கண் திறக்குமா/மானத்துக்கு மரியாதை

19. மானத்துக்கு மரியாதை

தற்குப் பின் ஏழாவது முறையாக நான் சிறையை விட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் மகாசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்பதில் பலமான போட்டி இருந்தது. அதுவரை தேசத்துக்காக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத ஜரிகைத் தலைப்பாகைக்காரர்கள் திருடர்களைப் போலப் புழக்கடை வழியாக வந்து காங்கிரஸில் சேர்ந்தார்கள். கட்சியின் கட்டுப்பாடும் ஒழுங்கும் நாளுக்கு நாள் குலைந்து வந்தன. கட்சிக்குள் கட்சியாகப் பல கட்சிகள் முளைத்தன. காந்தி மகாத்மா மனமுடைந்து காங்கிரஸிலிருந்து விலகினார். ஆயினும், வேண்டும்போதெல்லாம் அவருடைய சேவையைக் காங்கிரஸ் மகாசபை விரும்பிப் பெற்று வந்தது.

நானும் காங்கிரஸ்காரன் என்ற முறையில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினேன். என்னைப் போன்ற தொண்டர்களுக்கெல்லாம் அப்போதிருந்த ஆசை ஒன்றே ஒன்றுதான். அதாவது, காங்கிரஸ் பெருவாரியான வெற்றியடைய வேண்டும்; அந்த வெற்றியைக் கண்டு பிரிட்டிஷ் சர்க்கார் கிலியடைய வேண்டும் - இந்த ஆசையின் காரணமாக நாங்கள் இரவு பகல் என்று பாராமல் வேலை செய்து வந்தோம். எங்களுக்கு வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பண்டிதர் நேரு, தீரர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.

பாரிஸ்டர் பரந்தாமனோ எங்களைப் போன்ற தொண்டராயிருக்கவில்லை; சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் எப்படியோ அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவராகி விட்டார். அவரைப் பின் பற்றித் தஞ்சை குற்றாலலிங்கமும் தமிழ் நாட்டுத் தலைவர்களில் ஒருவராகிவிட்டார். இருவரும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் வடநாட்டுத் தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்துத் தங்கள் வீட்டில் விழுந்து விழுந்து விருந்துவைத்தார்கள். தாங்கள் இல்லையென்றால் தமிழ் நாட்டுக் காங்கிரஸே அஸ்தமித்து விடும் என்ற தவறான அபிப்பிராயத்துக்கு அவர்களை உள்ளாக்கினார்கள். அதன் காரணமாகத் தேர்தலில் இருவரும் அபேட்சகர்களாக நிற்பதற்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லாமல் போயிற்று. காங்கிரஸ் சார்பில் கழுதையை நிறுத்தி வைத்தாலும் வெற்றி பெறும் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் எதிர்பார்த்த வெற்றியும் அவர்களுக்கு ஏமாற்றமில்லாமல் கிடைத்தது.

அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? தங்களுடைய அந்தஸ்தின் காரணமாக இருவரும் மாகாண மந்திரிகளாயினர். அவர்களுடைய அந்தஸ்துக்கு முன்னால் என்னைப் போன்றவர்களின் சேவை, தியாகம், தேசபக்தியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன.

நானோ அந்தஸ்து என்பது அறிவையும் ஒழுக்கத்தையும், நாணயத்தையும் யோக்கியதையையுந்தான் குறிக்குமென்று அன்றுவரை எண்ணியிருந்தேன். அது பணம் ஒன்றைத்தான் குறிக்கும் என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.

ஆம், உலகத்தாருக்கு முன்னால் பணம் அறிவில்லாதவனை அறிவுள்ளவனாகக் காட்டுகிறது; ஒழுக்கமில்லாதவனை ஒழுக்கமுள்ளவனாகக் காட்டுகிறது; நாணயமில்லாதவனை நாணயமுள்ளவனாகக் காட்டுகிறது; யோக்கியதை இல்லாதவனை யோக்கியதையுள்ளவனாகக் காட்டுகிறது; இதன் காரணமாக அறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள், நாணயமும் யோக்கியதையும் மிக்கவர்கள் தங்கள் காலமெல்லாம் வருந்தி வருந்தி அணுவணுவாகச் சாக வேண்டியிருக்கிறது!

