கண் திறக்குமா/தீனபந்து!
16. "தீனபந்து!"
சிவகுமாரனின் எதிர்பாராத மரணத்தாலும், செங்கமலத்தின் எதிர்பாராத பிரிவாலும் பாலுவின் உள்ளம் சமாதானம் அடைந்துவிடும் என்று நான் எதிர்பார்த்தேன்; அதற்குப் பதிலாக ஏற்கெனவே எரிமலைபோல் குமுறிக்கொண்டிருந்த அவன் உள்ளம் வெடித்தது. சிவகுமாரனின் மரணத்துக்கு யார் காரணமாயிருந்தாலும் செங்கமலத்தின் பிரிவுக்கு அவனே காரணம், அவனைப் பெற்றெடுத்த தந்தையே காரணம் என்று அவன் நினைத்தான். அதன் காரணமாக மேலும் மேலும் எழுச்சியடைந்த அவன் உள்ளத்தை வீழ்ச்சியடையச் செய்யும் திருப்பணியில் நான் இறங்கவில்லை ; 'நடப்பது நடக்கட்டும்' என்று பேசாமல் இருந்து விட்டேன்.
சித்ரா சொல்வதுபோல் தமிழ்நாட்டில்தான் ஏற்கெனவே வீரத்துக்குப் பஞ்சமாயிருக்கிறதே, அதை நான் ஏன் இன்னும் அதிகமாக்க வேண்டும்? பாரதந்தான் ஆன்ம ஞானம் தவிர மற்ற ஞானங்களுக்கெல்லாம் அந்நிய நாட்டானிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறதே.
அதை நான் ஏன் இன்னும் வளர்க்க வேண்டும்?
பாலுவின் நிலை இப்படியிருக்க, அவனுடைய சித்தியின் நிலையோ அதற்கு நேர் விரோதமாயிருந்தது. ஏனெனில் செங்கமலம் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் என்று அவள் நினைத்தாள். அத்துடன், அவள் விட்டுச் சென்ற குழந்தை வேறு கொஞ்ச நஞ்சமிருந்த துக்கத்தையும் நாளடைவில் மறக்கச் செய்துவிட்டது. அதற்கேற்றாற்போல் அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு வேண்டியவற்றையெல்லாம் தன்னுடைய உயில் மூலம் உறுதி செய்து வைத்து விட்டான் பாலு.
இவர்களைப் பற்றிய கவலை ஒருவாறு தீர்ந்ததும் என்னைப் பற்றிய கவலையில் நான் ஆழ்ந்தேன் - விடுதலைக்குப் பிறகு எத்தனை நாட்களைத்தான் வீணாகக் கழித்துக் கொண்டிருப்பது? - ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று என் மனம் கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. அதற்காக ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பிறகு வக்கீல் தொழிலை மேற்கொள்ளவும் நான் விரும்பவில்லை; அதை விட்டு வேறு ஏதாவது ஓர் உத்தியோகத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்தவும் என் மனம் இணங்கவில்லை. ஏற்கனவே எண்ணியதுபோல் பத்திரிகைத் தொழில்தான் என் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் பல கஷ்டநஷ்டங்கள் உண்டு என்பதை நான் அறிந்துதான் இருந்தேன். ஆயினும் என் மனம் என்னவோ அந்தத் தொழிலைத்தான் விரும்பிற்று; அதை மேற்கொண்டால் தான் வயிற்றுக்குச் சேவை செய்து கொள்வதோடு, மக்களுக்கும் ஓரளாவது சேவை செய்ய முடியும் என்று நம்பிற்று. அதைக் கொல்ல என்னாலும் முடியவில்லை; பாரிஸ்டர் பரந்தாமனாலும் முடியவில்லை !
பத்திரிகைத் தொழிலுக்குப் பணமும் பக்க பலமும் அவசியம் என்று பலர் சொல்ல நான் கேட்டிருந்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அதுதான் பணம். அந்தக் கவலையை என்னுடைய வீட்டை விற்றோ, அல்லது அடமானம் வைத்தோ தீர்த்துக் கொள்ளலாமென்று இருந்தேன். இன்னொரு கவலை பக்க பலத்தைப் பற்றியது. அதில் இரண்டு விதங்கள் இருந்தன. ஒன்று மக்களின் பலம்; இன்னொன்று ஆண்டவனுக்கு இருக்கும் அடியார்களின் பலத்தைப் போன்றது. மக்களின் பலத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை; அதை எழுத்தின் சக்தியைக் கொண்டே திரட்டிவிடலாமென்ற தைரியம் எனக்கு இருந்தது. ஆனால் அடியார்களின் பலத்தை எழுத்தின் சக்தியைக் கொண்டு திரட்டிவிட முடியாது; அதற்கு எடுத்ததற்கெல்லாம் முகஸ்துதி செய்யும் அபூர்வ குணம் வாய்த்திருக்க வேண்டும். அந்தக் குணம் என்ன காரணத்தினாலோ அடியேனுக்கு வாய்த்திருக்கவில்லை.
