக நெறிப்படுத்தலாம். (1) ஒற்றை உள்ளீட்டிலிருந்து, இரு வெளியீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு. (2) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உள்ளீட்டிலிருந்து, ஒற்றை வெளியீட்டுக்கு.

Ac adapter : ஏசி (மாற்று மின்விசை)ஏற்பி, ஏசி இயைபி; ஏசி தகவி; மாற்றுமின் இயைபி : 110 அல்லது 220 வோல்ட் அளவுள்ள வீட்டு மின் சாரத்தை, கணினி உறுப்புகளுக்குத் தேவைப்படுகின்ற குறைந்த மின்னழுத்தம் கொண்ட நேர் மின்சாரமாக மாற்றித்தரும் ஒரு புறச்சாதனம்.

academic network : கல்வித்துறைப் பிணையம்.

accelerated graphics port (AGP) : முடுக்கு வரைகலைத் துறை.

acceleration time : முடுகு நேரம். முடுக்கல் நேரம்.

accelerator board : முடுக்குப் பலகை; வேகமூட்டிப் பலகை.

accelerator card : முடுக்கி அட்டை : கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின்சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத்திறன் அதிகரிக்கும்.

accelerator key : முடுக்கு விசை.

accept : ஏற்றுக்கொள்.

acceptable user policy : ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு : ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை : இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக்காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை.

access bus : அணுகு பாட்டை : அணுகு மின்வழி : கணினியுடன் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன் வாயில் மூலமாக, இந்த அணுகுபாட்டையில் கணினியுடன் இணைக்க முடியும். இதற்கு இயைபுடைய புறச் சாதனங்கள், தொலைபேசி செருகி போன்ற இணைப்பானால் பொருத்தப்படுகின்றன. ஆனால் கணினி ஒவ்வொரு புறச் சாதனத்துடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறது. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே புறச்சாதனத்தைப் பொருத்தலாம். கணினி, தானாகவே அதற் கொரு முகவரியை ஒதுக்கி செயல் நிலைக்கு கொண்டுவந்துவிடும். டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த அக்செஸ் பஸ், இன்டெல் நிறுவனத்தின் யுஎன்பி (universal serial bus)-க்குப் இணையானது எனலாம்.

access control list : அணுகல் கட்டுப்பாட்டுப் பட்டியல் : வட்டில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியல்.

access denied : அணுகல் மறுப்பு.

access event : அணுகல் நிகழ்ச்சி. அணுகு நிகழ்வு

access hole : அணுகு துளை.

access, immediate : உடனடி அணுகல்.

access level : அணுகு மட்டம்; அணுகு நிலை.

access mask : அணுகல் மறைப்பி.

access memory, random : குறிப்பின்றி அணுகு நினைவகம்.

access mode : அணுகு பாங்கு

access number : அணுகு எண் : இணையத்திலுள்ள ஒரு சேவையை அணுகுவதற்கு சந்தாதாரர் பயன் படுத்தும் தொலைபேசி எண்.

access path : அணுகு பாதை: அணுகு வழி : ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கோப்பகம் மற்றும் உள்கோப்பகங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் (அவ்வாறு இருப்பின்). இறுதியில் கோப்பின் பெயர் இருக்கும். (எ.டு): C:\WINDOWS\ SYSTEM\abc.dll

access points : அணுகு முனைகள்; இயக்க முனைகள்.

access privileges : அணுகு சலுகைகள்: ஒரு பிணையத்தில் அல்லது ஒரு கோப்பு வழங்கனில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் வளங்களைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள். வழங்கன் கணினியை அணுகுதல், ஒரு கோப்பகத்தின் உள்ளடக்கத்தைப் பார்வை யிடல், ஒரு கோப்பினைத் திறந்து பார்த்தல், அதனைப் பிறருக்கு அனுப்புதல், ஒரு கோப்பினை அல்லது கோப்பகத்தை உருவாக்குதல், திருத்தியமைத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகள் இந்தச் சலுகைகளில் அடங்கும். முறைமை நிர்வாகி ஒரு பயனாளருக்கு இச்சலுகைகளை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். நிர்வாகிக்கு இத்தகைய உரிமை இருப்பதால் தகவல் பாதுகாக்கப்படுகிறது; இரகசியத் தகவலின் மறைதன்மை காப்பாற்றப் படுகிறது. வட்டிலுள்ள சேமிப்பிடங்கள் போன்ற வளங்களை முறைப்படி பிரித்தளிக்க முடிகிறது.

access provider : அணுகள் வழங்கி.

access, random : குறிப்பின்றி அணுகல்.

access rights : அணுகு உரிமைகள் : ஒரு கோப்பு அல்லது கோப்பகம் அல்லது ஒரு முறைமையைப் பார்க்க, உள்நுழைய அல்லது மாற்றம் செய்வதற்கான அனுமதி.

access, serial : தொடரியல் அணுகல்.

access series : அணுகு தொடர்.

access specifier : அணுகல் வரையறுப்பி.

access storage device, direct : நேரடி அணுகு களஞ்சியக் கருவி; நேரடி அணுகு சேமிப்பக சாதனம். access storage, direct : நேரடி அணுகு சேமிப்பகம்; நேரடி அணுகு களஞ்சியம்.

access storage, random : தற்போக்கு அணுகு தேக்ககம்; குறிப்பின்றி அணுகு சேமிப்பகம்.

access storage, zero : சுழி அணுகு சேமிப்பகம்.

access to store : சேமிப்பக அணுகல்.

accessibility : அணுகல் தரம்; அணுகு திறன்; அணுகுதரம் : ஏதேனும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில், பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு ஏற்ற வகையில் கணினியில் அமைந்துள்ள வன் பொருள், மென்பொருள்களின் தரம்.

accessiblity options : அணுகுமுறை விருப்பத் தேர்வுகள்.

account : கணக்குவைப்பு : 1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச் சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும் பரப்பு பிணையங்களிலும், பல் பயனாளர் இயக்க முறைமைகளிலும், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனுமதிக்கப்பட்ட பயனாளர்களை அடையாளம் காணும்பொருட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பேடு.

account policy : கணக்கியல் கொள்கை; கணக்குவைப்புக் கோட்பாடு : 1. குறும்பரப்புப் பிணையங்கள் மற்றும் பல் பயனாளர் பணித்தளங்களில் பயனாளர்களின் உரிமைகள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய வரையறைகள். ஒரு புதிய பயனாளர், முறைமையை அணுக அனுமதிக்கலாமா, ஏற்கெனவே உள்ள பயனாளருக்குக் கூடுதலான வளங்களைக் கையாளும் உரிமைகளையும் வழங்கலாமா என்பது போன்ற கொள்கை நிலைகளை வரையறுப்பது. ஒரு பயனாளர் தனக்குரிய சலுகைகளை முறைப்படி பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விதிமுறைகளையும் இக்கொள்கை வரையறை செய்கிறது. 2. விண்டோஸ் என்டி (விண்டோஸ் 2000) மற்றும் விண்டோஸ் எக்ஸ்பீ இயக்க முறைமையில் பிணையத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட களப்பிரிவில் (domain) உள்ள பயனாளர்கள் நுழைசொற்களைப் (pass- words) பயன்படுத்துவதற்கான விதி முறைகளை இச்சொல் தொடர் குறிக்கிறது.

accountancy : கணக்கியல்.

accountancy card calling : வங்கிக் கணக்கு அழைப்பு அட்டை

accounting file : கணக்குவைப்புக் கோப்பு : ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச் சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கோப்பு. இந்தக் கோப்பு அச்சுப் பொறி கட்டுப்படுத்தி (printer controller)யால் உருவாக்கப்படுகிறது.

accounting machine : கணக்கியல் எந்திரம்; கணக்குவைப்பு எந்திரம் : 1. 1940 மற்றும் 50-களில் வணிகக் கணக்கியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்திரம். தானியங்கு தகவல் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பழமையான கருவிகளுள் ஒன்று. தொடக்ககால கணக்கியல் எந்திரங்கள் மின்னணு அடிப்படையிலானவை அல்ல. துளையட்டை மற்றும் செருகு பலகைச் சட்டங்களைப் பயன்படுத்தின. 2. கணக்கியல் செயல்பாடுகளுக்கென்றே தனிச் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி. இக்கணினியை இயக்கியதும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்கியல் மென்பொருள் இயங்கத் தொடங்கும்.

accounting package : கணக்கிடு தொகுப்பு.

accounting routine : கணக்கிடு நடைமுறை.

ACIS : அசிஸ் : Andy, Charles, Ian's System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது பொருள் நோக்கிலான வரைவியல் மாதிரிகளை உருவாக்கும் கருவித் தொகுதியாகும். முப்பரிமாணப் பயன்பாடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட வரைவியல் எந்திரம் (geometry engine).

accoustic coupler : கேட்பொலி பிணைப்பி.

accumulation : திரட்சி; சேர்ப்பு.

accumulator : திரளகம்; திரட்டகம்; சேர்ப்பகம் : நுண்செயலியில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம் (register). பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர்கூட்டுத் தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.

Acrobat : அக்ரோபேட் : அடோப் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரு வணிக மென்பொருள். டாஸ் விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட, முழுதும் வடிவமைக்கப்பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Document Format) கோப்பாக மாற்றித் தரும். பிடிஎஃப் கோப்பினை வெவ்வேறு பணித்தளங்களில் பார்வையிட முடியும். மூலக் கோப்பு எந்தப் பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கோப்பிலுள்ள வேறுவேறான எழுத்துருக்கள், நிறங்கள், வரைகலை மற்றும் ஒளிப்படங்களையும் சேர்த்து, கணினி வழியாக பிறருக்கு அனுப்பி வைக்க முடியும். பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிடமட்டும் முடிகின்ற 'அக்ரோபேட் ரீடர்' என்னும் மென் பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.

acronym : முதலெழுத்துக் குறும்பெயர்; தலைப்பெழுத்துச் சுருக்கப்பெயர்.

across worksheets : பணித்தாள்களுக்கிடையே.

action : செயல்.

action argument : செயல் மதிப்புரு: செயல் இணைப்பு மாறி.

action diagram : செயல் வரிப்படம்.

action message : செயல் தகவல்; செயல் செய்தி.

action oriented management : செயல் சார்ந்த மேலாண்மை.

active device : இயங்கும் உறுப்பு; இயக்கும் பகுதி : இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித்திரையில் ஒரு பகுதி, தற்போது செயல் பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவாக, திரையில் தோன்றும் சுட்டுக்குறி (cursor) அல்லது தேர்வு செய்யப் பட்ட ஒரு பகுதி, கணினித் திரையில் இயங்கும் உறுப்பினைக் காட்டும்.

active addressing : இயங்கு முகவரி; செயற்படு முகவரி.

active area : இயங்கு பரப்பு.

active channel : இயங்கு தடம்; செயற்படு அலைவரிசை.

active class : இயங்கு இனக்குழு.

active configuration : இயங்கு அமைவடிவு; செயல்படு தகவமைவு.

active content : இயங்கும் உள்ளடக்கம்; மாறும் உள்ளடக்கம் : நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் நடவடிக்கை காரணமாகவோ, தள வலைப்பக்கத்தின் மாறுகின்ற உள் ளடக்கம். இணையத்தில் திரையில் தோன்றும் ஒரு வலைப்பக்கத்தில் காணப்படும் படங்கள், எழுத்துகள், விளம்பரப் பட்டைகள் இவற்றை, நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் தலையீட்டின் அடிப்படையிலோ (சுட்டியில் சொடுக்குவதன் மூலமோ) மாற்றியமைக்க முடியும். இத்தகைய மாறும் உள்ளடக்கம், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டு விசைகள் மூலம் இயல்கிறது.

active database : இயங்கு தகவல் தளம்; இயங்கு தரவுத் தளம்.

active decomposition : செயற்படு சிதைவு.

active decomposition diagram : இயங்கு சிதைவு வரைபடம்.

active element : செயற்படு உறுப்பு; இயங்கு பொருள்.

active index : செயற்படும் சுட்டு.

active links : இயங்கும் இணைப்புகள்; செயற்படு தொடுப்புகள்.

active matrix display : இயங்கு அணி காட்சி.

