கனியமுது/உடன் பிறந்தே கொல்லும்.



அரிசியிலே கல்பொறுக்கிக் கொண்டிருந்தேன் ;
அடுத்தவீட்டுச் செங்கமலம் உள்ளே வந்தாள்,
வரிசையான செம்பற்கள் வெளியே தோன்ற!
“வாடியம்மா ?” என்றழைத்தேன் வாடிக் கைதான். கரிசனமாய்க் கையிலுள்ள முறத்தை வாங்கிக்
“கல்லுக்கும் அரிசிக்கும் வேறு பாடே
சரியாகப் புரிவதில்லை இப்போ தெல்லாம் :
சரிதானா அக்கா, நான் சொல்வ?” தென்றாள்.


“இப்படியே மனிதரிலும் இருக்கின் றார்கள்
யாரென்ப தறிவாயா?” என்று கேட்டேன் ;
அப்படியே தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கி
அங்கமெலாம் குன்றிப்போய்க் குறுகிவிட்டாள்.
“எப்படி நீ தெருவிலுள்ள வீட்டார்க் கெல்லாம்
என்வீட்டில் இருவருக்கும் சண்டை என்று
செப்பிவந்தாய்? இவைதாம் நீ எமக்குச் செய்யும்
சிறப்பான உதவிகளோ ? உண்மை என்ன:-

அலுவலகக் கலைமன்ற நாட கத்தில்
அடக்குமுறைக் கணவனானுக அவர்ந டிக்கக்--
கொலுவிருக்கும் பொம்மையென வாய்பே சாத
குணவதியாய் நான் நடிக்கும் காட்சி ஒன்றில்...
வலுவுள்ள தடியாலே அடித்துப் போடும்
மனமுருக்கும் ஒத்திகையை நடத்திப்பார்த்தோம்.
சிலுவையிலே வதைபட்ட ஏசு வோடு
சேர்ந்திருந்த யூதாசாம் துரோகி யைப்போல்



எங்களது கலம்விரும்பும் தோழி போல
என்றென்றும் பழகிவந்து தீமை செய்தாய்
செங்கமலம் ! உனைச்சொல்லிக் குற்ற மில்லை !
செந்தமிழின் பெயராலே வாழ்வை ஒட்டித்
தங்களையே வளர்த்துவரும் சிலபேர், இன்று
தமிழழிக்கும் பகைவரது கூலி யாளாய்ச்,
சிங்கமென மொழிகாக்கும் மறவர் தம்மைச்
சிறுமதியால் தாக்குகின்றா அவரும் வாழ்க!