கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/3. தேர்க்கோட்டம்
பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப் பேச வேண்டு மென்கிற ஆவலோடு இருந்த தாயையும் ஏமாறச் செய்து சாரகுமாரன் பெரிய பாண்டியரிடம் செல்ல வேண்டியதாயிற்று. "குழந்தை வந்ததும் இங்கே அழைத்து வந்துவிடுங்கள்" என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டுக் காத்திருந்தார் முதிய செழியர்.
அநாகுலன், திலோத்தமை, பெரிய பாண்டியர் எல்லாரையும் பார்த்து நலமறிந்த சுவட்டோடு உறங்கச் சென்று விட்டார்கள் அவிநயனாரும் சிகண்டியாரும். சாரகுமாரன் பாட்டனாரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு உறங்கப் போகலாமென்று நினைத்திருந்தான். பாட்டனாரோ அவனிடம் - அவனுடைய குருகுலவாசத்தைப் பரிசோதனை செய்து பரீட்சை வைப்பதுபோன்ற கேள்விகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். சந்ததிகளைப் பற்றிக் கிழவர்களுக்கே இயல்பாக முதுமையில் ஏற்படும் கவலையும் அக்கறையும் பாசமும் அந்த முதியவரைப்பற்றியிருந்தன. பேரப்பிள்ளையை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தவர் கேட்க வேண்டிய, கேள்விகளையெல்லாம் கேட்டுப் பரிசோதித்து விட்டார்.
"குழந்தாய்! தேரில் நீ வருகிறபோது வழியில் ஏதாவது விசேஷமுண்டா? இடை நிலத்து ஊர்கள் எல்லாம் செழிப்பாயிருக்கின்றனவா? பயிர் பச்சைகள் எல்லாம் வளமாகத் தெரிகின்றனவா? அரச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு இவற்றில் எல்லாம் பொதுவாக ஒரு கவனம் வேண்டும். அரச குடும்பத்தைச் சேர்ந்தவனின் கவனத்துக்கும் கருணைக்கும் எல்லை மிகமிகப் பெரியது. பொதுவானது. பரவலானது! அந்த ஞாபகத்தோடு உலகைப் பார்க்கிற ஞானம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இளமையிலேயே வந்துவிட வேண்டும்."
"வருகிற வழியில் பொருநரும் பாணரும், விறலியரு மாயிருந்த ஒரு பாணர் கூட்டத்தைப் பார்த்தேன் தாத்தா அந்தக் கூட்டத்தில் சிலர் கலங்கி அழுதுகொண்டிருந்தனர். என்னவென்று அருகில் போய்ப் பார்த்தபோது ஒர் இளம் பெண் மயங்கி விழுந்திருந்தாள். அவளுடைய மயக்கத்தை நீக்கி அந்தக் கூட்டத்தினரின் கலக்கத்தைத் தவிர்த்தேன்... அதோடு..."
"அதோடு என்ன?"
இளையபாண்டியன் மேலே சொல்லத் தயங்கினான். முதிய பாண்டியர் அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும், "அதோடு என்னவென்பதைத்தான் சொல்லேன்?" - என்று அழுத்தமாக வினாவினார்.
"ஒன்றுமில்லை! அந்தப் பெண்ணை மட்டும் என்னுடன் தேரில் அழைத்து வந்து நமது நகரெல்லையில் இறக்கி விட்டேன். பாவம் மிகமிகத் தளர்ந்து போயிருந்தாள்..."
"துன்புறுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஆண்கள் பெண்கள் என்று பிரிவோ, பேதமோ இல்லை. ஆனாலும் இளம் பெண்களுக்கு உதவி செய்வதில் கவனமாயிருக்கவேண்டும். உன் உதவி அவர்கள் மனத்தை நெகிழச் செய்யும். முதலில் நன்றி தெரிவிப்பார்கள். அப்புறம் புன்னகை செய்வார்கள். நிறையப் பேசுவார்கள். உன் மனமும் நெகிழும். போகப் போக வேறுவிதமாக ஆனாலும் ஆகிவிடும். இதில் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். எல்லாருக்குமே இதில் விழிப்புத் தேவை. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கோ அதிகமான விழிப்பும் முன்னெச்சரிக்கையும் வேண்டும். எந்தப் பெண்ணும் ஒர் அரச குமாரனிடம் மயங்குவதற்குச் சாத்தியம் உண்டு. அரசகுமாரனோ யாரிடமும் மயங்காத தயங்காத கடமை வீரனாயிருக்க வேண்டும்."
