கனியமுது/எதிர்வீட்டுக்காரி.




காரணந்தான் என்னேடி, தோழி! நானுங்
கற்றவித்தை எல்லாமே காட்டி விட்டேன்!
பூரணமாய் அழகுதரும் சாத னங்கள்
புதுமையாகக் கிடைத்தவற்றை வாங்கி வங்தேன்!
தோரணங்கள் எழில்கூட்டும் பந்த லைப்போல்,
தொகைதொகையாய் அலங்காரம் செய்து கொண்டேன்!
சீரணிகள் யாவையுமே அணிந்து தீர்த்தேன்;
சீந்திடுவார் எவரையுமே காண வில்லை!


கண்ணாடி போற்பருவம் முழுதுங் காட்டும்
கவின்நிறைங்த சல்லாவை உடலில் போர்த்திப்,
புண்ணுக்கும் வேல்விழிக்கு மையுங் திட்டிப்,
பூவிதழ்போல் உதட்டுக்குச் சாயம் இட்டுப்,
பிண்ணாக்கு நிறம்மாற்ற மாவைப் பூசிப்,
பின்னழகு மறைக்காத கச்ச ணிந்து,
மண்ணாளும் அரசிபோலக் கைகள் வீசி,
மதர்ப்பாக நடக்கின்றேன். பார்ப்போ ரில்லை!

என்ன இந்த எதிர்வீட்டுச் சிறுக்கி மட்டும்.
என்னைவிடப் பேரழகி? வயது கொஞ்சம்;
பொன்னிறத்து மேனி; பெருங் கரிய கண்கள்;
பொலிவுதரும் உடற்கட்டு; புதுமை கோக்கு:
புன்னகையில் ஒரளவு கவர்ச்சி உண்டு;
பொய்பேசும் வழக்கமில்லை! இதனால் என்ன?
மன்னரெலாம் அவள்முன்னே வாழ்த்துக் கூறி
வணங்கிடவா வேண்டும்? இது கொடுமை யன்றோ?


என்னிடமும் பொருள்நிறைய உண்டென் றாலும்,
எதற்காக அவள்போல வழங்க வேண்டும்?
தன்னைவிட ஏழையர்மேல் இரக்கப் பட்டால்...
தன்னிலைமை கெட்டுவிட்டால் ஏது செய்வேன்?
முன்னிடத்தை நான்தேடி அமரச் சென்றால்
மூளியெனத் துாற்றுகின்றார், மூட மக்கள்!
என்னிதயம் என்தாழ்வைத் தாங்கி னாலும்,
ஏற்காதே அவள் உயர்வை; அறிவாய் தோழி!