Active Movie : ஆக்டிவ் மூவி; இயங்கும் திரைப்படம்: மேசைக் கணினி மற்றும் இணையத்தில் செயல்படுத்தும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய, பணித்தளம் சாரா இலக்கமுறை ஒளிக்காட்சி (Digital Video) தொழில் நுட்பம்.

active programme : நடப்பு நிரல்; இயங்கும் செயல் நிரல்: நுண் செயலி தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிரல்.

active sensing : நடப்பு ஆவணத் தொடர்.

active window : இயங்கு சாளரம்.

ActiveX : ஆக்டிவ்எக்ஸ் : வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயலுறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகை செய்யும் தொழில் நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் இடைப்பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் காம் (COM.-Component Object Model) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வைய விரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன் பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும்கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ActiveX controls : ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாடுகள்; ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகள் : ஆக்டிவ்எக்ஸ் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென்பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழு பட்டிகள் (pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப் பக்கங்களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச்செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டிவ் எக்ஸ் செயலுறுப்புகளை உருவாக்க முடியும்.

ActiveX documents : ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்.

activity rate : செயற்பாட்டு வீதம்.

Actor : ஆக்டர் : ஒயிட்வாட்டர் குரூப் நிறுவனத்தினர் உருவாக்கிய, பொருள் நோக்கிலான நிரலாக்கமொழி. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிரலாக்கத்திற்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மொழி.

A-D Analog to Digital : தொடர்முறை இலக்கமுறை மாற்றி.

adapter : ஏற்பி, இயைபி; தகவி.

adapter class : ஏற்பி இனக்குழு.

adapative : இயைபு.

adaptive allocation : இயைபு ஒதுக்கீடு.

adaptive answering : பிரித்தறி மறுமொழி, இயைபறி பதிலுரை: தொலை பேசிவழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப பதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும்.

adaptive differential pulse code modulation : தகவேற்பு வேறுபாட்டுத் துடிப்புக் குறியீட்டுப் பண்பேற்றம் : இலக்கமுறை கேட்பொலித் தகவலை இறுக்கிச் சேமிப்பதற்குப் பயன்படும் தருக்கமுறை. கேட்பொலியின் ஒவ்வொரு துணுக்கையும் அப்படியே இலக்கமுறையில் சேமிக்காமல், ஒவ்வொரு துணுக்கும் அதன் முந்தைய துணுக்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை மட்டும் பதிவு செய்யும் முறை.

adaptive interface : இயைபு இடைமுகம்.

add data table : தரவு அட்டவணை சேர்.

add data : தரவு சேர்.

add echo : எதிரொலி சேர்.

add separater : பிரிப்பி சேர்.

add/subtract time : நேரம் கூட்டு/கழி

add to favourites : கவர்வுகளில் சேர்.

add trend line : போக்கு வரி சேர்.

addendum : சேர்ப்பு; பின்னிணைப்பு.

adder, binary half : இரும அரைக் கூட்டி.

adder, half : அரைக் கூட்டி.

adding machine : கூட்டல் எந்திரம்.

add-in manager : கூடுதல் மேலாளர்.

add-in programme : சேர்ப்பு செய் நிரல்; கூடுதல் நிரல்.

addition table : கூட்டல் அட்டவணை.

add method : கூட்டு வழிமுறை.

add new hardware : புதிய வன்பொருள் சேர்.

add-on : கூட்டுறுப்பு.

add - on card : திறனேற்றி அட்டை; கூடுதல் அட்டை; கூட்டுறுப்பு அட்டை

add record : ஏடு சேர்.

add/remove programmes : நிரல்கள் சேர்/அகற்று. address arithmatic : முகவெண் கணக்கீடு; முகவரிக் கணக்கீடு.

address bar : முகவரிப் பட்டை.

address, base : தள முகவெண்; தள முகவரி; அடிமுகவரி; தொடக்க முகவரி.

address book : முகவரி புத்தகம்; முகவரி சேமிப்பு நூல்; முகவரி கையேடு : ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். முதல் முறையாக அஞ்சல் அனுப்புபவரின் முகவரியையும் முகவரிப் புத்தகத்தில் சேமித்துக் கொள்ள முடியும். பட்டியலிலுள்ள ஒருவருக்கு அஞ்சல் அனுப்ப நினைக்கும்போது, முகவரிப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

address buffer : முகவெண் தாங்கி; முகவரி இடையகம்.

address bus : முகவரிப் பாட்டை; முகவெண் மின் இணைப்புத் தொகுதி : கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண்செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தகவலை ஏந்திச் செல்லப் பயன்படும் மின்இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்ஞைகளை ஏந்திச் செல்லும் பாட்டை 'முகவரிப் பாட்டை' எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 64 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்.

address calculation : முகவெண் கணக்கீடு; முகவரி கணக்கீடு.

address decoder : முகவெண் கொணர்வி, முகவரி குறிவிலக்கி : எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணு சாதனம்.

address, direct : நேரடி முகவெண்; நேரடி முகவரி.

address field : முகவெண் புலம்.

address, indirect : மறைமுக முகவெண், மறைமுக முகவரி.

address, instruction : முகவெண்; அறிவுறுத்தல்; ஆணை முகவரி; அறிவுறுத்த முகவரி.

address, machine : எந்திர முகவெண், பொறி முகவரி.

address mapping table : முகவெண் பதிலீட்டு அட்டவணை : கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஓர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாக (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2.vsnl.net.in என்ற இணைய தள முகவரி இணையான 202.54.1.30 என்னும் ஐபி முகவரி அவ்வட்டவணையில் இருக்கும்.

address mask : முகவெண் மறைப்பான்; முகவரி மறைப்பு : ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தகவல் களை தடுக்கப் பயன்படும் ஓர் எண். எடுத்துக்காட்டாக, xxx.xxx.xxx.yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல்முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx.xxx.xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்.

address memory : நினை முகவெண் முகவரி; நினைவக முகவரி.

address mode : முகவெண் முறை; முகவரிப் பாங்கு : கணினி நினைவகத்தில் ஒரு முகவரியைக் குறிப்பிடும் வழிமுறை. absolute address, indexed address, paged address, relative address போன்ற சொற்களையும் காண்க.

address, multi : பன்முகவெண்; பன்முகவரி.

address, one : ஒற்றை முகவரி.

address part : முகவரி பகுதி.

address port : துறை முகவரி.

address, real : உண்மை முகவெண்; மெய் முகவரி.

address, reference : மேற்கோள் முகவெண், குறிப்பு முகவரி.

address, specific : குறித்த முகவெண்; குறிப்பிட்ட முகவரி.

address resolution : முகவெண் அறிதல் : முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன் பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல்.

address resolution protocol : முகவெண் கண்டறி நெறிமுறை.

address, variable : மாறுமுகவெண் .

address, virtual : மெய்நிகர் முகவரி; மாயமுகவெண்.

address, zero level : சுழிநிலை முகவெண்.

addresable : அழைதகு முகவரி.

addressing : முகவெண்ணிடல்; அழைத்தல்.

addresing, absolute : முற்று முகவெண்ணிடல்; முற்று முகவரியிடல்.

addressless instruction formate : முகவரியிலா கட்டளை வடிவம்.

ADI (Apple Desktop Interface) : ஏடிஐ (ஆப்பில் கணினி இடைமுகம்).

adjacency operator : அண்மைய செயற்குறி.

adjective : பெயரடை.

adjust to : சரியாக்க.

adjust : சரிசெய்தல்.

advanced course : உயர்நிலைப் பாடத்திட்டம்.

advanced digital network : உயர்நிலை இலக்கமுறைப் பிணையம் : தகவல் ஒளிக்காட்சி (Video) மற்றும் ஏனைய இலக்கமுறை சமிக்ஞைகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் அனுப்பும் திறன்வாய்ந்த தனி தடச் சேவை. தகவல் தொடர்பு நிறுவனங்கள் சிறப்புச் சேவையாக இதனை வழங்குகின்றன. இத்தகைய உயர்நிலைப் பிணையங்களில், பெரும்பாலும் வினாடிக்கு 56 கிலோ (துண்மி) பிட்டு-க்கு அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

advanced power management : உயர்நிலை மின்சார மேலாண்மை : கணினி அமைப்புகளில் குறிப்பாக, மின்கலன்களால் இயங்குகின்ற மடிக்கணினிகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. கணினி இயக்க நிலையில் நாம் பணியாற்றாமல் இருக்கின்றபோது, கணினியின் பாகங்கள் (தாய்ப்பலகை, செயலி, நிலைவட்டு, திரையகம்) மிகக்குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்படி இந்தநிரல் கட்டுப்படுத்தும்.

