கண் திறக்குமா/இவர்தான் என் அண்ணா!

14. "இவர்தான் என் அண்ணா!"

விவரிக்க முடியாத உணர்ச்சியுடனும் பொங்கி வரும் மகிழ்ச்சியுடனும் வீட்டை நெருங்கிய என்னை வேற்றுக் குரல் ஒன்று வேதனையடையச் செய்தது. காரணம், அது பெண்ணின் குரலாயில்லை; ஆணின் குரலாயிருந்தது. அது தான் போகட்டுமென்றால் அந்தக் குரல் செங்கமலத்தினிடமோ, அவளுடைய தாயாரிடமோ பேசிக்கொண்டிருக்கவில்லை; சித்ராவுடன் பேசிக்கொண்டிருந்தது.

இருக்கட்டுமே, அதனால் என்ன? அந்தக் குரல் என்னுடைய மகிழ்ச்சிக்குக் குறுக்கே நிற்பானேன்? என் கால்கள் மேலே செல்லத் தயங்குவானேன்? விசித்திரமாக வல்லவா இருக்கிறது, இது!

நான் மட்டும் கல்யாணத்துக்கு முன்னால் ஒரு பெண்ணுடன் பேசலாம்; பழகலாம்; சித்ரா பேசக்கூடாது; பழகக்கூடாதா?

இவ்வாறு எண்ணியதும் என்னை நானே எண்ணி நகையாடிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்டதும், "இதோ வந்து விட்டார், இவர்தான் என் அண்ணா!" என்றாள் சித்ரா, தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம்.

"வணக்கம்" என்றார் அந்தப் புதிய மனிதர், என்னை நோக்கி.

பதிலுக்கு "வணக்கம்" என்று சொல்லக்கூட எனக்கு ஏனோ வாய் வரவில்லை; பேசாமல் எதிரே உட்கார்ந்து அவரைக் கூர்ந்து நோக்கினேன்.

சித்ரா ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தாள்; மறுகணம் 'கலீர்' என்று சிரித்தாள்.

எனக்குச் 'சுறுக்'கென்றது; சித்ராவின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

"அவரை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள், அண்ணா ! நீங்கள் நினைப்பதுபோல நாங்கள் நடப்பதாயிருந்தால் அதற்கு இதுவா இடம்? ஒன்று ஆஸ்பத்திரியாக இருக்க வேண்டும்; அல்லது கடற்கரையாக இருக்கவேண்டும்!" என்றாள் அவள்!

இது எனக்கு என்னவோ போலிருந்தது. முகத்தில் அசடு வழிய, "அது சரி; இவர் யார் என்று நீ எனக்குச் சொல்லவேயில்லையே?" என்றேன் நான்.

"இவரா, இவர்தான் என்னைத் திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்த புண்ணியவான்!" என்றாள் அவள்.

"அப்படியா!" என்றேன் நான்.

"ஆமாம், அண்ணா ; அன்றிரவு அந்தக் கிராதகன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த தைரியம் எனக்குக் கடைசிவரை இருக்கவில்லை; வழியிலேயே அது மறைந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் 'பெண்களுக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்திருக்கும் சில பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள்' என்னுடன் பேச முயன்றார்கள்; வலிந்து உதவி செய்யவும் முனைந்தார்கள். எதையும் பொருட்படுத்தாமல் என்பாட்டுக்கு நான் 'விறுவிறு'வென்று நடந்தேன். மனம் மட்டும் 'திக், திக்'கென்று அடித்துக்கொண்டேயிருந்தது. கடைசியாகத் துணிந்து என்னைத் தொடர்ந்து வந்த கறுத்த மீசைக்காரர் ஒருவர் பொறுமையிழந்து வழி மறித்தார்; நான் வெலவெலத்துப் போனேன். 'இங்கேயும் ஒரு சிவ குமாரனா!' என்று எண்ணி என் மனம் இடிந்தது. நல்ல வேளையாக அப்போது 'பாம், பாம்' என்று அலறிக் கொண்டே கார் ஒன்று என்னை நோக்கி வந்தது.

