12  முன்னே தமிழ்...!


கற்றைக் குழலும் கருங்குவளைப் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும் காட்டிடினும்
அற்றைத் தமிழ்த்தாய் அருந்துயரம் நீக்காமல்
மற்றைக் கிசையேன் மனம்!

அள்ளுங் கொடியுடலும் ஆர்க்கும் எழில்மார்பும்
வள்ளைத் திருக்காதும், வாயழகும் காட்டிடினும்
கள்ளத் தயர்ந்த கனித்தமிழை மீட்காமல்
உள்ளத் திருத்தேன் உனை!

முத்து நகையும், முழுமை நிலாமுகமும்
தொத்திப் பிணைகையும் தோளெழிலும் காட்டிடினும்
பித்தர் சிதைக்கும் பெருந்தமிழைக் காக்காமல்
ஒத்துக் கொளாதென் உளம்!

நெற்றி வகிரும், நெடுங்கை விரலுகிரும்,
சுற்றிப் பிணையும் சுடர்க்காலும் காட்டிடினும்
முற்றி முதிர்ந்த முழுத்தமிழைப் பேணாமல்
பற்றிப் படரவிடேன் பார்!

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/015-089&oldid=1514532" இலிருந்து மீள்விக்கப்பட்டது