53  செந்தமிழைத் தீய்க்கும் சீர்திருத்தம்!

கொச்சைத் தமிழும் கொடுந்தமிழும் கூறவெண்ணாப்
பச்சைத் தமிழும் பயின்று நிதம் - நச்சுறுத்திச்
செந்தமிழைத் தீய்க்கும் சிறுமையரே சீர்திருத்தம்
எந் தமிழ்க்குச் செய்யவந்தார் இங்கு!

சொற்பிழையால் வேற்றுமொழிச்
சொற்கலப்பால் இன்தமிழைக்
கற்பழிக்கும் தீய கயவோரே - பொற்புடைய
செந்தமிழை இங்குத் திருத்தவந்தார் தாமதற்குச்
சொந்தமென்று கொண்டாடிச் சூழ்ந்து!

எழுத்தால் உரையால் இலக்கணத்தை என்றும்
கழுத்தை முரிக்கின்ற காரறிவார் இங்கே
எழுத்துத் திருத்தம் இயற்றுகின்றார் நண்டு
கொழுத்துத் திரிவதுபோல் கொண்டு!

கலப்புமொழி யால்,எம் கனித்தமிழை நாளும்
உலப்புகின்ற தீய உலுத்தர் - வலுப்பெறவும்
செய்யாத் திருத்தமெல்லாம்
செய்வார், நாய் [1]சான்றவை, [2]வாய்
வையாப் புகுந்ததுபோல் வந்து.

-1978

  1. 1. சான்றவை - சான்றோர் அவை.
  2. 2. வாய் வையாப் புகுந்தது - வாய் வைக்கப் புகுந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/056-089&oldid=1514545" இலிருந்து மீள்விக்கப்பட்டது