கண்டராதித்தர் திருவிசைப்பா
கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1
மின்னார் உருவம் மேல்வி ளங்க
- வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்றுவந்து
- நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
- தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
- என்றுகொல் எய்துவதே
2
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
- ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
- ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
- முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
- கூடுவ தென்றுகொலோ
3
முத்தீ யாளர் நான்ம றையர்
- மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
- ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
- தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
- அணைவதும் என்றுகொலோ
4
மானைப் புரையும் மடமென் னோக்கி
- மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
- அம்புலி சூடும் அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு
- செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
- கூடுவ தென்றுகொலோ
5
களிவான் உலகிற் கங்கை நங்கை
- காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
- உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
- செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
- உறுவதும் என்றுகொலோ
6
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
- பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
- மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
- அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
- காண்பதும் என்றுகொலோ
7
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
- இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
- வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
- செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
- காண்பதும் என்றுகொலோ
8
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
- ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
- செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
- அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
- என்றுகொல் எய்துவதே
9
நெடியா னோடு நான்மு கன்னும்
- வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
- முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
- ணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
- ண்பதும் என்றுகொலோ
10
சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
- அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
- தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
- அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
- பேரின்பம் எய்துவரே
முற்றும்