கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/1. நகரணி மங்கல நாள்
வசீகர சக்திவாய்ந்தவனும் பேரழகனுமான இளவரசன் சாரகுமாரனைக் காணப் பாண்டியர் கோநகரத்துக்கு வடபால் சிறிது தொலைவில் அமைந்திருக்கும் மணிபுரம் எனப்படும் மணலூர்புரத்துக்கு முதலில் போகலாம், வாருங்கள். மாறோக மண்டலத்துக் கொற்கையினருகே பொருநை நதிக் கரையிலே பசுஞ்சோலைகளிடையே - ஊரிருப்பதே வெளியே உருத்தெரியாத பசுமையில் மறைந்திருக்கும் இந்த மணலூரின் அமைதி கபாடபுரத்தில் இராது. நாளைக்கு விடிந்தால் கபாடபுரத்தில் நகரணி மங்கல நாள். கோநகரத்தில் எங்கு நோக்கினும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.
பெரிய மாமன்னர் வெண்தேர்ச் செழியரின் தேர்க் கோட்டத்திலிருந்து அவருடைய மூவாயிரம் முத்துத் தேர்களும் அலங்கரிக்கப்பெற்றுச் சித்திரா பெளர்ணமி நிலவொளியில் மின்னி மின்னிப் பல்லாயிரம் எதிர் நிலவுகள் நிலவை நோக்கிப் பிறந்து வருவனபோல் கபாடபுரத்தின் அரசவிதிகளில் உலாவரும். இந்த ஆண்டின் சிறந்த முத்துக்களும், இரத்தினாகரங்களில் எடுத்துக் குவித்துப் பட்டை தீட்டிய மணிகளும் கடை வீதிகளில் வந்து குவிந்து கிடக்கும்.
நகரின் குமரி வாயிலாகிய முதன்மைக் கோட்டை வாயிலில் பெரிய மன்னர் காலத்தில் முதல் முதலாக நிறுவி நிலைவைக்கப்பட்ட இரண்டு பெரும் பனையுயரமும் - இரண்டு பெரும் பனையகலமு முள்ள தெய்விகச் செம்பொற் கபாடங்களில் முத்துச்சரங்களைத் தொங்கவிட்டுத் தீபாலங்காரம் செய்ததுபோல் பிரகாசம் உண்டாக்கியிருப்பார்கள். மறுபடி கடல் பொங்கி வந்தாலும் தாங்க வேண்டும் என்பது போல் இந்த வலிமையான கபாடங்களையும் கோட்டைமதிற் சுவர்களையும் வெண்தேர்ச் செழியர் - பெருமுயற்சி செய்து அமைத்திருந்தார். கோ நகரத்தை நெருங்கும் வெளியூர்ச் சாலைகளிலிருந்தும், கடல் வழிகளிலிருந்தும் நீண்ட தொலைவிலேயே இந்த ஒளிமயமான கபாடங்கள் வானளாவிய கோட்டை மதில்களுடன் கம்பீரமாய்த் தெரியும். இந்தக் கபாடங்களின் நெருப்பு நிறம் அருணோதயத்தின் பொன் வெயில் பட்டுத் தகதக வென்று மின்னும்போது தொலைவிலிருந்து காண்பதற்குப் பேரழகு நிறைந்ததாயிருக்கும். மணலூர் புரத்துச் சோலைகளில் நாணி வெட்கி நகுவது போல் அழகாயிருக்கும் பொருநை நதிப் பூவை கபாடபுரத்தைச் சுற்றித் தழுவி மணப்பதுபோல் வந்து பெருமிதமாகக் கடலில் கலக்கிறாள்.
சில காதப் பரப்புக்கு விரிந்து பரந்திருந்த கபாடபுரநகரின் ஒரு மருங்கில் பொருநையும் மறு மருங்கில் நெடுந்துாரத்துக்கு நெடுந்துரம் நீலநெடுங்கடலுமாக அமைந்திருந்தபடியால் - மிக ஆழமாயிருந்த பொருநை முகத்துவாரத்தின் வழியே சிறு கப்பல்களும் பாய்மரப் படகுகளும் வந்து நிற்கும் துறை ஒன்றும் மறுபுறம் கடலில் மாபெரும் வெளி நாட்டு மரக்கலங்கள் வந்து நிற்கும் பெருந்துறைமுகம் ஒன்றுமாக இருந்தன. தென்கடலிலும், கீழ், மேல் கடல்களிலும் அங்கங்கே இருந்த சிறு தீவுகள், பெருந்தீவுகளுக்குப் போகும் பயணமரக்கலங்கள் எல்லாம் பொருநை முகத்துவாரவழியே வந்து போகும். அவற்றுக்குச் சுங்கச் சாவடிகள் முதலியன இல்லை. கடல் முகத்துறையிலோ - பல சுங்கச்சாவடிகளும் காவலர்களும் உண்டு. கிழக்கே பொருநையும், தெற்கும், மேற்கும், கடலும் இயற்கை அகழிகளாக இருந்ததனால் வடக்கு நோக்கி விரியும் நிலவெல்லையில் ஒரு பகுதி மட்டும் பொருநைக் கால்வாய் ஒன்றின் மூலம் சிறிது தொலைவு ஆழமான அகழி வெட்டி நீர் நிரப்பப் பட்டிருந்தது.