கடவுள்தான் கார் அவதாரம் எடுத்து வருகிறாரோ என்று ஒரு கணம் நினைத்தேன்; மறுகணம் அந்தப் பாவி சிவகுமாரனின் ஞாபகம் வந்து தொலைந்தது. ஒரு வேளை அவன்தான் காரில் நம்மைத் தேடிக்கொண்டு வருகிறானோ என்று பயந்தேன். எது எப்படியிருந்தாலும் இந்த மீசைக்காரனிடமிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்று எண்ணி, "ஐயா, ஐயா! கொஞ்சம் நிறுத்துங்கள், கொஞ்சம் நிறுத்துங்கள்!" என்று கத்திக் கொண்டே காருக்கெதிரே சென்று நின்றேன். என் வேண்டுகோள் நிராகரிக்கப் படவில்லை; கார் நின்றது. உள்ளே உட்கார்ந்திருந்த மனிதர் சட்டென்று கீழே இறங்கி, 'என்ன அம்மா, என்ன நடந்தது?' என்றார் பரபரப்புடன். 'ஒன்றுமில்லை; என்னைக் கொஞ்சம் ஸ்டேஷன் வரை கொண்டு போய் விட்டுவிடுகிறீர்களா?" என்றேன். 'இவ்வளவுதானே, ஏறிக்கொள்ளுங்கள்!' என்றார். அப்போதிருந்த நிலையில் நானும் தயங்காமல் ஏறிக் கொண்டேன். ஆயினும் என்றுமில்லாத அச்சம் என்னைக் கவ்விற்று; கடைக் கண்ணால் அவரைக் கவனித்தேன். அவர் வாலிபராயிருந்தார். அத்துடன் அவர் அணிந்திருந்த வேட்டி, சட்டை, அங்கவஸ்திரமெல்லாம் கதர் மயமாக இருக்கவே, என் அச்சம் அதிகரித்தது. ஏனெனில் சிவகுமாரனும் கதர் தான் அணிவது வழக்கம் ! இருந்தாலும், 'மீசைக் காரனிடமிருந்து தப்பிப் பிழைத்தோமே!' என்ற ஆறுதலுடன் ஒரு பெருமூச்சு விட்டேன். 'இந்நேரத்தில் தனியாகக் கிளம்பி வரலாமா? என்றார் அவர். வேறு வழியின்றி நான் என்னுடைய கதையைச் சொன்னேன். அதைக் கேட்டு அவர் உருகினார். 'இதில் ஒன்றும் அதிசயமில்லை!' என்று நான் எண்ணிக்கொண்டேன்.

ஏனெனில் பெண் என்றால் பேயும் இரங்குமல்லவா? அப்படியிருக்கும்போது அவர் இரங்கியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அடுத்தாற்போல, 'நீங்கள் எங்கே போகவேண்டும்!' என்றார். 'சென்னைக்கு' என்றேன். 'நானும் அங்குதான் போகிறேன்' என்றார். 'சந்தோஷம்' என்றேன், அப்போதும் நான் அவரை நம்பாமல். அதற்கேற்றாற்போல் ஸ்டேஷனை அடைந்ததும் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார் அவர்; நான் 'வேண்டாம்' என்று சொல்லவில்லை. காரணம், அந்தச் சமயம் என் கையில் ஒரு காலணாக்கூட இல்லாமலிருந்ததுதான். எனினும் சும்மா இருந்து விடவில்லை நான்; கையிலிருந்த வளையல்களில் ஒன்றைக் கழற்றிக் கொடுத்து, "இதை எங்கேயாவது விற்று டிக்கெட்டுக்குரிய காசை எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றேன். 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லிக்கொண்டே, அவர் பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினார். 'அடடா! என்ன தாராளம், என்ன தாராளம்!' என்று நான் நினைத்துக் கொண்டேன். அத்துடன், நாமே ஓர் ஆண் பிள்ளையாயிருந்தால் அவர் அப்படியெல்லாம் உதவி செய்ய முன் வருவாரா என்று வேறு எண்ணி எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அவரோ நீட்டிய நோட்டை நீட்டியபடி இருந்தார். எனக்குப் பரிதாபமாக இருந்தது. ரொம்ப வந்தனம், சென்னை போய்ச் சேருவதற்கு இந்த டிக்கெட் ஒன்றே போதும்!' என்றேன். அதற்குள் மணி அடித்து விடவே எல்லோரும் வண்டியை நோக்கி ஓடினர். இந்தச் சமயத்தில்தான் நான் கொஞ்சமும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, என்னையும் தம்முடன் வண்டியில் ஏறிக்கொள்ளும்படி இவர் வற்புறுத்தவில்லை; பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டுவிட்டு அவசர அவசரமாக நாலைந்து சாத்துக்குடி பழங்களை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு, 'எழும்பூர் ஸ்டேஷனில் உங்களைச் சந்திக்கிறேன்' என்று இரைக்க இரைக்கச் சொல்லிவிட்டு, விழுந்தடித்துக் கொண்டு போய் அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டார். எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது; 'இப்படியும் ஓர் ஆண் பிள்ளை உண்டா!' என்று வியந்தேன். அத்துடன், அவர்மேல் அதுவரை கொண்டிருந்த தப்பபிப்பிராயத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்..."