இத்தகைய வருத்தத்துக்கு நாளடைவில் நானும் ஆளானேன். ஆனால் என்னை அணுவணுவாகக்கொன்று விடக்கூடிய சக்தியை அந்த வருத்தத்துக்குச் சாந்தினி அளிக்கவில்லை - ஆம், மந்திரி குமாரியான பிறகும் அவள் அளிக்கவில்லை. அவளுடைய இனிய பேச்சும் இதயத்தை மலரவைக்கும் சிரிப்பும் என்னுடைய வருத்தத்தைப் போக்கி வாழ்க்கையில் ஒரளவு மகிழ்ச்சியும் எதிர்காலத்தில் ஒரளவு நம்பிக்கையும் கொள்ள வைத்தன. அதற்கேற்றாற்போல் திரு. பரந்தாமனார் கனம் பரந்தாமனாரான பிறகும் என்னைப் பொறுத்தவரை திரு. பரந்தாமனாராகவே இருந்தது வரவேற்கக் கூடியதாயிருந்தது.

ஆயினும், இப்பொழுதெல்லாம் அவரை வீட்டில் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. அவரை மட்டுமென்ன, அவருடைய இளையாளையும் பார்க்கமுடிவதில்லை. காரணம், தேசத் தொண்டு அவர்கள் இருவரையும் சேர்த்து இழுத்ததுதான்!

முக்கியமாக, நகரத்துப் பிரமுகர்கள் அடிக்கடி நடத்தும் தேநீர் விருந்துகளுக்கு அவர்கள் அவசியம் செல்ல வேண்டியிருந்தது - பார்க்கப்போனால் கனம் பரந்தாமனாரைப் போன்றவர்களுக்கு அதுதானே தேசத்தொண்டு? - அன்றும் அப்படித்தான் நடந்தது. வழக்கம் போல் பாரிஸ்டர் பரந்தாமனைக் காணாமல் ‘காந்தி பவன'த்தை விட்டு நான் வெளியேறினேன். அப்போது வாசலில் கார் வந்து நின்றது. ஆனால் பரந்தாமனார் அதிலிருந்து இறங்கவில்லை; சாந்தினிதான் இறங்கினாள்.

“எங்கே அப்பாவைக் காணோம்?" என்றேன் நான். "கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன்!" என்று ஓடோடியும் சென்று காலண்டரைப் பார்த்துவிட்டு வந்து, "இன்று ஹோட்டல் டிலக்ஸில் அவருக்குத் தேநீர் விருந்து!" என்றாள் அவள்.

"சரி, வந்தால் சொல், நான் வந்து போனதாக!" என்று திரும்பினேன்.

"அதற்குள் என்ன அவசரம்? உட்காருங்கள்; இதோ வந்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குச் சென்றவள், அடுத்த நிமிஷம் இரண்டு கைகளிலும் இரண்டு 'கப்' தேநீருடன் வந்து எனக்கு எதிரே உட்கார்ந்தாள்.

"இந்நேரத்தில் எனக்கு டீ எதற்காம்?" என்றேன் நான்.

"பரவாயில்லை, சாப்பிடுங்கள்! நம்மைக் கூப்பிட்டு யார் தேநீர் விருந்து நடத்தப்போகிறார்கள்? நமக்கு நாமே நடத்திக்கொண்டால்தான் உண்டு!" என்றாள், அவள்.

"நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டிய காரியமோ, அவர்களால் நமக்கு ஆகவேண்டிய காரியமோ ஒன்றுமில்லையல்லவா?" என்றேன் நான்.

இந்தச் சமயத்தில், "பிரயோசனமில்லை ; இத்தனை நாட்கள் சித்ராவிடம் சிட்சை பெற்று வந்தும் பிரயோசனமில்லை!" என்று கையை விரித்துக் கொண்டே பாரிஸ்டர் பரந்தாமன் உள்ளே நுழைந்தார்.

"நானும் கண்ணனா என்ன, சித்ராவின் சிட்சை என்னிடம் பலிப்பதற்கு?" என்றேன் நான்.

"நீரும் கண்ணனாகாமல் சாந்தினியும் சித்ராவாகாமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் இருக்கப்போகிறீர்கள்? பேசாமல் ஏதாவது ஒரு வேலையையாவது பாருமே, ஐயா!"

"என்ன வேலை பார்ப்பதாம்?"

"அப்படி வாரும் வழிக்கு: எனக்கு வேண்டுமானால் காரியதரிசியாக இருக்கிறீரா?”

“வேண்டாம். எனக்கும் சிரமமாயிருக்கும்; உங்களுக்கும் சிரமமாயிருக்கும்!”