சுற்றிலும் அகழிக்கரையில் அடர்த்தியாக ஞாழல் மரங்கள் - குங்கும நிறத்தில் சரம் சரமாகப் பூத்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும் போலத் தோன்றும். நகரத்தின் ஒருபெரும் பகுதியை இயற்கையே பெரு விருப்பத்தோடு மலர்ச்சரங்களால் அலங்கரித்திருப்பது போல இந்த ஞாழல் மரங்கள் தோற்றமளிக்கும் கபாடபுரத்தில் கிடைத்த முத்துக்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஒளியினாலும், தரத்தினாலும் சிறந்திருந்ததன் காரணமாக நல்ல முத்துக்களுக்குப் பெயரே கபாடம் - என்று வைத்திருந்தனர் வெளிநாட்டு வாணிகர். பாண்டியர் கபாடம் - என்றே வெளிநாட்டுக் கவிஞர் யாவரும் இந்நகருக்கு இலக்கியப் புகழ் தந்தனர்.
மிக நீண்ட காலமாகத் தலைநகருக்கு வரவே வாய்ப்பின்றி மணலூரில் பெரும் புலவர்களான அவிநயனாரிடமும், சிகண்டியாரிடமும் இலக்கண இலக்கியங்களைப் பாடங் கேட்டுக் குருகுலவாசம் செய்து வந்த சாரகுமாரன் - இவ்வாண்டு எப்படியும் நிச்சயமாக நகரணிமங்கல நாளில் கோ நகருக்கு வந்துவிட வேண்டுமென்று அன்பாகக் கட்டளையிட்டிருந்தார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர். பாட்டனாருக்கு இந்தப் பேரப்பிள்ளையின் மேல் கொள்ளை ஆசை. ஒளிநாட்டைச் சேர்ந்த பேரழகி ஒருத்தியைக் காதலித்துக் கடிமணம் புரிந்துகொண்ட அநாகுல பாண்டியனுக்கு மிக இளம் பருவத்தில் பிறந்த செல்வமகன் சாரகுமாரன்.
பெற்றோர்க்கு மிக இளம் பருவத்தில் பிறந்ததனாலும் பெற்றோர் இருவரும் பேரழகு வாய்ந்தவர்களாகவும் கலையுள்ளம் படைத்தவர்களாகவும் இருந்ததனாலும் சாரகுமாரன் குழந்தைமையிலேயே மிகவும் வசீகரமானவனாகவும், பொலிவுடையவனாகவும் இருந்தான். அவனுடைய குழந்தைப் பருவத்தின் அரச குடும்ப வழக்கப்படி அவனுக்கு ஐம்படைத்தாலி அணிந்து நாண்மங்கலம் கொண்டாடியபோது அதனைப் புகழ்ந்து கவி பாடி வாழ்த்த வந்திருந்த புலவர்களுக்கு எல்லாம் நடுவே, "இதுவரை இந்தக் கபாடத்தில் விளைந்த முத்துக்களில் எல்லாம் சிறந்த முத்து இதுதான்" - என்று குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்சியபடியே பாட்டனார் வெண்தேர்ச் செழியர் கூறிய அந்த ஒரு வாக்கியத்துக்கு ஈடான பொருட் செறிவுள்ள கவிதையை இன்னும் இயற்றமுடியவில்லையே என்று நீண்டகாலமாக ஏங்கியிருந்தார்கள் பாண்டிய நாட்டுப் புலவர்கள். சாரகுமாரனுக்கு இந்த அழகிய பெயரைச் சூட்டியவர்கூடப் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் தான். இந்தப் பெயரைச் சூட்டியதற்குக் காரணமாக மருமகள் (சாரகுமாரனின் தாய்) திலோத்தமையிடமும், மகன் (சாரகுமாரனின் தந்தை) அநாகுலனிடமும், பாண்டிய நாட்டுப் புலவர்களிடமும் முதியவர் வெண்தேர்ச் செழியர் கூறிய விளக்கம் பலமுறை நினைத்து நினைத்து இரசிக்கத்தக்க தாயிருந்தது. தேர்களைக் கட்டி வளர்த்த முதியசெழியரின் சிந்தனை சொற்களைக் கட்டி வளர்த்ததை அவர்கள் வியந்தனர்.