Advanced RISC : உயர்நிலை ரிஸ்க் : குறைந்த ஆணைத் தொகுதிக் கணினிப் பணி (Reduced Instraction Set Computing) என்பதை சுருக்கமாக ரிஸ்க் (RISC) என்றழைக்கின்றனர். நுண்செயலி வடிவாக்கத்தில் பயன் படுத்தப்படும் தொழில் நுட்பத்தை இது குறிக்கிறது. மிப்ஸ் கம்ப்யூட்டர் சிஸ் டம்ஸ் நிறுவனம், பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுக்கு இடையே இரும ஒத்தியில்பை (binary compatiblity) ஏற்படுத்தும் வண்ணம் ரிஸ்க் கட்டமைப்பு மற்றும் பணிச் சூழலுக்கென உருவாக்கிய வரையறுப்பு, உயர்நிலை ரிஸ்க் எனப்படுகிறது.

advanced RISC computing specification : உயர்நிலை ரிஸ்க் கணிப்பணி வரையறுப்புகள்: ரிஸ்க் செயலி அடிப்படையிலான ஒரு கணினி, உயர்நிலைக் கணிப்பணி பணித்தளத் தரத்தை எட்டுவதற்குரிய குறைந்தளவு மென்பொருள் தேவைகள்.

advanced controls : உயர்நிலை இயக்கு விசைகள்

advanced filter : உயர்நிலை வடிகட்டி.

advanced interactive executive : உயர்நிலை இடைப்பரிமாற்ற நிர்வாகி.

advanced SCSI programming interface : உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம் : ஸ்கஸ்ஸி புரவன் தகவி (host adapter)களுக்குக் கட்டளைகளை அனுப்புவதற்கு, அடாப்டெக் நிறுவனம் உருவாக்கிய ஓர் இடைமுக வரையறுப்பு (interface specification). இந்த இடைமுகம், நிரலுக்கு ஒரு கருத்தியல் அடுக்கினை (abstraction layer) வழங்குகிறது. எத்தகைய தகவி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நிரலர் கவலைப்படத் தேவையில்லை.

advanced search : மேம்பட்ட தேடல்.

af.mil : .ஏஎஃப்.மில் : அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணையதள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.

AFK : ஏஎஃப்கே : விசைப் பலகையிலிருந்து விலகி எனப் பொருள்படும் Away From Keyboard என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தகவல் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது.

AFS : ஏஎஃப்எஸ் : ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மானக் (distributed) கோப்பு முறைமை. கார்னெஜீ - மெல்லான் (Carneie - Mellon) உருவாக்கியது.

.ag : ஏஜி : இணையத்தில், ஆன்டி குவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். agent : முகவர் நிரல் : 1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்வின் போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல், 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தகவல்களை ஆவணக் காப்பகங்களில் அல்லது தகவல் கருவூலங்களில் தேடிக் கண்டறிந்து தரும் ஒரு நிரல். பெரும்பாலும் இத்தகைய முகவர் நிரல்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை ஒரே வகையான தகவல் சேமிப்புக் கருவூலங்களில் தேடுவதற்கென உருவாக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களைத் தேடுபவை. இணையத்தில் ஸ்பைடர் என்ற முகவர் நிரல் பயன்படுத்தப்படுகிறது. அறிவுக் கூருள்ள முகவர் என்றும் அழைக்கப்படும். 3. கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில், வழங்கன் கணினிக்கும், கிளையன் கணினிக்கும் இடையே இடையீடாக இருந்து செயல்படுவது. 4. எளிய பிணைய மேலாண் நெறிமுறையில் (Simple Network Management Protocol - SNMP) - பிணையப் போக்குவரத்தை கண்காணிக்கும் செயல்முறை.

.ai : .ஏஐ : இணையத்தில், அங்குயில்லாப் பகுதியைச் சார்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

aggregate operator : மொத்தமாக்கு செயல்குறி.

AGP - Accelarated Graphics Port : முடுக்கு வரைகலைத் துறை.

AIFF : ஏஐஎஃப்எஃப் : ஆப்பிள் மற்றும் சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலித் தகவலைச் சேமிக்கும் கோப்பு வடிவம். ஒலியலை வடிவக் கோப்புகள் 8துண்மி (8-பிட்) வடிவில் சேமிக்கப்படுகின்றன.

AIX : ஏஐஎக்ஸ் : உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று பொருள்படும் Advanced Interactive Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்படுத்திய இயக்க முறைமை - யூனிக்ஸின் இன்னொரு வடிவம்.

alarm beep : எச்சரிக்கை ஒலி.

aligning : ஓரஞ் சீரமைத்தல்.

alignment/justify : ஓரச்சீர்மை.

algebra, boolean : பூலியன் இயற்கணிதம்.

align bottam : அடிவரி நேர்ப்படுத்தல்.

align property : சீரமை பண்பு.

align top : விளிம்புவரி நேர்ப்படுத்தல்.

all : அனைத்தும்.

allocate : ஒதுக்கு; ஒதுக்கிடு; ஒதுக்கி வை ; போதுமான நினைவகப் பகுதி அல்லது அதுபோன்ற, எந்தவொரு வளத்தையும் நிரலின் பிந்தைய பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைத்தல்.

allocation : ஒதுக்கீடு : இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும் முறை.

allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலைவட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட தொகுதியின் கொள்ளளவு. வட்டின் மொத்தக் கொள்ளளவு மற்றும் பாகப்பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தொகுதி அளவு தீர்மானிக்கப்படுகிறது.

allocation table : ஒதுக்கீட்டு அட்டவணை.

allow zero length : வெற்றுச்சரம் அனுமதி.

all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி.

Alpha : ஆல்ஃபா : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64 துண்மி (64-பிட்) நுண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. டெக் நிறுவனத்தின் சிப்புத் தொழில் நுட்பத்தையும் இப்பெயர் குறிக்கிறது. சில வேளைகளில் ஆல்ஃபா சிப்பு பொருத்தப்பட்ட கணினியை ஆல்ஃபா அடிப்படையிலான கணினி எனக் கூறுவர்.

Alpha AXP : ஆல்ஃபா ஏஎக்ஸ்பீ : டெக் நிறுவனத்தின் 64-துண்மி (64-பிட்) ரிஸ்க் சிப்பின் தொழில் நுட்பம் இவ்வாறு அழைக்கப்பட்டது. டெக் நிறுவனம் தான் உற்பத்தி செய்த சொந்தக் கணினிகள் டெக் சிப்பினைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்க ஏஎக்ஸ்பீ என்னும் பெயரைக் குறிப்பிட்டது.

Alpha Box : ஆல்ஃபா பெட்டி; ஆல்ஃபா கணினி : டெக் (DEC) நிறுவனத்தின் ஆல்ஃபா என அழைக்கப்படும் 21064 சிப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.

alpha build : தொடக்க உருவாக்கம்.

alpha test : ஆல்ஃபா சோதனை: ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப்படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் பயனரால் நடத்தப்படும் சோதனை காண்க Beta Test.

alphabet : அகரவரிசை : 1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் அகரவரிசை ஓர் உட்குழுவாகும்.

allphabetical sorting : அகரவரிசையாக்கம்; எழுத்தெண் வரிசையாக்கம்.

alphabetic code : எழுத்துக் குறிமுறை.

alphageometric : முதல் வடிவக் கணிதம்.

alphaphotographic : எழுத்தெண் ஒளிக்கீற்று.

alt (key) : மாற்று (விசை).

alternate path routing : மாற்றுவழி திசைவித்தல்.

alway programme : ஆல்வே நிரல்; ஆல்வே செயல்முறை.

always on top : எப்போதும் மேலாக.

ambarsand : உம்மைக்குறி

ambient error : சூழல் பிழை.

ambiguity error : இருபொருள் வழு. இரட்டுறு பிழை.

America Online (AOL) : அமெரிக்கா ஆன்லைன் (ஓர் இணைய நிறு வனம்) : இணையத்தில் மின்னஞ்சல், செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற சேவைகளை வழங்கும் இணைய தகவல் சேவை நிறுவனம். அமெரிக்காவில் வியன்னா வரிஜீனியாவைத் தலைமையக மாய்க் கொண்டது. அமெரிக்காவிலேயே மிகப் பெரிய இணையச் சேவை மையம்.

AMI BIOS : அமி பயாஸ் : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன் படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட்ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல்முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்புக்கூறாகும். பயனாளர் தன் கணினியின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன்படுத்தத் தேவையில்லை.

AMIS : Audio Media Intergration Standard: கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்

ᎪᎷᏢᏚ :ஆம்ப்ஸ் : உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அலைவரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Division Multiplexing) நுட்பத்தின், அடிப்படையில் செயல்படும் தொடக்ககால நடமாடும் தொலைபேசிச் சேவைகளில் ஒன்று.

amplifier, buffer: இடையகப் பெருக்கி

amplitude modulation : அலைவீச்சுப் பண்பேற்றம் : மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச்செல்லும் பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல்முறை. இம்முறையில், தகவல் அலையை, நிலையான அலைவெண் கொண்ட ஒரு மின்காந்த சுமப்பி அலையின் மீது செலுத்தி, அத்தகவல் அலையின் அலைவீச்சுக்கு ஏற்ப, சுமப்பி அலையின் அலைவீச்சு மாற்றியமைக்கப்பட்டு மறுமுனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. amplitude : வீச்சு; அலைவீச்சு : ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்ஞையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு. படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது.

anachromic : காலத்திற்குப்பொருந்தாத.

analog device : ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.

analog display : ஒத்திசைக் காட்சி; தொடர்முறை சமிக்ஞை வடிவிலான திரைக் காட்சி : நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக்காட்சி முறை.

analog input system : ஒத்திசை உள்ளீட்டு முறைமை; தொடர்முறை உள்ளீட்டு முறைமை.

analog line : ஒத்திசைத் தகவல் தடம்; தொடர்முறைச் சமிக்ஞை வடிவில் தகவலை ஏந்திச் செல்லும் ஊடகம் : தொடர்ச்சியில் நிலைமாறும் அலை வடிவிலான தகவல் சமிக்ஞைகளை ஏந்திச் செல்லும் தகவல் தொடர்பு ஊடகம். பரவலாகப் பயன்படுத்தப் படும் தொலைபேசி இணைப்புக் கம்பிகளை எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.

analog model : ஒத்திசை மாதிரி; தொடர்முறை உருமாதிரி.

analog modem : ஒத்திசை இணக்கி.

analog monitor : ஒத்திசைக் கணித்திரை; தொடர்முறைத் திரையகம்.

analog signal generator : ஒத்திசைச் சமிக்ஞை உருவாக்கி : தொடர்ச்சியாய் நிலைமாறும் அலைவடிவிலான சமிக்கைகளை உருவாக்கும் ஒரு சாதனம். ஒரு கணினியில் வட்டு இயக்கியின் சுழற்றியை இயக்கி வைக்க சிலவேளைகளில் இச்சாதனம் பயன்படுகிறது.

analog to digital converter (ADC) : தொடர்முறை - இலக்கமுறை மாற்றி.

analogical reasoning : ஒத்திசை அறிதல், ஒப்புமை அறிதல்.

analysis : பகுப்பாய்வு : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சிக்கலின் பல்வேறு பரிமாணங்களையும் பல கோணங்களில் ஆய்வு செய்தல். கணினித் துறையைப் பொறுத்தவரை, பகுப்பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர்கொள்ளும் பொருட்டு அதனை சிறுசிறு கூறுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.