இதனால் மேற்படி தொழிலில் நான் வெற்றி காண முடியாது என்று பாரிஸ்டர் பரந்தாமன் ஒரு முறையல்ல, பல முறை சொன்னார். அதை நான் பொருட்படுத்தவில்லை; வீட்டை அடமானம் வைத்துப் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். அதைக் கொண்டு பத்திரிகை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன்.
கடைசியாக இதைக் கேள்விப்பட்ட பரந்தாமனார், "பத்திரிகைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தார்.
நான் அவரை வரவேற்று, "என்ன பெயர் வைத்தால் நன்றாயிருக்கும்?" என்று திருப்பிக் கேட்டேன்.
"அதுதானே எனக்குத் தெரியாது. பெயர் வைத்த பிறகு வேண்டுமானால், 'இது நன்றாயிருக்கிறது, அது நன்றாயில்லை' என்று சொல்வேன்."
"அதாவது, வீட்டைக் கட்ட மாட்டீர்கள்; கட்டிய பிறகு அழது சொல்வீர்கள் - அப்படித்தானே!""ஆமாம்; 'தமிழ்ப் பெருமக்களின் தனிப்பெருங் குணங்களில் அதுவும் ஒன்றல்லவா?"
"அது ஒன்றுதானா! இன்னும் எத்தனையோ இருக்கிறதே!"
"அதைப் பற்றி இப்பொழுது ஒன்றும் வேண்டாம்; உம்முடைய பத்திரிகைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர் என்பதை முதலில் சொல்லும்?"
"தீனபந்து!"
"பெயர் நன்றாய்த்தான் இருக்கிறது; ஆனால்....?"
"ஆனால் என்ன, ஆனால்?"
"பெயரளவில் வேண்டுமானால் பத்திரிகை 'தீன பந்துவாக இருக்கலாம்; கொள்கையில் மட்டும்..."
"பணக்காரரின் பந்துவாக இருக்க வேண்டுமோ?"
"அதைச் சொல்லித்தானா தெரிந்துகொள்ள வேண்டும்! சொல்லாமலே தெரிந்து கொண்டிருக்கலாமே!"
"பணக்காரருடைய தயவைக் கொண்டு பிழைக்க விரும்பவில்லை நான்; ஏழைகளுடைய தயவு இருந்தால் போதும் எனக்கு!"
"இப்படிச் சொன்னவன் யாரும் இதுவரை உருப்பட்டதில்லை. அப்படி யாராவது உருப்பட்டிருந்தால் அவன் உண்மையில் 'ஏழை பங்காள'னாயிருந்திருக்க முடியாது; தலைசிறந்த 'ராஜதந்திரி'யாயிருந்திருக்க வேண்டும். அந்த ராஜதந்திரத்தோடு வேண்டுமானால் நீரும் நடந்து கொள்ளலாம். உதாரணமாக ஏழைகளுக்குப் பணக்காரர் ஏதாவது தீங்கு செய்தால் அதை எடுத்துச் சொல்லக் கூடாது. அப்படியே எடுத்துச் சொன்னாலும் அதற்குக் காரணம் பணக்காரர் என்று சொல்லிவிடக் கூடாது. நாடோ நகரமோ, அல்லது மழையோ வெய்யிலோ, அதுவும் இல்லையென்றால் சர்க்காரோ அதிகாரிகளோ காரணம் என்று சொல்லிவிடவேண்டும். அதிலும் இப்போது வெள்ளைக்காரர் சர்க்கார் நடக்கிறதல்லவா? - எதற்கு வேண்டுமானாலும் அவர்களைத் திட்டலாம்; தப்பித் தவறிச் சுயராஜ்யம் வந்து விட்டால்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கும். அப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். உம்மிடந்தான் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேனே - இந்த ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு சிலர் பேரும் புகழும் அடைவதற்கும், பட்டமும் பதவியும் பெறுவதற்குத்தான் உபயோகமாயிருக்குமே தவிர மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவனவாயிருக்காதென்று! - எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்த அரசியல் என்பதே வெறும் பித்தலாட்டந்தான்.