"சரிதான்; கடைசியாக உன் உள்ளத்தில் அவருக்குக் கொஞ்சம் இடங்கொடுத்து விட்டாயாக்கும்?" என்றேன் நான் குறுக்கிட்டு.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை, அண்ணா! பெண்கள் அல்வளவு சீக்கிரம் இடங்கொடுத்துவிட மாட்டார்கள்; ஆண்கள்தான் பெண்களைக் கண்ட மாத்திரத்தில் இடங்கொடுத்து விடுவார்கள்!" என்றாள் அவள்.

"சரி, அப்புறம்?"

"அப்புறம் என்ன, மறுநாள் காலை என்னை அவர் எழும்பூர் ஸ்டேஷனில் சந்தித்தார். அங்கிருந்து ஒரு டாக்ஸியில் என்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தார்.

இவ்வளவு தூரம் உதவி செய்த அவருக்கு எப்படி நன்றி செலுத்துவது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை. போகும் போது, 'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!' என்றேன். அப்படியே ஆகட்டும்,' என்றார். அடுத்தாற் போல், யாருக்கும் தெரியாமல் வரவேண்டாம்; தெரிந்தே வாருங்கள்!' என்றேன். அன்று சிரித்துக் கொண்டே சென்றவர்தான்; இன்று வந்திருக்கிறார்!" என்று கூறி முடித்தாள் அவள்.

"ரொம்ப சந்தோஷம்; என் தங்கையின் வார்த்தையைத் தட்டாமல் நீங்கள் இவ்வளவு தூரம் வந்தது பற்றி ரொம்ப ரொம்ப சந்தோஷம்!" என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.

"போங்கள் அண்ணா , நீங்கள் மட்டும் சாந்தினியின் வார்த்தையைத் தட்டாமல் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லையாக்கும்?" என்றாள் அவள்.

"சரி, நான் 'திருடன்' என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீ 'திருடி' என்பதை ஒப்புக்கொள்கிறாயா?"

"வேடிக்கைதான்; யாரை யார் திருடினார்களாம்;"

"அதுதான் எனக்கும் தெரியவேண்டும். நீ அவரைத் திருடினாயா, அவர் உன்னைத் திருடினாரா?"

"இந்த விஷயத்தில் பெண்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வது கடினம்!" என்றார், அதுவரை சும்மா இருந்த அந்த ஆசாமி.

"அப்படியானால் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று நான் திருப்பிக் கேட்டேன்.

அவ்வளவுதான்; முகத்தில் அசடு வழிய எழுந்து அவர் மெள்ள நழுவப் பார்த்தார். நான் அவருடைய கையைப் பற்றி, "உங்கள் பெயர்?" என்றேன்.

"கண்ணன்" என்றார் அவர்.

"சரியான திருடன்தான்!" என்றேன் நான்.

அதற்கு மேல் அவர் அங்கே நிற்கவில்லை; 'விட்டால் போதும்!' என்று தடையைக் கட்டிவிட்டார். நான் சிரித்துக்கொண்டே திரும்பினேன்; சித்ரா முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள். விடுவேனா நான்?

"கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்,
கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம்!
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்

ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்!"

என்ற பாரதியாரின் பாடலைத் திருப்பித் திருப்பிப் பாட ஆரம்பித்துவிட்டேன். சித்ரா வராத கோபத்தை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு, "ரொம்ப நன்றாய்த் தான் இருக்கிறது!" என்றாள், அறையை விட்டு அம்பலத்துக்கு வந்து.

"ஏன், கண்ணன் பாடினால் தான் நன்றாயிருக்குமோ!" என்றேன் நான்.

"ஆமாம், சாந்தினி பாடினால்தான் எனக்கு நன்றாயிருக்கும்!" என்றாள் அவள், பதிலுக்குப் பதில் விட்டுக் கொடுக்காமல்.

இந்தச் சமயத்தில், "என்ன விஷயம்?" என்று கேட்டுக்கொண்டே சாந்தினி உள்ளே நுழைந்தாள்; நான் நடந்ததைச் சொன்னேன்.