analysis, cost : செலவு பகுப்பாய்வு.

analysis, system : முறைமை பகுப்பாய்வு.

analyst/designer work bench : பகுப்பாய்வாளர்/வடிவமைப்பாளர் பணி இருக்கை.

analyst, programmer : நிரல் பகுப்பாய்வாளர்.

analyst, system : முறைமைப் பகுப்பாய்வாளர்.

analytical engine : பகுப்புப் பொறி; பகுப்பாய்வுப் பொறி : கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டின் கணித மேதை சார்லஸ் பாபேஜ், 1833ஆம் ஆண்டில் உருவாக்க முயன்ற, எந்திரவியல் அடிப்படையிலான கணக்கீட்டு எந்திரம். ஆனால் இதன் உருவாக்கம் நிறைவு பெறவில்லை. ஆனாலும் இப்பொறிதான் உலகின் முதல் பொதுப்பயன் இலக்கமுறைக் கணினி (Digital Computer) என்று போற்றப்படுகிறது.

analytical machine : பகுப்பாய்வு எந்திரம்,

analyze : பகுப்பாய்

anchor : நங்கூரம்

anchor cell : தாக்கு கலம். விரிதாள் பயன்பாட்டில் ஒரு பணித்தாளில் காட்டி நிற்கும் கலம்.

angle bracket : கோண அடைப்புக் குறி.

animated cursors : அசைவூட்ட சுட்டுக்குறிகள்; இயங்கு இடங்காட்டி.

animated GIF : அசைவூட்ட ஜிஃப்; இயங்கும் ஜிஃப், நகர் பட ஜிஃப் : வரைகலைப் படங்கள் கோப்புகளாக வட்டுகளில் பதியப்படும்போது பல்வேறு தொழில் நுட்ப அடிப்படையில் பதியப்படுகின்றன. அவற்றுள் ஜிஃப் என்பது குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கிறது. வரைகலை மாறுகொள் வடிவாக்கம் (Graphics Interchange Format) என்பதன் சுருக்கமே (GIF) எனப்படுகிறது. இந்த வடிவமைப்பிலுள்ள வரைகலைப் படங்கள் வட்டுகளில் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஜிஃப் வடிவமைப் பில் அமைந்த வரைகலைப் பட உருவங்களை கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்து திரையிடும்போது, அந்தப்படம் உயிரோட்டம் பெற்று இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

animation picture : அசைவூட்டப் படம்

animation window : அசைவூட்டச் சாளரம்

annexure : இணைப்பு

anode : நேர்மின் முனை, நேர்மின் வாய் : மின்னணுவியலில் பயன் படுத்தப்படும் சொல். நேர் மின்னூட்டம் பெற்ற முனையை அல்லது மின்வாயை நோக்கி மின்னணு (எலெக்ட்ரான்) பாய்கிறது.

anonymity : பெயர் மறைப்பு: பெயர் ஒளிப்பு: பெயரிடாமை : இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியர் எவர் என்பதைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும்முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்புபவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரிமாற்றத்துக்கான கிளையன் அல்லது கேட்பன் (client) மென்பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர்மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறுமடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். செய்தியைப் பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதேயொழிய பதில் அனுப்ப முடியும்.

anonymous : அனானிமஸ் : பெயரிலி : இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்.டி.பீ. தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் "பெயரிலி" எனப்பொருள்படும் "அனானிமஸ்" என்ற பெயராகும்.

anonymous FTP : அணுகுப் பெயரில்லா ஆவணச் சேமிப்பகம்; பொதுப்பயன் எஃப்டிபீ தளம் : இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரிமாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) என்பது ஒருவகை. இந்த அடிப்படையில் கோப்புப் பரி மாற்றம் கொள்ள வாய்ப்பளிக்கும் தளங்கள் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக பிணையத்திலுள்ள (network) ஒரு சேமிப்பகக் கணினியை அணுக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய அணுகுபெயரையும் நுழைசொல்லையும் தந்தபிறகே தளத்தை அணுக முடியும். ஆனால் இணையத்திலுள்ள பல எஃப்டிபீ தளங்களை அனானிமஸ் அல்லது எஃப்டிபீ என்ற அணுகுபெயர் கொடுத்து, நுழைசொல் ஏதுமின்றியோ அல்லது பயனாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது அனானிமஸ் என்ற சொல்லையோ நுழைசொல்லாகத் தந்து அணுக முடியும். இத்தகு தளங்கள் பொதுப் பயன் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன.

anonymous post : பெயரில்லா மடல்; மொட்டைக் கடிதம் : இணையத்தில் செய்திக் குழுவிற்கு அல்லது அஞ்சல் குழுவிற்கு (Newsgroups or Mailing Lists) அனுப்புபவர் பெயரில்லாமல் அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தியை அல்லது ஒரு மடலைக் குறிக்கிறது. செய்திக் குழுவிற்கு ஒரு பெயர் மறைப்பு வழங்கன்/கணினி மூலம் இத்தகைய பெயரிடாச் செய்தியை அனுப்ப முடியும். மின்னஞ்சல் முறையில் பெயரிடா மறுமடல் வழங்கன் கணினி, மொட்டைக் கடிதம் அனுப்புவதைச் சாத்தியமாக்குகிறது.

anonymous remailer : பெயர் மறைப்பு மறுமடல் கணினி : இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்புபவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை தன் வழியாக அனுப்பப்படும் கடிதங்களின் தலைப்பிலுள்ள அனுப்புபவரின் முகவரியை நீக்கி விட்டுச் செய்தியை மட்டும் முகவரி தாரருக்கு அனுப்பிவைக்கின்றன. ஆனால், மடலைப் பெறுபவர் இதே வழங்கன் கணினி மூலம் அனுப்பியவருக்குப் பதில்மடல் அனுப்ப முடியும்.

ANSI/SPARC அன்சி/ஸ்பார்க் : அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning And Requirements Committee என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1970-களில் அன்சிக் குழு குறிப்பிட்ட சில தரவுத் தள மேலாண்மை அமைப்புகளின் அடிப் படையாக விளங்கக்கூடிய, பொதுமைப் படுத்தப்பட்ட மூன்றடுக்குக் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்தது. ANSLSYS : அன்சி.சிஸ் : பயனாளர் தன்விருப்பப்படி கணினித் திரையில் செய்திகளைத் திரையிட அன்சிக் கட்டளைகள் (எஸ்கேப் வரிசை) பயன்படுகின்றன. இத்தகைய கட்டளைகள் அடங்கிய, எம்எஸ்-டாஸ் கணினிகளில் நிறுவப்படத் தக்க சாதன இயக்கிக் கோப்பு 'அன்சி.சிஸ்' என்றழைக்கப்படுகிறது.

ANSI graphics : அன்சி வரைகலை

ANSI key board : அன்சி விசைப் பலகை

ANSI screen control :அன்சி திரைக் கட்டுப்பாடு.

answer only modem : தகவல் பெறு இணக்கி; அழைப்பேற்பு இணக்கி; பதிலுக்கு மட்டுமான இணக்கி. இவ்வகை இணக்கிகள் வருகின்ற தகவல்களை ஏற்கும். ஆனால் தகவல் அனுப்பும் திறன் அற்றவை.

answer/originate modem : தகவல் பெறு/தரு இணக்கி: இவ்வகை இணக்கிகள் தகவல் அனுப்பவும் அழைப்புகளை ஏற்கவும் திறனுள்ளவை. பொதுவாக இவ்வகை இணக்கிகளே புழக்கத்தில் உள்ளன.

anticedent driver reasoning : முன்னிகழ்வு ஏதுவாதம்.

anticipatory paging : எதிர்பார்ப்பு. பக்கமாக்கல்.

antidote : முறிப்பி.

anti-glare : கூசொளித் தடுப்பு : கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதிபலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் - போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்.

antiglare filter : கூசொளி வடிகட்டி

antistatic device : நிலை மின்சாரத் தடுப்பு சாதனம் : கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தகவல் இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரை விரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலைமின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்.

antivirus programme : நச்சுநிரல் எதிர்ப்புச் செயல்நிரல்; நச்சுநிரல் எதிர்ப்பி : ஒரு கணினியின் சேமிப்பு வட்டிலும் நினைவகத்திலும் தங்கியிருந்து ஊறு விளைவிக்கும் ஆணைத் தொகுப்பை வைரஸ் அல்லது நச்சுநிரல் என்கிறோம். அத்தகைய நச்சுநிரல் நமது கணினியின் சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ உள்ளதா என்பதைக் கண்டறியவும், இருப்பின் அதனைக் களையவும் திறனுள்ள ஆணைத் தொகுப்பை நச்சுநிரல் எதிர்ப்பி என்கிறோம். பிணையம் (network) அல்லது இணையம் (internet) வழியாக பதிவிறக்கம் (download) செய்யும் கோப்புகளில் நச்சுநிரல் ஒட்டிக் கொண்டுள்ளதா என்பதை அறிந்து சொல்கின்ற எதிர்ப்பிகளும் உள்ளன.

antonym dictionary : எதிர்ச்சொல் அகராதி. any key : ஏதேனும் ஒரு விசை : கணினி விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசை. கணினியில் இயக்கப்படும் செயல்முறைத் தொகுப்புகள் சில, சில வேளைகளில் தொடர்ந்து செல்ல, ஏதேனும் ஒரு விசையை அழுத்தவும் (Press any key to continue) என்ற செய்தியை தருவதுண்டு. அப்போது பயனாளர் விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசையை அழுத்தலாம். விசைப் பலகையில் any என்ற பெயரில் ஒரு விசை இல்லை என்பதை அறிக.

any-to-any connectivity : எதிரிலிருந்து எதற்கும் இணைப்பு: பிணையங்களில் (network) பல்வகை உள்ளன. பிணையக் கட்டமைப்பிலும் (topology), புரவலர் வழங்கன் (hostl server) இனத்திலும், தகவல் பரிமாற்ற நெறிமுறையிலும் (protocol) பல்வேறு வகைகளும் முறைகளும் உள்ளன. பல்வகைச் சூழலும் ஒருங்கிணைந்த ஒரு பிணையக் கட்டமைப்பில் தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் அதனை எதிலிருந்து எதற்குமான (any to any) இணைப்பு என்கிறோம்.

APPC : ஏபீபீசி : 1. உயர்நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று பொருள்படும் Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தின் (Systems Network Architecture) ஓர் அங்கமாக இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணினி முறைமைகளில் இயங்குகின்ற பயன்பாட்டுத் தொகுப்புகள். தமக்குள்ளே தொடர்பு கொள்ளவும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் வகையில் இந்நெறிமுறை உருவாக்கப்பட்டது.

appearance : தோற்றம் .

append mode : சேர் பாங்கு.

append record : சேர் எடு.

