கண்ணன் பாட்டு/13. கண்ணன் - என் காதலன் -4

(பாங்கியைத் தூது விடுத்தல்)


தங்கப்பாட்டு மெட்டு

ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்.


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

(அடி தங்கமே தங்கம்)

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;

எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்

ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். . ... 1


கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்

காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;

அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்

அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். . ... 2


சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்

தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;

என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை

யாவும் தெளிவுபெறக் கோட்டு விடடீ!. ... 3


மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை

மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?

பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்

பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். ... 4


ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை

அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்

தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே

சொல்லி வருவையடி தங்கமே தங்கம். ... 5


சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்

சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்

வீர மறக்குலத்து மாதரிடத்தே

வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! ... 6


பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்

பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;

பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்

பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே. ... 7


நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்

நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,

தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு

தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்! ... 8