கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சுயமாய் சிந்திப்பதே அறிவு
ஞானி கன்பூசியஸ் பிறப்பதற்கு முன்பே சீனாவின் கல்வித்துறை மேன் மக்களின் மேற் பார்வையிலும், பணக்கார பரம்பரைகளின் பராமரிப்பிலும்தான் இருந்து வந்தது.
பொது மக்களுக்கோ, ஏழைகளுக்கோ, நடுத்தரக் குடிமக்களுக்கோ கல்வித் துறைப் பிரிவுகளைக் கற்பித்திட தனிப்பட்ட ஆசிரியர்களோ அல்லது வேறு கல்வி நிலையங்களோ, தனியார் நிறுவனங்களோ, கன்பூசியஸ் வாழ்ந்த காலத்திலே இல்லை.
அந்த நிலையை முதன் முதல் சீன நாட்டில் மாற்றி அமைத்துக் கல்விப் புரட்சியைச் செய்தவர் கன்பூசியஸ்! அதனால் பொது மக்களும், ஏற்றத் தாழ்வற்ற முறையில் சாதி பணம், உயர் பிறப்பு தகுதி போன்ற வித்தியாசங்கள் போன்ற வித்தியாசங்கள் எல்லாம் இல்லாமல் சமத்துவமாகக் கல்வி கற்றிடும் முறையை இவர் உருவாக்கினார்!
பணம் என்பதல்ல எதைக் கொடுத்தாலும் கல்விக்குரிய கவியாகப் பெற்றுக் கொண்டு கல்வியைப் போதிப்பார் கன்பூசியஸ்; ஆனால் கல்வி கற்கும் ஆர்வம் இல்லாதவர்களுக்கும், சிந்திக்கும் திராணியற்றவர்களுக்கும் என்ன கொடுத்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர் பெறமாட்டார். கல்வியையும் கற்றுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்.
கல்வித் துறையில் பிறப்பிற்கும், பணத்திற்கும் இடமில்லை என்று உலகத்தில் முதன் முதலாகக் கூறியவர் கன்பூசியஸ்தான்! அதுமட்டுமல்ல; அவரவர் தகுதிக்கும் திறனுக்கும்தான் முதல் இடம் என்று எவருக்கும் அஞ்சாமல் அவர் செயல்படுத்திக் காட்டிய உலகத்துமுதல் மனிதரும் கன்பூசியஸ்தான்!
எல்லா வகையிலும் சீர் கெட்டுச் சிதைந்துக் கிடந்த சீன நாட்டு மக்களின் ஏழைகள், நடுத்தரத்தினர் உட்பட்ட பொது மக்களில் பலர், கன்பூசியஸ் திட்டப்படி திறமையான வாலிபர்கள் தாழ்ந்த நிலையில் பிறந்திருந்தாலும், அவர்கள் பணமில்லாத ஏழைகளாக இருந்திருந்தாலும் தங்களது படிப்படியான முயற்சிகளால் மிகத் திறமையானக் கல்வியாளர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கச் சம்பவமாகும்.
'ஒரு விஷயத்தில், ஒரு மூலையை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பிறகு, மற்ற மூன்று மூலைகளையும் தானாகவே கண்டு பிடிக்க முடியாதவர்களுக்கு நான் மேலும் கல்வியைப் போதிக்க மாட்டேன்' என்று கூறியவரும் அவர்தான்!
ஆசிரிய தன்மை அல்லது போதனாமுறை என்பது படிக்கவரும் மாணவன் தலைக்குள்ளே அறிவுகளைத் திணிப்பதல்ல; அவன் சுயமாகச் சிந்திப்பதுதான் அறிவு என்று கல்வித்துறைக்கு அறிவுறுத்தியவரும் கன்பூசியஸ் தான்!
அறிவிற்குரிய வழிகளை ஆசிரியர்கள் கற்பிப்பர். ஆனால்; உனக்கு உண்மையிலே அது தெரியும் என்றால் தெரியும் என்று சொல்; தெரியாது என்றால் அது தெரியாது என்று சொல்லி, உனது அறியாமையை ஒப்புக் கொள்' இதுதான் அறிவுக்குரிய அடையாளம் என்று அறியாமைகளைப் பகிரங்கமாகத் தைரியமாக, செயல்படச் சொன்னவர் கன்பூசியஸ்!