"இந்தச் சிறுவனைத் தொட்டுத் தழுவி உச்சி மோந்து பார்த்தால்கூட இவன் உடம்பு நமது மலய மலைச் சந்தனம் போல் மணக்கிறது. இவன் நிறமும் சந்தன நிறமாயிருக்கிறது. சந்தன மணத்தில் மிக உயர்ந்த பக்குவமான மணத்துக்குச் 'சார கந்தம்' என்று பெயர். சாரம் என்பதற்கு மிக இனியது - என்றும் ஒரு பொருள் உண்டு. இவனோ, தேனிற் செய்தாற் போன்ற இனிய குரலை உடையவனாயிருக்கிறான். பால் பசித்து அழுதால்கூட இனிய குரலில் அழுகிறான். இந்தத் தேசத்துக்கு எதிர்காலத்தில் இவன் மிகவும் பயன்படப் போகிறான். எனவேதான் இவையெல்லாவற்றையும் இணைத்து மனத்தில் கொண்டு இவனுக்குச் சாரகுமாரன் என்று பெயரிட்டேன்" - எனச் சமயம் நேரும் பொதெல்லாம் மற்றவர்களிடம் பெருமையாகச்சொல்லிக் கொள்வார் முதிய செழிய மன்னர்.
புலவர் பெருமக்கள் இந்தப் பெயர் விளக்கத்தை உணர்ச்சி பூர்வமாக இரசித்துக் கேட்பதுண்டு. பெரிய மன்னரின் மொழி நுட்பத்திறனை வியந்து பாராட்டுவதும் உண்டு. ஒளி நாட்டு மருமகள் திலோத்தமை - மாமனாரின் இந்தப் பெயர் விளக்கத்தைக் கேட்கும் போதெல்லாம் சாரகுமாரனின் தாய் என்ற முறையில் மனம் பூரித்திருக்கிறாள். அநாகுலனுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை அவன் வெளியிற் காட்டிக் கொள்வதில்லை. முதிய செழியர் இப்போதெல்லாம் அதிகமாக வெளியே வருவதும் போவதும் - தேர்க் கோட்டத்தில் போய்ச் சுற்றுவதும் கூட நின்று விட்டது. முதுமைத் தளர்ச்சியின் காரணமாகப் பள்ளிமாடத்திலேயே ஒடுங்கி விட்டார். இந்த ஒடுக்கமும், தளர்ச்சியுமே, மணலூரிலிருந்து பேரப்பிள்ளையை வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும், பாசத்தையும் அவருள்வளர்த்துவிட்டிருந்தன. மணலூர்கொற்கை - பூழி முதலிய பாண்டிய நாட்டின் வடகிழக்குப் பகுதி ஊர்களிலேயே அகத்தியரிடம் நேர்முகமாகக் கற்றுப் புலமைபெற்ற சிகண்டி, அவிநயனார், போன்ற பெரும் பெரும் புலவர்கள் எல்லாரும் இருந்ததனால் இளையபாண்டியனான சாரகுமாரனை மணலூரில் தங்கிக் குருகுலவாசம் செய்விக்க விரும்பிய அநாகுலன் அவ்வாறே செய்திருந்தான்.
தந்தை முதிய செழியரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி நகர் மங்கல விழாவன்று இளைய பாண்டியன் சாரகுமாரனையும் அவனுக்கு ஆசிரியர்களான சிகண்டியாரையும் அவிநயனாரையும் கோநகருக்கு அழைத்து வருமாறு மணலூருக்கு விரைந்து சென்று அழைத்துவர வல்ல பரிகள் பூட்டிய தேர் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. மறுநாள் நகரணி மங்கல நாளா கையினால் கபாடபுரத்திலிருந்து மணலூர்வரை பொருநை நதிக்கரையை ஒட்டினாற் போலவே செல்லும் பெரும் பாண்டிய ராஜ பாட்டையில் எங்கு பார்த்தாலும் திருவிழாக் கூட்டமாயிருந்தது. கடலொடு கலப்பதற்காகப் பெருகி விரையும் பொருநையைப் போலவே கபாடபுரத்தின் விழாக்கோலத்தோடு போய்க் கலப்பதற்காக மக்கள் வெள்ளம் பெருகி ஓடிக் கொண்டிருந்த இந்தப் பெருவழிகளில் கவனமாக முயன்று எவ்வளவு வேகமாகச் செலுத்தியும் அந்தி மயங்குகிற நேரத்துக்குத் தான் தேர்ப்பாகனால் மணலூரில் சிகண்டியாரும் அவிநயனாரும் வாழ்ந்து வந்த நதிக்கரைத் தோட்டத்தை அடைய முடிந்தது. மணிகள் ஒலிக்கத் தோட்ட முகப்பில் வந்து நின்ற தேரை முதலில் வரவேற்றவனே இளையபாண்டியன்சாரகுமாரன் தான். ஆசிரியர் பாடஞ் சொல்லுமுன் மூல நூலை மனனஞ் செய்துவிட வேண்டு மென்கிற முறைப்படி 'அகத்தியப் பேரிலக்கணத்தின் - எழுத்ததிகார நூற்பாக்களை மெல்ல வாய்விட்டுச் சொல்லித் தனக்குத் தானே கேட்கும் ஆத்மார்த்த சுகம் நாடும் இனிய குரலில் மனனம் செய்து கொண்டிருந்த சாரகுமாரன் பாட்டனாரின் முத்துப் பதித்த அலங்காரத்தேர் மணிகள் ஒலிக்க வந்து நின்றதைக் கண்டதும் மகிழ்ச்சி பிடிபடாத மனத்துடன் தேரருகே எழுந்து ஓடினான். தேர்ப்பாகன் முடிநாகன் தேரை நிறுத்தித் தேர்த்தட்டிலிருந்து கீழிறங்கித் தானிருக்குமிடம் வரும் வரையிற்கூடச் சாரகுமாரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
"முடி நாகா! தாத்தா நலமாயிருக்கிறாரா? நகர் மங்கல விழாவில் ஒடியாடித் திரியும் பழைய உற்சாகம் தாத்தாவுக்கு இப்போது இருக்கிறதா? என்னைப் பற்றி அவர் ஞாபகம் வைத்திருந்து அடிக்கடி பேசுகிறாரா?"
