50  தவிராமல் தமிழ்நலம் காக்க!

தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல்
தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள்
இனியேனும் தமிழ்நிலத்தில்
எழுந்திடுக! பொதுத்தொண்டில்
இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!
பனியேனும் குளிரேனும் மழையேனும் வெயிலேனும்
பாராமல் தெருத்தெருவாய் ஊரூராகத்
தனியேனும் இணைந்தேனும் தந்தம்மால் முடிந்தவரை
தமிழினத்திற் குளமுவந்தே உழைத்தல் செய்க!

புலையறைவாய் விளம்பரத்தால்
பொதுத்தொண்டர் போல்நடித்துப்
பொருள்தொகுக்கும் புல்லியரும் மலிந்துபோனார்!
தலைமறைவாய்த் தமிழ்நலத்தைப்
பகைவரிடம் விலைபோக்கும்
தன்நலத்தார் தமிழ்நாட்டில் தலைமையேற்றார்!
இலைமறைவாய்க் காய்மறைவாய்
உண்மைத்தொண் டாற்றுவரும்
இந்நிலத்தில் இல்லாமல் இல்லை; இந்தத்
தலைமுறையில் அவரெழுந்து தவிராமல் சலியாமல்
தமிழ்நலத்தைக் காத்தால்தான் தப்புவோமே!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/053-089&oldid=1514542" இலிருந்து மீள்விக்கப்பட்டது