"இன்றைய முற்போக்குக் கல்வி என்று உலகத்தவரால் கற்பிக்கப்படும் இருபத்தோராம் நூற்றாண்டைய கல்வி முறை; அறிவை ஊட்டவும், வளர்க்கவும் உதவுகிறது. ஆனால், அது மனிதரின் மன அரங்கில் தோன்றக்கூடிய உணர்ச்சி பாவங்களை நெறிப்படுத்தி, பக்குவமடையச் செய்ய உதவுவது இல்லை என்று பல அறிஞர் பெருமக்கள் இன்றையக் கல்வி முறையைப் பற்றிக் குறை கூறுகிறார்கள். சிலர் கண்டனக் குரலையும் எழும்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினனாக வாழ்வதற்குத் தேவையான மனப்பக்குவம், அறிவு, வளர்ச்சியை ஊட்டும் வகையில் கல்வி முறையை முதன்முதலில், உலகத்தில், சீனநாட்டில், வகுத்துக் காட்டிய வல்லமை, பெருமை, மாபெரும் ஞானியான கன்பூசியசுக்கே உரியதாகும்.
கன்பூசியஸ் உருவாக்கிய கல்வி முறை, உலக வாழ்வின் போக்கிலே மனிதன் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து, மனப்பக்குவத்தை வளர்க்கும் வகையிலும் உருவாக்கப்பட்டதாகும்.
ஒருவன் தன்னையே தான் உணர்ந்து, தனது சமுதாயத்தில் தானும் ஓர் அங்கமாகி, அன்போடும், பண்போடும் அருளோடும், அறநெறிகளோடும் வாழ்ந்து, இயற்கையோடு இன்பம் பெரும் அற்புதமான வழியையும் கன்பூசியசின் கல்வித் திட்டம் மக்களுக்குக் கற்பிக்கின்றது.
'அறிவுக்காக அறிவை அடைவதைவிட, தன்னைப் பண்படுத்தி வளர்ப்பதற்காக அறிவைப் பெறுவதுதான் கல்வியின் உண்மையான பயன்’ என்று கன்பூசியஸ் தனி மனிதனை வற்புறுத்துகிறார்.
சிந்தனை இல்லாத படிப்பு சிறக்காது; வீணானது; படிப்பு இல்லாத சிந்தனை பாழானது; ஆபத்தானது! என்று நம்மை அவர் எச்சரிக்கின்றார்.
நன்மை எது என்று தேர்வு செய்து, உலகுக்கு நல்லதையே செய்து, தங்களையும் அதே நேரத்தில் வளர்த்துக் கொண்டு, மனித இனத்தை வளப்படுத்திட கல்விதான் மூலகாரணமாகும் என்றார்!
எல்லாருக்கும் கல்வி கற்பிக்கும் கன்பூசியசின் பொது மக்கள் கல்வித்திட்டத்தின் நோக்கம் இதுதான். இதன் சாரம் என்னவென்றால், தன்னையும் தன் இனத்திற்குரிய கடமைகளையும் அறியக் கூடிய கல்வி முறைதான் அது என்கிறார்.
கன்பூசியஸ் கல்வி திட்டத்தின்படி, அறநூல்களும் கலைகளும் மிக முக்கியமானவை. கலைகள் என்பதில் ஆசாரங்கள் இன்னிசை, கவிதை இந்த மூன்றும் அடிப்படையானவை. ஆசாரங்கள் மனிதனின் மனதை ஒரே அளவாக இயங்க வைத்து, ஆசைகளை நிர்வகிக்கிறது; இதை நாகரிகப்படுத்தும் சக்தியாக விள்ங்குகிறது; மனிதனின் உணர்ச்சி பாவங்களை ஒழுங்கு படுத்துகிறது. இச்சையாதிகளைக் கட்டுப்படுத்துகிறது.
கவிதை, ஒழுக்கச் சக்தியாக விளங்கி, நமது குணத்தை நிதானப்படுத்தி, அறவுணர்ச்சிகளைத் தூண்டுகிறது. இவ்வாறு கன்பூசியஸ் நினைத்து இந்தக் கருத்துக்களைக் கூறினார்.
★ நமது குணம், கவிதையால் பண்படுத்தப்பட்டு, ஆசாரங்களால் நிலை நிறுத்தப்பட்டு, இசையால் பக்குவப்படுகிறது.
★ கவிதை எழுதும் பயிற்சி இல்லாமல் ஒருவன் சொல்லாட்சிகளை ஒழுங்காக, நிறைவாகச் செய்ய முடியாது.