Apple Il : ஆப்பிள் II : ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 1977இல் அறிமுகப்படுத்திய இரண்டாவது சொந்தக்கணினி (Personal Computer). இதில் 4கே இயங்குநிலை நினைவகம் இருந்தது. 48கே வரை விரிவாக்கிக் கொள்ளலாம். 6502 என்னும் நுண்செயலி பயன்படுத்தப்பட்டது. வண்ணக் கணினித் திரைக்குப் பதிலாக, தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி முதன் முதலாக ஆப்பிள் II கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எட்டு விரிவாக்கச் செருகுவாய்கள் (expansion slots)இருந்தன.

Apple Draw : ஆப்பிள் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படக்கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு.

Apple Events : : ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன்மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனுப்ப முடியும்.

Apple extended keyboard : நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப்பலகை : பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின் டோஷ் II, ஆப்பிள் Ilஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப்பலகை. ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட விசைப்பலகையில் இருப்பது போன்று ஆப்பிள் விசைப்பலகையில் இல்லையே என்ற குறையை நிறைவு செய்ய, இந்த விசைப்பலகையில் முதன்முதலாக செயல்விசைகள் (function keys) சேர்க்கப்பட்டன. புதிய விசைகளையும் சேர்த்து, வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட இந்த விசைப் பலகை ஐபிஎம்மின் மேம்படுத்தப்பட்ட விசைப் பலகையைப் பெரிதும் ஒத்திருந்தது.

Apple Newton : ஆப்பிள் நியூட்டன் ,ஆப்பிள் நிறுவனத்தின் கையகக்கணினி.

Apple Script :ஆப்பிள் ஸ்கிரிப்ட் : சிஸ்டம் 7 இயக்க முறைமையில் செயல்படும் மெக்கின்டோஷ் கணினிகளில் கட்டளைகளை நிறைவேற்றவும், தானியக்கச் செயல்பாடுகளுக்கும் பயன்படும் ஒரு வடிவாக்க மொழி.

Apple Talk : ஆப்பிள்டாக்: ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும்பரப்புப் பிணையம் (Local Area Network).இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்புகொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆப்பிள் அல்லாத கணினிகள் ஆப்பிள்டாக்கின் மென்பொருளையும், வன்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியை ஒத்த நெறிமுறைகளையே இந்தப் பிணையம் பின்பற்றுகிறது. சட்டம் (frame) எனப்படும் பொட்டலங்களில் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஒர் ஆப்பிள்டாக் பிணையம் இன்னொரு ஆப்பிள்டாக் பிணையத்துடன் இணைவி (bridge) மூலமாகவும், வேறுபட்ட பிணையங்களுடன் நுழைவி (gateway) மூலமாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

application பயன்பாடு:பயன்பாட்டுத் தொகுப்பு : கணினியில் சொல்செயலி,கணக்குவழக்கு,கையிருப்பு மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட பணியை நிறை வேற்ற உதவும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பு.

application backlog : பயன்பாட்டு தேக்கம் Application Binary Interface (ABI) : பயன்பாட்டு இரும இடைமுகம் : ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக் கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் ஆணைத் தொகுதி.

Application-centric : பயன்பாட்டுத் தொகுப்பை மையப்படுத்திய : பயன்பாட்டு முக்கியத்துவமுள்ள : ஒரு கணினி இயக்க முறைமையின் (operating system) பண்பியல்பை பற்றியது. ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட வகை ஆவணத்தை (சொல் செயலிக் கோப்புகள், விரிதாள்கள்) திறக்க, உருவாக்க விரும்பினால் அதற்குரிய பயன்பாட்டுத் தொகுப்பை முதலில் இயக்க வேண்டும். கட்டளை வரி பணிச்சூழல் கொண்ட டாஸ், வரைகலைச் சூழலை வழங் கும் விண்டோஸ் 3.x ஆகியவை இந்தப் பிரிவைச் சார்ந்தவை.

application close : பயன்பாட்டு நிறுத்தம்.

applications, computer : கணினிப்பயன்பாடுகள்.

application control menu : பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி.

application development environment : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல் : மென்பொருள் உருவாக்குவோர் பயன்படுத்தக் கூடிய, செயல்முறைத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுத்தொகுப்பு. ஒரு மொழிமாற்றி (compiler), உலாவி(browser), பிழைசுட்டி (debugger), ஆணைத் தொடர்களை எழுதப் பயன்படும் ஒர் உரைத் தொகுப்பான் (text editor) ஆகியவை சேர்ந்தே இத்தகைய பணிச்சூழலை வழங்குகின்றன.

application development language : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்க மொழி : பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட மொழி. தகவல் தளத்திலுள்ள தகவல்களைப் பெறுதல்,புதுப்பித்தல் மற்றும் அதையொத்த பணிகள், தகவலை உள்ளீடு செய்வதற்குரிய படிவங்களை உருவாக்குதல் மற்றும் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளுக்கான உயர்நிலைக் கட்டளை அமைப்புகளை உடைய குறிப்பிட்ட கணினி மொழிகளை மட்டுமே இது குறிக்கிறது.

application gateway : பயன்பாட்டு நுழைவாயில் : வெளி உலகுடன் தகவல் போக்குவரத்தில் ஈடுபடக் கூடிய ஒரு நிறுவனத்தின் பிணையக் கணினியிலுள்ள தகவல்களுக்கான பாதுகாப்பினை வழங்கக்கூடிய மென்பொருள் தொகுப்பு.

application heap : பயன்பாட்டு நினைவகக் குவியல் : ஒரு பயன் பாட்டுத் தொகுப்பு தனது ஆணைத் தொடர்களை, விவரக் குறிப்புகளை மற்றும் தேவையான தரவுகளைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ள ரேம் (RAM) நினைவகத்தில் ஒதுக்கப்படும் பகுதி.

application icon : பயன்பாட்டுச்சின்னம்; பயன்பாட்டுக் குறும்படம்.

application layer : பயன்பாட்டு அடுக்கு : கணினிப் பிணையங்களில் இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (International Standards Organisation-ISO) வகுத்துத் தந்துள்ளது. சமிக்கைப் பரிமாற்றங்களுக்குரிய ஒஎஸ்ஐ மாதிரி(OSI Model-Open System Inter connection Model) என்பது முக்கியமான ஒன்று. ஏழு அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் பயன்பாட்டு அடுக்கும் ஒன்றாகும். இந்த அடுக்கில்தான் ஒரு தொலைதூரக் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கோப்புப் பரிமாற்றம் செய்வதற்குமான சமிக்கைகள் அடங்கியுள்ளன. பயனாளருக்கு மிகவும் பயனுள்ள பணியைச் செய்வது இந்த அடுக்குத்தான். ஏழு அடுக்குகளில் ஏனைய கீழடுக்குகள், அனுப்பும்/பெறும் கணினிகளுக் கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

application level : பயன்பாட்டு நிலை.

application mathematics : பயன்பாட்டுக் கணிதம்.

application minimise button : பயன்பாட்டைச் சிறிதாக்கு பொத்தான்.

application portability profile (APP) : பயன்பாட்டு கையாண்மை விவரக் குறிப்பு.

application programming interface : பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

application restone button : பயன்பாட்டு மீட்புப் பொத்தான்.

application shortcut key : பயன்பாட்டு சுருக்குவழி விசை : பயன் பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின்(menu options)மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித் தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை ஒன்றிரண்டு விசைகளை ஒருசேர இயக்குவதன் மூலம் நிறை வேற்றிக்கொள்ள முடியும். அத் தகைய விசை அல்லது விசைகள் சுருக்குவழி விசை என்று அழைக் கப்படுகிறது. இம்முறையை விசைப் பலகைச் சுருக்குவழி (keyboard shortcut)என்றும் கூறுவர்.

application specific integrated circuit (ASIC) : பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைந்த மின்சுற்று.

application window : பயன்பாட்டுச்சாளரம், பயன்பாட்டுப் பலகணி.

application wizard : பயன்பாட்டு வழிகாட்டி

apply : செயலாக்கு.

apply filter : வடிகட்டி பயன்படுத்து.

applying : பயன்படுத்துதல்.

appointment order : பணி ஆணை .

Archie : ஆர்க்கி : பெயர்கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக் காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக் கழகத்திலுள்ள தலைமை ஆர்க்கி வழங்கன் கணினி, தன்னுடன் இணைக்கப்பட்ட கோப்புப் பரிமாற்ற நெறிமுறை அடிப்படையிலான அனைத்து வழங்கன் கணினிகளிலிருந்தும் கோப்புப் பட்டியல் களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை ஒன்றிணைத்து ஒரே பட்டியலாக்கி, அப்பட்டியலை அனைத்து ஆர்க்கி வழங்கன் கணினி களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கிறது. ஆவணக் காப்பகம் என்று பொருள்படும் ஆர்க்கிவ் என்ற சொல்லின் சுருக்கமே ஆர்க்கி ஆகும்.

archie server : ஆர்க்கி வழங்கன் கணினி:ஆர்க்கி சேமிப்பகம் : ஆர்க்கி சேவையகம் : இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள வழங்கன் கணினியின் பெயர்.

architectural protection : கட்டமைப்புப் பாதுகாப்பு : கட்டுமான காப்பு.

archival backup : ஆவண ஆதார நகல் .

archive : ஆவணக்காப்பகம், கோப்புச் சேமிப்பகம் : 1.வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்ற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2.இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3.இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.

