கனிச்சாறு 1/018-089
15 ‘கவிதை’ மேற் ‘கவிதை’
கவிதை ஒளிர்மின்னல் என்போம்! - உடன்
கிளர்த்துக் கிளைத்து மிளிர்ந்திட லால்! - நல்ல
கவிதை வீழ் அருவி என்போம்! - உளங்
கல்வி உடல் எங்கும் குளிர்செய்தலால்! - இன்பக்
கவிதை ஒரு குழந்தை என்போம்; - நாம்
கூவச் சுணங்கிக் கூவா தருகலால்! - ஒளிக்
கவிதை புது நங்கை என்போம்; - நாம்
கூடென ஊடி, உடன் கூடலால்!
கவிதை யிளந் தென்றல் என்போம்; - செவி
குளிர்ந்திடுஞ் சொல்லால் உளந் தோயலால்! - நல்ல
கவிதை பெரும் புயலா மென்போம்; - தீமை
கொன்றுள மெங்கும் மாற்றஞ் செய்தலால்! - இன்பக்
கவிதை மூண்டெரி தீ என்போம்; - உளங்
காய்த்துரு மாற்றி உயிர் கவ்வலால் - ஒளிக்
கவிதை நறுந் தாய்மை என்போம்; - தனைக்
கற்றார் தமைப்பேணிப் புகழ் காத்தலால்!
-1960 (?)