★ பண்டையக்கால இலக்கியங்களும் அரசியலும், இவற்றோடு வேதம், சரித்திரம் முதலானவற்றையும் மேற்கண்ட கலைகளோடு சேர்த்து கன்பூசியஸ் தனது மாணவர்களுக்குப் பயிற்சிக் கொடுத்தார்.
★ மனப்பண்பு, வாழ்க்கை இயல், ஆட்சியியல் இவை பற்றி அவர் தனது மாணவர்களுக்கு அடிக்கடி கற்பித்து வந்தார்!
★ பழங்கால ஆதாரங்கள், பழக்க வழக்கங்களைத் தேடி அறிவதிலும், புனிதமான திருமறைகளைப் படித்துணர்வதிலும், அவர் தீவிரமான அக்கறைச் செலுத்திவந்தார்.
காரணம் என்னவென்றால், பொருள்களின் உருவங்களை எதிரொலிப்பதற்கு நிலக் கண்ணாடியை நாம் பயன்படுத்துவது போல, நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வதற்கு பழைய காலத்தை நாம் கற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று கூறுகிறார் கன்பூசியஸ்!
சீன மக்களின் தேசியப்பொது வாழ்விற்கும் கன்பூசியஸ் செய்த தொண்டு என்ன தெரியுமா?
சமூகத்தில் ஒருவன் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு என்ன செய்வான்? தனது முன்னோர்களையும், குடும்பப் பரம்பரையின் பெருமைகனையும் எடுத்துக் காட்டுவான்!
அதுபோல, நிகழ்காலத்தின் கவனத்தைக் கவர்வதற்காகக் கடந்தக் காலத்தையும் எடுத்துக்காட்டுவது மரபு, பரம்பரையாக மதிக்கப்பட்டு வந்துள்ள ஒரு பழமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன்மீது ஒரு புது நடத்தைகளை உருவாக்கி எழுப்புவது சிறந்த ஒரு வழியாகும்.
அதனால்தான் ஞானி கன்பூசியஸ், பழைய திருமறைகளையும், ஆதாரங்களையும் பதிப்பிக்கும் திருப்பணியில் இறக்கினார். அவற்றிலிருந்து அவர் தேர்ந்தெடுத்தக் கொள்கைகள் பழங்காலத்து என்ற காரணத்தால், அதற்குத் தனிப்பெருமையும், சக்தியும் ஏற்பட்டிருந்தன.
அந்த நூல்களைக் கன்பூசியஸ் பொது மக்களின் ஆய்விற்கும் கவனப் பார்வைக்கும் கொண்டு வந்தார். இந்த சிறந்த தொண்டை சீனர்களின் தேசிய பொது வாழ்விற்கு நடைமுறை விதிகளாக்கினார்.
கன்பூசியசுக்கு ஒருவன் தண்டனை பெறுவதில் நம்பிக்கை இல்லை. நல்ல பண்புக்கு அவன் வழி நடத்துவது ஒன்றுதான் உண்மையாக அறிவு என்பது அவரது கருத்தாகும்.
மனிதன் இயற்கையிலேயே நல்லவன்; அதனால் அவனைத் தண்டனையோடு நெருங்குவது அறிவில்லாத செயல். அது மட்டுமல்ல தண்டனை தருவதால் மக்கள் வளர மாட்டார்கள். அவர்கள் வளமாக வாழ வேண்டுமானால், சட்டங்கள்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.
சில நன்மைகளையும், தீமைகனையும் பகுத்துணர்வதற்குச் சட்டங்களின் பயிற்சியையும், உதவியையும் அளிக்க வேண்டும்.
தண்டனைகள் மூலமாகவோ, பலாத்காரத்தின் மூலமாகவோ, சிலவற்றை மனிதர்கள் செய்யும்படி வைக்க முடியும். ஆனாலும், இவை கல்வியின் பயன்பாட்டிற்கு கூடாதது-புத்துணர்வாகாது.
சட்ட திட்டங்கள், தண்டனைகள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்திட அல்லது திருத்திட முயன்றால், மக்கள் அவற்றிலே இருந்து எப்போதும் தப்பித்துக் கொள்ளவே முயல்வார்கள்.
ஆனால் அதே மக்களிடம், சீலம், நேர்மை, ஆகியற்றால் அவர்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தப்படும் என்றால் அதனால் தங்களையே திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உண்டாகி விடுகிறது.
எனவே, ஒருவன் தனது அறிவின் ஒளியைப் பயன்படுத்தவும், பொருள்களின் தன்மையை உட்புகுந்து நோக்கவும், ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும்.
