கண்ணன் பாட்டு/22. கண்ணன் - என் ஆண்டான்

புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்

ரசங்கள்: அற்புதம், கருணை


தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்

தவித்துத் தடுமாறி,

பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,

பார முனக் காண்டே!

ஆண்டே! - பாரமுனக் காண்டே! ... 1


துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்

சுகமருளல் வேண்டும்;

அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்

ஆணை வழி நடப்பேன்;

ஆண்டே! - ஆணைவழி நடப்பேன். ... 2


சேரி முழுதும் பறையடித் தேயருட்

சீர்த்திகள் பாடிடுவேன்;

பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்

பெயர் முழக்கிடுவேன்;

ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன். ... 3


பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்

பாங்கிய மோங்கி விட்டான்;

கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்

காதலுற் றிங்கு வந்தேன்;

ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன். ... 4


காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்

காலிகள் மேய்த்திடுவேன்;

பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்

பக்குவஞ் சொல்லாண்டே!

ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே! ... 5


தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்

சோதனை போடாண்டே!

காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்

கட்டியடி யாண்டே!

ஆண்டே! - கட்டியடி யாண்டே! ... 6


பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்

பிழைத்திட வேண்டுமையே!

அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்

ஆகிட வேண்டுமையே!

உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே! ... 7


மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி

வாங்கித் தரவேணும்!

தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்

தரவுங் கடனாண்டே!

சில வேட்டி - தரவுங் கடனாண்டே. ... 8


ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து

தொலைத்திட வேண்டுமையே!

பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே! ... 9


பேயும் பிசாசுந் திருடரு மென்றன்

பெயரினைக் கேட்டளவில்,

வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க

வழி செய்ய வேண்டுமையே!

தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே! ... 10