74  சிறையகம் புக்க காதை !

“அறைந்திரை வீழ்த்திய அரிமா ஏற்றின்
பிறழாப் பெருநடை பீடுறப் பயின்று,
மதிமுகம் உவப்ப மலர்விழி ஒளிர,
எதிர்வரும் ஒள்ளியோய் இரு”மென இருத்தி,
'அலைகோற் கொடியரும், அழல்மடுத் தாரும்,
கொலைகொள் நினைவின் நெஞ்சழிந் தாரும்,
இரந்துண் வாழ்க்கை இழிவெனக் கொண்டு
கரந்தூண் அயிலுங் கவடறிந் தாரும்,
கனிவிலா நெஞ்சின் கங்குற் கள்வரும்
முனிவுறு போக்கின் முறை பிறழ்ந் தாரும், 10
அடுநறாக் காய்ச்சி அகப்பட் டாரும்,
விடுதல் இலாதது விழைந்துண் டாரும்,
மலிவுறு கவடரும், மங்கையர் மானம்
வலிவுறப் பற்றி வாங்கி யோரும்
கறையகம் போகக் காவற் படூஉம்
சிறையகம் புக்கினிர் செய்ததும் என்'னெனக்
கேட்பீ ராயின் கிளத்துதற் கேண்மோ;

நாட்பட நாட்பட நல்லவை நாடும்
சால்புடை நெஞ்சின் சான்றோர் தாமும்
நூல்பயில் அறத்தின் தோற்றோர் தாமும் 20
கடைபெறக் கிடக்கும் கயவர் ஆணையின்
அடைபெறக் கிடப்பினும் அதுவியப் பன்றே!

மூடரும் முரடரும் முனைந்தர சாளும்
நாடுநா டின்றி நலிந்த பின்றை
புரையிலார் தமக்குப் புக்கிலும் உண்டோ?
வரைவிலா தோங்கின் வன்மையும் புன்மையும்!
சிறையகத் திருப்போர் சீரகத் துள்ளார்!
இறையகத் திருப்போர் எஃககத் துள்ளார்!


காலச் சுழலினும் கயமை வாழ்வினும்
சாலப் புரைவோர் சால்புடைப் பெரியோர்! 30
புல்லுரை பகர்வோர் புலமைச் செவ்வியர்!
நல்லுரை சொல்வோர் நாயினுங் கீழோர்!

பொய்யாம் வினைகளை மெய்யே என்பர்;
செய்யாப் பணிக்குச் சீர்சிறப் பென்பார்!
கேடுகள் புரிவோர் கேண்மைக் குரியோர்;
பீடுறச் செய்வோர் பிடிபடத் தக்கவர்!
பூரியர் சிறையுட் புகுதலோ அக்கால்!
சீரியர் இக்கால் சிறைவாழ் குநரே!

இந்நாள் உண்மை இயம்பலே குற்றம்!
மண்ணாள் அரசின் மந்திரக் கூற்றிது! 40
வாய்மொழிக் குரிமை வழங்கினோம் என்பார்;
தாய்மொழி பேணுதல் தவறெனக் கடிவார்
நாட்டுப் பற்று நாட்டுக என்பார்;
நாட்டுப் பற்றால் நல்லவை நவின்றால்,
கேட்டுக் கொள்ளார்; கேடவை என்றே
வேட்டுக் குழற்கே விருந்துநீ என்பார்!
அறமெனக் கூறின் அதன்வரு மானத்
திறமென் னென்று சாற்றக் கேட்பார்.
பொருளெனப் புகல்வது பொன்னே என்பார்;
மருள் தவிர் இன்பம் மனையோள் செய்யும்
நெய்யொழு கடிசில் முப்புடை முங்கி
மெய்பெறக் கிடந்து துயில்வதே என்பார்!
வீடென விளம்பின் விசும்பு தடவிய
மாடருங் கட்டிட மலையே என்பார்!

இறைப்பற் றென்பதோ எருவெண் ணீற்றை
உறைப்பப் பூசி உருள்மணி மாலை
பொன்னில் தோய்த்துப் பூண்ட மேனியாப்
பின்னிய காலொடு பிரான்பிரான் என்றலும்,
பொய்முதல் வைத்துப் புனைசுருட் டூதியப்
பைமுதல் கொண்டு பன்னூ றாயிரங் 60
கோவிலில் விழுந்து கும்பிட் டெழுந்தே
ஆவின் பால்நெய் அடிசில் உண்ணலும்,
மிச்சிலை இரவோர் மிசைந்திடத் தரலும்
பச்சிலை நீறு பெறலுமே என்பார்!

மெய்ப்பொருள் தேரார்; மேனி வளர்ப்பதும்
பொய்ப்பொருள் நாட்டமும் போலிப் புகழ்ச்சியும்

அன்னவர் நோக்கம்; அந்நோக் கிற்கே
பன்னருந் தடைகளைப் பண்ணுவோர் தீயரே!