தன்னைப் பண்படுத்திப் பக்குவமடைவதற்கும், தன் குடும்பம், தன் வட்டாரம் முதலியன சிறப்படைவதற்கும், ஒவ்வொருவனும் கடினமாகப் பணியாற்றிட வேண்டும். இதன் வாயிலாக ஓர் உலகப் பொது ஒழுங்கை உருவாக்குவதில் அவன் பங்கு கொள்கிறவன் ஆவான்.
அன்பு, அருள், நேர்மை இந்த மூன்றும் ஒரு தனி மனிதனின் உள்ளத்தில் பதிந்து இருந்தால், அந்த தத்துவ ஒளிகள் அவனது செயல்களில் நிச்சயமாக எதிரொலிக்கும்! அப்படிப்பட்டவர்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் அமைதியும், திருப்தியும் நிறைந்திருக்கும்.
வீடுதோறும் இந்த நினைவு நில இயற்கையோடு இருந்தால், நாடுதோறும் ஓர் ஒழுங்குமுறை இருக்கும். நாடுதோறும் ஓர் ஒழுங்குமுறை படர்ந்தால் உலகமெங்கும் அமைதியும், ஆனந்தமும் ஏற்படும்-எக்களிக்கும்.
அப்போது, வானகமும், வையகமும் ஓர் ஒழுங்கில் இயங்கி, ஒவ்வொரு மனிதனும் இயற்கையோடு இயைந்து இன்பம் பெறுவான், என்று மகான் கன்பூசியஸ் தனது ஞான மார்க்கச் சிந்தனையிலே தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய ஒரு ஞான செல்வரிடம் கல்வி பயின்றிட சீன நாட்டின் எல்லை முனைகளிலே இருந்ததனால் மாணவர்கள் அணியணியாகத்திரண்டு வந்து கல்வியைக் கற்றார்கள். சீனாவின் பல பகுதிகளில் இருந்தும் அவர்கள் வந்து குவிந்தார்கள், இவ்வளவு பெரிய மாணவர்களது குழுக்களை அழைத்துக்கொண்டு, கான்பூசியஸ் மகான் நடமாடும் ஒரு ஞான போதியாகவே முழுவதுமாகச் சுற்றிச் சுற்றி வந்தார்.
சீடர்கள் அவ்வாறு அவர் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாணவன் இறந்து விட்டான். அதைக் கண்ட கன்பூசியஸ் துக்கம் தாங்காமல் கதறியும் விம்மியும் கண்ணீர் விட்டு ஓவென்று அழுது அப்படியே மெய்மறந்து அமர்ந்து விட்டார்.
இவ்வளவு மாணவ மணிகளையும் அணியணியாக சேர்த்து ஏன் குருகுல வாழ்வை கன்பூசியஸ் நடத்தி வந்தார்? குருவினுடைய கொள்கைகளை, மாணவர்கள் அணியினர் அனைவரும் ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களிடையே அவற்றை எடுத்துக்கூறி மக்களைத் திருத்துவார்கள் என்ற நம்பிக்கைதான் மூலக் காரணமாகும்.
கன்பூசியஸ் என்ற மாபெரும் ஞானியின் பின்னால் நாட்டை வலம் வந்தவர்கள் சாமான்யர்கள் அல்லர்! இலக்கிய மேதைகள், வரலாற்று வித்தகர்கள். வேத விற்பன்னர்கள்; அரசியல் அறிஞர்கள்; அறிவொளி பரப்பும் ஆசான் பெருமக்கள், தத்துவ ஞானிகள் செல்வாக்கப் படைத்த செல்வர்கள் போன்றவர்கள் ஆவர் அவர்கள் எல்லாம் கன்பூசியஸ் மகானின் குருகுலத்தில் ஞானப் போதனை பெற்றவர்களாவர். இவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளுக்குச் சென்று கன்பூசியஸ் ஞானத்தைப் போதிக்க பரம்பரையாகத் திகழ்ந்தார்கள்.
சீனாவின் தேசிய பண்பாட்டை கன்பூசியஸ் தனது மாணவர்கள் மூலமாக, கல்வி என்பது சுயமாக சிந்திப்பது என்ற அறிவு வேட்கையால், பல நூற்றாண்டுகளில் பல அரசுகள் ஆற்ற வேண்டிய அறிவு சமுதாயம், ஆன்மீகம், அரசியல் பணிகளை அந்த மாணவர் பாசறை செய்தது!