"ஆகா கேட்க வேண்டுமா? தங்கள் தாத்தாவுக்கு இப்போதெல்லாம் அவருடைய தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களைப் பற்றிக் கூட மறந்துபோய் விட்டது. எக்காலமும் உங்கள் ஞாபகம் தான் நாள் தவறாமல் இளையபாண்டியருக்குப் பேர் வைத்த பெருமையை யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். 'முடி நாகா! அநாகுலன் மட்டும் என் பிள்ளையில்லை! இந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் என் செல்வப் பிள்ளைகள்தான். இவைகளில் ஏதாவதொன்று சட்டம் முறித்தாலோ சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே' என்று தம்முடைய தேர்ச் செல்வங்களைப் பற்றி ஒரு காலத்தில் என்னிடம் மனம் உருகியிருக்கிற உங்கள் தாத்தாவுக்கு இப்போது ஒரே ஞாபகம் நீங்கள் ஒருவர்தான் இளையபாண்டியரே!” - என்றான் தேர்ப்பாகன் முடிநாகன். தாத்தாவைப் பற்றிப் பிரியமாக விசாரித்தபின்பே தாய்தந்தையரைப்பற்றி விசாரிக்க ஞாபகம் வந்தது சாரகுமாரனுக்கு. அநுபவமும் முதுமையும் நிறைந்த பழைய தேர்ப்பாகனாகிய முடிநாகன் தாத்தா வெண்தேர்ச் செழியருக்கு மிகவும் வேண்டியவன். அந்த வேளையில் அவனுடைய ஆசிரியப் பெருமக்களாகிய சிகண்டியாரும், அவிநயனாரும், பொருநையாற்றிற்கு மாலை நீராடச் சென்றிருந்தனர். ஒவ்வாரு முறையும் இத்தகைய விழாக்காலங்களில் புலவர்களுக்குச் செய்யும் இராசகெளரவங்களைப் போல் இம் முறையும் புத்தாடைகள் - முத்துக்கள் - பழங்கள் ஆகிய பரிசுப் பொருள்களை அரண்மனையிலிருந்து கொண்டு வந்திருந்த தேர்ப்பாகன் முடிநாகன், "புலவர் பெருமக்களைக் காணவில்லையே? எங்கே போயிருக்கிறார்கள் இளையபாண்டியரே? வழக்கம்போல் அவர்களுக்கு இராச கெளரங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றை அளிப்பதுடன் அவர்களையும் தங்களோடு கோநகரத்துக்கு அழைத்து வரச்சொல்லித் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார். மறுக்காமல் அவர்களும் உடன் நம்மோடு கோநகருக்குப் புறப்படும்படி செய்ய வேண்டியது இளையபாண்டியரின் பொறுப்பு" - என்று விநயமாக வேண்டினான்.
