கனிச்சாறு 1/043-089
40 தமிழ் நலத்தைத் தவிர்ப்பாரைத் தவிர்த்திடுக!
விழித்திருத்தம் இல்லாதான் மின்மினியை விண்மீனாய்
வியப்புறவே உரைப்ப தைப்போல் -
வழித்திருத்தம் காணாதான் தானறியா ஊருக்கு
வழிகாட்ட வந்த தைப்போல்,
மொழித்திருத்தம் இல்லாத எழுத்தாளர் எதைத்திருத்த
முன்வந்திங் கெழுத லுற்றார்?
பழித்தொதுக்கி வாருங்கள் அவரெழுத்தை அவர்நலத்தை;
பயனுண்டாம் சிறிது நாளில்!
தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான்;
தன்னலத்தைப் பேண வந்தான்!
தமிழினத்தைப் பேணாதான் பிறவினத்தைத் தான்எங்ஙன்
பேணவுளங் கொள்ள வல்லான்?
கமிழ்மலரைப் பேணாத முக்கறையன் கனிநலத்தைக்
காணவுளங் கருது வானோ?
தமிழ்நலத்தைப் பேணாத எழுத்தாளர் தம்மெழுத்தைத்
தம்நலத்தைத் - தவிர்த்தல் நன்றே!
-1974