கண்ணன் பாட்டு/11. கண்ணன் - என் காதலன் - 2

உறக்கமும் விழிப்பும்


நாதநாமக்கிரியை - ஆதி தாளம்

ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.


நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள்

நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;

சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன

தூளி படுகுதடி, இவ்விடத்திலே.

ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை

ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;

சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச்

சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . ... 1


நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது

நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;

கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்

கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,

ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;

அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,

பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்

பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், ... 2


பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்

பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,

நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து

நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,

கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்

கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,

வித்தைப் பெயருடைய வீணியவளும்

மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், ... 3


எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!

என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!

சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்

தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,

மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை

மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்

நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.

நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். ... 4


(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)


கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,

கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?

பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்

பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;

வெண்கல வாணிகரின் வீதி முனையில்

வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;

கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,

கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? ... 5