தாத்தாவிடம் அந்த நிகழ்ச்சியைத் தான் சொல்லியிருக்கக் கூடாதென்று அப்போதுதான் இளைய பாண்டியன் உணர்ந்தான். அவரோ விடாமல் அதைப் பற்றியே அப்புறம் அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.
"அந்த இளம் பெண் யார் என்று கேட்டறிந்தாயா? அவள் எங்கிருந்து வந்தாளாம்? யாராம்? எந்த ஊராம் ? என்ன பெயராம்?"
"அவள் கையில் யாழுடன் வந்ததிலிருந்து பாண்குடியைச் சேர்ந்தவளென்னு தோன்றியது தாத்தா. அவள் பெயர் 'கண்ணுக்கினியாள்' என்று கூறினாள். மிகவும் அழகிய பெயரென்று நான்கூடப் பாராட்டினேன்."
“பாராட்டுவதற்கு அதில் அப்படி என்ன இருக்கிறது குழந்தாய்? எந்தப் பெண் பிள்ளைக்கு அந்தப் பெயரை வைத்தாலும்தான் பொருத்தமாயிருக்கும். உனக்கு நான் பெயர் சூட்டியதை விடவா அது அழகு?"
"இல்லை தாத்தா! அவள் உண்மையிலேயே அந்தப் பெயருக்காகவே பிறந்து வந்தவள் போலத் தோன்றினாள்."
"பார்த்தாயா? பார்த்தாயா? என்னிடமே அவள் புகழைப் பாடத் தொடங்கிவிட்டாயே? பெயரில் அழகைக் கண்டு மயங்கிவிடாதே. அதிர்ஷ்டவசமாக நமது மொழியில் உள்ள சொற்கள் எல்லாமே பொருத்தமாக இணையும்போது அழகாகத்தான் இருக்கின்றன. பதங்கள் இணையும்போது இணைக்கிறவனின் திறனால் அவற்றுக்கும் உயிர்-பொலிவு கவர்ச்சி - வனப்பு எல்லாம் வந்து சேரும். அந்தப் பெருமையை மொழிக்குக் கொடு அப்பா வெறும் பெண்ணுக்கு மனம் தடுமாறாதே. சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப் படுவது கூடாது."
தாத்தா அவனை வகையாகப் பிடித்துக் கொண்டார். வேண்டிய அறிவுரையையும் வழங்கத் தொடங்கிவிட்டார். 'சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப் படாதே' - என்ற தாத்தாவின் வாதம் பிழையானதென்றும் அதைப் பொருத்தமான தர்க்க நியாய மேற்கோள்களுடன் மறுக்க முடியும் என்றும் அப்போது அவனுக்குத் தோன்றினாலும் அதைப் பொறுத்துக் கொண்டான். பெரியவரை எதிர்த்து வாதிடத் துணியவில்லை அவன்.
மறுநாள் நகரணி மங்கலத்தைக் கொண்டாடு முகத்தால் கூடிய அரசவையில் பாண்டிய நாட்டுப் பெரும் புலவர்களும், பாணரும், பொருணரும், விரலியரும், யாழ் வல்லோரும், குழல் வல்லோரும், முழவு வல்லோரும் பாண்டிய மன்னரின் பெருமையையும், கோ நகராகிய கபாடபுரத்தின் பெருமையையும் புகழ்ந்து பாடியும், இசைத்தும், அவிநயமாடியும், பரிசில் பெற்றுச் சென்றனர்.
அவையில் பாட்டனார் வெண்தேர்ச்செழியருக்கு அருகே கொலுவமர்ந்திருந்த இளையபாண்டியன் அரங்கில் குழுமியிருந்த கூட்டத்தினரை உற்றுக் கவனித்தபோது முதிய பெற்றோர்களோடு கையில் யாழுடன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் காணப்பட்டாள். தான் அவளை நோக்கிய அதே வேளையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் தன்னைச் சுட்டிக் காண்பித்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
அரியணையில் கொலுவிருந்த தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் சிலர் தன்னையும் சேர்த்துப் புகழ்ந்திருப்பதைக் கேட்டுக் கூசினான் சாரகுமாரன். அவனே கேட்டு வெட்கப்படும்படி அவனுடைய அழகையும், வசீகரத்தையும் குரலினிமையையும் வண்ண வனப்பையும் புலவர்கள் வருணித்துப் புகழ்ந்திருந்தார்கள்.
