63  முகிலே, நேருவுக்குச் செய்திசொல்!

வீங்கலைத் தென்கடல் எழுந்து
வீசிளந் தென்றலில் ஊர்ந்தே
ஓங்குயர் வேங்கடந் தாண்டி
உயர்பனி மலைத்திசை நோக்கிப்
போங்கரு முகில்காள்! தில்லி
போகுதின் நேருவின் காதில்
தாங்கரும் வகையெனத் திரண்டோர்
தமிழ்ப்படை வருகுதென் றுரைப்பீர்!

சந்தனப் பொதிகையில் தூங்கிச்
சலியாத் தமிழிசை முழங்கி
விந்தியங் கடந்தர சாளும்
வடநா டேகிடும் முகில்காள்!
இந்தியை எதிர்த்திடத் தமிழ்த்தாய்
இடர்களை மாய்த்திட எழுந்தோர்
செந்தமிழ்ப் படைவரும் என்றே
செப்புக, செப்புக! மறவீர்!

பனித்துளி சிதறிட ஊர்ந்தே
பனிமலைக் கேகிடு முகில்காள்!
இனித்தமிழ் நாட்டினர் இழிவை
இம்மியும் பொறுத்திட மாட்டார்!
தனித்தமிழ் நாட்டினை வாங்கத்
தலைவாங் கினும்பின் வாங்கார்;
முனித்தெழுந் தனர்; அதை அடக்கல்
முடிவது மிலையென உரைப்பீர்!

-1959

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/067-089&oldid=1515055" இலிருந்து மீள்விக்கப்பட்டது