கனியமுது/அளவோடு பிள்ளை.




“அன்றாடம் மாலையிலே வீடு வந்து
    அரைக்கவுளி வெற்றிலையைத் தந்து செல்வான்;
இன்றளவும் ஒரு நாளும் நின்றதில்லை :
    இன்னும் ஏன் வரக்காணோம், அல்லா பிச்சை?
என்றுமிலாப் புதுமையாக நேர்ந்த தென்ன ?
    ஏனப்பா மரியசூசை அறிவா யாநீ ?
சென்று அவனைக் கேட்டிடுவாய்; கிடைக்காவிட்டால்,
    சிறு கடையில் வாங்கிவா!“ என்றேன், போனான்.


வெற்றிலையைப் பக்குவமாய்க் கிள்ளி வந்து,
    வெவ்வேறாய்த் தரம்பிரித்து, வாடிக் கைக்கு
விற்றுவரும் எளிதான வருமா னத்தில்-
    வீட்டுக்குள் இருமனைவி! மாற்றி மாற்றிப்
பெற்றுவிட்ட பிள்ளைகளோ எட்டுப் பேராம் !
    பெற்றோர்க்கும் தள்ளாத முதுமைக் காலம்;
வற்றாத வறுமையன்றி என்ன வாழும் ?
    வாட்டத்தைப் போக்குதற்கு வழிதான் யாது?

கேட்டுவரப் போனானே மரிய சூசை
    கிண்டலான சிரிப்போடு திரும்பி வந்தான் ;
“கேட்டீரா ஐயா, நாம் சொன்ன பேச்சைக்
    கேளாமல் இருமனைவி கொண்ட தாலே
போட்டிக்குப் பிரசவித்தாள் மூத்தாள் ; இன்று
    பொல்லாத காய்ச்சலினால் தொல்லை கண்டாள்.
நாட்டுக்கே தீமையன்றே இதனால் ஐயா,
    நான் கொஞ்சம் வீடுவரை செல்வேன்” என்றான்.



“உனக்கென்ன அதற்குள்ளே விரைவாம்?” என்றேன்.
    “உடல் நலத்தில் குறைவுண்டோ, யார்க்கும்?”
என்னத்
தனக்குள்ளே நாணமுற்றுத் தலைக விழ்ந்து,
    தயக்கமுடன் மரியசூசை பேசு கின்றான் :-
“எனக்கொன்றும் இல்லை ஐயா இளைய பெண்ணை
    இங்கழைத்து வந்துள்ளேன் பிரச விக்க :
மனக்கவலை புரியாத மனைவி, மற்றோர் -
    மகவு தர இருக்கின்றாள் இன்றோ, என்றோ? ”

“ஆந்தையினைப் பழித்திட்ட கோட்டான் போல

அவனைப் போய் நீ எள்ளி நகைத்தா யன்றோ?

மாந்தரினம் தழைப்பதுதான் முறையென் றாலும்

வருங்காலக் குடிமக்கள் வதைய வேண்டா !

ஆய்ந்துணர்ந்து குடும்பத்தின் வருமா னத்தை

அழகான உடல்வளத்தை-எதிர்கா லத்தின்

வேந்தராகப் பிள்ளைகளை வளர்க்கும் வாய்ப்பை-

மேலாகக் கருதிடுவீர், என்போல்!” என்றேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/அளவோடு_பிள்ளை.&oldid=1382879" இலிருந்து மீள்விக்கப்பட்டது