'பாண்டி நாட்டுப் பேதைப் பெண்கள் எல்லாம் இளைய பாண்டியர் உலா வரும்போது வளை சோர நின்று பந்தையும் கழங்கையும், அம்மானைக் காய்களையும், பிற விளையாட்டு ஆயங்களையும் அன்றே மறந்தனர்' - என்ற பொருள்படப் புனைந்து சிங்காரரசம் பொங்கி வழிய வழியப் பாடினார் ஒரு புலவர். முதிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர் முகம் சிவக்க மீசை துடி துடிக்கக் கடுமையாக உறுத்துப் பார்த்தாரோ இல்லையோ அந்தப் புலவர் பயந்துபோய் அடுத்த பாடலை வேறுவிதமாக மாற்றி, "பேதைப் பெண்களே! நீங்களெல்லாம் இப்படி உருகிப் பயனில்லை! ஏனெனில் இளைய பாண்டியருக்குப் போர்க் களங்களிலும், அறிவாராய்ச்சியிலும் நேரம் போவது தவிர உங்கள் புறம் திரும்பிப் பார்க்கவும் வேண்டாம்" - என்று பொருள்படும்படி வேறுவிதமாகப் பாடி முதிய பாண்டியரின் கோபத்தைத் தணித்தார்.
இன்னொரு புலவர் 'இளையபாண்டியரைக் காண முடியாமல் கடலருகே நீங்கள் நெஞ்சழிந்து இரங்கி உகுத்தக் கண்ணிர்த்துளிகள் எல்லாம் அல்லவா இப்படி இந்தக் கபாடத்தின் விலை மதிப்பற்ற முத்துக்களாக விளைந்தன' என்று பொருள் படும்படி பேதைப் பெண்களை விளித்துக் கற்பனை செய்வதுபோல் ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்.
"ஐயா புலவரே பேரப் பிள்ளையாண்டானுக்குக் கல்வியும் வீரமும், கலைகளும், பெருக வேண்டுமென்று ஏதாவது நன்றாக வாழ்த்துக் கூறிப் பாடுங்கள்; உமக்கு இந்த ஆகாத கற்பனைகள் எல்லாம் எதற்கு? முக்கால்வாசி அரச குடும்பத்துப் பிள்ளைகள் உங்களைப் போன்ற புலவர்களின் புகழ்மயக்கில்தான் கெட்டுப் போகிறார்கள். தெரியுமா?" என்று முதிய பாண்டியர் அந்தப் புலவரை வாய் திறந்து பேசியே சாடிவிட்டார். புலவர் கூனிக் குறுகிப்போய் அப்படியே அமர்ந்து விட்டார்.
நகரணி மங்கல நாளன்று மாலையில் நகருக்குச் சிறிது தொலைவிலிருந்த மாபெரும் தோட்டத்தில் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களுடனும் மிகப் பெரிய நுழை வாயில்களுடனும் அமைக்கப் பட்டிருந்த தேர்க் கோட்டத்துக்குப் பாட்டனாருடனே சென்றிருந்தான் சாரகுமாரன்.
அன்றிரவு அந்தத் தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் நிலவில் உலா வந்து திரும்புவது வழக்கமான விழா மரபாக இருந்தது. முதல் தேரில் அநாகுல பாண்டியனும் அவனுடைய பட்டத்தரசியும், அடுத்த தேரில் முதியவர் வெண்தேர்ச் செழியரும், அதற்கடுத்த தேரில் இளைய பாண்டியன் சாரகுமாரனும், ஏனைய தேர்களில் அரண்மனை அதிகாரிகளும், அமைச்சர்களும், புலவர் பெருமக்களுமாக உலா வருவது வழக்கம்.