“கல்யாணமான பிறகுதானே அந்தச் சிரமமெல்லாம்? அதுவரை காரியதரிசியாக இருந்தால் என்னவாம்?” “ அதற்காகச் சொல்லவில்லை; உங்களுடன் என்னால் ஒத்துழைக்க முடியாது என்பதற்காகச் சொல்கிறேன்!”

“சரி, அரசாங்கத்தில் வேறு ஏதாவது உத்தியோகம் பார்க்கிறீரா?”

“அதற்கும் நீங்கள் தானே ஏற்பாடு செய்யவேண்டி யிருக்கும்?” “ செய்கிறேன்; அதனாலென்ன?” “ பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்காகச் சலுகை காட்டுவது விரும்பத் தக்கதல்லவே?” “ உண்மைதான்; வெளியே தெரிவது விரும்பத் தக்கதல்லதான்!”

“அது சாத்தியமா?”

“ஏன் சாத்தியமில்லை? கீழே கதர் வேட்டி இருக்கிறது; மேலே கதர்ச் சட்டை இருக்கிறது; நாவில் காந்தி நாமம் இருக்கிறது; தலையில் காந்திக் குல்லாய் இருக்கவே இருக்கிறது - இவற்றை மீறி என்னுடைய அயோக்கியத் தனம் எப்படி வெளியே தெரிந்துவிட முடியும்?” “ வெளியே தெரியாவிட்டாலும் உங்களுடைய மனச்சாட்சிக்காவது தெரியாதா?”

“அப்படி ஒன்று என்னுள் இருப்பதையே நான் தான் எப்பொழுதோ மறந்துவிட்டேனே, ஐயா!” "மன்னிக்கவேண்டும்; நான் இன்னும் மறக்கவில்லை !"

"உமக்காக மறக்க வேண்டாம்; சாந்தினிக்காக மறந்துவிடுமே!"

"ஏன் சாந்தினி, உனக்காக அதை நான் மறந்துவிட வேண்டுமா?" என்றேன் நான்.

"அதற்குப் பதிலாக என்னை வேண்டுமானால் மறந்து விடுங்கள்!" என்றாள் அவள்.

“"நாசமாய்ப் போச்சு!" என்று நடையைக் கட்டினார் அவர்.



ன்னுடைய கல்யாண விஷயத்தில் இவ்வளவு தூரம் நான் பிடிவாதமாக இருந்ததற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் நாடு விடுதலை அடையும் வரை நான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று எனக்குத் தோன்றிற்று. இந்தியா என்னும் பெரிய குடும்பத்தின் பிரச்னையே இன்னும் தீராமலிருக்கும் போது இன்னொரு இரண்டிலும் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்றைத் தற்சமயம் கட்டிக் கொண்டு அழுதால் போதாதா?

இந்த நிலையில் நான் இருக்க, அந்தக் காலத்தில் இன்னொரு அதிசயமும் அங்கங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, கல்யாணமான சிலர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரம்மச்சாரிகளாக இருப்போம் என்று விரதம் பூண்டனர். இந்த விநோதமான விரதத்துக்கு ஆரம்பத்தில் காந்தி மகானின் ஆதரவும் ஓரளவு இருந்தது.

ஆனால் விரதம் பூண்டவர்களின் மனைவிமார் அதற்கு ஆதரவு காட்டவில்லை. காரணம், பெண்மைக்கு இயல்பான குழந்தை இன்பத்தை அவர்கள் விரும்பியதுதான். இந்தக் குற்றமற்ற விருப்பத்தை அறிந்த பிறகும் அவர்களுடைய கணவன்மார் தங்களுடைய விரதத்தைக் கைவிடவில்லை. ஆகவே, வேறு வழியின்றி அவர்களில் சிலர் மகாத்மாவின் மீது படையெடுத்தனர். என்ன செய்வார், காந்திஜி? உடனே அந்த அதிசயப் பிரகிருதிகளை வரவழைத்து, விரதத்தைக் கைவிடும்படி வேண்டிக் கொண்டார். அவர்களும் அதற்கு இசைந்தனர். கேலிக்கு இடமான இந்த விரத பங்கத்துக்கு ஆளாவதைக் காட்டிலும் விரதம் எடுத்துக் கொள்ளாமலிருப்பதே நல்லதல்லவா? அதைவிட விவாகம் செய்து கொள்ளாமலிருப்பதே நல்லதல்லவா?