"இவ்வளவுதானே, நாளைக்கே வேண்டுமானாலும் நானும் அப்பாவும் போய் அவருடைய மன நிலையைத் தெரிந்துகொண்டு வந்துவிடுகிறோம்!" என்றாள் அவள்.

"இனிமேல் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? எல்லாம் முடிந்தாற்போலத்தான்!" என்றேன் நான்.

இவற்றையெல்லாம் மலர்ந்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்த செங்கமலத்தின் தாயார், "இந்த வேடிக்கை விளையாட்டெல்லாம் கல்யாணமாவதற்கு முன்னால்தான். அப்புறம் பார்க்கவேண்டுமே, என்னதான் ஆசையோடு கல்யாணம் செய்து கொண்ட அகமுடையான் பெண் டாட்டியாயிருந்தாலும் எலியும் பூனையுமாகி விடுவார்கள்!" என்றாள்.

"அதெல்லாம் 'பெரியோர் நிச்சயித்த வண்ணம்' நடக்கிறதே, அந்தக் கல்யாணத் தம்பதிகளிடந்தான் பார்க்க முடியும்!" என்றேன் நான்.

"ஏன், 'சிறியோர் நிச்சயித்த வண்ணம்' நடக்கிறதே, அந்தக் கல்யாணத் தம்பதிகளிடம் மட்டும் பார்க்க முடியாதோ!" என்றாள் அவள்.

"அவசியம் பார்க்கலாம்!" என்று அவள் சொன்னதை அப்படியே ஆமோதித்தாள் சித்ரா.

"தவறு; உண்மையாகவே ஒருவரையொருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களாயிருந்தால் ஒருநாளும் அவர்கள் எலியும் பூனையுமாக இருக்க மாட்டார்கள்; மலரும் மணமுமாகவே இருப்பார்கள்!" என்றாள் சாந்தினி.

"கல்யாணமாவதற்கு முன்னால் அப்படித்தான் சொல்லத் தோன்றும்; அதற்குப் பிறகுதானே தெரியும் அந்தக் கஷ்டமெல்லாம்?" என்றாள் செங்கமலத்தின் தாயார், அப்பொழுதும் விடாமல்.

"கஷ்டம் இருக்கலாம்; ஆனால் அதிலும் ஓரளவு சுகம் இருக்கும். துன்பம் இருக்கலாம்; ஆனால் அதிலும் ஓரளவு இன்பம் இருக்கும்!" என்றாள் சாந்தினி.

"இருக்கும், இருக்கும். ஏன் இருக்காது? எல்லாம் கற்பனைதானே, நிச்சயம் இருக்கும்!" என்று குறுக்கிட்டாள் சித்ரா.

"அப்படியானால் ஆக்ராவில் காட்சியளிக்கும் 'தாஜ்மஹால்' வெறுங் கற்பனைதானா?" என்றாள் சாந்தினி.

"உண்மையாகத்தான் இருக்கட்டுமே, அந்தத் தாஜ்மஹாலைத் தன் உள்ளத்தில் அவன் கட்டியிருப்பான் என்பது என்ன நிச்சயம்?" என்றாள் சித்ரா.

"அது முடிகிற காரியமா? அவ்வளவு பெரிய தாஜ்மஹாலை அவன் உள்ளத்தில் கட்ட முடியுமா?" என்றேன் நான்.

"சரி; அது போகட்டும். லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் போன்ற காதலரின் கதைகளிலிருந்து நமக்கு என்னத் தெரிகிறது?" என்று இன்னொரு கேள்வியைப் போட்டாள் சாந்தினி.

'"காதல், வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுமென்று தெரிகிறது!" என்றாள் சித்ரா.

இதெல்லாம் சாதாரண மனிதர்களை பொறுத்த விஷயம். வள்ளி - தேவானை சமேதராக விளங்கும் முருகப் பெருமான், ராதா - ருக்மணி சமேதராக விளங்கும் கிருஷ்ண பரமாத்மா ஆகியவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று நான் குறுக்கிட்டுக் கேட்டேன்.

"என்னத்தைச் சொல்வது? அதே காரியத்தை மனிதன் செய்தால் தவறு; கடவுள் செய்தால் திருவிளையாடல்!" என்றது வேறுக் குரல் ஒன்று. திரும்பிப் பார்த்தேன்; பாலு வந்து கொண்டிருந்தான்.

"வா பாலு, வா!" என்று நான் அவனை வரவேற்றேன்; சித்ராவும், சாந்தினியும் உள்ளே சென்று விட்டனர்.