அரசியல் என்பதோ ஆயிரம் பொய்களை
உரைத்துப் பெற்ற ஒப்போ லைகளால் 70
ஆளுநர் மன்றப் பதவி அடைவதும்,
நாளோர் ஊராய் நடைக்கொரு கூட்டமாய்ச்
சென்று மக்களின் சிறுமைக் கிரங்கலாய்
நன்றே புளுகலும், நம்பச் செய்தலும்,
இலக்கக் கணக்கில் பொருள்பல ஈட்டலும்,
துலக்கமில் கருத்துப் பற்பல கூறலும்
என்பதே நம்மவர் இன்றைய கருத்து!
தின்பதும் உறங்கலும் தவிரவே றறியார்!

இத்தகை வாழ்வுக் கெவர்தடை செய்யினும்
அத்தகை யோரைச் சிறையில் அடைப்பதும் 80
துயர்பல கொடுப்பதும் தூக்கில் இடுவதும்
உயர்நிலை பெற்றவர் ஒருபெருங் கொள்கை!

மக்களுக் குண்மை சாற்றிட மறுப்பார்!
ஒக்கவர் நலத்திற் குழைப்பதா நடிப்பார்!
பொல்லார் எனினும் பொருள் பல இறைத்து
நல்லார் போல நடிப்பரே மேலோர்!
அன்னவர் நடிப்பிற் கொத்ததா ஆடுவர்
இன்னார் எனினும், இனியவர் அவர்க்கே!

ஊர்திகள் பெறலாம்; பொருள் மேல் உறங்கலாம்;
பார்புகழ் தரும்படி பலபடச் செய்தித் 90
தாள்களில் எழுதிடச் செய்து தருக்கலாம்!
சால்புறக் கல்லால் படிவம் சமைக்கலாம்!

ஓராயிர மெனில் ஊராள் மன்றம்;
ஈராயிர மெனில் நகராள் மன்றம்;
சற்றே கூடினால் சட்ட மன்றம்;
பத்தா யிரமெனில் பாராள் மன்றம்;
ஐம்பதா யிரமெனில் அமைச்சரின் பதவி;
நைந்த அரசியல் நாடகம் இதுவே!

உய்யுமா நாடு? பொதுமை ஓங்குமா?
மெய்பிழைத் திடுமா? மேன்மை பெறுவமா? 100
காய்களை உருட்டுங் கவறாட் டம்போல்
ஏய்த்துப் பிழைப்பதே அரசியல் என்னின்
மக்களின் விலங்கே மாண்பு பெற்றதாம்!
ஒக்கநா கரிகம் உயரச் சிறந்ததாம்!

இப்படிக் கேட்டால் - எழுதினால் பிழையெனில்
எப்படி இதனை மக்கட் குரைப்பது?
செப்படிக் கூத்தரின் தில்லு மல்லுகள்,
முப்படிப் பொய்கள் முரண்படு பேச்சுகள்
யாவும் பொறுத்திட மக்கள் யாவரும்
மாவும் புட்களும் என்றா மதித்தனர்? 110
உணர்வுடை நெஞ்சம் ஒன்றுபோ தாதா?
இனநலங் கருதுவார் இறந்தா போயினர்?
மக்கள் அரசெனில் கருத்தை மறைக்குமா?
சிக்கல் தெளிவுறச் செப்பலும் பிழையோ?
ஒப்பிலாக் கருத்தை ஒருவன் உரைத்தால்
தப்பெனக் காட்டுதல் அன்றோ தக்கது?
ஏற்ற கருத்தெனில் மக்களேற் கட்டும்!
மாற்றம் கண்டிடில் மறுத்துரை தரட்டும்!

கருத்தடை செய்யுங் கணக்கீட் டாளர்
கருத்தையுந் தடைசெயக் கருதுதல் தக்கதோ? 120
துலக்கிடுங் கருத்தினால் மக்களைத் தூண்டினால்
விலக்குவார் அதனை விளக்கி காட்டி
எழுந்தோர் தமக்கே இணக்கம் கூறி
அழுந்த அமர்த்திடல் அன்றோ நல்லறம்!
இத்திற மற்றார் எடுபிடி என்றே
கத்தியைத் தூக்கித் கழுத்தைத் துணிப்பதால்
மக்கள் உணர்வை மாய்க்க வியலுமா?
தக்கன என்றும் தழைப்பதே இயற்கை!

இந்திய நாட்டை இணைத்திட வேண்டி
இந்தியைத் திணித்தல் அறமிலை என்று 130
கூறுதல் பிழையோ? கூற்றினை அடக்கிடச்
சீறுதல் மட்டும் செய்தகு செயலோ?