மக்கள் உண்மையிலேயே நல்வாழ்வு பெற விரும்பினால் தங்களைத் தாங்களே நம்ப வேண்டுமே தவிர வேறு எதையுமே, எவரையுமே நம்பக் கூடாது. நாமும் அப்படித்தான்; நம்முடைய நல்வாழ்வுக்கு நம்மை நாமே நம்ப வேண்டும். அப்படி நம்பிக்கொண்டு ஏழைகளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம் - எதைப் பற்றிப் பேசினாலும் சரி, எதைப் பற்றி எழுதினாலும் சரி - கருமத்தில் மட்டும் கண்ணாயிருக்க வேண்டும். அந்தக் கருமந்தான் பணத்தையும் பதவியையும் தேடுவது; பேரையும் புகழையும் நாடுவது. இவற்றை நேரான முறையில் அடைவது முடியாத காரியம். எனவே, பித்தலாட்டம் செய்வதில்தான் அவற்றைச் சுலபமாக அடைய முடியும். ஆனால் அதைப் பித்தலாட்டம் என்று சொன்னால் அவ்வளவு நன்றாயிராதல்லவா? அதற்காகத் தான் அதை 'ராஜதந்திரம்' என்று சொல்வது; அந்த ராஜதந்திரத்தை நீரும் கடைப்பிடிக்கலாமே?""வந்தனம்; இந்த விஷயத்தில் உங்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்ள நான் தயாராயில்லை!"
"அப்படியானால் உம்முடைய பத்திரிகையை முழுக்க முழுக்க ஏழைகளின் ஆதரவைக் கொண்டே நடத்த முடியும் என்று நீர் நம்புகிறீரா?"
"ஆமாம்; அப்படி நம்புவதில் குற்றம் என்ன இருக்கிறது?"
"நன்றாய்ச் சொன்னீர்கள்; அப்படி நம்புவதிலா குற்றம் இல்லை? - நீர் சொல்லும் ஏழைகளுக்கு உண்ண உண வில்லை; உடுக்கக் கந்தையில்லை. இருக்க வீடில்லை; படுக்கப் பாயில்லை. இந்த நிலையில் இருந்து கொண்டு அவர்கள் உம்முடைய பத்திரிகையை எப்படி ஆதரிப்பதாம்? வேண்டுமானால் நீர் உம்முடைய காசைப் போட்டுப் பத்திரிகையை அச்சடித்து இனாமாக அவர்களுக்கு விநியோகம் செய்யலாம்; அப்படிச் செய்தாலும் ஏதாவது பலன் உண்டா என்றால் அதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குமேல் எழுதப் படிக்கத் தெரியாது; அப்படியே தெரிந்தாலும் உம்முடைய பத்திரிகையைப் படிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்காது. பேசாமல் நான் சொல்வதைக் கேளும்: உம்முடைய லட்சியத்தை ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு நடுத்தர வகுப்பினருக்காகப் பத்திரிகை நடத்தும். அதிலும் ஆண்களுக்காக நடத்தாதீர்; பெண்களுக்காக நடத்தும். மாதத்தில் மூன்று நாட்கள் வெளியே உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், அவர்கள் உம்முடைய பத்திரிகையை அவசியம் படிப்பார்கள், அவர்களுக்காக அவர்கள் வாழ்க்கையில் இல்லாத காதல் கதைகளை நிறையப் போடும். ஆயிரந்தடவை வந்தவையானாலும் பாதகமில்லை: ஆயிரத்தோராவது தடவையாக நீர் போடலாம். அவற்றைத் தவிர வேறு ஏதாவது வேடிக்கையாக எழுதும்; தமிழ் நாட்டு வாசகர்கள் இன்னும் 'குழந்தைப் பிராயத்திலிருப்பதால் வேடிக்கை காட்டினால்தான் படிப்பார்கள். முடியுமானால் பகுத்தறிவுப் போட்டி நடத்தும்; தரித்திரம் பிடுங்கித் தின்பதால் பேராசை வளர்ந்து வரும் தமிழ் நாட்டில் அதற்குப் பேராதரவு இருக்கும்; அடிக்கும் கொள்ளையைச் சட்ட ரீதியாகவும் அடிக்கலாம்; அதை மறைக்கப் பண்பாட்டைப் பற்றியும் பேசலாம். அதற்குப்பின் அரசியல் இருக்கவே இருக்கிறது; அதையும் ஒரு கை பாரும்; எடுத்ததற்கெல்லாம் ஆமாம் போட்டு எழுதும்; நடுநடுவே உம்முடைய சொந்தப் பெருமையைப் பற்றியும் கொஞ்சம் சங்கோசத்துடன் சொல்லிக் கொள்ளும். அப்படிச் சொல்லிக் கொள்ளும்போது தயவு செய்து என்னை மட்டும் மறந்து விடாதீர்!"
"எதைச் சொன்னாலும் நீங்கள் இப்படிக் குதர்க்கவாதம் செய்தால் நான் என்னதான் செய்வது? எனக்கோ தேசத்துக்கு எந்த விதத்திலாவது சேவை செய்ய வேண்டுமென்று இருக்கிறது; அத்துடன் வயிற்றுக் கவலையையும் ஓரளவு தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறது. இரண்டுக்கும் சேர்ந்தாற்போல் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பத்திரிகைத் தொழிலை விட்டால் வேறு ஒன்றுமில்லையே?"