அதிலும், என்னைப் போன்றவர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருந்தது. குடும்பத்துக்குத் தலைவனாயிருக்கும் ஒருவன் தேசத்துக்குத் தொண்டனாகவும் இருக்க வேண்டுமானால் அவனுக்குப் பணத்தைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கவேண்டும். அந்தக் கவலை தான் எனக்கு அப்போது அல்லும் பகலும் அனவரதமும் இருந்து கொண்டிருந்ததே. இந்த லட்சணத்தில் கல்யாணம் வேறு செய்து கொண்டு என்னத்தைச் செய்ய?

ஆனால் எனக்காக ஒரு பெண் எவ்வளவு நாட்கள் காத்துக்கொண்டிருக்க முடியும்? அவள் காத்துக்கொண்டிருந்தாலும் அந்தப் பிரசித்தி பெற்ற ‘நாலுபேர்' இருக்கிறார்களே, அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்களா? - இதுவும் ஒரு பிரச்னையாகத்தான் இருந்தது எனக்கு. எது எப்படியிருந்தாலும் முதலில் வரும்படிக்கு ஏதாவது வழி தேடிக் கொண்டால் தேவலை என்று தோன்றவே, அதைப் பற்றித் தீவிரமாக யோசித்தேன்.

சில தேசபக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் இருபத்துநான்கு மணி நேரமும் தேசத்துக்காகவே உழைக்கிறார்கள். அதிலும் உள்ளூரில் இருந்து கொண்டே உழைக்கிறாகளா என்றால் அதுவும் இல்லை; அடிக்கடி வெளியூர் செல்கிறார்கள் - எப்படி? கால் நடையாகவா? - இல்லை - ரயிலில் ஏறிக்கொண்டு ஓடுகிறார்கள்; ஆகாய விமானத்தில் ஏறிக்கொண்டு பறக்கிறார்கள்; காரில் ஏறிக்கொண்டு அலைகிறார்கள் - இத்தனைக்கும் அவர்களுடைய உடம்பு கொஞ்சமாவது இளைக்கிறதா? - கிடையாது; கிடையவே கிடையாது. அதற்குப் பதிலாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பருத்துக்கொண்டே வருகிறது; அவர்களுடைய குடும்பமும் எந்தவிதமான கவலையுமின்றித் தழைத்துக் கொண்டே வருகிறது; அதற்கு வேண்டிய செல்வமும் பெருகிக் கொண்டே வருகிறது - இது எப்படி? - வரும்படியில்லாமல் இப்படியும் ஒருவன் வாழ முடியுமா? இப்படியும் ஒருவன் தேசத் தொண்டனாயிருக்க முடியுமா? - இதுதான் எனக்குப் புரியாத புதிராயிருந்தது!

தலைவர்களைக் கண்டால் விழுந்தடித்துக் கொண்டு போய் மாலை போடுவதும், அவர்கள் ஏதாவது சொல்வதற்கு முன்பே கை தட்டுவதும் தவிர நமக்கு இந்த அரசியல் உலகத்தில் வேறு என்ன தெரிந்து தொலைகிறது?

ஆகவே, வரும்படி உள்ள தேச பக்தனாக வாழ எனக்கு வழி தெரியவில்லை. காங்கிரஸின் பேரால் தேர்தலில் வேண்டுமானால் போட்டியிடலாம்; அதன் பயனாக ஏதாவது ஓர் அங்கத்தினர் பதவியையாவது கைப்பற்றலாம்; அதைக் கொண்டு காலத்தை ஒருவாறு தள்ளலாம் என்று பார்த்தாலும் அங்கே என்னைப் போன்றவர்களை நெருங்கவே விடமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்!

சர்க்கார் உத்தியோகமோ எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. சுதந்திர சர்க்காரில் வேண்டுமானால் உத்தியோகம் பார்க்கலாம். அடிமை சர்க்காரில் உத்தியோகம் பார்க்கலாமா? அப்படிப் பார்ப்பதாயிருந்தால் நானும் பரந்தாமனாரைப்போல் கொஞ்ச காலம் வக்கீலாகவே இருந்து, போதுமான பணம் சேர்ந்த பிறகு அந்தத் தொழிலை விட்டிருக்கலாமே?

