34  கோடரிக் காம்புகள் !

ஆங்கிலத்தை யார்வெறுப்பார்?
அருந்தமிழை யார்தவிர்ப்பார்?
அரசியலால் பதவிநலம் அடைதல் வேண்டித்
தீங்குளத்தைப் பாய்ச்சுகின்றார்;
தீமைசெய்யத் தூண்டுகின்றார்;
திரிபுணர்வை மாணவர்பால் எழுப்ப லானார்!
தேங்குகின்ற அறிவியல்நூல்
தெளிவதற்கும் உலகமெலாம்
உலாவரற்கும் ஆங்கிலமே தேவை என்றால்
ஓங்குயர்ந்த மனநலத்தை
மாண்பொழுங்கை மெய்யறிவை
உணர்வதற்கோ செந்தமிழை ஓதல் வேண்டும்!

கயிற்றினையே பாம்பென்றும்
பாம்பினையே கயிறென்றும்
கருதல்போல் மாணவர்கள் கலக்க முற்று,
வயிற்றுமொழி பெரிதென்றும்
வாய்மொழி பெரிதென்றும்
வாய்மொழியாஞ் செந்தமிழைத்
தீதென்றும் மயலுணர்வால் வம்பு ரைப்பார்!
பயிற்றுமொழி தமிழேதான்
என்றிங்கே பகர்ந்தவர்யார்?
ஆங்கிலத்தைப் பழித்தவர்யார்? பதற்ற முற்றே
குயிற்றிறத்துத் தீந்தமிழைக்
குலைத்திடவும் எழுந்துவிட்டீர்?
கோடரிக்காம் பன்ன;குலம் கெடுக்க வந்தீர்?

அருந்தமிழில் கற்பதுவும் ஆங்கிலத்தில் கற்பதுவும்
அவர்விருப்பம்; இல்லையென மறுத்தார் யாரே?
பெருந்தொகையாய் மதிப்பீட்டெண்
பெறாதவர்க்கே ஆங்கிலத்தில்
பயிற்றுவித்தால் பெரும்பயன்தான் கிடைப்ப துண்டோ?
அருந்துகிலாப் பிள்ளையுடன் சாப்பாட்டு இராமனுக்கே
விருந்தளித்தால் ஆர்க்குநலன்? ஆய்ந்து சொல்வீர்!
பொருந்துகின்ற செந்தமிழில் அறிவியலைப் புகட்டுவதில்
புதுமையென்ன? விரும்பிலர்ஏன் புகைதல் வேண்டும்?

வழிவழியாய்க் கற்றமொழி ஆகையினால் பார்ப்பனர்க்கே
ஆங்கிலத்தில் வல்லாண்மை மிக்க வுண்டு.
மொழிவழியாய் அறிவியலைக் கற்பதெனில் தாய்மொழிக்கே
முதற்சலுகை தரல்வேண்டும் என்ற கொள்கை
வழிவழியே செங்குருதி கொப்புளிக்க வைத்ததெனில்
வீணுரைசெய் தமிழர்க்கிது விளங்க வேண்டும்!
இழிவழிய எந்தமிழர் தம் வாழ்வை முன்னேற்றற்
கிதுதவிர வழியுண்டோ? இயம்பு வீரே!

-1970


"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/037-089&oldid=1514524" இலிருந்து மீள்விக்கப்பட்டது