பன்மொழி வழங்கும் பாரத நாடு
நன்மொழி நவின்று நல்லன செய்யும்
உயர்ந்தோர் என்பரால் ஒற்றுமை பெறாமல்,
நயமிலாச் சிறுமொழி ஒன்றினால் மட்டும்
ஒற்றுமை பெறுமெனில் உயர்ந்தோர்க் கிழிவே!
பெற்ற உரிமை இந்தியால் பிறந்ததா?
இந்தியால் ஒற்றுமை இயலும் என்றால்
இந்தியை மறுப்பவர் இருந்திடு வாரா?
140
இப்படிக் கேட்பதே எங்ஙன் பிழைபடும்?
ஒப்பிலாக் கருத்தை உணர்த்துதல் எப்படி?

அரசியல் செய்வார் அனைவரும் ஒப்பும்
முரணிலாக் கருத்தை முழுதும் ஆய்ந்து
நாடுதல் அன்றோ நல்லறம்! அதனால்
கேடுறும் ஆங்கொரு கூட்டம் என்னில்
மற்றவர் கருத்தை மாற்றி வேறோர்
உற்ற செயலுக் குழைத்தலே முறைமை!
எக்கருத் தினையும் எதிர்ப்பவர் உளரெனில்
தக்க படிக்கவர் தரும்புது மறுப்பை 150
ஒக்க ஆய்தல் அன்றோ உயர்வு!
செக்கு மாடுபோல் சிறந்ததா ஒன்றையே
அழுத்திப் பிடிப்பதால் அதன்வலி மிகுமா?
விழுப்ப மிலாதவர் வினையது வாகலாம்!

இந்தியால் தமிழ் கெடும் என்றுரை செய்தால்
எந்த வகைகெடும்? எவரதைச் சொன்னார்?
சொன்னவர் மொழித்திறம் கல்விச் சிறப்போ
டன்னவர் கொண்ட அரசியல் அறிவு,
நாட்டுப் பற்றென நால்வகை யாகக்
கேட்டறிந் ததன் பின் கிளத்திய உரைக்கு 160
மாற்றுரை அன்னவர் மனங்கொள உரைத்தே
ஆற்றுதல் அன்றோ அரசியல் திறமை!

இவ்வகை இன்றி “ஆஆ ஊஊ
எவ்வகை அவரென் கருத்தை எதிர்க்கலாம்?
ஆச்சா போச்சா? ஆரவர் தண்டலர்?
ஓச்சுக சட்டம்; உமததி கார”மென்
றார்ப்புரை செய்தே, அரைகுறை ஆய்ந்து,

தீர்ப்பு வழங்கித் திடுமெனக் கடுஞ்சிறை
தள்ளி அடைத்துத் தொடையைத் தட்டலால்
உள்ள கருத்ததன் உயர்வை இழக்குமா? 170
இல்லை அதுதான் இன்றொடு சாகுமா?
தொல்லை தருதலால் நெஞ்சுரம் தொலையுமா?
அரசநாற் காலியில் அமர்ந்துளார் முன்னர்
முரசறைந் திதனை முழக்குவேன் கேளீர்!

தமிழக நிலத்தில் இந்தியைத் தூவுதல்
உமிவிதைத் துழைப்பதை ஒத்திடும் என் பேன்!

அரங்கிலா நும்மின் அரசியல் நாடகம்
குரங்கு கை மாலையாக் குலைவதோ உண்மை!

ஒற்றுமை ஒற்றுமை என்றே உழைத்துக்
குற்றுமி ஊதிக் கொதியுலை யேற்றி 180
வெற்றிலை விரித்து விருந்திடல் போல
உற்ற உணர்வையும் ஒழித்திடல் உண்மை!


நெடும்பயன் கருதா நெறியிலா தீரே!
கடுஞ்சிறை யிடினும் கழுத்தைச் சீவினும்
உற்ற கருத்தின் உண்மை மாறுமா?
பெற்ற தாய்மேல், பெருந்தமிழ் மொழிமேல்
ஆணையிட் டிதனை அறைகுவேன் கேளீர்!
கோணை மொழியினார் கொள்கைகள் நில்லா!

மொழியெனப் படுவது உணர்வினால் முளைப்பது!
மொழியெனப் படுவது மாந்தரின் முனைப்பு! 190
மொழியெனப் படுவது கல்விக் கடிப்படை!
மொழியெனப் படுவது பண்பொளிர் விளக்கம்!
மொழியெனப் படுவது உள்ளுயிர் முழக்கம்!
மொழியெனப் படுவது இனநல முயக்கம்!