கடல் கொண்ட பழம் பாண்டி நாட்டிற்குப் பிறகு தரைப் பகுதி அதிகமுள்ள வடதிசை நோக்கிப் பாண்டியர்கோநகரம் நகர நகர நீரில் ஒடும் மரக்கலங்களைக் காட்டிலும் தரையில் ஒடும் தேர்ப்படைகளை அதிகமாக்கிப் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பல்லாயிரம் யவனத் தச்சர்களை வரவழைத்துப் பணிக்கமர்த்தி நிருதர் நாட்டுக் காடுகளிலுள்ள வைரம் பாய்ந்த மரங்களைக் கலங்கள் மூலமாகக் கொணர்ந்து இந்தத் தேர்களைச் சமைத்திருந்தார் வெண்தேர்ச் செழியர். நகரணி மங்கல நாளன்று நடைபெறும் இந்தத் தேர் உலாவைப் பார்ப்பதற்காகப் பாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவதுண்டு. கோட்டையைச் சுற்றியிருக்கும் நான்கு பெரும் இராச பாட்டைகளிலும் இந்தத் தேர்கள் வரும்போது எள் விழ இடமின்றி மக்கள் திரண்டிருப்பார்கள். நல்லவேளையாக அன்று தேருலாவின் போதும் உடனிருந்த பேரப் பிள்ளையாண்டானைத் தம்முடைய அதிக அன்பினாலே பயமுறுத்தாமல் தம்முடைய தனித்தேருக்குப் போய்விட்டார் பாட்டனார். ஆசிரியர் பிரான்களாகிய அவிநயனாரும், சிகண்டியரும் கூடத் தங்களுக்கென்று அலங்கரிக்கப் பட்டிருந்த தனித்தனித் தேர்களுக்குப் போய்விட்டார்கள்.
இளையபாண்டியருடைய தேரை முடிநாகன் செலுத்தி வந்தான். நிலவொளியில் தேர்களில் பதிக்கப் பெற்றிருந்த முத்துக்கள் அற்புதமாய் மின்னி நகைத்தன. தேர் புறப்படுமுன் முடிநாகன் இளையபாண்டியரிடம் ஒரு செய்தி கூறினான். அன்று பகலில் பாட்டனார் முடிநாகனைத் தனியே அழைத்து "இளையபாண்டியன் மணலூரிலிருந்து தேரில் இங்கு புறப்பட்டு வரும்போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நடுவழியில் நடந்ததாமே? யாரோ பாண்மகள் ஒருத்தி மயங்கி விழுந்திருந்தாளாம். உடனே இவன் கருணை மிகுந்து ஓடிப்போய் அவளுக்கு மயக்கம் தெளிவித்தானாமே? அது என்ன கூத்து?" - என்று வினவினராம்.
"அது ஒன்றுமில்லை! கூடியிருந்தவர்களின் அழுகை ஒலி கேட்டு வெறும் இரக்கத்தினால் மட்டும் வலிந்து சென்று உதவி செய்தார். அந்தப் பெண் நடக்க முடியாமல் சிரமப்பட்டதனால் தேரில் அழைத்து வந்து நகர் எல்லையில் இறக்கிவிட்டார். இதில் குறிப்பிடத் தகுந்த விதத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தப் பெண்ணிடமோ கூட்டத்தினரிடமோ தான் அரச குமாரர் என்பதைக்கூட இளையபாண்டியர். காண்பித்துக் கொள்ளவில்லை. யாரோ முத்து வணிகன் என்று பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டார்" என்று அவர் மனம் சிறிதும் ஐயுறாதவாறு தான் அவருக்கு மறுமொழி கூறிவிட்டதாகத் தெரிவித்தான் முடிநாகன்.
பாட்டனாரின் எச்சரிக்கையை எண்ணி இளைய பாண்டியன் தனக்குள் சிரித்துக்கொண்டான். நிலா உதயத்துக்குப் பின் ஒரிரு நாழிகைகளில் தேர் உலாப் புறப்பட்டது முதலில் செல்லவேண்டிய தேர்கள் எல்லாம் சென்ற பின் இளைய பாண்டியருடைய தேர் புறப்பட வேண்டிய முறைப்படி அதைப் புறப்படச் செய்து ஒட்டிக்கொண்டு நுழைவாயிலுக்குக் கொண்டு வந்தான் முடிநாகன். அன்றைக்குக் கூடியிருந்த கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் இளையபாண்டியர் சாரகுமாரரைக் காண்பதற்காகவே இடித்து நெருக்கிக் கொண்டு கூடியிருந்தார்கள். ஆதலால் அவருடைய தேர், கோட்டத்தின் நுழைவாயில் வழியே வெளியே வர இருப்பதைப் பல்லாயிரக் கணக்கான விழிகள் ஆவலோடு எதிர் பார்த்த வண்ணமாக இருந்தன.