"அதற்கென்ன? என் ஆசிரியப் பெருமக்களும் கோநகருக்கு வந்து இந்த மங்கல நாளில் தாத்தாவைப் பார்த்து அளவளாவ மிகவும் ஆவலாயிருக்கிறார்கள். மறுக்காமல் அவசியம் வருவார்கள். அவர்களுடைய வரவைப்பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம் முடி நாகா” என்று இளைய பாண்டியன் சார குமாரன் மறுமொழி கூறியபோது மீண்டும் மீண்டும் எதையாவது கேள்வி கேட்டு இளைய பாண்டியருடைய இனிய குரலைச் செவிமடுத்து மகிழ வேண்டும் போல ஆசையாயிருந்தது முடிநாகனுக்கு. இந்தக் குரலையும் இந்தப் புன்முறுவல் பொலியும் பொன் முகத்தையும் கண்டுகேட்டு மகிழ்வதற்காகத்தானே பெரிய பாண்டியர் உருகி உருகி உயிர் விடுகிறார்? என்றெண்ணி உள்ளுர வியந்துகொண்டிருந்தான் அவன். இப்போது பட்டத்திலிருக்கும் - இளைய பாண்டியர் சாரகுமாரரின் தந்தையாரான அநாகுல பாண்டியரிடமுள்ள தொடர்பை விட, முதிய பாண்டியரிடம்தான் முடிநாகனுக்கு அதிகத் தொடர்பு இருந்தது. முதியவராகிய பெரிய பாண்டியரின் ஆட்சிக் காலத்து இறுதியில்தான் - தேர்க்கோட்டத்தையும் - அதன் உடைமையான மூவாயிரம் முத்துத் தேர்களையும் -- மேற்கொண்டு கண்காணித்துக்கொள்வதற்காக அவன் நாக நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தான். இதனால் பெரிய பாண்டியரிடம் அவனுக்கு அளவற்ற விசுவாசமும் நன்றியும் அந்தரங்கமான பக்தியுமே ஏற்பட்டிருந்தன. பெரியவரின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமான பேரப்பிள்ளை என்பதனால் அதே விசுவாசமும் அன்பும் இளைய பாண்டியர் சாரகுமாரனிடமும் முடிநாகனுக்கு உண்டு. தேனிற் செய்தது போன்று சன்னமாக இழையும் இனிய குரலில் வார்த்தைகளைத் தொடுத்துத் தொடுத்து அழகாகச் சாரகுமாரன் உரையாடுவதைக் கேட்டு அந்தக் குரலிலேயே மெய்ம் மறந்து போகிறவன் முடிநாகன்.
"எதிர்காலத்தில் இந்தக் குரல் பாண்டிய நாட்டின் பல்லாயிரம் பல்லாயிரம் மக்கள் கூட்டத்தை யெல்லாம் வசியப்படுத்தி மயக்கப்போகிறது" என்று தனக்குள் பலமுறை நினைத்து நினைத்துக் கற்பனை கூடச் செய்திருக்கிறான் முடிநாகன். யெளவனப் பருவத்துக் கந்தருவ இளைஞனைப் போல் கண்களும், தோற்றமும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கின்றனவோ என்றெண்ணும்படி பொலிவான முகத்தோடு - பொன் வடிந்து வார்ந்ததை யொத்த தோள்களுமாக விளங்கும் சாரகுமாரபாண்டியரை இன்றெல்லாம் கொலுவிருக்கச்செய்து பார்த்துக்கொண்டே யிருக்கலாம் போலத் தோன்றும். பெரிய பாண்டியர். வெண்தேர்ச் செழியர் மட்டுமன்றிச் சாதாரணமான அரண்மனை மெய்க் காவல் வீரர் முதல் தேர்க்கோட்டத்து மேற்பார்வைக்காரனான முடிநாகன் வரை எவர் இளைய பாண்டியர்சார குமாரனை எதிரே கண்டாலும் முகம் மலர இளமை பொங்க அவர் நின்று பேசுவதை இரண்டு கணம் செவியாரக் கேட்டு மகிழ்ந்துவிட்டே அப்பால் நகர வேண்டுமென்பதுபோல் ஒர் இனிய வசீகரம் அல்லது முகராசி சாரகுமாரனுக்கு இருந்தது. சாரகுமாரனின் தாய் திலோத்தமைக்கு இப்படி ஒரு முகவசீகரம் உண்டு. அதுவாவது பெண்மையின் இயல்பான பொலிவு என்று தோன்றி அமைதிபெறும். ஆனால் சார குமாரனின் அழகோ, பொலிவோ, நிறமோ, தந்தையின் கம்பீரமும் தாயின் எழிலும் கலந்த அற்புதத் தோற்றத்தோடு கூடியனவா யிருந்தன. தந்தை அநாகுல பாண்டியரின் ஆஜானுபாகுவான உயரமும் காம்பீர்யமும் தாய் திலோத்தமையின் அழகும் நிறமுமாகச்சாரகுமாரன் நடந்து வரும் போது அவனுடைய பாட்டனார் வெண்தேர்ச் செழியர் அரும் பாடுபட்டு உருவாக்கிய சிறந்த முதல் தரமான முத்துத் தேர் ஒன்று பொன்னிறம் பெற்று நடந்து வருவதுபோல் ஒரு வசீகரத் தோற்றம் உண்டாகும். அதுவும் இப்போது இந்த இருள் மயங்கும் அந்தி வேளையில் எளிமையான குருகுல வாசத்துக் கோலத்தில் மிக வனப்பான சிகண்டியாரின் நதிக்கரைப் பொழில் வீட்டின் சூழ்நிலையில் கையில் ஏடுகளுடனும் முகத்தில் புன்னகையுடனும் கந்தர்வ இளைஞனைப் போலவே தோற்றமளித்தான் சாரகுமாரன்.