அத்தகு சிறந்த ஆயிர மொழிகளுள்
செத்தறி யாத சீரிள மைத்திறம்,
இலக்கணச் சீர்மை, இலக்கியக் கொழுவளம்,
துலக்கரு மெய்ம்மை, துள்ளும் எழில்நலம்,
உரைப்பதற் கினிமை, உள்ளுணர் வுக்கொளி,

வரையறு சொற்கள், வான்சீர்ப் பெரும்புகழ் 200
முற்றுங் கொண்டது முத்தமிழ் மொழியே!

கற்றிடக் கற்றிட உளங்கனி விப்பதும்,
மெய்ம்மை கொளுத்தி மேலுக் குய்ப்பதும்,
செய்வினைத் தூய்மை, சீர்மை, ஒழுக்கம்,
உயிர்களுக் கூட்டி உறுதுணை நிற்பதும்,
மயர்வறு வாழ்வை மாந்தர்க் களிப்பதும்,
செந்தமிழ் செய்பயன்!

பிறமொழி தாமும்
எந்தமிழ் மொழிபோல் இயற்கையே எனினும்,
பூத்துக் காய்த்துப் புடைநலங் கனிந்த
மாத்தமிழ் மொழிபோல் மனவொளி கொளுத்தும்
ஆற்றலும் முதுமையும் அற்றன வென்பேன்;
மாற்றுரை கூறின் மறுப்புரை தருவேன்.

ஒலித்திறம் வரித்திறம் ஒத்த பொருட்டிறம்
வலித்திறம் மெலித்திறம் வாய்ந்த மொழித்திறம்
மொழிபயில் இலக்கியம் முகிழ்த்த இலக்கணம்
ஒழுகுமெய் யுணர்வின் ஊற்றொடு பல்திறம்
ஆயிவை தமிழில் ஆழ்ந்து கிடப்பதை
ஏய முறையினால் இயம்பு நூல் அறிமின்!
இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன
முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்! 220
வாயுரை யன்று; வாய்மை உரையிது!
தாய்மொழி வெறியால் தருக்குரை அன்று!
தகைநலம் இன்றித் தாயெனும் உரிமையால்
மிகைநலங் கூறலை மேன்மையர் செய்யார்!

அத்தகு அடிப்படை ஆர்வ முதிர்ச்சியால்
முத்தமிழ் மொழியின் முதுநலம் முழக்கியும்
எந்தமிழ் நாட்டில் இந்தி நுழைவதை
வெந்த உளத்தொடும் உரையொடும் விலக்கிட
எண்ணரும் வகையால் எடுத்து விளக்கியும்
பண்ணலங் கூட்டிப் பாட்டிலும் எழுத்திலும் 230
எழுதிக் காட்டினேன்! எந்தமிழ்த் தோழரீர்
பழுதென அவ்வுரை அவர்க்குப் பட்டதால்

உள்ளமும் உடலும் ஊறுற் றனவெனக்
கள்ளமில் என்னைக் கடுஞ்சிறை தள்ளினர்!

என்னைக் கடுஞ்சிறை இட்டதால் என்னுளம்
முன்னினும் மூளுமோ? முங்கி யொழியுமோ?

சீர்த்துப் பாய்ந்திடும் சிறுத்தையின் கூருகிர்
ஆர்த்த நெடும்புல் அசைவில் வழுக்குமோ?

மதர்த்தெரு களிற்றின் மலையுடல் தூண்கால்
பதர்க்குவை கண்டு பதுங்கி யொடுங்குமோ? 240

பொங்கு பேரலைப் போக்கினை வீழ்சிறு
தெங்கின் குரும்பை தேக்கி நிறுத்துமோ?

தீக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமைலைப்
பாக்குழம் பினையொரு பழம்பாய் தடுக்குமோ?

எழுந்த வல்லரி ஏற்றின் உறுமலைப்
பழம்பறை கொட்டொலி பரக்கச் சிதர்க்குமோ?

உணர்வில் உயிரில் உடலின் நரம்பினில்
புணர்ந்த செந்தமிழ் பூண்ட கூத்தினை
அரசக் கோலெடுத் தாடும் குரங்கதன்
உரசக் கால்நடம் ஊன்றி நிறுத்துமோ?' 250

என்றுரை முழக்கி எழுந்து செந்தமிழ்
வென்றர சாளும் நாளும் விரைந்ததே!

ஆகலின் அன்பரீர் அந்நாள் நோக்கி
ஏகுக நம்முயிர்! ஏகுக நம்முடல்;
அந்நாள் சிறைக்கத வகலத் திறக்கும்;
அந்நாள் தமிழ்வித் தூன்றுக” என்றேன்!
சிறையகப் பட்டோர் சிறுமை மறந்தே
கரையகப் பட்ட கலம்போல் மகிழ்ந்து
வாழ்த்தினார் என்றன் வரவை
காழ்த்தது மேலுமென் கவினுறு நெஞ்சே! 260

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/078-089&oldid=1515068" இலிருந்து மீள்விக்கப்பட்டது