அப்படி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் இளைஞர்களும் இருந்தார்கள். முதியவர்களும் இருந்தார்கள். பெண்களும் இருந்தார்கள். ஆண்களும் இருந்தார்கள். இளம் பெண்களும் இருந்தார்கள். முதிய தாய்மார்களும் இருந்தார்கள். நடுத்தர வயதினரும் இருந்தார்கள். காளைகளும் இருந்தார்கள். தளர்ந்து முதிர்ந்த கிழவர்களுமிருந்தார்கள். இளம் பெண்கள் இளைய பாண்டியரின் பேரழகைக் கேள்விப்பட்டுக் கூடியிருந்தார்கள் என்றால் இப்படி அந்த இளம் பெண்களின் ஆவலுக் கெல்லாம் காரணமென்ன என்ற இரகசியத்தை அறியக் கூடியிருந்தார்கள் முதியவர்கள். அந்த முதியவர்களே எப்போதோ வாய் தவறி நமது இளவரசர் சாரகுமாரரைப்போல் சுந்தர வாலிபர் ஈரேழு பதினான்கு புவனங்களிலும் இல்லை - என்று புகழ்ந்ததை ஞாபகமாக நினைவு வைத்திருந்துதான் இத்தனை இளம் பெண்களும் இங்கே கூடினார்கள் என்ற இரகசியத்தை முதியவர்கள் அத்தனை பேரும் இப்போது மறந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
இது தவிர இளைய பாண்டியரின் இசைக் கலைத் திறனைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் பலர். அவருடைய இலக்கிய இலக்கணப் பயிற்சியைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் சிலர். உருண்டு திரண்ட அவருடைய புஜங்கள் மல்யுத்த வீரர்களுக்கே உரிய செழிப்பு அமையப் பெற்றவை எனக் கேள்விப்பட்டதால் மல்யுத்தத்தில் ஆசைகொண்ட காளையர்களெல்லாம் அந்தப் பரந்த பொன் மார்பையும் எடுப்பான தடந்தோள்களையும் காணக் கூடியிருந்தனர்.
அப்படிக் கூடியிருந்த பல்லாயிரவரின் ஆவலையும் நிறைத்துக்கொண்டு நுழைவாயிலில் தென்பட்டு வெளிவந்த இளையபாண்டியரின் தேர் கோலாகலமான பேராரவாரத்தோடு வரவேற்கப்பட்டது. கூட்டத்தினர் சாரகுமாரனைக் கண்கள் நிறைய ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டி ஒருவரை ஒருவர் இடித்து நெருக்கிக் கொண்டு முந்தினர். இளையபாண்டியரின் தேருக்குப் பின்னாலும் வேறுபல தேர்கள் அடுத்தடுத்து வரவேண்டியிருந்ததனால் இளைய பாண்டியரின் தேர் ஒரு கணம்கூட நிற்காது, பின்னால் வருகிற தேர்களுக்கு வழி அமைவதற்காகவாவது விரைய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத பேரதிசயமாக இளைய பாண்டியரின் தேர் நுழைவாயிலருகே ஒரிரு கணங்களுக்கும் மேலாக நின்றது. தானாக நிற்கவில்லை. கூட்டத்தில் எதையோ பார்த்துவிட்டு இளைய பாண்டியரே முடிநாகனின் தோளைத் தொட்டு அவனுக்கு உணர்த்தித் தேரை நிறுத்தச் செய்திருந்ததையும் முன்வரிசையில் நின்ற சிலர் கண்டிருந்தனர்.
தேர் நிறுத்தப்பட்டதோடு போகாமல் யாரும் எதிர்பாராத வண்ணம் அழகுக்கெல்லாம் இலட்சிய எல்லையான காமதேவனே கீழிறங்கி வருவதுபோல் இளையபாண்டியர் சாரகுமாரரே தேரிலிருந்து கீழிறங்கிக் கூட்டத்தை நோக்கி ஓரிலக்கைக் குறிவைத்து விரைந்தார். ஏன்? ஏன்? அங்கே என்ன? அங்கே என்ன? எதற்காக இளையபாண்டியர் கீழிறங்கிப்