"ஏன் இல்லை? இந்தக் காலத்தில்தான் எல்லாமே தேசத் தொண்டாகப் பரிணமித்திருக்கிறதே! ஆலை முதலாளிகள் தாங்கள் செய்வது தேசத் தொண்டு என்கின்றனர்; துடைப்பம் தூக்குவோர்கள் தாங்கள் செய்வது சமூகத் தொண்டு என்கின்றனர். அவர்களைப் பின்பற்றி லேவாதேவிக்காரன், ஹோட்டல்காரன், பல சரக்குக் கடைக்காரன் எல்லோருமே தாங்கள் செய்யும் தன்னலமற்ற சேவையைப் பற்றித் தாங்களே வானளாவப் புகழ்ந்து விளம்பரம் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்ததே, அதை நீர் பார்க்கவில்லையா? - முகுந்தலால் ராம்சேட் பீடிக்காரன் தன்னுடைய அறுபது வருட காலச் சேவையைப் பற்றி அதில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தானே! அப்படியெல்லாம் இருக்கும்போது நீர் பத்திரிகைத் தொழிலை விட்டால் தொண்டு செய்ய வேறு தொழில் கிடையாது என்கிறீரே? பேசாமல் நீரும் வேண்டுமானால் ஒரு பீடிக் கம்பெனியை ஆரம்பித்துத் தேசத்திற்குத் தொண்டு செய்யுமே, ஐயா!"
இதற்கு நான் என்ன சொல்வது? சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தேன்.
"சரி, உம்முடைய பத்திரிகை என்ன, வார வெளியீடா?"
"ஆமாம்."
"என்ன விலை?"
"இரண்டணா!"
"செலவைப் பற்றித் திட்டம் போட்டிருக்கிறீரா? ஓர் இதழுக்கு என்ன செலவாகும்?"
"குறைந்தபட்சம் ரூபாய் இரு நூறாவது செலவாகும் என்று நினைக்கிறேன். அது சரி, நீங்கள் ஏன் அதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?"
"ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்க்கத்தான்; உம்முடைய லட்சியத்தின்படிப் பத்திரிகை நடத்தினால் பத்தாயிரம் ரூபாயில் எத்தனை இதழ்கள் வெளியிட முடியும் என்று தெரிந்துகொள்ளத்தான்! - இப்பொழுது ஐம்பது இதழ்கள் வெளியிடலாம் என்று தெரிகிறது; எனவே ஒரு வருடத்துக்கு நான் தைரியமாகச் சந்தா கட்டலாம் - இல்லையா?""அதற்கு மேல் என்னால் பத்திரிகை நடத்த முடியாது என்கிறீர்கள் - அப்படித்தானே? எது எப்படியிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ஆத்ம திருப்தியாவது அடைய முடியுமல்லவா?"
"அதை உம்முடைய பணத்தைக் கொண்டுதானா அடைய வேண்டும்? என்னைப்போல் ஊரார் பணத்தைக் கொண்டு அடையக் கூடாதா? நான்தான் தேசபந்து நிதியிலிருந்து உமக்கு வேண்டியப் பணம் தருகிறேன் என்று சொல்கிறேன், ஏன் வேண்டாம் என்கிறீர்? இல்லையென் றால் சில பெரிய புள்ளிகள் செய்வது போல நீரும் ஒரு நாற்பதினாயிரம் காங்கிரஸ் அங்கத்தினர் ரசீதுகளையாவது திருட்டுத்தனமாக அச்சிட்டு விற்பனை செய்யுமே! - அப்படி ஏதாவது செய்து நீர் ஆத்ம திருப்தி அடைந்தால் உம்மை நம்பி வயிற்றைத் திருப்தி செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு உம்மால் எந்தவிதமான தொல்லையும் இராது. அதை விட்டு விட்டு வயதுக்கு வந்த ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் நீர், அவளுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு வீட்டையும் அடமானம் வைத்துவிட்டு ஆத்ம திருப்தி அடையப் போகிறேன் என்கிறீரே - இது தகுமா, முறையா, தருமந்தானா?" என்று வழக்கம்போல் அடுக்கிக்கொண்டே போனார் அவர். எனக்கும் அவர் கடைசியாகச் சொன்ன விஷயம் சரியென்றே பட்டது. அதன்படிச் சித்ராவின் கல்யாணத்தை முதலில் நடத்தி முடித்துவிட்டு, அதற்குப் பின் பத்திரிகைத் தொழிலில் இறங்குவதென்று தீர்மானித்தேன்; அதற்கு வேண்டிய முயற்சிகளையும் அன்றே எடுத்துக் கொண்டேன்.