இளைய பாண்டியரின் பேரழகை - வியந்த நிலையில் பரிகளைத் தேர்ப் பூட்டிலிருந்து - ஒய்வு கொள்ளப் பிரித்துத் தனியே விட்டுவிட்டு முடிநாகனின் பார்வை நதிக்கரைப் பக்கமாகத் திரும்பியபோது சிகண்டியாரும், அவிநயனாரும், பேசியபடியே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. முது பெரும் புலவர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கினான் தேர்ப்பாகன் முடிநாகன். புலவர்கள் அரண்மனையிலுள்ள அனைவரின் நலனையும் அன்போடு அவனிடம் கேட்டறிந்தனர். "குமாரபாண்டியரோடு தாங்களிருவரும் கூட நகரணி மங்கலத்துக்கு எழுந்தருள வேண்டுமென்று முதிய செழியர் சொல்லியனுப்பியிருக்கிறார். முதிய செழியர் தங்களிருவரையும் பார்த்து நீண்ட நாளாயிற்றாம். அதனால் அவசியம் தங்களிருவர் வரவையும் எதிர்பார்க்கிறார். மற்ற சங்கப் புலவர்கள் ஐம்பத்தெழுபதின்மருக்கும் தூது சொல்லி அழைப்பனுப்பியிருக்கிறார் பெரியவர். அனைவருமே நகரணி மங்கல நன்னாளில் கபாடபுரத்துக்கு வந்து சங்கமிருந்து தமிழாராய வேண்டுமென்று மக்களெல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்" - என்று பணிவாகத் தெரிவித்த முடிநாகனை நோக்கிப் புலவர்கள் இருவரும் புன்முறுவல் பூத்தனர். “கபாடபுரத்திலிருந்து அழைத்துச் செல்வதற்குத் தேர் வந்திருக்கிறதென்றவுடன் நம் சாரகுமாரனின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி பொலிகிறது பார்த்தீர்களா அவிநயனாரே?" என்று சிரித்தபடியே சாரகுமாரனைச் சுட்டிக் காட்டி அவிநயனாரிடம் கூறினார் சிகண்டியாசிரியர். அதைச் செவியுற்றபடியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சாரகுமாரன் "அந்த மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் ஆசிரியர் பிரான்களாகிய தாங்களும் அடியேனுடன் கோநகரத்துக்கு வந்தருளப் போகிறீர்கள் என்பதுதான்சுவாமீ!" என்று சாதுரியமாக அவர்களுக்கு மறுமொழி கூறினான்.
கீழ்த்திசை வானில் நிலா எழுந்து நதிக்கரைச் சோலையைப் பால் முழுக்காட்டினாற்போல இரம்மியமாக்கியது. ஆசிரியர்களும், சாரகுமாரனும், இரவு உணவை மணலூர்ப் பொழில் மாளிகையிலேயே முடித்துக்கொண்டனர். முடிநாகனும் அங்கேயே உண்டான். உணவுக்குப் பின்னர் இளைய பாண்டியன் சாரகுமாரனும், புலவர் பெருமக்களும் புறப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப்பின் பாட்டனாரின் முத்துத் தேரையும் முதன்மையான வேகம் பொருந்திய தேர்ப்புரவிகளையும் பார்த்துச்சாரகுமாரனுக்குத் தேர் செலுத்திச்செல்லும் ஆசை மேலிட்டது. புலவர்களைத் தேரினுள் இருக்கைகளில் அமரச் செய்து முடிநாகனைத் தன்னருகே தேர்தட்டுச் சட்டத்தில் இருத்திக் கொண்டு நிலா ஒளி நிரம்பித் தெளிவாயிருந்த பெரும்பாண்டிய இராஜபாட்டையில் தேரைச் செலுத்தினான் சாரகுமாரன். குதிரைகள் தாவிப் பறந்தன. மறு நாள் நகரணி மங்கல விழா இருந்ததனால், இரவையும் அகாலத்தையும் பொருட்படுத்தாமல், நிலா ஒளி பகல் போலக் காய்ந்து கொண்டிருந்த கபாடபுரப் பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாகவும் மூட்டை முடிப்புக்களுடனும், கரி, பரி, தேர்களுடனும் மக்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். பொருநரும், பாணரும், கூத்தரும், விறலியரும் ஆகிய கலைஞர்கள் வழிப் பயனத்தின் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகப் பாடல்களையும் வரிக்கூத்துச் செய்யுள்களையும் இரைந்து பாடி இசைத்துக் கொண்டு சென்றனர். புலவர் பெருமக்கள் அங்கங்கே இடை வழியில் சிகண்டியாரும், அவிநயனாரும் தேரில் பயணம் செய்து