Archieve File : காப்பகக் கோப்பு : பல்வேறு கோப்புகளை உள்ளடக்கிய ஒரு கோப்பு. ஒரு மென்பொருள் தொகுப்பு.அதன் விளக்கக் குறிப்புகளையும் எடுத்துக்காட்டு உள்ளிட்டுக் கோப்புகளையும் உள்ளடக்கிய ஒரே கோப்பாக இருக்கமுடியும். இணையத்தில் செய்திக் குழுவில் (news group)தொகுக்கப்பட்ட செய்திகளையும் இச்சொற்றொடர் குறிக்கிறது. யூனிக்ஸ் முறைமையில் tar கட்டளை மூலம் காப்பகக் கோப்புகளைக் கையாள முடியும். அவற்றை இறுக்கிச் சுருக்கவும் முடியும். டாஸ் மற்றும் விண்டோஸ் இயக்கத் தளத்தில் pkzip, மேக் ஓ.எஸ் .இல் stuffit ஆகியவை ஏற்கெனவே இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளைக் கொண்ட காப்பகக் கோப்புகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

archive gateway : காப்பக வாயில்.

archive site : ஆவணக் காப்பகத் தளம் : கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1)பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம் (2)கோஃபர் (gopher) மூலம் அணுகலாம் (3)வைய விரிவலை (www)யில் பார்வையிடலாம்.

archiving : ஆவணப்படுத்தல்.

area : பரப்பு.

area density : பரப்பு அடர்த்தி .

area chart : பரப்புநிரல் படம் : வரைபட வகைகளுள் ஒன்று. கடந்த நான்கு காலாண்டுகளில் நடைபெற்ற விற்பனையின் அளவைக் குறிக்க இதுபோன்ற வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இருவேறு விவரக் குறிப்புகளைக் குறிக்கும் இரண்டு கோடுகளுக்கு இடையே நிறம் அல்லது புள்ளிகளால் நிறைத்துக் காட்டப்படும் பரப்பளவு. area,common storage : பொதுச்சேமிப்பகப் பரப்பு.

area, constant : மாறப்பரப்பு.

area graph : பரப்பு வரைபடம்.

area, seek : தேடு பரப்பு .

area, work : பணிப் பரப்பு.

argument list : மதிப்புருப் பட்டியல்.

argument seperator : மதிப்புருப்பிரிப்பி,

arithmetic address : எண் கணித முகவரி, எண் கணித முகவெண்.

arithmetic and logical operators : கணித மற்றும் தருக்கக் செயற் குறிகள்.

arithmetic check : எண் கணிதச் சோதனை .

arithmetic exception : எண் கணித விதிவிலக்கு.

arithmetic, fixed point : நிலைப்புள்ளிக் கணக்கீடு.

arithmetic, floating decimal : மிதவைப்புள்ளிக் கணக்கீடு.

arithmetic opeation, binary : இருமக்கணிதச் செயல்பாடு.

arithmetic statement : கணக்கீட்டுக் கூற்று.

arm access : அணுகுகை.

army.mil : ஆர்மி.மில் : அமெரிக்க நாட்டு இராணுவத்தைச் சுட்டும் இணையத்தள முகவரி. இணைய தளங்களை அவற்றின் உள்ளடக்கங்களுக்கேற்ப .com, .gov, .edu, .org, .mil, .net, .int ஆகிய பெரும் பிரிவுகளில் அடக்குகின்றனர். அமெரிக்க இராணுவத்தள முகவரி .mil என்ற பெரும்பிரிவில் அடங்குகிறது.

ARP : ஏ.ஆர்.பீ :முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டிசிபி/ஐபீ (TCP/IP) நெறிமுறையின் ஒரு வடிவம். ஒரு குறும்பரப்பு பிணை யம் இணையத்தில் தொடர்புகொள்ளும்போது ஐபி முகவரி (தருக்க முகவரி)யை மட்டுமே அறிய முடியும். அப்பிணையத்திலுள்ள ஒரு கணினியின் மெய்யான வன்பொருள்(ஈதர்நெட்) முகவரியை அறிந்து கொள்ள ஏஆர்பீ நெறிமுறை பயன்படுகிறது. இணையத்தின் வழியாக ஒர் ஏ.ஆர்.பீ கோரிக்கை பிணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்போது, குறிப்பிட்ட ஐபீ முகவரி கொண்ட கணுக் கணினி தன்னுடைய வன்பொருள் முகவரியோடு பதில் அனுப்பும். வன் பொருள் முகவரி கண்டறிதலைப் பொதுவாகக் குறித்தபோதும் ஏஆர்பீ யின் எதிர் மறைப்பணியான ஆர்ஏஆர்பீ (Reversed ARP) யையும் சேர்த்தே குறிக்கிறது.

ARP request : ஏ ஆர் பீ கோரிக்கை  : முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address Resolution Portocol Request என்பதன் சுருக்கம். ஒர் ஏஆர்பீ பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணைய முகவரியைக் கொண்டிருக்கும். கோரிக்கையைப் பெறும் கணினி தனக்குரிய ஈதர்நெட் முகவரியுடன் பதிலை அனுப்பும்.

arrange : ஒழுங்கமை .

arrange icons:சின்னங்களை ஒழுங்கமை. array and sringes : கோவை மற்றும் சரம்.

artibutes : பண்புக் கூறுகள்.

array bound : கோவை வரம்பு.

array dimension : கோவைப்பரிமாணம்.

arrival rate : வருகை வீதம்.

arrow keys , அம்புக்குறி விசைகள் : கணினித் திரையில் தோன்றும் சுட்டுக் குறியை அல்லது விருப்பத் தேர்வுப் பட்டியல்களில் தேர்வுக் குறியை மேல்கீழாக, பக்கவாட்டில் நகர்த்துவதற்குப் பயன்படக் கூடிய, மேல், கீழ், வலம், இடம் நோக்கிய அம்புக்குறி இடப்பட்ட விசைகள்.

article : கட்டுரை: செய்திக் குறிப்பு : இணையத்தில் செய்திக்குழுவில் (newsgroup) வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு. கடிதம் என்றும் கூறப்படுவதுண்டு.

article selector : கட்டுரை தேர்வி .

artificial intelligence (AI) : செயற்கை நுண்ணறிவு.

artificial life : செயற்கை உயிர் : வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, தகவமைத்தல், தப்பிப் பிழைத்தல், இனம் பெருக்குதல் போன்ற மனிதப் பண்புகளின் மொத்த நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு செய்ய முடியும். இந்த நிரல்கள் ஒரு சிக்கலுக்கு மிகச் சரியான தீர்வு கிடைக்கும்வரை தம்மைத் தாமே தொடர்ந்து மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய நிரல்களை இயக்கும் கணினி முறைமைகளை செயற்கை உயிர் என்கின்றனர்.

artificial network : செயற்கைப்பிணையம்.

artificial neural network : செயற்கை நரம்புசார் பிணையம் : மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) போலவே செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத்தின் தொழில் நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக் கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்றழைக்கலாம்.

ascending : ஏறுமுகமாய் வரிசைப் படுத்தல் : பட்டியல் உறுப்புகளை ஏறுமுக வரிசையில் வரிசைப் படுத்தும் முறை.

ascending order : ஏறுமுக வரிசை: ஏறுவரிசை என்பது ஒரு பட்டிய லிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பில் இத்தகைய அகர வரிசையை முடிவு செய்வது மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, எண்களை எழுத்துகளுக்கு முன்னால் வைப்பதா பின்னால் வைப்பதா,இடவெளிகளை (spaces) எங்கு சேர்ப்பது? ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பெரிய எழுத்து, சிறிய எழுத்துச் சிக்கல் உண்டு. ஆஸ்க்கி அட்டவணையின் எண் மதிப்பு அடிப்படையில், ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்தைவிட அதிக மதிப்புக் கொண்டது.

ASCII character set : ஆஸ்க்கி எழுத்துத் தொகுதி : இரும இலக்கங்களில் ஏழு துண்மி (பிட்) குறிப்பிடப்படுகின்ற ஆஸ்கிக் குறியீடுகள். 0 முதல் 127வரை அவற்றின் ஆஸ்க்கி மதிப்பு இருக்கும். பெரும்பாலான கணினிகளில் எட்டு துண்மி (பிட்)களால் ஆன விரிவாக்கப்பட்ட ஆஸ்கி குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதில் கூடுதலாக 128 எழுத்துகளும் குறியீடுகளும் அடங்கியுள்ளன. பிறமொழி எழுத்துகள், வரைகலைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

ASCII file : ஆஸ்கிக் கோப்பு: ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம். எழுத்துகள், எண்கள், நிறுத்தற்குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள். இவற்றைக் கொண்டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இடவெளிகள் மற்றும் கோப்பிறுதிக் குறியையும் கொண்டிருக்கும். ஆனால் வடிவமைப்பு (formatting) விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. இத்தகைய கோப்பு, உரைக் கோப்பு (text file) எனவும், உரை மட்டுமுள்ள கோப்பு (text only file) எனவும் அழைக்கப்படுகிறது.

ASCII transfer : ஆஸ்கி அனுப்புகை : ஆஸ்கிப் பரிமாற்றம் : மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஒர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ASCII sort order : ஆஸ்கி வரிசையாக்கம்.

ASCII string : ஆஸ்கி சரம்: சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஒர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (ஜீரோ) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும்.

aspect - oriented programming : விவரண நோக்கு நிரலாக்கம்.

assembly programme : தொகுப்பு மொழி நிரல்; சில்லு மொழி நிரல்.

assign macro : குறு நிரல் குறித்தளி.

assigned number : குறித்தளித்த எண்.

assignment : குறித்தளித்தல்:மதிப்பிருத்தல்.

assignment operator : மதிப்பிருத்தும் செயற்குறி:மதிப்பிருத்தும் செய் முறைக்குறி; மதிப்பிருத்தும் இயக்கி : ஒரு மாறியில் (variable) அல்லது ஒரு தகவல் குழுவில்(data structure) ஒரு மதிப்பை இருத்தி வைக்கப் பயன்படும் செயற்குறி அல்லது குறியீடு. பெரும்பாலும் = என்னும் அடையாளம் இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

assignment statement : குறித்தளித்தல் கூற்று

associate : உறவுபடுத்து: தொடர்புறுத்து : ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் (extension) ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்க முறைமைக்கு (operation system)அறிவித்தல். ஒரு கோப்பினைத் திறக்கும்போது,அக்கோப்பின் வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப்பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் doc என்னும் வகைப்பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வேர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப்படுவதைக் காணலாம்.

associated document : இணைவு ஆவணம்.

associative retrieval : சார்பு மீட்பு:இணை மீட்பு.

associative store : சார்புறு சேமிப்பு.

association for computing machinery : கணினி எந்திரவியலார் சங்கம் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப மேதமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்பட்டது.

