கண்ணன் பாட்டு/15. கண்ணன் - என் காந்தன்

வராளி - திஸ்ர ஏக தாளம்

சிருங்கார ரசம்


கனிகள் கொண்டுதரும் - கண்ணன்

கற்கண்டு போலினிதாய்;

பனிசெய் சந்தனமும் - பின்னும்

பல்வகை அத்தர்களும்,

குனியும் வாண்முகத்தான் - கண்ணன்

குலவி நெற்றியிலே

இனிய பொட்டிடவே - வண்ணம்

இயன்ற சவ்வாதும். ... 1


கொண்டை முடிப்பதற்கே; - மணங்

கூடு தயிலங்களும்,

வண்டு விழியினுக்கே - கண்ணன்

மையுங் கொண்டுதரும்;

தண்டைப் பதங்களுக்கே - செம்மை

சார்த்துசெம் பஞ்சுதரும்;

பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்

பேசருந் தெய்வமடீ! ... 2


குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்

குழைத்து மார்பொழுத;

சங்கையி லாதபணம் - தந்தே

தழுவி மையல் செய்யும்;

பங்கமொன் றில்லாமல் - மகம்

பார்த்திருந் தாற்போதும்;

மங்கள மாகுமடீ! - பின்னோர்

வருத்த மில்லையடி! . ... 3