விரைந்து கொண்டிருப்பதையும், இளைய பாண்டியர் சாரகுமாரர் அந்தத் தேரைச் செலுத்திச் செல்வதையும் கண்டு ஆரவாரமிட்டு வாழ்த்தொலி முழக்கினர். இரவிலும் கபாடபுரத்துக்குச் செல்லும் அந்த அரசவீதி திரு விழாக்கோலங் கொண்டிருந்தது. இருமருங்கும் பெரிய பெரிய ஆலமரங்கள் செறிந்ததும் - வழிப்போக்கர் தங்கிச் செல்லும் வழிப்போக்கர் மாடங்களும், அறக்கோட்டங்களும், நிறைந்துமான அந்தப் பெரும் பாண்டிய இராஜபாட்டை கபாடபுரத்தையும் அந்தக் கோநகரத்தைப் போலவே வடகிழக்கே - பாண்டிய நாட்டின் மற்றொரு கடல் வாணிக நகரமான கொற்கையையும் இணைத்தது. இடையே மணலூர், பூழி, முதலிய பேருர்கள் அமைந்திருந்தன. சாலையின் இருபுறமும் ஆலமரங்களுக்கப்பால் தோட்டங்களும், நெல் வயல்களுமாக வளம் பொங்கிய சூழ்நிலைகள் தோன்றின. மெல்லிய காற்று நிலா இரவின் தண்மையோடு வீசிக்கொண்டிருந்தது. சிகண்டியார் இளைய பாண்டியனுக்கு இசையும் கற்பித்து வந்தாராகையினால் அந்த நேரத்துக்குப் பாட ஏற்ற பண் ஒன்றைக் கூறி இளையபாண்டியனைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார்.
இளையபாண்டியனும் ஆசிரியருடைய வேண்டுகோளின் படி தன் அமுதக்குரலில் தேனிசை பொழிந்து கொண்டே தேரின் வேகத்தைக் குறைத்துப் பரிகளைச் சற்றே மெல்லச் செலுத்தினான். தக்கராகப் பண்ணில் சிகண்டியார் கற்பித்த பாடலொன்றினைப் பாடி முடித்தபின் கேட்பவர்களை உருக்கிச் சுழன்று துவளச்செய்யும் இரங்கற் பண்ணாகிய விளரியை இளைய பாண்டியன் தொடங்கியபோது சிகண்டியார் அது முடிகிற வரை தேரைச் சாலையோரமாக நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார். தேரை நிறுத்திவிட்டுச் செவிமடுத்து மகிழுமளவுக்கு ஒன்றரை நாழிகை நேரம் விளரியை இழைத்து இழைத்துப் பாடினான் சாரகுமாரன். நடுநடுவே சிகண்டியார் அவனுக்குச் சில திருத்தங்கள் கூறித் தாமே பாடிக்காட்டினார். சிகண்டியார் இசைப் புலமையின் நிறை குடமாயினும் முதுமை அவருடைய குரலைத் தளர்த்தியிருந்தது. சாரகுமாரனோ கனிந்த குரலில் இனிமைபிழியும் இரங்கற்பண்ணாகிய விளரியைப் பொழிந்து தன் ஆசிரியர்களையும், சாலைகளையும், சோலைகளையும், மரங்களையும், மண்ணையும், விண்ணையும் உருக்கினாற்போன்றதொரு பிரமையை உண்டாக்கினான்.
"குழந்தாய்! உன்னுடைய குரலிலும் நாவிலும் தெய்வம் குடிகொண்டிருக்கிறது. என்னுடைய இசை ஞானத்தை யெல்லாம் கொண்டு நீ பாடும் குரலுக்காகவும் முறைக்காகவுமே ஒரு புதிய மாபெரும் இசையிலக்கணத்தைப் படைக்கலாம் போலத் தோன்றுகிறது. உன் குரல் பாடி முடிப்பதற்கு உலகம் இதுவரை படைத்துள்ள இசை வரம்புகள் சிறியவையாகவே எனக்குத் தோன்றுகின்றன" என்று சாரகுமாரனை வியந்து வாழ்த்தினார் சிகண்டியார். அவிநயனாரும் பாராட்டினார். முடிநாகனோ மெய்மறந்து போனான்.
"சுவாமீ! தங்கள் வாழ்த்துக்கும் புகழுக்கும் தகுதியானவனாக இந்தச் சிறுவனை இறைவன் என்றும் வைத்திருக்க வேண்டும்" - என்று அவரைப் பணிந்து வணங்கினான் சாரகுமாரன். தேர் புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் சாரகுமாரனின் மற்றோர் ஆசிரியராகிய அவிநயனார் அவனுடைய இயற்றமிழ்ப் புலமையை உறைத்துப் பார்க்க விரும்பிய வராய் ஒரு சோதனை வைத்தார். "சாரகுமாரா இப்போது உனக்கு நான் ஓர் ஈற்றடி கொடுக்கிறேன். தேர் இந்தச் சமயத்தில் சென்று கொண்டிருக்கும் இதே இடத்திலிருந்து இன்னும் கால் நாழிகைத் தொலைவை அடைவதற்குள் என்னுடைய ஈற்றடியை நான் சொல்லுகிற பொருள் அமையும் படி நீ தேரை நிறுத்திவிட்டுச் சிந்திக்காமல் தேரையும் செலுத்திக் கொண்டே சிந்தித்து முடிக்கவேண்டும்."