Association of C and C++ users : சி மற்றும் சி++ பயனாளர்கள் சங்கம்: கணினி நிரலாக்க மொழிகளான சி, சி++ மற்றும் அவற்றின் உறவு மொழிகளில் ஆர்வமுள்ளவர்களின் சங்க அமைப்பு. இம்மொழிகளின் தொழில்முறை நிரல் வரைவாளர்கள், இவற்றின் மொழி மாற்றிகளை (compilers) உருவாக்கும்/விற்பனை செய்யும் வணிகர்கள், தொழில் முறை அல்லாத நிரல் வரைவு ஆர்வலர்கள் ஆகியோர் இச்சங்க உறுப்பினர்கள்.

assumed decimal point : எடுபதின்மப்புள்ளி; கற்பனைப் பதின்மப் புள்ளி.

astomisher : வியப்பாளி.

asymmetric key cryptography : ஒழுங்கற்ற விசை, மறைக்குறியியல்.

asymmetrical transmission : செஞ்சீரிலா செலுத்துகை, சமச்சீரற்ற அனுப்பீடு : அதிவேக இணக்கிகளில் (modems) பயன்படுத்தப்படும் அனுப்பீட்டு முறை. குறிப்பாக வினாடிக்கு 9,600 துண்மி(பிட்]கள், அதற்கும் அதிகமாக அனுப்பவல்ல இணக்கிகளில் இம்முறை செயல் படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒரே நேரத்தில் தகவலை வெளிச் செலுத்தவும் உள்வாங்கவும் முடியும். தொலைபேசித் தகவல் தடத்தின் அலைக் கற்றையை இரு பாதை களாக்கி ஒன்றில் 300 முதல் 450 துண்மிகள் (வினாடிக்கு) வரையும் இன்னொரு பாதையில் 9,600 துண்மி கள் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

asymmetric digital subscriber line : செஞ்சீரிலா இலக்கமுறை சந்தாதாரர் தகவல் தடம் : சாதாரணமான முறுக்கிய இணை தொலைபேசிச் செப்புக் கம்பிகள் வழியாகவே ஒளிக்காட்சிச் சமிக்கை உட்பட மிகுவேக இலக்க முறைத் தகவல் தொடர்பைச் சாத்தியமாக்கும் வகையில் தொழில் நுட்பமும் சாதனங்களும் மேம்பட்டுள்ளன. இறங்கு திசையில் வினாடிக்கு மெகா துண்மி(மெகாபிட்)கள் வரையிலும், ஏறு திசையில் 800 கிலோ துண்மி(பிட்)கள் வரையிலும் தகவல் பரிமாற்றம் இயலும்.

asynchronous communication : ஒத்தியங்காத் தகவல் தொடர்பு:நேரச் சீரற்ற தொடர்பு; ஒத்திசைவில்லாத தகவல் தொடர்பு.

asynchronous data transmission : நேரச் சீரிலா தகவல் அனுப்புகை; ஒத்தியங்கா தகவல் அனுப்புகை. asynchronous input : ஒத்தியங்கா உள்ளீடு ; நேரச்சீரிலா உள்ளீடு.

asynchronous operation : ஒத்தியங்காச் செயல்பாடு : கடிகாரம் போன்ற ஒரு நேரச் சாதனத்தை சாராமல் தனித்தியங்கும் ஒரு செயல்பாடு.எடுத்துக்காட்டாக, இரண்டு இணக்கிகள் தமக்குள் ஒத்தியங்காத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது நேரக் கணக்கின் படி தகவலை அனுப்புவதில்லை. தொடங்கு, நிறுத்து என்னும் சமிக்கையை ஒன்றுக்கொன்று அனுப்பி தமக்குள் சீராகத் தகவலை பரிமாறிக் கொள்கின்றன. ஒத்தியங்கு செயல்பாட்டுடன் ஒப்பிடுக.

asynchronous procedure call : ஒத்தியங்காச்செயல்முறை அழைப்பு: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஆணைத் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த ஆணைத்தொடர் இயங்காதபோதும், அதேபோன்ற நிபந்தனைகள் நிலவுமெனில், இயக்க முறைமையின் கருவகம் (kernel) ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த ஆணைத் தொடரை இயக்கி அதிலுள்ள செயல்கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்.

asynchronous terminal : ஒத்தியங்கா முனையம், நேரச் சீரிலா முனையம்.

asynchronous transfer mode : நேரச் சீரிலா பரிமாற்றுப் பாங்கு.

ATA : ஏடீஏ : உயர்நிலைத் தொழில் நுட்ப உடனிணைப்பு என்று பொருள்படும் Advanced Technology Attachment என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐடிஇ நிலைவட்டு இயக்கத்துக்கு அன்சிக் குழுமத்தின் எக்ஸ்எஸ்டீ10 குழு தந்த முறைப்படியான பெயர் இது.ஏடீ உடனிணைப்பு என்றும் இதற்குப் பெயர்.

ATA hard disk drive card : ஏடீஏ நிலைவட்டு இயக்கக அட்டை: ஏடீஏ நிலைவட்டு இயக்கத்துக்கான கட்டுப்பாடு இடைமுகமாய் பயன்படும் விரிவாக்க அட்டை. இவை பெரும்பாலும் ஐஎஸ்ஏ செருகுவாய்களில் பொருத்தப்படும் அட்டைகளாக இருக்கும்.

ATA/IDE hard disk drive : ஏடீஏ/ஐடிஇ நிலைவட்டகம்/நிலைவட்டு இயக்ககம் :ஐடிஇ(IDE-Intergrated Drive Electronics),ஏடீஏ(AT Attachment) ஆகிய இரண்டும் ஒரே தொழில் நுட்பத்தையே குறிக்கின்றன. ஒரு வட்டகத்தின் கட்டுப்பாட்டுச் சாதனத்தையும் வட்டகத்தோடு ஒருங்கிணைக்கும் வட்டு இயக்கக வடிவமைப்பாகும். இதன்மூலம் இடை முகத்துக்கான செலவு குறைகிறது.

ATAPI : அட்டாப்பி : குறுவட்டுச் சாதனங்களைக் கையாள, ஐபிஎம் பீசி ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்படும் இடைமுக சாதனம்.

at birth : பிறக்கும்போது.

AT Bus : ஏடீ மின்வழித்தடம்; ஏ.டீ மின்பாட்டை : ஐபிஎம் ஏடீ மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச்சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்)களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின்பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்யமுடியும். இது விரிவாக்க மின்பாட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

at death : இறக்கும்போது.

ATDP : ஏடீடிபீ: எண்சுழற்றுத்துடிப்புகளைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Pulse என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் துடிப்பு முறை எண் சுழற்றலைத் தொடக்கி வைககும் கட்டளை .

ATDT ஏடீடிடீ : எண்சுழற்று ஒலியைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Tone என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் ஒலி முறை எண்சுழற்றலைத் தொடங்கி வைக்கும் கட்டளை .

ATM Forum : ஏடிஎம் மன்றம்: 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு முறையை முன்னேற்றுதல் இம்மன்றத்தின் குறிக்கோள்.

atomic : அணு நிலை.

attomic operation : அணுச்செயல்.

attach : உடனினை.

atomic resolution storage : அணு முறை சேமிப்பு.

attached document : உடனிணைக்கப்பட்ட ஆவணம்: ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் உடனிணைப்பாக அனுப்பி வைக்கப்படும் ஒர் ஆவணம். ஆஸ்கி உரைக்கோப்பு, இருமமொழிக் கோப்பு, ஒரு வரைகலைப்படக் கோப்பு, ஒர் இசைப்பாடல் கோப்பு, ஒர் ஒளிக் காட்சிக் கோப்பு, ஒரு மென்பொருள் தொகுப்பு-இவற்றுள் எதை வேண்டுமானாலும் மின்னஞ்சல் செய்தியுடன் இணைத்து அனுப்ப முடியும். வேறு வேறு பயன்பாட்டுத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களாக இருக்கலாம். இணைக்கப்படும் ஆவணங்கள் மின்னஞ்சல் செய்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. அவை மைம்(MIME), பின்ஹெக்ஸ்(BINHEX) என்ற முறையில் மாற்றுக் குறியீடாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்னஞ்சல் தொகுப்புகள் தாமாகவே இம்மாற்றத்தை செய்து அனுப்பும் திறன் பெற்றுள்ளன. மின்னஞ்சலைப் பெறுபவர் பயன்படுத்தும் மின்னஞ்சல் தொகுப்பு இந்த ஆவணங்களை மீண்டும் மூலவடிவுக்கு மாற்றும் திறன்படைத்ததாக இருக்க வேண்டும். இல்லையேல் அதற்கென உள்ள மென்பொருளை பயன்படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

attachment : உடனிணைப்பு.

attachment encoding : உடனிணைப்புக் குறிமுறையாக்கம்.

attended operations : கவனிக்கப்பட்ட செயற்பாடு; கவனிக்கப்பட்ட செயலாக்கம்.

attribute inheritance : மரபுரிமப்பண்பு: பண்புக்கூறு. மரபுரிமம்.

attribute representations : பண்புக்கூறு கூறு உருவகிப்புகள்.

ATX : ஏடீஎக்ஸ் ; 1995ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் அறிமுகப் படுத்திய தாய்ப்பலகையின் கட்ட மைப்புகள் தொடர்பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள்ளிணைக்கப்பட்ட தாய்ப்பலகை பற்றியவை. அனைத்துச் செருகு வாய்களிலும முழுநீளப் பலகை களையும், யுஎஸ்பி துறைகளையும் ஏடிஎஸ் ஏற்க வல்லது.

audio card : கேட்பொலி அட்டை : கணினியின் தாய்ப்பலகையில் பொருத்தக்கூடிய விரிவாக்க அட்டை. தொடர்முறை (analog) வடிவிலான கேட்பொலிச் சமிக்கை களை இலக்கமுறைக்கு மாற்றி, கணினியில் கோப்புகளாகப் பதிவு செய்யவும், கணினிக் கோப்புகளை மின்காந்த சமிக்கைகளாக மாற்றி ஒலிபெருக்கி மூலம் கேட்பொலி யாகத் தரவும் இவ்வட்டை பயன்படுகிறது. கணினியில் இணைக்கப்பட்ட ஒலி வாங்கி மூலம் கேட்பொலியை உள்ளீடாகத் தர முடியும், வெளி யீட்டு ஒலியை ஒலி பெருக்கி மற்றும் தலைபேசி (headphone) மூல மாகக் கேட்க முடியும். கேட்பொலிக் குறுவட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் இணையத்திலிருந்தும் ஒலியை/இசையை, பாடலைக் கேட் பதற்கு கேட்பொலி அட்டைகள் உதவுகின்றன. இவை ஒலி அட்டை, ஒலிப்பலகை, கேட்பொலிப்பலகை என்றும் அழைக்கப்படுகின்றன.

audiocast : கேட்பொலி பரப்புகை : இணைய நெறிமுறை எனப்படும் ஐ.பீ நெறிமுறையைப் பயன்படுத்தி கேட்பொலிச் சமிக்கைகளைப் பரப்புதல்.

audio CD : ஒலிக் குறுவட்டு : கேட்பொலிக் குறுவட்டு,

audio cassette : கேட்பொலிப்பேழை : ஒலிப் பேழை.

audio conferencing : ஒலி சொல்லாடல் : கேட்பொலிச் சொல்லாடல்.

audio compression : கேட்பொலி இறுக்கம் : கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஒர் ஒலி பெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும்போதோ ஏற்படும் மேலோட்டமான சிதைவின் அளவும் இம்முறையில் கட்டுப் படுத்தப்படுகிறது.

audio file : கேட்பொலிக் கோப்பு.

audio editor programmes : ஒலி தொகுப்பு நிரல்கள்.

audio monitor : கேட்பொலிக் கண்காணி.

audio graphics : கேட்பொலி வரைகலை  : ஒலி வரையம்.

audio output port : கேட்பொலி வெளியீட்டுத் துறை : இலக்கமுறை யிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம்மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்து பயன் படுத்தப்படுகிறது.

audio properties : கேட்பொலி பண்புகள்

audio response : கேட்பொலி மறுமொழி : ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி - குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்கமுறைப் படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவணை யிலுள்ள ஒலியன்களின் கூட்டிணைவாகவோ இருக்கலாம்.

audio response device : கேட்பொலி மறுமொழிக் கருவி.

audio system : ஒலி முறைமை; கேட்பொலி முறை.

auditing : கணக்காய்வு : ஒர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவுசெய்யும் இயக்க முறைமையின் செயல்பாடு. பாதுகாப்புக் குறிப்பேடு (security log) என்றறியப்படும் ஒரு கோப்பில் அத்தகைய நிகழ்வுகள் பதிவுசெய்யப் பட்டிருக்கும். தகுந்த உரிமை பெற்ற பயனாளர்கள் மட்டுமே இக்கோப்பின் உள்ளடக்கத்தை அறிய முடியும்.

audit of computer system : கணினி முறைமைத் தணிக்கை.

