75  மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்!

“இராதெம்! நிலத்தில் இந்திப் படிப்பு” - என
மொரார்சி தேசாய் செவிப்பறை அறுபட
முதல மைச்சர் முழங்கிட வேண்டும்;
உதவாப் பேச்சும் உளறலும் வேண்டா!

பள்ளிப் பிள்ளைகள் இந்தி படிப்பதைக்
கள்ளிப் பாலைக் குடிப்பதாய்க் கருதுக!

பேராயக் கட்சிப் பெருந்தலை வர்கள்
ஊரா யத்தில் உலாவர விரும்பின்
வடவர்க்கும் இந்திக்கும் வால்பிடித் துயிர்ப்பதை
விடவும்; அல்லது தம்முயிர் விடவும்;

மனநலம், பண்பாடு வேண்டின் தமிழர்
இனநலம் பேணுக! இந்தியைத் தவிர்க்க!

மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்!
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க; ஆக்கம் பெறுகவே!

-1967

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/079-089&oldid=1515069" இலிருந்து மீள்விக்கப்பட்டது