"ஈற்றடியைச் சொல்லியருள வேண்டும் சுவாமீ. தாங்கள் கற்பித்த யாப்பும் செய்யுட் கோப்பும் இந்தச் சோதனையில் அடியேனைக் காப்பாற்றி வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை வணங்கி இந்த ஈற்றடியை ஏற்று முயல்வேன்” என்றான் சாரகுமாரன்.
உடனே அவிநயனார் தேர் ஒடும் ஒசையின் விரைவில் தம் குரல் காற்றில் போய்விடாதபடி நிறுத்தி நிதானமாக இரைந்து "காயும் நிலவுக் கனல்" - என்று முன் புறம் தேர்த்தட்டிலிருந்த சாரகுமாரனுக்குக் கேட்கும்படி கூறிவிட்டு, "தலைவி தலைவனது பிரிவை நினைந்துருகி நிலவையும் கடலையும், தென்றலையும் மாலை வேளையையும் எண்ணி அவை தன்னை வாட்டி வருத்துவதாகச் சொல்லுவது போல் உன்னுடைய வெண்பா நிறைய வேண்டு" மென்று பொருளும் பாட்டெல்லையும் வகுத்து விளக்கிச் சொன்னார். "மாணவனை அதிகமாகச் சோதிக்கிறீர்கள் அவிநயனாரே" என்று சிரித்தபடியே கூறினார் சிகண்டியார்.
"விளரிப்பண் பாடியதை விட இது ஒன்றும் பெரிய சோதனை அல்லவே?" என்று மறுமொழி கூறிச் சிகண்டியாரைப் பேச்சில் மடக்கினார் அவிநயனார். ஆசிரியர்கள் இருவரும் இப்படித் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, "சுவாமீ வெண்பா என் மனத்தில் உருவாகி விட்டது. கூறட்டுமா?" என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்து சாரகுமாரன் வினாவினான். "குழந்தாய்! கவனம். அவசரத்தில் சீர், தளை கெட்டுப் போய் விடப்போகிறது. நான்றாக நினைத்துப்பார்த்து எல்லாம் ஒழுங்காயிருப்பதாக நீயே மன நிறைவு அடைந்த பின்பு சொல். இன்னும் கால் நாழிகை தொலைவு வரவில்லையே? அதற்குள் உனக்கென்ன அவசரம்?"
"அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் பாட்டுக் கனிந்து விட்டது. சொல்லலாம்."
"எங்கே? சொல், பார்க்கலாம்."
- "நீலக் குறிஞ்சி நெடுவரை நீழலிற்
- சாலப் பலசொல்லி நீத்தனர் . வேலவர்
- பாயும் திரையாழி தென்றலுடன் மாலையெலாம்
- காயும் நிலவுக் கனல்"
என்று சாரகுமாரன் நிறுத்தி நிறுத்தி ஒவ்வோரடியாகக் கூறி முடித்ததும் வியப்படைந்த அவிநயனார், "வாழ்க! இறையருளும் கலைமகளருளும் உனக்கு நிறைவாகத் துணை நிற்கின்றன. வெண்பா மிக நன்றாக வந்திருக்கிறது. உன் பாட்டனார் கேட்டால் பெருமைப்படுவார். கபாடபுரத்தை யடைந்ததும் முதல் வேலையாக உன்பாட்டனார் வெண் தேர்ச்செழியரிடம் நீ இயற்றிய இந்த வெண்பாவைத்தான் சொல்லப்போகிறேன் நான்" என்றார்.
"ஐயோ! வேண்டவே வேண்டாம் சுவாமீ! பெரியவருக்கு உடனே கோபம் வந்துவிடும். இத்தனை சிறிய வயதில், அகப்பொருள் தொடர்புடைய காதற் பாடலைப் பாடி முடிக்குமாறு இந்தப் பசலைப் பிள்ளைக்கு நீங்கள் எப்படி இத்தகையதோர் ஈற்றடியைக் கொடுக்கலாமென்று உங்களிடம் பாட்டனார் சொற் போருக்கே வந்துவிடுவார்" - என்று இளையபாண்டியனுக்காகப் பரிந்து முடிநாகன் கூறியதும் புலவர்கள் பாட்டனாரிடம் அவனுக்குள்ள பயத்தைக் கண்டு புன் முறுவல் பூத்தனர்.