61  இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க
புலவர்க்கு வேல்!


வேலை யற்றவன் ஆட்டு வாலை
அளந்து பார்க்கிறான்! - ஒரு
வினையு மற்றவன் குப்பைச் சருகைக்
கிளறிச் சேர்க்கிறான்!
நூலை விற்றவன் பதரை வாங்கி
நோம்பிச் சலிக்கிறான்! - ஒரு
நொள்ளை மாந்தன் அவனுக் குதவி
நொடித்துக் களிக்கிறான்!

உழக்கு மெய்யும் பதக்குப் பொய்யும்
ஒன்றாய் அளக்கிறான்! - ஓர்
உண்மை தெரிந்து புன்மை சொரிந்து
உருவம் வளர்க்கிறான்!
சழக்கு வினையைத் தேடித் தேடிச்
சல்லரி கொட்டுகிறான்! - ஒரு
சாவை வேண்டிச் சவத்தை எரிக்கச்
சாணி தட்டுகிறான்!

எச்சில் துப்பியே நெருப்பை அணைக்க
இருமிக் களைக்கிறான்! - ஓர்
ஏரி நீரைத் துடைப்பக் குச்சியால்
கலக்கிச் சளைக்கிறான்!
முச்சில் எடுத்தே ஆற்று மணலைச்
சலித்துப் புடைக்கிறான்! - சில
மொழுக்கைக் கல்லை எடுத்துக் காட்டி
மதகை அடைக்கிறான்!

கட்டிக் குளித்த சீலைத் துணியைக்
கசக்கிப் பிழிகிறான்! - கைக்
கட்கத் துள்ள அழுக்கை எடுத்து
முகர்ந்து சுழிகிறான்!
வட்டிக் கணக்கில் முட்டைச் சாம்பல்
பொதியை அவிழ்க்கிறான்! முன்
வாந்தி யெடுத்த கலயந் தூக்கி
வழியில் கவிழ்க்கிறான்!

நாட்டுக் குள்ளே இவனைப் போல
நல்லவர் உளரோ? - தமிழ்
நயத்தைப் படித்த இவனின் உள்ளம்
கயமையின் களரோ?
பாட்டுப் புலவன் வாய்மை உணரும்
பண்பும் அற்றவனோ? - நறும்
பசுமைத் தமிழை இழிவில் தோய்க்கும்
பழியைக் கற்றவனோ?

-1984

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/064-089&oldid=1514553" இலிருந்து மீள்விக்கப்பட்டது