AUI cable : ஏயுஐ வடம் : உடனிணைப்புச் சாதன இடைமுகக் கம்பி வடம் என்ற பொருள்தரும் Attachment Unit Interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter)யை இணைக்கும் அனுப்பிப் பெறும் வடம்.

authenticate : சான்றுதிப்படுத்து.

author styles : படைப்பாக்கப்பாணி

authering: படைப்பாக்கம்.

authoring language : படைப்பாக்க மொழி: கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தகவல் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி பணித்தளம் பொறுத்தவரை, பலரும் அறிந்த எடுத்துக்காட்டு, பாடங்களை உருவாக்கப் பயன்படும் பைலட் (PILOT) மொழியாகும்.

authorization level : ஏற்கப்பட்ட ஆணைத் தொடர் மட்டம்.

authorised programme : ஏற்கப்பெற்ற நிரல்.

auto - answer : தானியங்கு விடை.

Auto Cad : ஆட்டோ காட் - ஒரு மென்பொருள் தொகுப்பு.

autofit : தானாகப் பொருந்தவை.

autoflow : முன்னோட்டம்.

auto font : தன்னியல்பு எழுத்துரு.

autologon : தானியங்கு புகுபதிகை.

auto code : தானியங்கு குறிமுறை.

auto poling : தானியங்கு பதிவு.

auto - load : தானியங்கு ஏற்றி.

auto correct : தானாகப் பிழைதிருத்தல்; தானியங்கு பிழைதிருத்தம் : விண்டோஸில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஒர் ஆவணத்தில் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, தட்டச்சு செய்யப்படும் சில குறியீடுகள்/சொற்கள், முன்கூட்டியே வரையறுக்கப் பட்டபடி பதிலீடு செய்யப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, the என்ற சொல்லைத் தவறுதலாக teh என்று தட்டச்சு செய்தோமெனில் அது தானாகவே the என்று மாறிவிடும். விசைப் பலகையிலுள்ள மேற்கோள் குறிகள் ஒரேபுறம் திரும்பிய நிமிர்ந்த குறிகள் ("") ஆகும். இதுபோன்ற ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ஆவணத்தில் இருபுறம் அடைக்கும் வரைந்த குறிகளாய் ("மற்றும்") மாறி விடும். பயனாளர் இதுபோன்ற தானியங்கு பிழைதிருத்த/பதிலீட்டு வசதிகளை செயலுமைப்படுத்த வேண்டும்.

automatic backyup : தானியங்கு காப்பு நகல்.

autoform : உடனடிப் படிவம்.

autohide : தானாக மறைதல்.

AUTOEXE.BAT : ஆட்டோஇஎக்ஸ் இ.பேட்; தானியங்கு நிரல்: எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. ஆணைகளடங்கிய தொகுதிக்கோப்பு (batch file). கணினி இயக்கப்படும்போது தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக்கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும்போதே இக்கோப்பு உருவாக்கப்பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய ஆணைகள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும்.

automatic carriage return : தானியங்கு நகர்த்தி திரும்பல்.

automatic dictionary : தானியங்கு அகராதி; தானியங்கு அகரமுதலி.

automatic digital network : தானியங்கு இலக்கமுறை பிணையம்.

automatic network switching : தானியங்குபிணைய இணைப்பாக்கம்.

automatic hardware dump : தானியங்கு வன்பொருள் திணிப்பு.

automatic interrupt : தானியங்கு இடைமறிப்பு: தானியங்கு குறுக்கீடு.

auto outline : தானியங்கு சுற்றுக்கோடு

automatic verifier : தானியங்கு சரிபார்ப்பி.

automatic recharge : தானியங்கு மறுமின்னேற்றம்.

automatic system reconfiguration : தானியங்கு முறைமை மறுதகவமைப்பு : ஒரு கணினியில் புதிதாக ஒரு வன்பொருளையோ மென்பொருளையோ சேர்க்கும்போது அல்லது மாற்றும்போது கணினி முறைமை தானாகவே தகவமைத்துக் கொள்ளுமாறு செய்தல்.

auto redial தானியங்கு மறு சுழற்றுகை.

auto repeat : தானியங்கு மீள் செயற்பாடு.

auto restart : தானியங்கு மீள் தொடக்கம்.

auto serve : தானியங்கு வழங்கல்.

automatic typewriter : தானியங்கு தட்டச்சுப்பொறி.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப்பாக்கம்.

autoplay : தானியக்கம் : குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto-Run-INF என்னும் ஒரு கோப்பு இருக்க வேண்டும். குறுவட்டு, இயக்ககத்தில் செருகப்பட்டவுடன், விண்டோஸ் இக்கோப்பினைத் தேடும். (அவ்வாறு தேடும்படி நாம் முன்பே விண்டோசுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்). அக்கோப்பு இருப்பின் அதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளின்படி விண்டோஸ் செயல்படும். பெரும்பாலும் கணினியின் நிலைவட்டில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை நிறுவுவதற்கான கட்டளையாக இருக்கும். ஒரு கேட்பொலிக் குறுவட்டினைச் செருகியவுடன் விண்டோஸ், பாடலைப் பாடவைக்கும் பயன் பாட்டை இயக்கி, குறுவட்டிலுள்ள முதல் பாடலை தானாகவே பாட வைக்கும்.

auto score : தானியங்கு அடிக் கீறிடல்.

autoshapes : உடனடி வடிவங்கள்.

auto run : உடனடிக் கூட்டல்.

autotext : உடனடி உரை

autotrace : தானியங்கு எல்லை வரைவு; தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு நுண்மிப்பட (பிட்-மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு(object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது.

A/UX : ஏ|யூஎக்ஸ் : பல்பயனாளர், பல்பணி யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் படைப்பு. ஏடி&டீ யூனிக்ஸ் சிஸ்டம்V வெளியீடு 2.2 இயக்க முறைமையை அடியொற்றி உருவாக்கப்பட்டது. பல புதிய வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. பல்வேறு மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. மெக்கின்டோஷின் பல்வேறு சிறப்புப் கூறுகளும் ஏ/யூஎக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மெக்கின்டோஷ் டுல்பாக்ஸ் வசதி இதில் உண்டு. இதன்மூலம், பயனாளர்கள், வரை கலைப் பணிச் சூழலைப் (Graphical User Interface) பெறமுடியும்.

AUX : ஏயூஎக்ஸ் : கணினித் துணைச் சாதனங்களுக்குரிய தருக்கமுறைச் சாதனப் பெயர். எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான துணைச் சாதனத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர். பெரும்பாலும் இப்பெயர் கணினியின் முதல் தொடரியல்துறைக் குறிக்கும் காம் 1 (COM1) என்றும் இதனை அழைப்பர்.

auxiliary speakers : துணைநிலை ஒலிப்பிகள்.

auxiliary store : துணைநிலை சேமிப்பு.

auxiliary storage : துணைநிலை சேமிப்பகம் : வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகைய துணைநிலை சேமிப்பகங்கள் வெறுமனே சேமிப்பகம் என்றோ, நிலையான சேமிப்பகம் என்றோ அழைக்கப்படுகின்றன. நுண்செயலி தற்காலிகச் சேமிப்பகமாய் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையா நினைவக (RAM) சிப்புகள் வெறுமனே நினைவகம் என்றே குறிக்கப்படுகின்றன. available machine : கிடைக்கும் எந்திரம்.

available machine time : கடைக்கும் எந்திர நேரம்.

available memory : கிடைக்கும் நினைவகம். avoiding data repetition : தகவல் சுழற்சியைத் தவிர்த்தல்.

avatar : அவதாரம் : சிலவகை இணைய அரட்டை அறைகள் போன்ற மெய்நிகர் நடப்புச் சூழல் களில் பயனாளரின் வரைகலை வடிவிலான தோற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மனிதரின் இருபாலரில் ஒருவருடைய பொதுப்படையான படம் அல்லது அசைவூட்டம், பயனாளரின் ஒளிப்படமாகவோ கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். ஒரு விலங்கின் படமாகவோ அசைவூட்டமாகவோ கூட இருக்கலாம். பயனாளர் தன்னுடைய மெய்நிகர் நடப்புத் தோற்றமாகக் காட்டுவதற்குத் தேர்வு செய்த ஒரு பொருளாகவும் இருக்கலாம்.

AVI : ஏவிஐ : கேட்பொலி, ஒளிக்காட்சி பிணைந்தது என்று பொருள்படும் Audio Vedio Interleaved என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்கமுறையில் பயன்படுத்தப்படும் ஒரு பல்லூடகக் கோப்பு வடிவம். ஒலி மற்றும் ஒளிக்காட்சி இவ்வகைக் கோப்புகளில் பதியப்படுகின்றன. மைக்ரோசாஃப்டின் ரிஃப் (RIFF-Resource Interchange File Format) தொழில்நுட்பத்தைப் பின்பற்றியது.

.aw : .ஏடபிள்யூ : இணையத்தில் அருபாவைச் சேர்ந்த இணையதளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப் பெயர்.

axis : அச்சு; சுழலச்சு : இரு பரிமாண வரைபடங்களில் பயன்படும் கிடைமட்ட, செங்குத்து அச்சுகள். முறையே, x-அச்சு, y-அச்சு என்று குறிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படும் ஆயத்தொலைவுகளைக்(coordinates)படங்கள் வரையப்படுகின்றன. முப் பரிமாண ஆயத்தொலைவு அமைப்பில் மூன்றாவது அச்சு, உயர/ஆழ அச்சாக இருக்கும். z-அச்சு எனப்படும்.

.az : .ஏஇஸட் : இணையத்தில் அஜெர்பெய்ஜான் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கப் பயன்படும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.