சரி, தனிப்பட்டவர்களுடைய கம்பெனிகளில் ஏதாவது வேலை பார்க்கலாமென்றால் அதற்கும் ஒரு தடை இருந்தது. காந்தியத்தின் அடிப்படையில் எந்தக் கம்பெனியாவது இயங்க முடியுமா? அப்படி இயங்கினால் அதனுடைய முதலாளி மகாத்மாவைப்போல் அரை நிர்வாணப் பக்கிரியாகத்தானே ஆக வேண்டியிருக்கும்? அத்தகைய வாழ்வை யார் விரும்புவார்கள்? விரும்பாதவர்களிடம் நான் எப்படி வேலை பார்ப்பது?

சொந்த வியாபாரம் ஏதாவது செய்யலாமென்றாலோ சத்தியத்திற்கும் அதற்கும் ரொம்ப ரொம்ப தூரம்; இல்லையா?

இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்த பிறகு, பிரைவேட் வாத்தியாராக இருந்து காலந் தள்ளுவதுதான் தேவலை என்று எனக்குத் தோன்றிற்று. அதற்குள் காங்கிரஸ் ஏதாவது போராட்டம் ஆரம்பித்தால் சர்க்கார் என்னை விருந்தாளியாக ஏற்று உபசரிப்பார்களல்லவா?

இந்த யோசனை பரந்தாமனாருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த விதமான வரும்படியும் இல்லாமலே அவர் என்னை ஆதரிக்கத் தயாராயிருந்தாரென்றாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. அதே சமயத்தில் வயிற்றுக் கவலையைத் தீர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி நண்பர்களை நாடுவதும் எனக்கு என்னவோபோல் இருந்தது. சாந்தினியைப்போல் எதிர்பாராமலே உதவி செய்ய வேறு யாராவது முன் வருவார்களா, என்ன?

அதற்கேற்றாற்போல் பாரிஸ்டர் பரந்தாமனை நண்பராகப் பெற்றிருந்த எனக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க நான்கு பெரிய மனிதர் வீடுகள் கிடைப்பதில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. எனவே, உற்சாகத்துடன் நான் அந்தத் தொழிலில் இறங்கிக் கவலையின்றிக் காலத்தைக் கழித்து வந்தேன்.

ஒரு நாள் செங்கமலத்தின் தாயார் தன் பேரனை அழைத்துக் கொண்டு என்னைத் தேடி வந்தாள். அவளை வரவேற்று, "என்ன விஷயம்?" என்று விசாரித்தேன்.

"இந்த மாதம் பிறந்தால் இவனுக்கு வயது ஐந்தாகிறது; ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் இவனைச் சேர்த்துவிட்டால் தேவலை!" என்றாள் அவள்.

"அதற்கென்ன, சேர்த்துவிட்டால் போச்சு!" என்று சொல்லிவிட்டு,"ஏண்டா, உன் பெயர் என்ன?" என்று நான் அவனைக் கேட்டேன்.

"சிவகுமார்!" என்றான் அவன்.

"அடி, சக்கை ! அம்மாவின் பெயர்?"

"செங்கமலம்!"

"எங்கே உன் மாமா?"

அதற்குள் அவன் பாட்டி குறுக்கிட்டு, "அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? அவன் தான் வீணாய் போய்விட்டானே!" என்றாள் வருத்தத்துடன்.

"ஏன், அவன் வீட்டுக்கு வருவதில்லையா?"

"எங்கே வருகிறான், வந்தாலும் எங்கே நிற்கிறான்? ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வருகிறான். ஏதோ முணுமுணுத்துக்கொண்டே போகிறான்!"

“போகட்டும்; வீட்டுக்கு ஒருவன் அவனைப் பின் பற்றிச் சாகட்டும்!”

“செத்தவர்கள் செத்தார்கள்; இவன் ஏன் சாக வேண்டுமாம்!”

“இருப்பவர்கள் மானத்தோடு வாழ்வதற்காக, ஈனர்களுக்கு முன்னால் அந்த மானத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக!”

அவ்வளவுதான்; “செலுத்திவிட்டேன், செல்வம் மானத்துக்கு நான் மரியாதை செலுத்திவிட்டேன்!” என்று கத்திக்கொண்டே, கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் உள்ளே நுழைந்தான் பாலு.

அந்தக் கோலத்தில் அவனைக் கண்டதும் ஆ! என்று அலறிவிட்டாள் செங்கமலத்தின் தாயார். அவளுடைய வாயை நான் சட்டென்று பொத்திவிட்டுத் திரும்பினேன். அதற்குள், ‘இனி நான் சட்டத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும்; இனி நான் சட்டத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும்’ என்று மறுபடியும் கத்திக் கொண்டே அவன் வெளியே போய்விட்டான்.