கண்ணன் பாட்டு/3. கண்ணன் என் தந்தை
(நொண்டிச் சிந்து) ப்ரதான ரஸம் - அற்புதம்
பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப் புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படி யே - இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம் - மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார், சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்க தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். ... 1
செல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன் கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை; பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை - மனம் நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு. ... 2
நாவு துணிகுவ தில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவருந் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே - அவன் முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்; தேவர் குலத்தவன் என்றே - அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். . ... 3
பிறந்தது மறக் குலத்தில்; - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு; நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்! துறந்த நடைக ளுடையான்; - உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். ... 4
ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம் ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்; தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத் தளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை. பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். ... 5
இன்பத்தை இனிதெனவும் - துன்பம் இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை; அன்பு மிகவு முடையான்; - தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே, வன்புகள் பல புரிவான்; - ஒரு மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே - பின்பு முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். ... 6
வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை; வேதங்க ளென்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை; வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன் வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். ... 7
நாலு குலங்கள் அமைத்தான்; - அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர், சீலம் அறிவு கருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். ... 8
வயது முதிர்ந்து விடினும் - எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை, - என்றும் சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை; பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். ... 9
துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்; அன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில் ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்; இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும் இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். . ... 10